இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(23.03.1980 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

பாரதிராஜாவுக்கு ஜோடி ஆனது எப்படி?

"தேடி வந்த வாய்ப்பை உதறித்தள்ள நான் விரும்பவில்லை. அதனால் கதாநாயகி ஆனேன்" என்றார், புதுமுகம் அருணா.

"கல்லுக்குள் ஈரம்" என்ற படத்தில் டைரக்டர் பாரதிராஜாவுக்கு ஜோடியாக நடித்தவர், அருணா. ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமவரம் என்ற ஊரைச் சேர்ந்த அருணா, பாரதிராஜாவிடம் சிக்கியது எப்படி?

"அது சுவையான அனுபவம்" என்கிறார், அருணா.

"அதைக் கொஞ்சம் சொலுங்களேன்" என்று "ராணி" நிருபர் கேட்டார்.


நடிகை அருணா

நிவாஸ் வந்தார்

அருணா: நான் உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்துவிட்டு, கல்லூரியில் சேருவதற்கு அலைந்து கொண்டு இருந்தேன். அப்படி ஒருநாள் கல்லூரிக்குப் போய்விட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒல்லியாக ஒருவர் (பின்னால்தான் அவர் தயாரிப்பாளர்-ஒளிப்பதிவாளர் நிவாஸ் என்பது தெரிய வந்தது.) என்னை பின்தொடர்ந்து கொண்டு இருந்தார். நான் வீட்டுக்குள் நுழையவும், அவரும் உள்ளே வந்தார். என் அப்பாவிடம் பேசினார்.

அப்பா என்னை அழைத்து, "சினிமாவில் நடிக்கிறாயா, அருணா? உன்னை வைத்து படம் எடுக்க சார் மிகவும் ஆசைப்படுகிறார்" என்று சொன்னார். அவரும், "உங்களைப் போன்ற ஒரு பெண்ணைத் தேடிதான் அலைந்து கொண்டு இருக்கிறேன். நீங்கள் எனது படத்தில் நடிக்கத் தொடங்கினால், நல்ல எதிர்காலம் இருக்கும்" என்று வற்புறுத்தினார்...

நிரு: நீங்கள் சினிமாவில் நடிக்க அப்போது ஆசையாகத்தானே இருந்தீர்கள்?

அருணா: எனக்கு எப்போதும் நடிகை ஆகவேண்டும் என்ற ஆசை இல்லை. சில படங்கள்தான் பார்த்திருக்கிறேன். சினிமா மோகமும் எனக்குக் கிடையாது. ஆனாலும், நிவாசின் வற்புறுத்தலை என்னால் மறுக்க முடியவில்லை. தேடி வந்த வாய்ப்பை ஏன் இழக்க வேண்டும் என்று சினிமாவில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

நல்ல கம்பெனி என்பதால், முதல் படத்திலேயே எனக்கு பேரும் புகழும் கிடைத்துவிட்டன!

அறிமுகம்

நிரு: டைரக்டர் பாரதிராஜாவுக்கு ஜோடியாக நீங்கள் நடிக்கப்போவது முதலிலேயே உங்களுக்குத் தெரியுமா?

அருணா: ஒளிபதிவாளர் நிவாஸ் என்னை கதாநாயகியாகத் தேர்வு செய்தாலும், டைரக்டர் பாரதிராஜா வந்து பார்த்த பிறகுதான் அதை உறுதி செய்யமுடியும் என்று சொன்னார். அவர் சொன்னபடியே, மறுநாள் பாரதிராஜா என்னை வந்துப் பார்த்தார். அவருக்கும் பார்த்த மாத்திரத்திலேயே என்னைப் பிடித்துவிட்டது. அவர் "ஒகே" சொன்னதும், "இவர்தான் உனக்கு படத்தில் கதாநாயகன்" என்று பாரதிராஜாவை எனக்கு நிவாஸ் அறிமுகம் செய்து வைத்தார்.

நிரு: அப்போது உங்களுக்கு எப்படியிருந்தது?

அருணா: முதல் படத்தில், ஒரு தலைசிறந்த டைரக்டருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறோம் என்பதை அறிந்தவுடன் எனக்கு பெருமையாக இருந்தது! நான் உண்மையிலேயே கொடுத்து வைத்தவள்!

பயம்

நிரு: பாரதிராஜாவோடு சேர்ந்து நடிக்கும் பொழுது உங்களுக்கு எப்படியிருந்தது?

அருணா: படத்தில், பாரதிராஜாவைக் கண்டு பயந்து நடுங்குவது போல்தான் எனது பாத்திரம். ஆனால், உண்மையிலேயே, அவரைக் கண்டு பயந்து நடுங்கினேன். எப்படி நடிக்கப் போகிறோமோ, அவர் என்ன சொல்வாரோ என்று! ஆனால், அவர் எனக்கு அமைதியாக நடிப்பு சொல்லிக் கொடுத்தார். ஓரிரு நாளில், அவர் சிறந்த "ஸ்டார் மேக்கர்" என்பதைத் தெரிந்து கொண்டேன்.


‘கல்லுக்குள் ஈரம்’ திரைப்படத்தில் பாரதிராஜாவுடன்

நிரு: சினிமா உலக அனுபவம் எப்படி இருக்கிறது?

அருணா: நான் முழு அனுபவம் பெறாதவள். ஆனால், எல்லா இடத்திலும் நல்லவர்களும் இருக்கிறார்கள்; கெட்டவர்களும் இருக்கிறார்கள்.

நடிப்பேன்

நிரு: தொடர்ந்து படங்களில் நடிப்பீர்களா?

அருணா: சினிமா ஆசையே இல்லாமல் வளர்ந்த எனக்கு "கல்லுக்குள் ஈரம்" புதிய உணர்வை அளித்துவிட்டது. நடிப்புதான் தொழில். அதிலேயே தொடர்ந்து ஈடுபடுவது என்று தீர்மானித்து இருக்கிறேன்.

நிரு: இப்பொழுது வரும் புதுமுகங்கள் எதற்கும் தயாராக இருக்கிறார்கள். நீங்கள் எப்படி?

அருணா: "கல்லுக்குள் ஈரம்" படத்தில் எனக்குக் கிடைத்துள்ள பெயரையும் புகழையும் கடைசிவரை காப்பாற்ற வேண்டும். அதற்காக, இன்ன வேடத்தில்தான் நடிப்பேன் என்று சொல்லப்போவது இல்லை. "எந்த வேடத்தில் நடிக்கவும் தயார்" என்று வெளிச்சம் போடவும் மாட்டேன். நல்ல பாத்திரம் என்றால், ஏற்று நடிப்பேன்.

கவர்ச்சிக்கு கண் போதும்

நிரு: கவர்ச்சியாக நடிப்பது தவறு என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

அருணா: என் போன்ற இளம் நடிகைகள் கிழவி வேடத்திலா நடிக்க முடியும்! ஆனால், கவர்ச்சி என்பது ஆடை குறைப்பிலும் அவிழ்ப்பிலும் மட்டும் இல்லை. கண்ணிலே இருக்கிறது. பார்வையில்கூட கவர்ச்சி காட்ட முடியும்! உடல் அசைவிலும் கவர்ச்சி இருக்கிறது!


அழகு தோற்றத்தில் அருணா

நிரு: வேறு படங்களில் நடிக்கிறீர்களா?

அருணா: "உறவுகள் பிரிவதில்லை" என்ற படத்தில் இப்பொழுது நடித்துக் கொண்டு இருக்கிறேன். தேவர் பிலிம்சிலும், டைரக்டர் எஸ்.பி. முத்துராமனும் நடிக்கக் கேட்டு இருக்கிறார்கள்.

காதல்

நிரு: உங்கள் சொந்த வாழ்க்கையில் யாரையாவது காதலித்து இருக்கிறீர்களா?

அருணா: புத்தகச் சுமையோடு திரிந்தவள் நான். இப்பொழுது நடிப்புச் சுமையை ஏற்று இருக்கிறேன். காதல் சுமையை சந்திக்கும் அளவுக்கு மனப்பக்குவம் எனக்கு இன்னும் ஏற்படவில்லை. அதற்கு இன்னும் எவ்வளவோ காலம் இருக்கிறது. அதைப் பற்றி இப்பொழுது சிந்திப்பதே தவறு.

இலட்சியம்

நிரு: உங்கள் இலட்சியம் என்ன?

அருணா: டைரக்டர் பாரதிராஜாவும், ஒளிப்பதிவாளர் நிவாசும் எனக்கு தேடித்தந்த புகழை கடைசிவரை காப்பாற்ற வேண்டும். சிறந்த நடிகை என்று பெயர் பெற வேண்டும்.


நடிகை அருணா

அருணா இன்னும் சென்னையில் குடியேறவில்லை. படப்பிடிப்பு இருக்கும் நாட்களில் சென்னைக்கு வந்து, நடித்துக் கொடுத்துவிட்டு, ஆந்திராவுக்குச் சென்றுவிடுகிறார். அருணா, கதகளி நடனத்தில் பயிற்சி பெற்றவர். இப்பொழுது, பரதத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.

Updated On 12 Sept 2023 12:23 AM IST
ராணி

ராணி

Next Story