இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

எப்போதும் பெரிய ஸ்டார்களின் படங்கள் குறித்துதான் அதிகம் பேசப்படும் என்ற நிலைமை இன்னும் மாறவில்லை என்றாலும், சிறிய பட்ஜெட் படங்கள் குறித்த செய்திகளும் இடையிடையே வெளியாகிவருகின்றன. குறிப்பாக, வாரிசுகளின் ராஜ்ஜியம் மற்ற திரையுலகங்களில் கொடிகட்டி பறக்கும் நிலையில், கோலிவுட்டில் அந்த நிலை சற்று மாறி, அறிமுக இயக்குநர்கள் மற்றும் இளம்நடிகர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. பிக் ஷாட்ஸ்களின் பட அப்டேட்ஸ் ஒருபுறம் இருக்க, ஆண்டு இறுதி என்பதால் அடுத்த ஆண்டு ரிலீஸாகவிருக்கும் படங்கள் குறித்தும் கொஞ்சம் அதிகமாகவே ஹைப் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த வாரம் தென்னிந்திய சினிமாவில் என்னென்ன பேச்சுகள் அடிபடுகின்றன? பார்க்கலாம்!

மீண்டும் வக்கீலாகும் சூர்யா!

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கங்குவா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் வசூல்ரீதியாக வெற்றியையே பெற்றிருக்கிறது. இப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடித்து முடித்திருக்கும் சூர்யா, அடுத்து ஆர்.ஜே பாலாஜி இயக்கும் படத்தில் கமிட்டாகி நடித்துவருகிறார்.


தனது 45வது படத்தில் மீண்டும் வக்கீலாக நடிக்கும் சூர்யா

ஏற்கனவே ‘ஜெய்பீம்’ மற்றும் ‘எதற்கும் துணிந்தவன்’ ஆகிய படங்களில் வக்கீலாக நடித்த சூர்யா இந்த படத்திலும் வக்கீலாக நடித்துவருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ‘ஆறு’ படத்திற்கு பிறகு தற்போது இந்த படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறார் திரிஷா. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திலும் ‘ஜெய்பீம்’ போன்று அழுத்தமான நடிப்பை சூர்யா வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அல்லு அர்ஜுன் மீது வழக்கு?

‘புஷ்பா’ பாகம் ஒன்றின் மாபெரும் வெற்றியை அடுத்து மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த இப்படத்தின் இரண்டாம் பாகம், அதாவது ‘புஷ்பா 2 தி ரூல்’ திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 3.30 மணிநேரம் படம் ஓடினாலும் ஆக்‌ஷன், குடும்ப சென்டிமென்ட்டுக்கு இயக்குநர் சுகுமார் குறைவைக்கவில்லை என பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள். படத்தின் முன்பதிவு வசூலே ரூ.100 கோடியை கடந்த நிலையில், உலகளவிலான திரையரங்குகளில் இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஹைதராபாத் சிக்கடப்பள்ளியிலிருக்கும் சந்தியா திரையரங்கில் இரவு 9.30 மணிக்கு திரையிடப்பட்ட பீரியர் காட்சியில் அல்லு அர்ஜுன் கலந்துகொண்டார்.


‘புஷ்பா 2 தி ரூல்’ திரைப்படத்தில் அல்லு அர்ஜுன்

அவரை காணவந்த கூட்ட நெரிசலில் சிக்கி 39 வயது ரேவதி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவருடைய மகனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். இந்த சம்பவத்தையடுத்து திரையரங்கு மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனிடையே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரேவதியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்குவதாக தெரிவித்திருக்கிறார் அல்லு அர்ஜுன்.

நயனை முந்திய திரிஷா

கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற அந்தஸ்துடன் வலம்வந்த நயன்தாராவை பின்னுக்கு தள்ளியிருக்கிறார் திரிஷா. ஒரு படத்துக்கு ரூ.10 கோடி என நயன் சம்பளம் வாங்கிவந்த நிலையில், ‘தக் லைஃப்’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருக்கும் திரிஷாவோ அந்த படத்திற்கு ரூ.12 கோடி சம்பளமாக பெற்றிருக்கிறார். இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ‘கோட்’ படம் மட்டுமே வெளியாகியிருந்தாலும், அடுத்த ஆண்டு, ‘தக் லைஃப்’, ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ என அடுத்தடுத்த படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன.


சம்பளத்தில் இந்த ஆண்டு நயனை முந்திய திரிஷா

மேலும் சூர்யாவின் அடுத்த படத்திலும், ‘96’ இரண்டாம் பாகத்திலும் திரிஷா நடிக்கிறார். இதனால் 2025ஆம் ஆண்டு திரிஷாவுக்கு ப்ளாஸ்பஸ்டர் வருடமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் 41 வயதாகியும் மார்க்கெட்டை தக்கவைத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் வளர்ந்திருக்கும் திரிஷா, கோலிவுட்டில் மற்றொரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியுடன் இணைந்த சந்தீப் கிஷன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ரஜினியின் 171வது திரைப்படமான ‘கூலி’யிலும் ‘ஜெயிலர்’ போன்றே நாகர்ஜூனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் போன்ற பான் இந்தியா ஸ்டார்கள் நடித்துவருகின்றனர். குறிப்பாக ரஜினிக்கு ஏற்ற வெயிட்டான வில்லன் வேண்டும் என நினைத்த லோகி, நாகர்ஜூனாவை இப்படத்தில் வில்லனாக்கி இருக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஆந்திரா மற்றும் ஹைதராபாத்தில் நடந்துமுடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பானது சென்னையில் நடைபெற்று வருகிறது.


ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்திருக்கும் சந்தீப் கிஷன்

இதற்கிடையே ரஜினி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று திரும்பியிருப்பதால் சீக்கிரத்தில் ஷூட்டிங்கை முடிக்க எண்ணி படப்பிடிப்பு விறுவிறுப்பாக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் அடுத்த ஆண்டு மே மாதம் ரிலீஸாகும் என்று சொல்லப்படும் நிலையில், படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ‘பிகில்’ படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்த ரெபா மோனிகா ஜானும் இணைந்திருக்கிறார்.

‘மகாராஜா’ - சீனாவில் வசூல் சாதனை

நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதிபதியின் 50வது படமாக வெளியானது ‘மகாராஜா’. ஓரிரு மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படம் உலகளவில் ரூ.100 கோடிக்கும்மேல் வசூல்சாதனை புரிந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனாவிலும் வெளியிடப்பட்டது. பொதுவாக இதுபோன்று குறிப்பிட்ட நாடுகளில் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் ஓரிரு கோடிகளை மட்டுமே வசூலிக்கும்.


சீனாவில் ரூ.40 கோடி வசூலித்திருக்கும் ‘மகாராஜா’ திரைப்படம்

ஆனால் அலிபாபா நிறுவனம் சீன மொழியில் இப்படத்தை டப்பிங் செய்து அங்கு வெளியிட்ட ஓரிரு நாட்களுக்குள் ரூ.25 கோடி வசூலித்தது. மேலும் இதுவரை ரூ.40 கோடி அங்கு வசூலித்திருப்பதால் ரூ.150 கோடி வசூல் க்ளப்பில் ‘மகாராஜா’ திரைப்படம் இணைந்திருப்பதாக படக்குழு தெரிவித்திருக்கிறது. சீனாவில் கிடைத்த அதீத வரவேற்பை தொடர்ந்து ஜப்பானிலும் வெளியிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

டைரக்டர் டூ பிஸி ஹீரோ!

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்த ‘கோமாளி’ படத்தின்மூலம் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதனைத் தொடர்ந்து இவர் இயக்கி, ஹீரோவாக நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் இன்றைய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, ரூ.100 கோடிக்கும் மேல் வசூல்சாதனையும் படைத்தது. அந்த படத்தில் தனது அபரிமிதமான நடிப்புத்திறமையை வெளிப்படுத்திய பிரதீப்புக்கு அடுத்தடுத்து ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது.


அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடிக்கும் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்

இப்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி’ மற்றும் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘டிராகன்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துவரும் பிரதீப் அடுத்து அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இந்த படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக ‘பிரேமலு’ புகழ் மமிதா பைஜு நடிக்கவிருக்கிறார். இயக்குநராகும் ஆசையில் கோலிவுட்டில் காலடி எடுத்துவைத்த பிரதீப் ரங்கநாதன் இப்போது முழுநேர ஹீரோவாக உருவாகி வருகிறார்.

Updated On 17 Dec 2024 12:04 AM IST
ராணி

ராணி

Next Story