1980 களில் தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக கொடிகட்டிப் பறந்தவர்தான் நடிகை ஷாலினி. குழந்தை நட்சத்திரமாக திரையில் தோன்றி தன் துறுதுறு பேச்சாலும், நடிப்பாலும் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்த இவர், கதாநாயகியாகவும் ஒரு ரவுண்டு வந்து கலக்கி அன்றைய இளசுகளின் மனதையும் கொள்ளை கொண்டு போனார். பின்னர் நடிகர் அஜித் குமாரை திருமணம் செய்துகொண்டு பொறுப்பான குடும்ப தலைவியாக மாறிய ஷாலினி இன்று தனது 44வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த பிறந்த நாளில் நடிகை ஷாலினி குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கு காணலாம்.
ஷாலினியின் ஆரம்பகால வாழ்க்கை
1980 களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வாஞ்சையோடு உச்சரிக்க வைத்த ஒரு பெயர் என்றால் அது பேபி ஷாலினியாக மட்டும்தான் இருக்கும். அந்த அளவிற்கு புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த இவர், கேரள மாநிலம் திருவல்லாவை பூர்வீகமாக கொண்டவர். தந்தை பாபு தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும், அம்மா ஆலிஸ் கேரளாவை சேர்ந்தவர். தொழில் நிமித்தமாக ஷாலினியின் தந்தை பாபு கேரளாவில் வசித்து வந்தபோதுதான் ஆலிஸை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டாவது பிள்ளையாக 1979ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி பிறந்தவர்தான் ஷாலினி. கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்த ஷாலினிக்கு ரிச்சர்டு என்ற அண்ணனும், ஷாமிலி என்ற தங்கையும் உள்ளனர்.
இளமையில் நடிகை ஷாலினி
கேரள மாநிலத்தில் ஷாலினியின் தந்தை செய்து வந்த தொழில் பெரிதாக கை கொடுக்காத நிலையில், சினிமா ஆசையால் குடும்பம் முழுவதுமாக சென்னைக்கு குடிபெயர்ந்தது. ஆனால், அந்த ஆசை நிறைவேறாமல் போகவே, பின்னர் பல்பொருள் அங்காடி ஒன்றை ஆரம்பித்து நடத்திவந்த போதுதான், எதிர்பாராதவிதமாக அக்கடைக்கு வந்திருந்த இயக்குநர் ஃபாசில் மூலம் ஷாலினிக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்படி மலையாளத்தில் 1983ஆம் ஆண்டு வெளிவந்த எண்டே மாம குட்டி அம்மாவுக்கு (Ente Mamattukkuttiyammakku) என்ற படத்தில் முதன் முறையாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். முதல் படத்திலேயே நன்கு புகழ் பெற்ற ஷாலினி, தெலுங்கு, மலையாளம் என நடிக்க ஆரம்பித்தார். இந்த நேரத்தில் தமிழில் ஆனந்த கும்மி என்ற படத்தில் அறிமுகமானவருக்கு, அப்படத்தில் பெரிதாக அடையாளம் கிடைக்கவில்லை. இருந்தும் அடுத்த ஆண்டே தமிழில் ஓசை என்ற படத்தில் நடித்தவருக்கு, அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டு கிடைத்தது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு குடும்பங்களிலும் இதுபோன்ற ஒரு குழந்தை நமக்கு இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஏங்கும் அளவுக்கு தன் துறுதுறு நடிப்பாலும், தெளிவான வசன உச்சரிப்பாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
கதாநாயகியாக அறிமுகம்
இப்படி 1990 வரை மிகவும் பிஸியான குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த பேபி ஷாலினி, 7 ஆண்டுகள் இடைவேளைக்குப் பிறகு இயக்குனர் பாசில் இயக்கத்தில் காதலுக்கு மரியாதை என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக, கதாநாயகியாக அறிமுகம் ஆனார். குழந்தை நட்சத்திரமாக எல்லோரையும் கவர்ந்த ஷாலினி, கதாநாயகியாகவும் முதல் படத்திலேயே 'நம்ம பேபி ஷாலினியா இது' என்று கேட்கும் அளவிற்கு ஆச்சர்யப்பட வைத்திருந்தார். இதன் பிறகு அஜித்துடன் அமர்க்களம், மீண்டும் விஜய்யுடன் 'கண்ணுக்குள் நிலவு', மாதவனுடன் 'அலைபாயுதே', பிரசாந்துடன் 'பிரியாத வரம் வேண்டும்' என தொடர்ந்து நடித்தார். இப்படங்களில் அவர் ஏற்றிருந்த காதலுக்கு மரியாதை மினி கதாபாத்திரமாக இருக்கட்டும், 'அமர்க்களம்' மோகனா கதாபாத்திரமாக இருக்கட்டும் , 'அலைபாயுதே' சக்தி கதாபாத்திரமாக இருக்கட்டும், 'பிரியாத வரம் வேண்டும்' நித்தி கதாபாத்திரமாக இருக்கட்டும், அனைத்திலும் தன் வசீகரமான அழகாலும், நடிப்பாலும் அந்த இடத்தில் வேறு யாரையும் பொருத்தி பார்த்திட முடியாத அளவிற்கு நம்மை கவர்ந்திருப்பார்.
கணவர் அஜித்துடன் நடிகை ஷாலினி
கதாநாயகி டு அஜித்தின் மனைவி
இப்படி கதாநாயகியாக நடிக்க வந்த நான்கு ஆண்டுகளில், நான்கு படங்களிலேயே என்றுமே மறக்க முடியாத ஒரு உணர்வை நமக்கெல்லாம் தந்துவிட்டு போன ஷாலினி 1999 ஆம் ஆண்டு, முதல் முறையாக நடிகர் அஜித் குமாருடன் நடித்த போது, முதல் படத்திலேயே அவரது அழகாலும், பேச்சாலும் கவரப்பட்டு 2000ஆம் ஆண்டு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி இந்த 23 ஆண்டுகளில் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக எத்தனையோ விமர்சனங்களை அவர் சந்தித்திருந்தாலும், அவற்றையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, இன்று இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக, சிறந்த மனைவியாக, நல்ல குடும்ப தலைவியாக பலருக்கும் எடுத்துக்காட்டான வாழ்க்கையை வாழ்ந்து வரும் ஷாலினி இன்று தனது 44-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ராணி ஆன்லைன் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துகள்.