இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

2021 ஆம் ஆண்டு உதய் குர்ரால இயக்கத்தில் "மெயில் " என்கிற திரைப்படம் வெளியானது. அந்த படத்தில் நடித்த அனைவருமே புதுமுகங்கள். இருந்தாலும் படம் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது. இதில் பல பேர் நடித்திருந்தாலும் அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தவர் கௌரி பிரியா ரெட்டி. அவரின் கதை தேர்வுகள் எப்பொழுதும் வித்தியாசமாக இருக்கும். தமிழில் மாடர்ன் லவ் வெப் தொடரில் வரும் "லாலாகுண்டா பொம்மைகள்", தெலுங்கில் "ரைட்டர் பத்மபூஷன்" போன்ற வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்தவர். தற்போது இவரது நடிப்பில், தமிழில் பிரபு வியாஸ் ராம் இயக்கத்தில் "லவ்வர் " என்கிற திரைப்படம் வெளியாகி இருக்கிறது. கௌரி பிரியா ரெட்டி, திரைப்படத்தில் இருக்கும் நுணுக்கங்களை கற்று தேர்ந்திருக்கிறார். அதற்கு ஏற்றவாறு கதைகளையும் தேர்ந்தெடுக்கிறார். அதுமட்டுமில்லாமல் தான் நடிக்கும் படங்களுக்காக விருதுகளையும் எளிதில் தட்டி செல்கிறார். அவரின் திரைத்துறை அனுபவத்தையும், எதிர்கால திட்டத்தையும் இக்கட்டுரையில் காணலாம்.

கௌரி பிரியாவின் ஆரம்பகாலம்


நடிகை கௌரி பிரியா ரெட்டி

நவம்பர் 13, 1993 ஆம் ஆண்டு ஹைதராபாதில் பிறந்தார் கௌரி. இவரது தந்தை பெயர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, தாயார் பெயர் வசுந்தரா. வீட்டில் ஒரே பெண் குழந்தை என்பதால் மிகவும் செல்லமாக வளர்ந்துள்ளார். இவரது தந்தை மெட்லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிசெய்து வருகிறார். கௌரி மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டாலும் இவரது தந்தை அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். கௌரிக்கு மாடலிங் மீது ஆசை வந்ததும் அதை தடுக்காமல் இவருக்கு முழு சப்போர்ட் செய்துள்ளனர் இவரது குடும்பத்தினர். அதுமட்டுமில்லாமல் இவர் பாட்டு, நடனம் மற்றும் அபாகஸ் என்று மற்ற திறமைகளையும் சிறுவயதிலேயே வளர்த்துள்ளார். இதனால் இவரது அன்றாட வாழ்க்கை எப்பொழுதும் பிஸியாகவே இருக்குமாம். அதுமட்டுமில்லாமல் தற்போது அவர் அடைந்திருக்கும் வெற்றியில் இவரது குடும்பத்திற்கு அதிக பங்கு இருக்கிறது என்று சமீபத்திய பேட்டியில் கூறியிருக்கிறார். தனது பள்ளிப்படிப்பை செகந்திராபாதிலுள்ள செயின்ட் அன்ஸ் மேல்நிலை பள்ளியில் படித்தார். அதன்பிறகு செயின்ட். பிரான்சிஸ் ஜூனியர் கல்லூரியில் தனது இளங்கலை பட்டம் பெற்றார். தற்போது டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் கம்யூனிகேஷனில் ஆன்லைனில் முதுகலை பட்டம் பயின்று வருகிறார்.

கௌரி பிரியாவின் போராட்ட காலங்கள்


மாடலிங் மற்றும் "மிஸ் ஹைதராபாத்" பட்டம் வென்ற தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

கௌரி அதிகமாக பேசும் நபர் கிடையாது. அதனாலேயே ஆரம்பத்தில் இவருக்கு மாடலிங் துறையில் வருவதற்கு தயக்கமாக இருந்ததாம். பிறகு இவரது நண்பர்கள் க்ரித்திகா, நைனிகா இருவரும்தான் ஊக்கமளித்து சேர வைத்துள்ளனர். அதன்பிறகு மாநில அளவிலான அழகி போட்டியில் பங்கேற்க ஆரம்பித்தார். தொடர்ச்சியாக 6 முறை பங்கேற்ற இவர் 7 ஆவது முறை "மிஸ் ஹைதராபாத்" பட்டத்தை வென்றார். அதன்பிறகு ஆந்திராவில் பிரபல நிகழ்ச்சியான "போல் பேபி போல்" சீசன் 2 மற்றும் சீசன் 3-ல் ஃபைனலிஸ்ட் ஆகி மக்கள் மனதில் இடம்பிடித்தார். அதன்பிறகு தனது நண்பர்களின் குறும்படங்கள், மியூசிக் வீடியோ என்று மாறிமாறி நடித்து வந்தார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது "யாத்ரா " என்கிற மியூசிக் வீடியோ. அதன்மூலம் மிகவும் பிரபலமானார். அதன்பிறகு சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த கௌரி மெயில் என்கிற திரைப்படத்தின்மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்தார்.

கௌரியை பிரபலமாக்கிய "லாலாகுண்டா பொம்மைகள்"


'மாடர்ன் லவ்' வெப் தொடர் மற்றும் 'லாலாகுண்டா பொம்மைகள்' குறும்படத்தில் கௌரி பிரியா

2023 ஆம் ஆண்டு தியாகராஜா குமாரராஜா தயாரிப்பில் "மாடர்ன் லவ்" வெப் தொடரில் ராஜூமுருகன் இயக்கத்தில் "லாலாகுண்டா பொம்மைகள்" என்கிற படத்தில் நடித்தார். பிஸ்கட் செய்யும் இடத்தில் வேலை பார்க்கும் கௌரி ஏற்கனவே காதலித்து ஏமாந்து வாழ்க்கையையே வெறுக்கிறார். அப்பொழுது மீண்டும் இவருக்கு பானிபூரி விற்கும் நபர்மீது காதல் வருகிறது. இவர்கள் இருவரும் இணைந்தார்களா என்பதே படத்தின் மீதி கதை. நகைச்சுவை உணர்வோடு காதலை மிக அழகாக கூறியிருப்பார் இயக்குநர் ராஜூமுருகன். ஷோபா என்கிற கதாபாத்திரத்தில் மிகக் கச்சிதமாக பொருந்தியிருந்தார் கௌரி. இந்த படம் இவரை தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைய செய்தது. இப்படத்தில் வரும் பொம்மை என்கிற வசனம் இன்னும் பிரபலம். இப்படத்திற்கு பிறகு மீண்டும் தெலுங்கு சினிமாவிற்குள் நுழைந்தார் கௌரி.

தெலுங்கில் புதிய உச்சத்தை தொட்ட கௌரி பிரியா


'மாடர்ன் லவ்' வெப் தொடரின் ஒரு காட்சியில் கௌரி பிரியா

மெயில் படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் அறிமுக இயக்குநர் ஷண்முக பிரசாந்த் இயக்கத்தில் நடிகர் சுஹாஸுடன் இணைந்து "ரைட்டர் பத்மபூஷன்" என்கிற படத்தில் நடித்தார். அந்த படத்தில் ரைட்டர் பத்மபூஷன் என்கிற கதாபாத்திரமே இவரை சுற்றித்தான் நகரும். ரைட்டராக விரும்பும் பத்மபூஷன் சாதிக்க முடியாமல் தவித்து வருகிறார். அப்பொழுது பத்மபூஷன் என்கிற இவரது பெயரில் புத்தகம் பிரபலமடைகிறது. அதன்பிறகு சுஹாஸ், யார் அந்த பத்மபூஷன்? என்று கண்டுபிடிக்கிறார். அதுவே படத்தின் கரு . பத்மபூஷனாக வரும் சுஹாசை விட கௌரி பிரியா தான் நிறைய இடங்களில் ஸ்கோர் செய்திருப்பார். படத்தில் கண்ணாவாக வரும் கௌரி, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார்.

மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா "லவ்வர்"?


'லவ்வர்' திரைப்படத்தின் ஒரு காட்சியில் நடிகர் மணிகண்டனுடன் கௌரி பிரியா

குட் நைட் படத்தின் வெற்றியை தொடர்ந்து மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், தனது இரண்டாவது தயாரிப்பாக மீண்டும் மணிகண்டனை வைத்து "லவ்வர் " என்கிற படத்தை, காதலை மையமாக வைத்து எடுத்துள்ளது. அக்கதையின் நாயகியாக கௌரி பிரியா ரெட்டி நடித்துள்ளார். தமிழில் இந்த படம்தான் அவருக்கு தியேட்டரில் வெளியாகும் முதல் படம். தற்போது வெளியாகியிருக்கும் இந்த படம், 2020களில் இருப்பவர்களின் மைண்ட்செட்டை அழகாக வெளிப்படுத்தியுள்ளது. லிவ்வின் வெப்சீரிஸ் மூலம் பிரபலமான பிரபுராம் வியாஸ் நீண்ட போராட்டத்திற்கு பிறகு இந்த லவ்வர் படத்தை இயக்கி உள்ளார். மணிகண்டன், ஸ்ரீகெளரி பிரியா, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம் என பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Updated On 19 Feb 2024 11:49 PM IST
ராணி

ராணி

Next Story