இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தெலுங்கை தாய்மொழியாக கொண்டிருந்தாலும், நடிகையர் திலகம் சாவித்திரியை நினைவுபடுத்தும் படியான அழகிய தோற்றமும், தமிழ் மொழியை அச்சர சுத்தமாக பேசும் பாங்கும் கொண்டவர்தான் பி.ஆர்.வரலட்சுமி. தென்னிந்திய திரையுலக நட்சத்திர கதாநாயகர்கள் அனைவருடனும் இணைந்து நடிக்கக்கூடிய வாய்ப்பினை பெற்ற பி.ஆர்.வரலட்சுமி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா, தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டாராக வலம் வந்த என்.டி.ராமாராவ் ஆகிய மூன்று முதலமைச்சர்களுடன் இணைந்து நடித்தவர் என்ற பெருமைக்குரியவர். இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் ‘வாழையடி வாழை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பி.ஆர்.வரலட்சுமி தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் 600-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தன் இயல்பான நடிப்பால் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர். அப்படிப்பட்டவர் தனது கலை பயணத்தை வெள்ளித்திரையோடு நிறுத்திக்கொள்ளாமல், சின்னத்திரைக்குள்ளும் நுழைந்து, தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் 'நான் சுந்தரியோட அப்பத்தாவாக்கும்’ என்ற டயலாக்குடன் என்ட்ரி கொடுத்ததில் இருந்து இன்றுவரை அனைவரையும் தன் அதிரடி, சரவெடியான நடிப்பால் மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்டவர் தன் திரையுலகப் பயணம் குறித்தும், அவர் கடந்து வந்த பாதை குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை ராணி நேயர்களுக்காக நம்மோடு பகிர்ந்து கொண்டார். அதுகுறித்து இந்த கட்டுரையில் காணலாம்.

பி.ஆர். வரலட்சுமியான உங்களுக்கு அடையாளம் தந்த உங்களின் குடும்பம் பற்றி எங்களோடு பகிர்ந்து கொள்ள முடியுமா?

எனது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு அருகில் உள்ள நகரி. என்னுடன் பிறந்தவர்கள் மூன்று அண்ணன் தம்பிகள், நான்கு அக்கா, தங்கைகள் என மொத்தம் ஏழு பேர் ஆவர். என் தந்தை பெயர் ராமச்சந்திர நாயுடு. எங்கள் ஊரில் சொத்து அதிகம் உள்ள மிகப்பெரிய குடும்பம் எங்களுடையது. எங்கள் தாத்தா சொந்தமாக பள்ளிக்கூடம் கட்டி கொடுத்திருக்கிறார். இன்றும் அந்த பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நான் பள்ளிக்கு செல்லும் வயதில் என்னை பார்ப்பவர்கள் அனைவரும் நடிகையர் திலகம் சாவித்திரி போல் இருக்கிறேன் என்று கூறி சாவித்திரி சாவித்திரி என்று அழைப்பார்கள். அப்படி அழைத்ததனால்தான் எனக்கும் அவர்களை போன்று நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. நான் நடிக்க வேண்டும் என்று வீட்டில் சொன்னபோது யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. பிறகு அம்மா நிறைய ரூல்ஸ் போட்டுத்தான் என்னை நடிக்க அனுமதித்தார். இன்றுவரை நான் நல்ல பெயரோடு சினிமாவில் இருக்கிறேன் என்றால் அது என்னுடைய அம்மா அன்று எனக்கு காட்டிய வழிதான் காரணம்.


நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டபோது பி.ஆர்.வரலட்சுமி எடுத்துக்கொண்ட புகைப்படம்

சாவித்திரி அம்மாவை முன்மாதிரியாகக் கொண்டு சினிமாவுக்கு வந்த உங்களுக்கு முதல் படமே இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது?

எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த ஒருவர் சினிமா துறையில் பணியாற்றி வந்தார். அவருடைய மாமியார் எங்கள் வீட்டிற்கு வந்து பால் கறந்து கொடுத்துவிட்டு போவார்கள். அவரிடம் எனக்கு சினிமா மீது இருந்த ஆசையை கூறியிருந்தோம். அவர்தான் தன்னுடைய மருமகனிடம் பேசி சினிமாவுக்கான வாய்ப்பை பெற்றுக் கொடுத்தார். இப்படித்தான் நான் திரையுலகிற்குள் நுழைந்தேன்.

முதல் வாய்ப்பிலேயே ஒரு மிகப்பெரிய இயக்குநரின் படத்தில் நடிக்கப் போகிறோம் என்பது தெரிந்தவுடன் உங்களுக்கான எதிர்பார்ப்பு எப்படி இருந்தது?

அந்த வயதில் எனக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால், இப்போதுதான் தெரிகிறது. நாம் எப்பேர்ப்பட்ட லெஜெண்ட்ஸ் கூட எல்லாம் பணியாற்றி இருக்கிறோம் என்று. இப்போது அதையெல்லாம் நினைத்து பார்க்கும்பொழுது மிகப்பெரிய சந்தோஷமும், ஆத்ம திருப்தியும் எனக்கு இருக்கிறது.

உங்களின் முதல் படமான ‘வாழையடி வாழை’ படத்திலேயே எஸ்.வி.ரங்காராவ், ஆர்.முத்துராமன் போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்தபோது கிடைத்த மறக்க முடியாத அனுபவங்கள் என்ன?

நான் அந்த படத்தில் நடிக்கும்பொழுது மிகவும் சின்ன பெண். எஸ்.வி.ரங்காராவும், நானும், தெலுங்கு மொழியை சேர்ந்தவர்கள். அதனால் அவர் என்னிடம் நன்றாகவே பேசுவார். என்னை பார்க்கும்போதெல்லாம் என் மகள் போன்றே இருக்கிறாய் என்று கூறுவார். நானும் பதிலுக்கு நீங்கள் என் அப்பாவை போன்று இருக்கிறீர்கள் என்று சொல்லுவேன். இப்படித்தான் படப்பிடிப்பு தலத்தில் பேசிக்கொள்வோம். அதை தாண்டி அவரிடம் நிறைய கற்றுக்கொள்ளலாம். எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் அழகாக சொல்லிக்கொடுப்பார். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அதே போன்றுதான் நடிகர் முத்துராமன் அவர்களும். பழகுவதற்கு அற்புதமான மனிதர்.

இயக்குநர் கே.எஸ்.ஜி-யிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய இருந்திருக்கும். அதுபற்றி எங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியுமா?

அவரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது. வசனம் சொல்லிக்கொடுப்பதாக இருக்கட்டும், நடிக்க சொல்லிக் கொடுப்பதாக இருக்கட்டும் அவரைப் போன்ற ஒரு சிறந்த ஆசானை பார்க்க முடியாது. அவரிடம் கற்றுக்கொண்ட விஷயங்கள்தான் என்னை இன்றும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அவர் போன்றுதான் இன்று சுந்தரி சீரியலின் இயக்குநர் அழகர்சாமியும். அவர் எப்படி என்னை இயக்கி வேலை வாங்கினாரா அதே போன்றுதான் இன்று சுந்தரி இயக்குநரும் என்னை வேலை வாங்குகிறார். கே.எஸ்,ஜி -இடம் அன்று கற்றுக்கொண்ட அனுபவம் இந்த சீரியலிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.


ராணி ஆன்லைன் தளத்திற்காக பி.ஆர்.வரலட்சுமி பேட்டி அளித்த தருணம்

கே.எஸ்.ஜி-யிடம் திட்டு வாங்கிய அனுபவம் உண்டா?

ஏன் இல்லை? நிறையவே வாங்கியிருக்கிறேன். ஒருமுறை தமிழில் வசனம் பேசும்போது சரியாக பேசாமல் தெலுங்கையும், தமிழையும் கலந்து பேசி ஒரு டயலாக்கை விட்டுவிட்டேன். திரும்ப திரும்ப சொல்லி கொடுத்தும் எனக்கு வரவில்லை. அதற்காக என்னிடம் மிகவும் கோபப்பட்ட அவர் 'அடி செருப்பால நாயே’ என்று திட்டினார். ஆனால், அந்த வயதில் எதற்காக அப்படி திட்டினார் என்ற விவரம் கூட எனக்கு தெரியாது. அது ஒரு பள்ளிக்கூடம் மாதிரித்தான். ஆசிரியர் திட்டினாள் ஏற்றுக்கொள்வோம் இல்லையா. அதுபோன்று அன்று எனது ஆசிரியர் திட்டினார் என்றே எடுத்துக்கொண்டேன். எந்த அளவுக்கு கே.எஸ்.ஜி திட்டுகிறாரோ அதே அளவுக்கு நமது நடிப்பு நன்றாக இருந்தால் பாராட்டவும் செய்வார்.

இரண்டாவது படம் சினிமா பைத்தியம் என்றொரு படத்தில் நடித்தீர்கள். அது உங்களின் நிஜ வாழ்க்கையோடு ஒத்துப்போனதா? எப்படி உணர்ந்தீர்கள்?

இரண்டாவது படமே மிகப்பெரிய இயக்குநரான முக்தா ஸ்ரீனிவாசனின் இயக்கத்தில் நடித்தேன். மிகப்பெரிய வாய்ப்பு. அந்த படம் எனக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

மறைந்த ஸ்ரீதேவியுடன் நடித்திருக்கிறீர்கள்.. அவரை பற்றி பகிர்ந்துகொள்ள முடியுமா?

எஸ்.பி.முத்துராமன் இயக்கதில் 1973-ஆம் ஆண்டு வெளிவந்த தெய்வ குழந்தைகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் ஸ்ரீதேவி. எனக்கு அவர்களை மிகவும் பிடிக்கும். ஆனால் அவர் இன்று நம்மோடு இல்லை எனும்போது நிஜமாகவே வருத்தமாக இருக்கிறது.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரோடு 'நவரத்தினம்' படத்தில் நடித்துள்ளீர்கள். அதை பற்றி கூறுங்கள்.. அந்த வாய்ப்பு எப்படி உங்களுக்கு கிடைத்தது?

இயக்குநர் ப. நீலகண்டன் அந்தசமயம் வரதட்சணை கொடுமையை அடிப்படையாகக் கொண்டு நாடகம் ஒன்றை அரங்கேற்றினார். அந்த நாடகத்தில் நானும் நடித்திருந்தேன். அதனை பார்ப்பதற்காக வந்திருந்த எம்.ஜி.ஆர் என் நடிப்பை பார்த்து பாராட்டியதோடு 'நவரத்தினம்' படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பையும் வழங்கினார். இவ்வாறுதான் அப்படத்தில் ஒரு ரத்தினமாக நானும் இணைந்தேன்.


ஆரம்பகால படங்களில் பி.ஆர்.வரலட்சுமியின் தோற்றம்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தபோது நிகழ்ந்த, மறக்க முடியாத சம்பவம் ஏதேனும் இருக்கிறதா?

கண்டிப்பாக, 'நவரத்தினம்' படத்தின் ஷூட்டிங் சிவா கார்டனில் நடந்துக் கொண்டிருந்தபோது திடீரென மழை வந்து படப்பிடிப்பு தடைப்பட்டது. அப்போது நாங்கள் அனைவரும் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தபோது, ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வெளியே இருந்த கேட் அருகில் கூட்டமாக பல நபர்கள் கூடி எம்.ஜி.ஆரை பார்க்க வேண்டும் என கூச்சலிட்டனர். இதனை கவனித்த எம்.ஜி.ஆர் உடனே அவர்களை உள்ளே அழைத்து விஷயம் என்ன என கேட்டார். அவர்களோ பல நாட்களாக பெய்து வரும் மழையால் எங்கள் பகுதியில் உள்ள வீடுகள் நாசமாகி விட்டன, உங்களால் முடிந்த உதவியை தங்களுக்கு செய்து தருமாறு கேட்டனர். அவர்கள் இதை சொன்ன மறுகணமே கொஞ்சமும் யோசிக்காத எம்.ஜி.ஆர்., தனது உதவியாளரை அழைத்து அவர்களுக்கு தேவையான பணத்தை அள்ளி கொடுத்தார். இந்த சம்பவத்தை என் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாது.

இந்திய சினிமாவின் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவரான பாலுமகேந்திரா, முதன்முதலில் திரைத்துறைக்குள் அறிமுகமாகி படம் பிடித்த முதல் நடிகை நீங்கள் தான். அந்த அனுபவத்தை பற்றி கூறுங்கள்?

ஆம், இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. மலையாளத்தில் நான் நடித்த 'பனிமுடக்கு' படத்தில்தான் முதன்முதலில் அவர் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி, என்னை வைத்து படம் பிடித்தார். அந்த சமயம் அது எனக்கு பெரிதாக தெரியவில்லை. ஆனால் இத்தனை வருடங்களுக்கு பிறகே அதன் அருமை புரிகிறது. அதிலும் பாலுமகேந்திரா என்கிற ஆளுமை படம் பிடித்த முதல் நடிகை நான்தான் எனும்போது பெருமையாக இருக்கிறது.

எம்.ஜி.ஆருடன் நடித்தது போலவே நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடனும் இணைந்து நடித்துள்ளீர்கள் அந்த அனுபவம் பற்றி கூறுங்கள்?

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் ஒன்றை 'சரித்திர நாயகன்' என்ற பெயரில் சிவாஜிகணேசன் இங்கு தமிழில் ரீமேக் செய்திருந்தார். அதில் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், முக்கியமான கதாபாத்திரத்தில் நான் நடித்திருந்தேன். அதேபோல் பிரபுவும் அதில் நடித்திருந்தார். கதையின் படி ஒரு குழந்தையை நான் எடுத்து சென்று, பத்திரமாக காப்பாற்றி கிளைமாக்சில் சிவாஜி அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த காட்சி படமாக்கப்பட்டபோது சிவாஜி கணேசனின் நடிப்பை நேரில் பார்த்து வியந்து போனேன். கண்களில் கண்ணீர் சொட்ட சொட்ட அவர் பேசிய வசனமும், நடிப்பும் என்னை அப்படியே பிரம்மிக்க வைத்துவிட்டது. இப்போது அதனை நினைத்தால் கூட மெய் சிலிர்க்கிறது.


சீரியல் நடிகை ஹேமா ஸ்ரீகாந்துடன், பி.ஆர்.வரலட்சுமி

த்தனையோ பெரிய நடிகர்கள், இயக்குநர்களோடு இணைந்து பணியாற்றி இருக்கிறீர்கள். இருந்தும் அது தொடர்பான ஒரு புகைப்படம் கூட உங்களது வீட்டில் பார்க்க முடியவில்லையே?

உண்மைதான். தவறு செய்துவிட்டேன். அந்த நேரம் அதைப்பற்றி எல்லாம் நான் யோசிக்கவே இல்லை. காரணம் நான் சிறு வயதிலேயே திரைத்துறைக்குள் நுழைந்துவிட்டதால், அந்த விவரம் அப்போது எனக்கு தெரியவில்லை. மேலும் என் அம்மாவின் கெடுபிடியும் என்னை சிந்திக்க விடவில்லை. ஆனால் இப்போது யோசிக்கிறேன். புகைப்படம் மட்டும் இல்லை, வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தி இருந்தால் இன்னும் பெரிய நட்சத்திரமாக வளர்ந்திருக்கலாம் என்று.

Updated On 20 May 2024 11:56 PM IST
ராணி

ராணி

Next Story