தமிழ் சினிமாவில் இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் இடையே இருக்கும் ‘பருத்திவீரன்’ படம் தொடர்பான மோதல் கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இவ்வளவு காலம் உள்ளுக்குள்ளேயே புகைந்து கொண்டிருந்த நெருப்பு, ‘கார்த்தி 25’ படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வுக்குப் பிறகு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இந்த பிரச்சினையில், நடிகர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி, பாடலாசிரியர் சினேகன், இயக்குநர் இமயம் பாரதிராஜா, கரு.பழனியப்பன் என பலரும் இயக்குநர் அமீருக்காக ஆதரவு குரல் கொடுத்தனர். இதையடுத்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நான் எந்த வகையிலாவது இயக்குநர் அமீரை காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்பதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனாலும் இந்த பிரச்சினை முடிவுக்கு வராத நிலையில், நாளுக்குநாள் அமீருக்கு ஆதரவாக குரல் எழுப்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. அந்த வகையில், இயக்குநர் பாலாவின் ‘பிதாமகன்’ படத்தின் மூலம் அறிமுகமாகி ‘பருத்திவீரன்’ படத்தில் டக்ளஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் கவர்ந்திருந்த நடிகர் கஞ்சா கருப்பு சமீபத்தில் அளித்திருந்த பேட்டி ஒன்றில், அமீருக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார்.
அதில் பேசியிருந்த கஞ்சா கருப்பு “அமீர் என்ற ஒருவர் இல்லை என்றால், கார்த்தி என்ற நடிகர் அடையாளம் பெற்றிருக்கமாட்டார். தமிழ்நாட்டில் அவரை யாருக்குத் தெரியும்? 30 நாட்கள் வெயிலிலும், மழையிலும் நிற்க வைத்து கார்த்தி என்ற நடிகரை உருவாக்கியவர் அமீர்தான். இன்னைக்கு கார்த்தி ஏதேனும் நிகழ்ச்சிக்கு சென்றால் முதலில் சொல்லும் வார்த்தை என்ன மாமா சௌக்கியமா? என்பதுதான். அது யாரால் வந்தது? அன்றைக்கு ஞானவேல் ராஜா தயாரிப்புக்கான மீதி பணத்தை தராமல் ஓடி ஒளிந்தபோது பணம் கொடுத்து உதவியாக நின்றவர்கள் அமீரின் நண்பர்களும், தெரிந்தவர்களும்தான். பருத்திவீரன் படத்தில் நடித்திருந்த ஒவ்வொருவரும் ஞானவேல் ராஜாவை நம்பியா படத்திற்குள் வந்தார்கள். அமீர் என்ற ஒருவருக்காக மட்டும்தான் வந்தார்கள். கார்த்தி, பருத்திவீரனுக்கு பிறகு எத்தனையோ படம் நடித்துவிட்டார். நடித்தும் கொண்டிருக்கிறார். ‘பருத்திவீரன்’ படம்போல் ஒரு படம் பண்ணிவிட சொல்லுங்கள். நான் இந்த சினிமா துறையை விட்டே சென்றுவிடுகிறேன்" என்று நடிகர் கஞ்சா கருப்பு ஆவேசமாக பேசியுள்ளார். தற்போது அவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் அமீர் மற்றும் நடிகர் கார்த்தி குறித்து கஞ்சா கருப்பு
‘லவ்வர்’ பட போஸ்டரை வெளியிட்ட சிம்பு
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர்தான் மணிகண்டன். இவர் விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக கலைத்துறைக்குள் நுழைந்து, பின்னர் ‘விக்ரம் வேதா’, ‘காலா’, ‘சில்லு கருப்பட்டி’, ‘ஜெய்பீம்’, ‘ஏலே’ போன்ற படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து தமிழ் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக காலூன்ற ஆரம்பித்தார். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தில் ரஜினியின் மகனாக வந்து பலரின் கவனத்தை பெற்ற இவர், பிறகு நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்த ‘ஜெய்பீம்’ படத்தின் ராசாக்கண்ணு கதாபாத்திரம் மற்றுமொறு மைல் கல்லாக அமைந்தது. இதனை தொடர்ந்து, சோலோ ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து, விநாயக் சந்திரசேகர் என்பவரது இயக்கத்தில் ‘குட் நைட்’ படத்தில் நடித்தார். குறட்டையால் வரும் பிரச்சினைகளை மையமாக வைத்து வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மணிகண்டன் என்ற நடிகரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.
இந்த நிலையில், ‘குட் நைட்’ படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மீண்டும் இரண்டாவது முறையாக, மணிகண்டனை வைத்து ஒரு படத்தினை தயாரித்துள்ளது. அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சமீபத்தில்தான் படக்குழுவும் அறிவித்திருந்தது. ரொமான்டிக் மற்றும் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக மாடர்ன்லவ் புகழ் ஸ்ரீகெளரி பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ’லவ்வர்’ என்ற பெயர் வைக்கப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அட்டகாசமாக இருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு தனது எக்ஸ் தல பக்கத்தின் வாயிலாக வெளியிட்டு ரசிகர்களுக்கு உணர்வுபூர்வமான அனுபவத்தை கொடுக்க தயாராகுமாறு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். நடிகர் சிம்புவின் இந்த ட்விட்டிற்கு நன்றி தெரிவித்து பதிலளித்துள்ள நடிகர் மணிகண்டன், இந்தப் படம் எனக்கும், எனது படக்குழுவினருக்கும் மிகவும் ஸ்பெஷலான ஒன்று என்றும், அந்த ஸ்பெஷலை நடிகர் சிம்பு மேலும் சிறப்பாக்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி
விஜய் சேதுபதியை இயக்கும் மிஷ்கின்
துணை நடிகராக வாழ்க்கையை துவங்கி பின்னர் ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலமாக கதாநாயகனாக தமிழ் திரையுலகில் நுழைந்து இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்தான் விஜய் சேதுபதி. இவர் தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என மற்ற மொழிப் படங்களிலும் இரண்டாம் நிலை கதாநாயகனாக, வில்லனாக என மாறி மாறி நடித்து வருகிறார். தற்போது இவர் தமிழில் ‘மெரி கிறிஸ்துமஸ்’, ‘விடுதலை 2’, ‘மகாராஜா’ போன்ற படங்களில் நடித்து வரும் அதே வேளையில், இயக்குநர் மிஷ்கினுடன் புதிய படம் ஒன்றில் இணைந்து பணியாற்ற தயாராகி வருகிறார். 'ட்ரெயின்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 1 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. மிஷ்கின் இயக்கும் 11வது படமான இதனை கலைப்புலி பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் வி கிரியேஷன்ஸ் மூலம் எஸ்.தாணு தயாரிருக்கிறார். ஒரு ரயில் சம்பவத்தில் நடைபெறும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக உள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்கத்தோடு சேர்த்து மிஷ்கினே இசையமைக்கும் இந்த படத்தில் டிம்பிள் ஹயாதி, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்திற்காக விஜய் சேதுபதி 12 கிலோ வரை எடை குறைத்து மிகவும் ஸ்லிம்மாகி, மிகவும் ஸ்மார்ட்டாக, இளமையாக ஆரம்ப காலங்களில் இருந்தது போன்று காட்சியளிக்கிறார். தற்போது விஜய் சேதுபதியின் இந்த புகைப்படம் மட்டுமின்றி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வைரலாகி வருகிறது.
சென்னையில் 21 வது சர்வதேச திரைப்பட விழா
சென்னையில் 21 வது சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழக அரசின் ஆதரவுடன், இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன்(ஐசிஎப்) அமைப்பு 2003 ஆம் ஆண்டில் இருந்து இந்த திரைப்பட விழாவினை நடத்தி வருகிறது. இந்த விழாவில் சர்வதேச மற்றும் இந்திய அளவிலான திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு 57 நாடுகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் அனுப்பப்பட்டு, அதில் ஜூரி மூலம் 126 சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழ் சினிமாவில் இருந்து மட்டும் 25 படங்கள் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அதில் சிறந்த படங்களாக 12 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் சிறந்த படங்களாக முதல் மூன்று இடங்களை பெறும் படங்களுக்கு ரூ.7 லட்சம் வரை பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் உலக சினிமாவில் 12 படங்களும், இந்திய பனோரமாவில் 19 படங்களும் திரையிடப்பட உள்ளன. இதில் உலக சினிமாவில் தேர்வான 12 படங்களில் 2 படங்கள் இந்தியாவை சேர்ந்தவை ஆகும். இவற்றில் உலக சினிமாவில் சிறந்த படங்களாக முதல் மூன்று இடங்களை பெரும் படங்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் என மொத்தம் 9 பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன. இதன் தொடக்க நிகழ்ச்சியானது சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெறவுள்ளது.
தனது கணவருடன் நடிகை ஊர்வசி
இயக்குநர் அவதாரம் எடுக்கும் ஊர்வசியின் கணவர்
கே.பாக்யராஜின் ‘முந்தானை முடுச்சு’ படத்தின் வாயிலாக கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை ஊர்வசி. இதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் கால்பதித்து 1980 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் தோன்றும் போதெல்லாம் இவரின் இயல்பான நடிப்பை கண்டு ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை ஊர்வசி, மலையாள நடிகர் மனோஜ்.கே.ஜெயனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் உள்ள நிலையில், திடீரென மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். பின்னர் படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நடிகை ஊர்வசி நீண்ட காலம் கழித்து சிவபிரசாத் என்பவரை 2 வதாக திருமணம் செய்துகொண்டார். இன்றுவரை தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களில் இடைவெளி எடுக்காமலேயே பெரிய இயக்குநர்கள், அறிமுக இயக்குநர்கள் என்றில்லாமல் தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் பல்வேறு பரிமாணங்களில் மாறி மாறி நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறார் ஊர்வசி. அந்த வகையில், அண்மையில் கூட ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளிவந்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் தன் குணச்சித்திர நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர், பிறகு சத்யராஜுடன் இணைந்து ‘வீட்ல விசேஷங்க’ என்ற படத்திலும் கிருஷ்ணவேணியாக தனக்கே உரிய உடல் மொழியில் யதார்த்தமான நடிப்பை வழங்கி அனைவரையும் ரசிக்க வைத்திருந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் 700-வது படமாக வெளிவந்த ‘அப்பத்தா’ திரைப்படம் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் ஊர்வசி, தனது கணவர் சிவபிரசாத் எல்.ஜெகதாம்மா இயக்கும் முதல் படமான, “ஏழாம் கிளாஸ் ‘பி’ ஸ்டேட் பர்ஸ்ட்” என்ற படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதில் ஊர்வசியின் அக்காவான மறைந்த நடிகை கல்பனாவின் மகள் ஸ்ரீமயி கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘தங்கலான்’ படத்தில் நடிகை மாளவிகா மோகனன்
‘தங்கலான்’ டப்பிங் முடித்த மாளவிகா மோகனன்
தமிழ் சினிமாவில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை மாளவிகா மோகனன். இதன்பிறகு நடிகர் விஜய்யுடன் ‘மாஸ்டர்’, நடிகர் தனுஷுடன் ‘மாறன்’ ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர் தற்போது சியான் விக்ரமுடன் இணைந்து, பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். கோலார் தங்கவயல் பின்னணியில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் கடந்த நவம்பர் மாதம் 01ஆம் தேதி அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் மாளவிகாவின் மிரட்டலான நடிப்பையும், அவரின் தோற்றத்தையும் பார்த்த ரசிகர்கள், மாளவிகாவா இது என்று ஆச்சர்யப்பட்டு போயினர். 2024 ஜனவரி 26ந் தேதி குடியரசு தினத்தன்று வெளியாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து ரிலீசுக்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு பகுதியாக படத்திற்கான டப்பிங் பணிகளும் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், டப்பிங் பேசுவதற்காக சென்னை வந்துள்ள மாளவிகா மோகனன், தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் உதவி இயக்குநர்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, டப்பிங் அனுபவம் குறித்த கருத்துகளையும் பதிவிட்டுள்ள மாளவிகா, தனது இன்ஸ்டாகிராமிலும் டப்பிங் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட வீடியோவை பதிவிட்டுள்ளார். தற்போது மாளவிகாவின் இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.