இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இளையராஜா மகள் பவதாரிணி மரணம்

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி காலமானார். 47 வயதான இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துவந்த நிலையில் உயிரிழந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே பித்தப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கடைசி நிலையில்தான் கண்டறியப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் பல பாடல்களை பாடியிருக்கிறார். ‘ராசய்யா’ படத்தில் ‘மஸ்தானா... மஸ்தானா...’ என்ற பாடல்மூலம் பாடகியாக அறிமுகமானார். இளையராஜாவின் இசையில், ‘பாரதி’ படத்தில் இடம்பெற்ற ‘மயில் போலப் பொண்ணு ஒன்னு’ பாடல்தான் இவருக்கு சிறந்த பிண்ணனி பாடகிக்காக தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து, இவர் குரலில் வெளியான ‘என்னை தாலாட்ட வருவாளா ஹம்மிங்’, ‘தென்றல் வரும் வழியை’, ‘நீ இல்லை என்றால் வாழ்க்கையில் இல்லை’, ‘ஆத்தாடி ஆத்தாடி’, ‘தாலியே தேவையில்ல’, ‘ஒளியிலே தெரிவது’ போன்ற பல பாடல்கள் ஹிட் அடித்தன. மேலும் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் பவதாரிணி. இவருக்கு சபரிராஜ் என்பவருடன் திருமணமான நிலையில் குழந்தைகள் இல்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 3 படங்களில் கமிட்டாகி இசையமைத்து வந்தார்.


தனது அப்பா இளையராஜாவுடன் பாடகி பவதாரிணி

இந்நிலையில் புற்றுநோய்க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் ஜனவரி 25ஆம் தேதி மாலை காலமானார். இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பே பவதாரிணியின் நிலை குறித்து மருத்துவர்கள் அறிவித்துவிட்ட காரணத்தால்தான் அயோத்தியில் பிரம்மாண்டாமாக நடந்த ராமர் கோயில் திறப்பு விழாவில் இளையராஜா பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. மகள் இறந்த செய்தி கேட்டு இலங்கையில் மருத்துவமனைக்கு விரைந்து சென்ற இளையராஜா மனமுடைந்து அழுததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் விமானத்தின்மூலம் அவரது உடல் சென்னை கொண்டுவரப்பட்டு பிறகு சொந்த ஊரான தேனியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பவதாரிணியின் இறப்புக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

விஜயகாந்துக்கு பத்ம பூஷன்

கடந்த ஆண்டு இறுதியில் உடல்நல குறைவால் காலமான நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு மத்திய அரசால் ‘பத்ம பூஷன்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இறப்பதற்கு முன்புவரை விஜயகாந்தை கண்டுகொள்ளாத திரையுலகமும் அரசியல் உலகமும் அவரது இறப்புக்குப் பின் அவரை கொண்டாடியது. மேலும் ஆரோக்கியமாக இருந்த காலத்தில் அவர் செய்த உதவிகள் மற்றும் பசி என வருவோருக்கு உணவளித்தது குறித்து பரவலாக பேசப்பட்டது. இதனையடுத்து விஜயகாந்தின் உடலை நேரில் கண்டு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கானோர் சென்னையில் திரண்டனர். தொடர்ந்து விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து வெளியிட்ட கட்டுரை பதிவு பேசுபொருளானது. ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோதும் தேமுதிகவை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் இறப்புக்கு பிறகு தற்போது மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவித்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.


நடிகர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிப்பு

ஆண்டுதோறும் வழங்கப்படும் பத்ம விருதுகளில் 2024ஆம் ஆண்டில் தமிழகத்தைச் சேர்ந்த 8 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வைஜெயந்தி மாலா, பத்மா சுப்ரமணியம், விஜயகாந்த், பத்திரப்பன், ஜோஷ்னா சின்னப்பா, ஜோ டி குரூஸ் மற்றும் சேசம்பட்டி டி. சிவலிங்கம் ஆகியோருக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சமந்தாவை ரீப்ளேஸ் செய்த நடிகை

டோலிவுட், கோலிவுட் என கலக்கிக் கொண்டிருந்த சமந்தா, தான் ஹாலிவுட்டில் களமிறங்கப்போவதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். அதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவரும் சமந்தா, சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருக்கப்போவதாக சிலமாதங்களுக்கு முன்பு அறிவித்து தனது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார். இருப்பினும் அவ்வப்போது போட்டோஷூட்களை நடத்தியும், பயணங்களின் புகைப்படங்களை வெளியிட்டும் ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார். இதற்கிடையே படங்களில் கமிட் ஆகாவிட்டாலும் ஃபேமிலிமேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் ‘சிட்டாடல்’ என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.


நடிகை சமந்தா மற்றும் நடிகை ஸ்ருதி ஹாசன்

இந்நிலையில் ஹாலிவுட்டில் பிலிப் ஜான் இயக்கத்தில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த ‘சென்னை ஸ்டோரி’ என்ற படத்திலிருந்து விலகியுள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைக்காக இப்படத்தை விட்டு வெளியேறி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இது சமந்தா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் சமந்தாவின் கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தமாகி இருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் சென்னையை சேர்ந்த டிடெக்டிவ் கதாபாத்திரத்தில் இவர் தோன்றவிருப்பதாக கூறப்படுகிறது. 2004ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘தி அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ்’ என்ற நாவலை மையமாக கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு மாதத்தில் அரசியலில் விஜய்?

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். நடிப்பின்மீது மட்டுமே கவனம் செலுத்திவந்த விஜய்யை அரசியல்வாதிகள் தொடர்ந்து சீண்டியதன் விளைவாக அவர் அரசியலில் இறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்களை வைத்து தொடங்கப்பட்ட இயக்கத்தின்மூலம் கல்வி உதவித் தொகை வழங்குதல், வெள்ள நிவாரணம், தொகுதிவாரி நூலகம் என பல்வேறு செயல்களை செய்து மக்கள் மனதில் இடம்பிடித்து அரசியலுக்கு அடிபோட்டிருக்கிறார் விஜய். இதனால் முழுநேர அரசியலில் விஜய் இறங்கிவிடுவாரோ என்று எதிர்பார்த்த நிலையில், ‘வாரிசு’, ‘லியோ’ என அடுத்தடுத்த படங்களில் நடித்து அந்த எண்ணத்தை உடைத்தார். மேலும் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் G.O.A.T என்ற படத்தில் நடித்துவருகிறார்.


நடிகர் விஜய்யின் மேடை பேச்சுக்கள்

இந்நிலையில் ஜனவரி 25ஆம் தேதி பனையூரிலுள்ள தனது அலுவலகத்தில் வைத்து விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் விஜய். அந்த கூட்டத்தில் 150க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் எப்போது வேண்டுமானலும் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கவேண்டும் எனவும், பணிகளின்போது தடைகள் ஏற்பட்டால் உடனடியாக தலைமைக்கு தெரிவிக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. முதலில் கட்சியை பதிவு செய்துவிட்டு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது பிற கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதா என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த வதந்திகள் அவ்வப்போது பரவிவந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த தகவலானது ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

Updated On 6 Feb 2024 12:25 AM IST
ராணி

ராணி

Next Story