தமிழ் திரையுலகில் வெற்றிபெற்ற ஒளிப்பதிவாளர்கள் நிறையவே இருக்கிறார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர்களின் வரிசையில் என்றுமே தவிர்க்க முடியாதவராக இருப்பவர்தான் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான திரு. விஜய் மில்டன். இவர், தான் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய படங்கள் குறித்தும், இயக்குநராக கொடுத்த வெற்றிப்படங்களின் சுவாரஸ்யங்கள் குறித்தும் பகிர்ந்துகொண்ட நேர்காணலின் கட்டுரை தொகுப்பை ஏற்கனவே இரண்டு பகுதிகளாக பார்த்திருக்கும் நிலையில், அதன் தொடர்ச்சியாக மூன்றாம் பகுதியை இங்கே காணலாம்.
ஆட்டோகிராஃப் திரைப்படத்தில் பணியாற்றிய அந்த அனுபவம் எப்படி இருந்தது?
ஆட்டோகிராப் படத்தின் கதை நான்கு தளங்களில் பயணிக்கும். அதாவது ஒரு இளைஞனுக்கு நான்கு பெண்களுடன் காதல் என்பதுதான் கதை. ஆனால், தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு செடியில் ஒரு பூதான் என்று சொல்லியே படங்கள் ஓடுகின்றன. அப்படியான சூழ்நிலையில், இந்த படத்தின் கதையை நானும், இயக்குநர் சேரன் சாரும் தமிழ் சினிமாவில் அப்போது இருந்த மொத்த ஹீரோக்களையும் சென்று சந்தித்து கூறினோம். ஆனால், இந்த கதையை ஏற்று நடிக்க யாரும் முன்வரவில்லை. ஒரு கட்டத்தில் அவரே வெறுத்துப்போய்தான் மில்டன் நானே இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கப்போகிறேன் என்று கூறினார். அந்த நேரம் அவர் எடுத்த அந்த முடிவு மிகவும் கடினமான ஒன்றுதான். ஏனென்றால் ஒரு இயக்குநர் நடிகராக களமிறங்குவது என்பது அப்போது அவ்வளவு சாதாரணமான நிகழ்வு இல்லை. ஆனால், துணிச்சலாக அந்த முடிவை அவர் எடுத்தார். அதேபோன்று, படத்திற்கான தயாரிப்பாளரும் கிடைக்கவில்லை. இருந்தும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தயாரிப்பு, இயக்கம், நடிகர் என்று ஒட்டுமொத்தமாக அவர் களத்தில் இறங்கிய போது, நான் அவருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்.
![](https://www.ranionline.com/h-upload/2025/02/08/386355--02.webp)
ஒளிப்பதிவாளராக விஜய் மில்டன்
பிறகு இருவருமாக சேர்ந்து கேரளா சென்று லொக்கேஷன் பார்த்து படப்பிடிப்பை தொடங்கினோம். பொதுவாக ஒரு படத்தினை எடுத்து முடிக்க 60 முதல் 70 நாட்கள் ஆகும். ஆனால், ஆட்டோகிராஃப் படத்தில் நான்கு கதையில் கோபிகா போர்சனை மட்டும் எடுத்து முடிக்கவே 60 நாட்கள் எடுத்துக் கொண்டார் சேரன். கேட்டால் நான்தானே தயாரிப்பாளர் பார்த்துக்கொள்ளலாம் விடுங்கள் என்று கூறுவார். அப்படி ஒவ்வொரு காட்சியையும் மிகவும் பார்த்து பார்த்து எடுத்த படம்தான் ஆட்டோகிராஃப்.
அப்போது நீங்கள் கேமரா பயன்படுத்திய முறைக்கும், இப்போதைக்கு கேமரா பயன்படுத்தும் விதத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
நிறைய மாற்றங்கள் வந்துவிட்டது. ஆட்டோகிராஃப், காதல் படங்கள் எல்லாம் ஃபிலிம் கேமராவில்தான் படமாக்கினோம். அப்போது இருந்த அந்த கேமராக்கள் எல்லாம் இன்று இல்லை. ஆரிஃப்ளெக்ஸ் (Arriflex camera) கேமரா அறிமுகப்படுத்தியவர்களே இன்று டிஜிட்டலுக்கு மாறிவிட்டார்கள். இன்று 35 எம்.எம் சென்சார்தான் கேமரா. அந்த அளவு மட்டும்தான் தேவைப்படுகிறது. அப்போதெல்லாம் ஒவ்வொரு கேமரா லென்ஸ்க்கும் ஒவ்வொரு ஸ்ட்ரக்சர் இருக்கும். அதை எந்த ஒளிப்பதிவாளர்களும் மிஸ் செய்யவே மாட்டோம். ஒளிப்பதிவாளர்கள் அனைவரும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரியான லென்ஸ்களை பயன்படுத்துவதில் ஆர்வமாக இருப்பார்கள். இப்போதெல்லாம் அப்படி இல்லை. நிறைய கேமராக்கள் வந்துவிட்டன. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நிறைய மாற்றங்கள் வந்து எல்லாம் எளிமையாக மாறிவிட்டது. எல்லாவற்றையும் தாண்டி நான் ஒரு இயக்குநராக இருப்பதால் “பேனாவோ, எதில் எழுதுகிறாய் என்பதோ முக்கியம் கிடையாது. என்ன எழுதுகிறாய் என்பதுதான் முக்கியம்”. நீ என்ன கேமரா பயன்படுத்துகிறாய் என்பதெல்லாம் முக்கியம் கிடையாது? என்ன சொல்ல வருகிறாய் என்பதுதான் முக்கியமாக இருக்கிறது.
ஒளிப்பதிவாளராக இருந்த நீங்கள் ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ படத்தின் மூலம் இயக்குநராக களமிறங்கினீர்கள். ஆனால், அந்த படம் அப்போது சரியாக போகவில்லை? அதற்கு என்ன காரணம் என்று யோசித்து இருக்கிறீர்களா?
![](https://www.ranionline.com/h-upload/2025/02/08/386357--03.webp)
‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ திரைப்படத்தில் பரத் மற்றும் நடிகை மல்லிகா கபூர்
எனக்கு அது தெரியவில்லை. இப்போ நாம கேட்டுகிட்டு இருக்கிறது சூரியன் எஃப்.எம்மா, ரேடியோ மிர்ச்சியா இல்லை ஆல் இந்தியன் ரேடியோவா என்பதை முடிவு செய்துவிட வேண்டும். அனைத்துமே எஃப்.எம் என்றாலும் ஒவ்வொன்றுக்கும் ஒருவிதமான தன்மை இருக்கிறது. நிகழ்ச்சி (Nature of programme) என்ன என்பதை செட் செய்துவிடவேண்டும். அதேபோன்றுதான் ஒரு படத்திலும் முதல் 15 நிமிடம் என்ன மாதிரியான கதை போக்கு என்பதை செட் செய்துவிட வேண்டும். ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ படத்தின் முதல் பாதி எனர்ஜிடிக்காக வேறு மாதிரியாக இருக்கும். இரண்டாம் பத்தி காதலுக்காக தியாகம் செய்வது போன்று முழுக்க முழுக்க வேறுமாதிரி இருக்கும். அப்படி சொன்னவிதம் சரியில்லையோ என்று நான் நினைக்கிறேன். இப்போது உள்ளவர்களின் மனநிலைக்கு படம் சரியாக இருக்கிறது. ஆனால், அன்று நான் இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்து செய்திருக்க வேண்டுமோ என்று நினைக்கிறேன்.
மீண்டும் எப்போது காதல் படங்களை உங்கள் இயக்கத்தில் பார்க்கலாம்?
எனக்கு காதல் ஜானரிலான படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். கதையும் இருக்கிறது. விரைவில் தயாரிப்பாளரும், ஹீரோவும் சரியாக அமைந்தால் நல்ல காதல் படமாக எடுத்துவிடலாம். ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்திற்கு முன்பாக அதைத்தான் படமாக எடுப்பதாக இருந்தது. பிறகு தள்ளி போய்விட்டது. அடுத்து அதைத்தான் இயக்க வேண்டும்.
![](https://www.ranionline.com/h-upload/2025/02/08/386358--04.webp)
‘மழை பிடிக்காத மனிதன்’ விஜய் ஆண்டனி
ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் நடிகர் பரத்துடன் பணியாற்றி இருக்கிறீர்கள்? பரத் பற்றி கூற முடியுமா?
‘காதல்’ படத்தில்தான் நான் பரத்தை முதன் முதலில் சந்தித்தேன். நான் ஏற்கனவே கூறியது போல் பாலாஜி சக்திவேலுக்கு கதைக்கு தகுந்த ஹீரோவை தேர்ந்தெடுப்பதுதான் பிடிக்கும். கதைக்கு ஏற்றமாதிரி ஹீரோவை அரிதாரம் பூசி செலக்ட் செய்வது பிடிக்காது. அப்படி காதல் படத்திற்கான ஹீரோவை தேடிக்கொண்டிருக்கும் போது இயக்குநர் ஷங்கர் சார்தான் என்னுடைய பாய்ஸ் படத்தில் நடித்த நான்கு பசங்களை அழைத்து ஆடிசன் நடத்தி பாருங்களேன் என்று கூறினார். அப்படி ஒவ்வொருவராக அழைத்து ஆடிசன் செய்ததில் இறுதியாக ஓகே செய்யப்பட்டவர்கள்தான் மணிகண்டன் மற்றும் பரத். இதில் பரத் அப்போது மிகவும் வெள்ளையாக, அழகாக இருந்ததால் பாலாஜிக்கு பெரிதாகி ஆர்வம் இல்லை. மணிகண்டனைத்தான் அவருக்கு பிடித்திருந்தது. நான்தான் டெஸ்ட் ஷூட்டில் பரத்தின் நடிப்பை பார்த்து மிகவும் பிடித்து போய் இவனையே போடலாம் என்று பாலாஜியிடம் பேசி சம்மதிக்க வைத்தேன். நிறைய சிரமங்களை சந்தித்துதான் பரத் படத்தில் நடித்தார். அப்படத்திலே நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக மாறியிருந்தால் என்னுடைய ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ கதையை கேட்டவுடன் பரத்திற்கு மிகவும் பிடித்துப் போய் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார். மிகவும் அழகாக நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு, எனது ‘கடுகு’ படத்தில் அதுவம் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். அது என் மீது கொண்ட அன்பினால் நடிக்க ஒப்புக் கொண்டது. சிறப்பாக நடித்தும் கொடுத்தார்.
![](https://www.ranionline.com/h-upload/2025/02/08/386359--05.webp)
'பாய்ஸ்' பட நடிகர் மணிகண்டன் மற்றும் 'கடுகு' திரைப்பட வில்லன் பரத்
உங்கள் படங்களில் ‘கடுகு’ படமும் மிகவும் முக்கியமானது. அதில் ஹீரோவாக ராஜகுமாரனை போடா வேண்டும் என்ற எண்ணம் எதனால் வந்தது?
நான் கதை எழுதும்போது அவரின் கதாபாத்திரம் எப்படி இருந்தது என்றால் மற்றவர்களின் பார்வைக்கு அவன் ஜோக்கராக இருப்பான். ஆனால், அவன் பார்வைக்கு அவன் பெரிய ஆள். அவன் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டான். அதனால்தான் புலி வேஷம் போட்டு அந்த கதாபாத்திரத்தை நடிக்க வைத்திருப்போம். புலி மாதிரியேதான் அவனுடைய எல்லா ஆக்டிவிட்டீஸும் இருக்கும். தன்னை ஒரு புலியாகத்தான் நினைத்து அவன் வாழ்ந்துகொண்டிருப்பான்.
இந்த கதாபாத்திரத்துக்கு ராஜகுமாரனை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் நிஜ வாழ்க்கையிலேயே அவர் அப்படிதான். தனக்கு ஒரு ராஜகுமாரி வந்துட்டா, நாமளும் ஒரு ராஜகுமாரன்தான் என்று தன்னை ஒரு ராஜகுமாரனாகவே நினைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர். அவர் துணை இயக்குநராக இருந்த போதும் சரி, இயக்குநராக மாறிய பிறகும் சரி இன்றுவரை அவர் தன்னை குறைத்து மதிப்பிட்டதே கிடையாது. நான் ஒரு பெரிய ஆள். எனக்கு எல்லாமே தெரியும் என்றுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார். நீண்ட காலம் அவருடன் பழகியிருக்கிறேன். அவர் துணை இயக்குநராக இருந்த போதே நானும் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய காலங்கள் எல்லாம் உண்டு.
![](https://www.ranionline.com/h-upload/2025/02/08/386360--06.webp)
'கடுகு' படத்தில் புலி வேஷம் போட்டு ஹீரோவாக நடித்த இயக்குநர் ராஜகுமாரன்
அவரின் அந்த குணநலன்கள் எனது கதாபாத்திரத்துக்கு கனெக்ட் ஆனது. அதனால்தான் இதில் அவரை நடிக்க வைக்க முடிவு செய்தேன். அவரே என்னிடம் கேட்டார். பரத்தை வில்லனாக போட்டு; என்னை ஹீரோவாக போடுகிறீர்களே; உங்களுக்கு என்ன பைத்தியமா என்று. உண்மையிலேயே நான் இயக்கிய படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் ‘கடுகு’.
அடுத்தடுத்து என்னென்ன படங்கள் உங்கள் கைவசம் வைத்து இருக்கிறீர்கள். உங்கள் இயக்கத்தில் அடுத்து என்ன படம் எதிர்பார்க்கலாம்?
‘வேட்டைக்கு சிங்கம் தேவை’ என்று ஒரு கதை எழுதி கொண்டிருக்கிறேன். பசங்களோட ஆக்சன் படம்தான். அதற்கு அடுத்து ‘இன்ஸ்டா கிராமம்’ என்ற தலைப்பில் சோசியல் மீடியாவை மையப்படுத்தி ஒரு கதையும் எழுதிக்கொண்டிருக்கிறேன். கிராமம் தொடங்கி நகரம் வரை யார் யாரோ ரீல்ஸ் எடுக்கிறார்கள். என்னென்னவோ செய்கிறார்கள். இன்று அவர்களும் ஒரு ஃபிலிம் மேக்கர்தான். நாம் எப்படி ஒரு படத்தை எடுத்துவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறோமோ, அதேபோன்றுதான் அவர்களும் நாம் எடுத்த ரீல்ஸ் எப்படி போகிறது? ஏன் போகிறது என்பதை எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். அதற்கு பின்னால் இருக்கும் அவர்களின் அந்த மெனக்கெடல்கள் மற்றும் அவர்களின் மனநிலை ஆகியவற்றை கொண்டு இந்த கதையையும் எழுதி படமாக எடுக்க காத்துக்கொண்டிருக்கிறேன்.
![ராணி ராணி](/images/authorplaceholder.jpg?type=1&v=2)