இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

1990-களில் தமிழ் திரையுலகில் ஆணழகன், காதல் இளவரசன் என்று கொண்டாடப்பட்டவர்தான் நடிகர் பிரசாந்த். உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பிறகு மிகப்பெரிய நடிகராக தமிழ் சினிமாவில் இவர்தான் வலம் வருவார் என்று எழுத்தாளர் சுஜாதாவால் பாராட்டப்பட்ட ஒரே நடிகரும் இவர்தான். காரணம், கமல்ஹாசனை போன்று புதிய விஷயங்களை ஆர்வமாய் கற்றுக்கொள்ளக்கூடிய நடிகராக இவர் இருந்ததால்தான். அந்த அளவுக்கு சிறு வயதில் இருந்தே தொழில்நுட்பம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் மிக்க நடிகரான இவர் அரும்பு மீசையுடன் தன் திரைப்பயணத்தை தொடங்கி பிறகு சாக்லேட் பாயாக வலம் வந்து பல லட்சக்கணக்கான பெண் ரசிகைகளின் உள்ளங்களை கொள்ளை கொண்டு இன்றுவரை டாப் ஸ்டாராகவே இருந்து வருகிறார். திரை வாழ்க்கையில் எப்போதும் வெற்றிகளை மட்டுமே அதிகமாக சுவைத்தவர், தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டும் சில எதிர்பாராத சறுக்கல்களை சந்தித்தார். இப்படி ஏற்றம், இறக்கம் என்று எல்லாவற்றையும் கடந்து இன்றும் வெற்றிகரமான ஹீரோவாக திரையில் பயணித்துக் கொண்டிருக்கும் பிரசாந்த், 06.04.2025 அன்று தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் திரைப்பயணம், கொடுத்த வெற்றி தோல்விகள், தற்போதைய அடுத்தகட்ட நகர்வு என்ன? போன்ற பல தகவல்களின் தொகுப்பை இந்த கட்டுரையில் காணலாம்.

பிரசாந்த் நடிகரானது எப்படி?

1980-களிலேயே இயக்குநர் இமயம் பாரதிராஜா, பாலுமகேந்திரா தொடங்கி பல வெற்றி இயக்குநர்களின் படங்களில் நடித்து வெற்றிகரமான நட்சத்திர ஹீரோவாக வலம் வந்ததோடு மட்டுமல்லாமல் பலமொழிகளில் வெளியான படங்களிலும் நடித்து அன்றே இந்திய அளவில் கவனம் பெற்றவர் தான் நடிகர் தியாகராஜன். குறிப்பாக இவரது நடிப்பில் வெளிவந்த ‘மலையூர் மம்பட்டியான்’ இன்றுவரை ஒரு கல்ட் கிளாசிக் திரைப்படமாக தமிழ் சினிமாவில் பார்க்கப்படுகிறது. அதோடு ஹீரோ என்பதை தாண்டி சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ள இவர், ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகவும் சாதித்து, அதிலும் தனி முத்திரை பதித்தவர் ஆவார். இப்படி தன் நடிப்பால், திறமையால் பலரையும் கவர்ந்த நடிகர் தியாகராஜனின் மகனாக நமக்கெல்லாம் அறிமுகமானவர்தான் நடிகர் பிரசாந்த். 1973-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி நடிகர் தியாகராஜன் - சாந்தி தம்பதியருக்கு மகனாக பிறந்த பிரசாந்த்துக்கு ப்ரீத்தி என்கிற ஒரு தங்கையும் உண்டு. மகனை எப்படியாவது மருத்துவராக்கி பார்த்துவிட வேண்டும் என்ற கனவோடு அவரது வாழ்க்கையை வேறுவிதமாக வழி நடத்தி சென்று கொண்டிருந்த நடிகர் தியாகராஜனுக்கு அவரே எதிர்பார்க்காத வகையில் வந்து அமைந்ததுதான் சினிமா வாய்ப்பு. நடிகர் தியாகராஜனுக்கு கதை சொல்ல அவர் வீட்டிற்கு சென்ற இயக்குநர் ஒருவர் அங்கு எதிர்பாராத விதமாக பிரசாந்தை பார்த்துள்ளார். அதுவரை தியாகராஜனுக்கு திருமணமானதோ, அவருக்கு 17 வயதில் மகன் இருக்கிறார் என்பதோ நேரில் சென்ற இயக்குநருக்கும் சரி, மற்றவர்களுக்கு சரி தெரியாதாம். ஏனென்றால், தன் புகழ் வெளிச்சம் குடும்பத்தினரின் சுதந்திரத்தை எந்த விதத்திலும் பாதித்துவிடக் கூடாது என்பதற்காகவே வெளியுலகிற்கு காட்டாமலே வழிநடத்தி வந்துள்ளார்.


மலையூர் மம்பட்டியானில் தியாகராஜன் மற்றும் அரும்பு மீசையுடன் ‘வைகாசி பொறந்தாச்சு’ பிரசாந்த்

அப்படி இருந்த தியாகராஜன் தன் மகனை தேடி சினிமா வாய்ப்பு வந்ததும் முதலில் யோசித்து வேண்டாம் என்று மறுத்தாலும் பிறகு இயக்குநர் ராஜபாரதி சொன்ன கதை மிகவும் பிடித்து போய் இந்த ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு படிப்பை தொடர மகனுக்கு அனுமதி அளித்துள்ளார். அப்படி தந்தையின் அனுமதியுடனும், வழிகாட்டுதலுடனும் வந்து நடித்து அரும்பு மீசையுடன் 17 வயதில் ஹீரோவாக நமக்கெல்லாம் பிரசாந்த் அறிமுகமான படம்தான் ‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படம். 1990-ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் பிரசாந்த் குமரேசன் என்னும் கதாபாத்திரத்தில் கிராமத்து இளைஞராக வந்து நடித்திருந்தார். இதில் இவருக்கு ஜோடியாக மெட்டிஒலி புகழ் காவேரி நடித்திருந்தார். படத்தில் தேவா இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் பிரசாந்தை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தது. அதுமட்டுமின்றி ‘புலிக்கு பிறந்தது பூனையாகுமா’ என்பதற்கு ஏற்ப தந்தை பெயரை காப்பாற்றும் வகையில் முதல் படத்திலேயே தன் எதார்த்தமான நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

சினிமாவில் கண்ட உச்சம்


'செம்பருத்தி' திரைப்படம் மற்றும் 'மலையூர் மம்பட்டியான்' ரீமேக்கில் வரும் பிரசாந்த்

பிரசாந்த் தனது முதலாவது திரைப்படமான ‘வைகாசி பொறந்தாச்சு’ மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். அதன் பின்னர், தனது அழகான தோற்றத்தாலும், சிறந்த நடனத்தாலும் இளைஞர்களை ஈர்க்கத் தொடங்கினார். இருந்தாலும், அவரது தந்தை தியாகராஜன் மட்டும் மகனை மருத்துவராக்க வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து மாறவில்லை. இவ்வேளையில், மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் இயக்கிய ‘பெருந்தச்சன்’ படத்திற்காக பிரசாந்த் நடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தியாகராஜன் அவரிடம் மிகுந்த மரியாதை வைத்திருந்ததால், அந்த ஒரு படத்தில் மட்டுமே நடிக்க அனுமதி வழங்கினார். ஆனால் அந்த படம் வெற்றி பெற்றதும், பிரசாந்த் தொடர்ந்து நடிப்பதற்கான சூழ்நிலை உருவானது. பின்னர், பாலு மகேந்திரா இயக்கிய ‘வண்ண வண்ண பூக்கள்’ படத்தில் நடித்து, தேசிய அளவில் கவனம் பெற்றார். அதன் தொடர்ச்சியாக, ஆர்.கே. செல்வமணி இயக்கிய ‘செம்பருத்தி’ படத்தில் நடித்த பிரசாந்த், அந்த படத்தின் வெற்றியால் நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்ந்தார். ஒரு கட்டத்தில் ‘’டாப் ஸ்டார்’’ என்ற பெயரோடு அழைக்கப்பட்ட பிரசாந்த் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் ‘திருடா திருடா’, மணிவண்ணன் இயக்கத்தில் ‘ராசாமகன்’, பவித்ரன் இயக்கத்தில் ‘கல்லூரி வாசல்’ என அந்த சமயம் முக்கியமான இயக்குநர்களாக வலம் வந்த அத்தனை இயக்குந்ரகளின் படங்களிலும் நடித்தார்.


'ஜீன்ஸ்' திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயுடன்...

இதில் ஷங்கர் இயக்கிய ‘ஜீன்ஸ்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து கலக்கிய பிரசாந்திற்கு அந்தப் படம் இன்றுவரை பலரது விருப்பமான படங்களில் ஒன்றாக இருக்கிறது. அதேபோல் அவர் நடிப்பில் தமிழ் சினிமாவில் இன்று வரை காதலுக்கு அடையாளமாக விளங்கி வரும் ‘கண்ணெதிரே தோன்றினாள்’ , ‘ஜோடி’, ‘பார்த்தேன் ரசித்தேன்’, ‘மஜ்னு’ போன்ற படங்கள் ரசிகர்களுக்கு பிடித்த படங்களில் ஒன்றாக இருந்து வருவதோடு, பிரசாந்துக்கும் அப்படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. இருப்பினும் திருமண பந்தத்தில் ஏற்பட்ட சிக்கலால் படத் தேர்வுகளில் தவறு செய்ய துவங்கிய பிரசாந்திற்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய வெற்றி படங்கள் எதுவும் அமையவில்லை. இப்படி சில தடங்கல்கள் இருந்தாலும், அவரது பயணம் தொடர்ந்தது. இந்த நேரம் சுந்தர்.சி இயக்கிய ‘வின்னர்’ படத்தில் வடிவேலுடன் இணைந்து நடித்தது அவருக்கு பெரும் புகழைத் தந்தது. அதேபோல் ஹரி இயக்குநராக அறிமுகமான ‘தமிழ்’ படமும் ஒரு ஆக்சன் ஹீரோவாக நல்ல பெயரை பிரசாந்துக்கு பெற்று தந்த போதும் முந்தைய உச்சத்தை அவரால் தொட முடியவில்லை. இருப்பினும் இடையில், அப்பாவின் இயக்கத்தில் வெளிவந்த ‘மம்பட்டியான்’ ரீமேக் மற்றும் கலைஞரின் ‘பொன்னர் சங்கர்’ படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வந்தார் பிரசாந்த்.

மறக்க முடியாத படங்கள்

என்னதான் நடிகர் பிரசாந்த் காதல், ஆக்சன், காமெடி என பல ஜானர்களில் நடித்து நம்மை கவர்ந்திருந்தாலும், அவருக்கு பல வெற்றிகளை குவிக்க உதவிய உணர்வு என்றால் அது காதல் திரைப்படங்கள்தான். அதில் முதல் வெற்றியாக ‘செம்பருத்தி' திரைப்படம் அமைந்தது. 1992 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் பிரசாந்த் மற்றும் ரோஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மிக சிறந்த காதல் திரைப்படமாக வெளிவந்த இப்படத்தை ஆர்.கே. செல்வமணி இயக்கியிருந்தார். மேலும் மூத்த நடிகை பானுமதி, பிரசாந்தின் பாட்டியாக இதில் வந்து திரைப்படத்திற்கு கூடுதல் பெருமை சேர்த்திருந்தார். இளைஞர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், வசூலிலும் சாதித்தது. குறிப்பாக, பிரசாந்தின் நடிப்பு மற்றும் இளையராஜாவின் இசை பெரியளவில் பாராட்டப்பட்டதோடு, இப்படத்தின் வெற்றி, பிரசாந்தின் திரையுலக பயணத்தில் முக்கியமான மைல்கல்லாகவும் அமைந்தது. பிறகு 1998 ஆம் ஆண்டு, பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடித்த 'ஜீன்ஸ்' திரைப்படம் வெளியானது. இதில் பிரசாந்த் உடன் உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் அவர்களுக்குள் நடக்கும் காதல் காட்சிகள் இன்றைய தலைமுறையினரையும் கவரும் வகையில் அழகாக அமைக்கப்பட்டிருக்கும். மேலும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்து இன்றுவரை ஏ.ஆர். ரகுமானின் சிறந்த ஆல்பமாகவும் இருந்து வருகிறது.


'கண்ணெதிரே தோன்றினாள்' திரைப்படத்தில் பிரசாந்த் மற்றும் சிம்ரன்

இதேபோல் அதே ஆண்டு, இயக்குநர் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான 'கண்ணெதிரே தோன்றினாள்' திரைப்படத்தில், பிரசாந்த், சிம்ரன், கரண், ஸ்ரீவித்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். காதலை விட நட்பிற்கு அதிக முக்கியத்துவம் அளித்த இப்படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் முந்தைய ‘ஜீன்ஸ்’ போலவே இந்தப்படத்திலும் இடம்பெற்ற பாடல்கள் இன்றுவரையும் பிரபலமாகவே இருந்து வருகின்றன. பின் 1999 ஆம் ஆண்டு, இயக்குநர் பிரவீன் காந்த் இயக்கத்தில், பிரசாந்த் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்த 'ஜோடி' திரைப்படம் வெளிவந்தது. இதில் எதிர்ப்பு நிலைப்பாடுகளுடன் இருக்கும் இரண்டு காதலர்கள், பின்னர் தங்களது பெற்றோரின் சம்மதத்துடன் எவ்வாறு திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதனை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். இப்படம் அன்றைய காதலர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, மாபெரும் வெற்றி பெற்றதோடு, குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாகவும் அமைந்தது.


'வின்னர்' திரைப்படத்தில் வடிவேலுவுடன் பிரஷாந்த்

பின்னர் அதே ஆண்டில், ராசு மதுரவன் இயக்கத்தில் வந்த 'பூமகள் ஊர்வலம்' திரைப்படமும் ஒரு குடும்ப படமாக வெளிவந்து மிகுந்த கவனம் பெற்றது. இதில் பிரசாந்த் மற்றும் ரம்பா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் ஜாதி மறுப்பு திருமணத்திற்கெதிராக தன்னிறைவு பெற்ற காதல் குறித்து பேசும் விதத்தில் உருவாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இது தவிர 2003 ஆம் ஆண்டு, சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த 'வின்னர்' திரைப்படம் பிரசாந்தின் முக்கியமான படங்களில் ஒன்றாக அமைந்தது. இதில் பிரசாந்த், கிரண், வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தில் பிரசாந்த், தான் காதலிக்கும் பெண்ணை பல்வேறு தடைகளை தாண்டி எவ்வாறு கரம் பிடிக்கிறார் என்பதே கதையின் மையக்கருத்தாகும். குறிப்பாக, வடிவேலுவுடன் அவருடைய காமெடி காட்சிகள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று எவர் க்ரீன் காமெடியாக மாறியது. இதனால், இப்படம் இன்றுவரையும் ரசிகர்களின் பிரியமான திரைப்படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இவை தவிர ‘பார்த்தேன் ரசித்தேன்’, ‘தமிழ்’, ‘மஜ்னு’, ‘விரும்புகிறேன்’ என எண்ணற்ற படங்கள் பிரசாந்தின் வெற்றி மகுடத்தில் முக்கியமான திரைப்படங்களாக ஒளிர்ந்து வருகின்றன.

மீண்டும் திரையில் வேகம்


'தி கோட்' திரைப்படத்தில் விஜய்யுடன்...

2018-ஆம் ஆண்டு ‘ஜானி’ திரைப்படத்திற்கு பிறகு தமிழ் திரைப்படங்களில் பெரிதாக தலை காட்டாமல் இருந்த பிரசாந்த் மீண்டும் ஆறு வருட இடைவெளிக்கு பிறகு கடந்த 2024-ஆம் ஆண்டு ‘அந்தகன்’ படத்தின் மூலம் ஹீரோவாக கம்பேக் கொடுத்தார். அதுவும் தந்தையின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளிவந்த அப்படத்தில் கண் தெரியாதவராக கிருஷ்ணா என்ற கதாபாத்திரத்தில் புதியதொரு பரிமாணத்தில் வந்து நடிப்பில் அவரது ரசிகர்களை அசர வைத்திருந்தார். இப்படம் வெளியான சமயத்தில் பிரசாந்த் என்ற ஆணழகனை மீண்டும் திரையில் பார்த்து கொண்டாடி தீர்த்த பெண் ரசிகைகள் ஏராளம். அதேபோன்று இப்படம் வெளிவந்த சிறிது நாட்களிலேயே முதல் முறையாக தமிழ் சினிமாவில் பிரசாந்திற்கு நேரெதிராக பார்க்கப்பட்டு வந்த, விஜய்யுடன் கை கோர்த்து ‘கோட்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் விஜய், பிரசாந்துடன் பிரபு தேவா, சினேகா, லைலா என்று மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த போதிலும், சுனில் தியாகராஜன் என்ற கதாபாத்திரத்தில் வந்து வழக்கம் போல் தன் தனித்துவமான நடிப்புத் திறமையால் படம் பார்த்த ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். அதிலும் ஒரு 20 வயது மகளுக்கு அப்பாவாக வேறொரு பரிமாணத்தில் பிரசாந்த் நடித்திருந்தது பலரையும் வியப்படைய வைத்தது. இப்படி இரண்டு படங்களுமே அவரது திரைவாழ்க்கையில் மற்றுமொரு வெற்றி மகுடமாக அமைந்ததால் இப்போது அவரை நோக்கி நிறைய திரைப்பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளன. அடுத்தடுத்த படங்களில் நடிக்க பிசியாக இயங்கி வரும் பிரசாந்த்திற்கு இந்த பயணம் எந்தவித பிரச்சனைகளும் இன்றி, தடைகளை தகர்த்தெறிந்து வெற்றி என்ற இலக்கை மட்டும் நோக்கி பயணிக்கப்போகும் பயணமாக அமைய அவரது இந்த பிறந்த நாளில் நாமும் வாழ்த்துவோம்.

Updated On 1 April 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story