இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

டைமண்ட் பாபு என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் டைமண்ட் ரத்ன பாபு இந்திய சினிமாவின் பிரபல மக்கள் தொடர்பு அலுவலராகத் திகழ்ந்து வருகிறார். இவர் தற்போது வரை 600 -க்கும் மேற்பட்ட படங்களுக்கு மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்துள்ளார். முக்கியமாக தமிழ் சினிமாவில் பெரும் பங்காற்றி வருகிறார். ரஜினி, கமல், விஜய், பிரபு என்று தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுக்கு பி.ஆர்.ஓ வாக இருந்திருக்கிறார். இந்திய மக்கள் தொடர்பு அலுவலராக மட்டுமல்லாமல் ஊடக ஆலோசகராகவும் இருந்து வருகிறார் டைமண்ட் பாபு. அவருடனான ஓர் உரையாடல்...

`டைமண்ட் பாபு’ பெயர் இப்படித்தான் வந்தது

டைமண்ட் பாபு என்று அழைக்கப்படும் இவரின் உண்மை பெயர் ஞானசாகர். இவர் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது ‘டைமண்ட்’ என்ற பெயரில் திரைப்பட கிளப் ஒன்றைத் தொடங்கினார். இந்த கிளப் தொடங்கப்பட்ட காலத்தில் மாதத்திற்கு 2 படங்கள் என்ற கணக்கில் திரையிடப்பட்டு வந்தன. இந்த திரைப்பட கிளப் பெயரின் மூலமே இவருக்கு ‘டைமண்ட் பாபு’ என்ற பெயரும் வந்தது. இவருடைய தந்தைதான் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன். இவர் தமிழ் சினிமாவின் ஆரம்ப கால பத்திரிகையாளராகவும் மேலாளராகவும் வரலாற்றாசிரியராகவும் திகழ்ந்தவர். இவர் ஒருமுறை தீவுத்திடலில் கண்காட்சி நடத்தியபோது நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் கே.ஆர் விஜயாவும் அக்கண்காட்சியை சிறப்பாகத் தொடங்கிவைத்தனர். இவ்விழாவின் பத்திரிகையில் ஆனந்தன் தன் மகனின் பெயரை ஞானசாகர் என்று குறிப்பிடாமல் டைமண்ட் பாபு என்று அச்சிட்டு விட்டார். தனது தந்தை ஆசையாக இப்பெயரை வைத்ததால் இந்நாள்வரை டைமண்ட் பாபு என்றே சென்டிமெண்டாக வைத்திருப்பதாகத் தெரிவிக்கிறார்.


டைமண்ட் பாபு மற்றும் அவருடைய தந்தை ஃபிலிம் நியூஸ் ஆனந்தன்

இப்படி பிலிம் கிளப் தொடங்கி படம் திரையிடப்பட்ட நிலையில் வங்கியில் அவருடன் பணிபுரிந்த சின்னசாமி என்பவரிடம் இருந்து ‘மணல் கயிறு’, ‘கண்மணி பூங்கா’ போன்ற படங்கள் பெறப்பட்டு திரையிடப்பட்டன. நாளுக்குநாள் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் எக்ஸிபிட்டர்ஸுடன் நல்ல பழக்கம் ஏற்பட்டுவிட்டது. அந்த சமயத்தில் தன்னுடன் வங்கியில் பணிபுரிந்த சின்னசாமியும் இணை தயாரிப்பாளர் விஜயகுமாரும் ஒரு நாள் டைமண்ட் பாபுவின் வீட்டிற்குச் சென்று, அவர்கள் ஒரு படம் தயாரிக்க இருப்பதாகவும், அப்படத்திற்கு இவர் மக்கள் தொடர்பு அலுவலராக (PRO) இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். டெல்லியில் தனது படிப்பை மேற்கொண்டதால் இந்தியும் ஆங்கிலமும் சரளமாக பேசவும் எழுதவும் கற்றுக்கொண்டாராம் டைமண்ட் பாபு. இதனால் தமிழில் பேசுவது இவருக்கு சற்று சிரமமாயிற்று. இருப்பினும் ஆபாவணன் என்கிற சின்னசாமியால்தான் இவர் முதன்முதலில் சினிமாத்துறையில் அறிமுகம் செய்யப்பட்டார்.

600 -க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியது மகிழ்ச்சி

“வெற்றிகரமாக 600க்கும் மேற்பட்ட படங்களுக்கு பி.ஆர்.ஓ வாக பணியாற்றியது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் இந்த நிலையை அடைய பல கஷ்டங்களை சந்தித்துள்ளேன்” என்று கூறுகிறார். முதலில் டைமண்ட் பாபு என்று அழைக்கப்பட்டதால் பலரும் அவரை டைமண்ட் வியாபாரியின் மகன் என்று நினைத்து பலரும் அவருக்கு வாய்ப்பளிக்கவில்லை. பின்னர் தான் அவர் பிலிம் நியூஸ் ஆனந்தனின் மகன் என்றும், ஆபாவாணன் என்பவரால் அறிமுகமான பி.ஆர்.ஓ என்றும் தெரியவந்தது. ஆபாவாணன் நடத்திவந்த திரைப்பட கல்லூரி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட படங்கள் அனைத்தும் இவருக்கு வழங்கப்பட்டன. கிட்டத்தட்ட இவர்களுடைய 140 படங்களைத் திரையிட்டிருக்கிறார்.


மணல் கயிறு மற்றும் கண்மணி பூங்கா போஸ்டர்கள்

இவர் பி.ஆர்.ஓ வாக பணியாற்றிய முதல் படம் ‘ஊமை விழிகள்’. சினிமாஸ்கோப் நிறைந்த, பல பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் சேர்ந்து தயாரிக்கப்பட்ட படம் இது. இந்த படத்தின் மூலம் ஆபாவாணன், விஜயகுமார், இயக்குனர் அரவிந்த் ராஜுடன் இணைந்து பயணிப்பதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது என்றும், இதன்மூலம் பல நடிகர் நடிகைகளின் பழக்கம் கிடைத்தது என்றும் கூறுகிறார். இருப்பினும் இந்த‘ஊமை விழிகள்’ படம் பல தடைகளை தாண்டியே திரையிடப்பட்டது. சென்சார் சான்றிதழ் பெறப்பட்ட முதல் படமும் இதுவே. இப்படி பல தடைகள் இருந்தாலும் படம் மிகப்பெரிய வெற்றியைக் கண்டது. முதல்படமே வெற்றியானது தனக்கு பெருத்த மகிழ்ச்சியை அளித்தது என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

லக்கி பி.ஆர்.ஓ

முதல்படமே பெரும் வெற்றியைக் கண்டிருந்தாலும் அவர் பி.ஆர்.ஓ வாக பணியாற்றிய அடுத்த 9 படங்களும் 100 நாட்களுக்கு மேல் திரையிடப்பட்டு பெரும்வெற்றியை கண்டது. ‘ஊமை விழிகள்’, ‘உழவன் மகன்’, ‘உரிமை கீதம்’, ‘மனசுக்குள் மத்தாப்பு’, ‘செந்தூரப் பூவே’ என்று இவரின் பல படங்களும் நன்கு ஓடியதால் இவரைத் திரைத்துறையின் ‘லக்கி பி.ஆர்.ஓ’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். இந்த லக்கி பி.ஆர்.ஓ என்பது இந்நாள் வரைக்கும் தொடர்கிறது.


ஊமை விழிகள் திரைப்பட போஸ்டர்

“எனது முதல் பி.ஆர்.ஓ படமாக அமைந்த ஊமை விழிகளின் கதாநாயகனாக நடித்தவர் விஜயகாந்த். இந்த படத்தைத் தொடர்ந்து இவரின் 73 படங்களுக்கு பி.ஆர்.ஓ வாக இருந்திருக்கிறேன். உடன் பணியாற்றும் அனைவருக்கும் மரியாதை அளிக்கும் நல்ல குணம்மிக்கவர் அவர். முக்கியமாக டெக்னீஷியன்களுக்கு மரியாதை கொடுக்கும் நடிகர்களுள் மறக்கமுடியாதவராக இருப்பவர் விஜயகாந்த். இவர் ‘செந்தூரப் பூவே' படத்தின் மூலம்தான் ‘கேப்டன் விஜயகாந்த்' என்று அழைக்கப்பட்டார்”.

டைமண்ட் பாபுவின் வெற்றிகரமான 600வது படம் ‘விக்ரம்’. இந்த செய்தியை தயாரிப்பாளர் ஆர்.மகேந்திரனிடம் தெரிவித்திருக்கிறார். இச்செய்தியை அவர் உலக நாயகன் கமல்ஹாசனிடம் தெரிவித்திருந்த நிலையில் ‘விக்ரம்’ படத்துக்கான பிரஸ் மீட் நடைபெற்றபோது, இவர் தான் இந்தப் படத்தின் பி.ஆர்.ஓ என்றும், இது அவரது 600வது படம் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார் கமல். இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் டைமண்ட் பாபுவுக்கு மாலை அணிவித்து அவரை பெருமைப்படுத்தியுள்ளார். இது சந்தோஷம் நிறைந்த தருணமாகவும், வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்வு என்றும் தனது உணர்ச்சியை வார்த்தைகளால் வெளிப்படுத்தினார்.

இவர் தமிழ் சினிமாவின் பி.ஆர்.ஓ வாக மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் என்று 6 மொழிகளின் பி.ஆர்.ஓ வாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.


விஜயகாந்த் மற்றும் ரஜினிகாந்துடன்...

சூப்பர் ஸ்டாரும் நானும்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பல படங்களுக்கும் இவர் பி.ஆர்.ஓ வாக இருந்திருக்கிறார். இவருடைய படங்களில் ஒரு பிளாக்பஸ்டர் படமாக இருப்பது ‘சந்திரமுகி’. “இந்தப் படத்தின் தயாரிப்பு மற்றும் சென்சார் முடிந்து முதல் காட்சி திரையிட்ட பின்னர் படம் பார்த்த அனைவருக்கும் தொலைபேசியில் தொடர்புகொண்டு படம் எப்படி இருந்தது?” என்று விசாரித்தார் ரஜினி. என்னைப் பொருத்தவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எளிதில் அணுகக்கூடிய ஒருவராக இருக்கிறார். என்னிடம் மட்டுமே ரஜினிகாந்த் சுமார் 20 நிமிடங்களுக்கு அந்த படம் குறித்து பேசினார். பொதுவாகவே படம் எப்படி இருந்தது? மக்கள் ரசிப்பார்களா? காட்சிகள் ஏதாவது சலிப்பாக இருந்ததா? சண்டை காட்சிகள் எல்லாம் பிடித்திருக்கிறதா? எந்த காட்சியையாவது மாற்ற வேண்டுமா? என்று படத்தின் விமர்சனங்களை கேட்டறிவார். சூப்பர் ஸ்டார் என்று நினைக்காமல் எங்களை அழைத்து படத்தை பற்றி கேட்பதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை. இது அவரின் நற்குணத்தை வெளிப்படுத்துகிறது. இதனாலேயே அவர் என்றும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்”.


கமல்ஹாசனுடன் டைமண்ட் பாபு

இவர் வெறும் பி.ஆர்.ஓ வாக மட்டுமல்லாமல் பி.ஆர்.ஓ சங்க தலைவராக 6 முறை தேர்வாகியிருக்கிறார். பி.ஆர்.ஓ சங்கத்தினை தொடங்கியவர் டைமண்ட் பாபுவின் தந்தை ஆனந்தன். இவர் ஒரு பொறுப்பான பி.ஆர்.ஓ சங்க தலைவராக அனைத்து பி.ஆர்.ஓ-களுக்கும் உறுதுணையாக இருப்பார் என்றும், சங்க உறுப்பினர்களுக்கு சிறந்த தலைவராக செயல்படுவார் என்றும் கூறினார். இவரும் இவருடைய 3 நண்பர்களும் இணைந்து V4U என்ற என்டர்டைன்மெண்ட் என்ற நிறுவனத்தை நிறுவி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றனர்.

Updated On 22 Aug 2023 12:07 AM IST
ராணி

ராணி

Next Story