பொதுவாகவே சினிமாவை பொறுத்தவரை நடிக்க தெரிந்தவர்களுக்கு ஒளிப்பதிவு செய்ய தெரியாது. ஒளிப்பதிவு செய்ய தெரிந்தவர்களுக்கு இசையமைக்க தெரியாது. இசையமைக்க தெரிந்தவர்களுக்கோ நடனம் ஆட தெரியாது என கூறுவார்கள். இருப்பினும் டி.ராஜேந்தர் போன்ற வெகு சிலர் விதிவிலக்காக இவை அனைத்திலுமே சகலகலா வல்லவர்களாக இருந்தாலும், எல்லா இயக்குநருக்குள்ளும் ஒரு நடிகன் இருக்கிறான் என்ற வார்த்தையை அனைவருமே ஒத்துக்கொள்வார்கள். ஆனால் அந்த பொதுமொழியை எல்லா நடிகருக்குள்ளும் ஒரு இயக்குநர் இருக்கிறான் என்ற புதுமொழியாக மாற்றிய பெருமை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களையே சேரும். தமிழ் சினிமாவில் தன்னை தலைசிறந்த நாயகனாக நிலை நிறுத்திக் கொள்வதற்காக `நாடோடி மன்னன்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான எம்.ஜி.ஆர், தொடர்ந்து 'மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்', 'உலகம் சுற்றும் வாலிபன்' போன்ற படங்களையும் இயக்கினார். பின்னர் அவரை தொடர்ந்து கமல்ஹாசன், சத்யராஜ், சிம்பு, விஜயகாந்த் என பல உச்ச நட்சத்திரங்கள் நடிகராக மட்டும் அல்லாமல் இயக்குநராகவும் அவதாரம் எடுத்து அசத்தியது போலவே நடிகர் தனுஷும் 'ப.பாண்டி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி வெற்றிக் கண்டார். இதனையடுத்து தற்போது 'D50', 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கிவரும் தனுஷ் அதிலும் முத்திரை பதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இந்த தொகுப்பில் நடிகர் தனுஷ் இயக்கிய மற்றும் இயக்கி வரும் படங்கள் குறித்தும், ஒரு இயக்குநராக மற்ற நடிகர்களிடம் இருந்து தனுஷ் எப்படி வேறுபடுகிறார் என்பது குறித்தும் விரிவாக காண்போம்.
ஃபேமிலி ஆடியன்ஸை கவர்ந்த முதல் படம்
இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் மற்றும் செல்வராகவனின் தம்பி என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உச்சம் தொட்ட தனுஷ், நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என்ற அவதாரங்களைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு இயக்குநராக முதன் முதலில் முத்திரைப் பதித்த திரைப்படம்தான் `ப.பாண்டி'. அப்பா, மகன் தலைமுறை இடைவெளி கருத்து வேறுபாடுகளையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் உணர்வுபூர்வமாக பதிவு செய்திருந்த இப்படத்தில் ராஜ்கிரணை கதையின் நாயகனாக நடிக்க வைத்தார் தனுஷ். சினிமா ஸ்டண்ட் மாஸ்டரான ராஜ்கிரண், வயதானதால் சற்றே சினிமாவை விட்டு ஒதுங்கி தன் மகன் பிரசன்னா, மருமகள் சாயா சிங் மற்றும் பேரன் பேத்திகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். சிறுவயதிலிருந்தே அநியாயத்தைக் கண்டால் பொங்கியெழும் பழக்கம் கொண்ட ராஜ்கிரண், வயதான பிறகும் அவர் வசிக்கும் பகுதியில் நடக்கும் அநியாயங்களை துணிச்சலுடன் தட்டிக் கேட்கிறார். இதனால் பிரசன்னாவுக்கும் ராஜ்கிரணுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் இனிமேல் தன் மகனுக்கு தொந்தரவாக இருக்கக்கூடாது என்று நினைக்கும் ராஜ்கிரண், வீட்டைவிட்டு வெளியேறி தன்னுடைய புல்லட்டில் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்கிறார். அப்போது வழியில் அவர் சந்திக்கும் புது புது நண்பர்கள், அவர்களின் உதவியோடு தனது முதல் காதலியை பார்க்க செல்வது, மகன் பிரசன்னா அப்பாவை ஒருபுறம் தேடி அலைவது என வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாக்கப்பட்ட இப்படம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வெற்றியும் கண்டது.
'பவர் பாண்டி' எனும் 'ப.பாண்டி' படத்தின் போஸ்டர் காட்சிகள்
வீட்டில் இருக்கும் பெற்றோர்களை அவர்களது பிள்ளைகள் எப்படி பார்த்துக் கொள்கிறார்கள்? அந்த சமயத்தில் பெற்றோர்களின் மனநிலை எப்படிப்பட்டதாக இருக்கிறது? வயதான பிறகு பெற்றோர்களுக்கான முழு சுதந்திரத்தையும் பிள்ளைகள் சரிவர கொடுக்கிறார்களா? என்ற பல கேள்விகளுக்கு விடையளிக்க முயற்சி செய்திருந்த இப்படத்தில், இயக்குநராக நடிகர் தனுஷ் வெற்றி பெற்றிருந்தார். குறிப்பாக படத்தில் வரும் 'வேலை வரும் போகும்... வெட்டியா இருக்கிறதுதான் நிரந்தரம்' ,‘வயசுதான் வேற... துணை துணைதான்’ போன்ற க்ரிஸ்பியான வசனங்கள் மக்கள் மத்தியில் கவனம் பெற்றதோடு, ஷான் ரோல்டனின் பாடலும், பின்னணி இசையும் தாலாட்டாக ஒலித்தது. தன் அப்பாவின் முதல் பட ஹீரோவான ராஜ்கிரண்தான், தன்னுடைய முதல் படத்தின் கதாநாயகனாகவும் இருக்க வேண்டும் என்ற சென்டிமென்ட்டோடு தனுஷ் இயக்கியிருந்த இப்படம் கதாபாத்திர தேர்விலும், கதை சொல்லும் விதத்திலும் நல்ல பெயரை அவருக்கு பெற்று தந்ததோடு, ஃபேமிலி ஆடியன்சுகளையும் வெகுவாக கவர்ந்திருந்தது.
ஆக்சனில் அசத்த வரும் D50
'ப.பாண்டி' படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நடிகர் தனுஷ், ஏழு வருட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக தனது 50 வது படத்தினை தற்போது இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயன் நடிக்கிறார். இவர்களுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா, துல்கர் சல்மான், சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் நடித்து வருவதாகவும், நித்தியாமேனனும் இதில் இணைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. வடசென்னையை பின்னணியாக கொண்ட கேங்க்ஸ்டர் படமாக உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இப்படத்திற்காக, சென்னையின் பிரபல ஸ்டூடியோவில் 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் சூழ்ந்த பெரிய கிராமம் ஒன்றையே பிரம்மாண்ட செட்டாக அமைத்து இரவு பகல் பாராமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாகவும், பெரும்பாலான காட்சிகள் அங்கேயே எடுக்கப்பட்டு தற்போது படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக முடிவடைந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
தனுஷின் 'D 50' பட போஸ்டர் காட்சிகள்
'கேப்டன் மில்லர்' படத்தில் நீண்ட தலைமுடி, தாடி, மீசையுடன் காணப்பட்ட தனுஷ், இந்தப் படத்திற்காக திருப்பதி சென்று மொட்டையடித்து புதிய கெட்டப்பிற்கு மாறினார். அப்போது தனுஷின் இந்த கெட்டப்பை பார்த்த அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தது மட்டுமின்றி படம் வேற லெவலில் இருக்கப்போவதாக கருத்தும் தெரிவித்திருந்தனர். இப்படத்துக்கு ‘ராயன்’ என பெயரிடப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், தனுஷ் தனது 50வது படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இசையமைப்பாளர் தேவாவை அணுகியதாகவும், ஆனால் அப்படியொரு கெட்டப்பில் நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என்று அவர் மறுத்துவிட்டதாகவும் பேட்டி ஒன்றில் தேவா சூசகமாக கூறியிருந்தார். அதே போல் 'ரவுடி பேபி' பாடலுக்குப் பின் பிரபுதேவா நடன அமைப்பில் 500க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பங்கேற்றுள்ள அசத்தலான பாடல் ஒன்றும் இப்படத்திற்காக எடுக்கப்பட்டுள்ளதாகவும், ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ரிலீசுக்கு பின் D50-ன் அடுத்தடுத்த அப்டேட்கள் அதிரடியாக வெளிவரும் என்றும் சொல்லப்படுகிறது.
பன்முக இயக்குநராக தனுஷ்
D50 படத்தை நிறைவு செய்தவுடன் மேலும் ஒரு படத்தை நடிகர் தனுஷ் இயக்கப்போவதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில், அந்த படத்தில் தனது அக்கா மகனை கதாநாயகனாக அறிமுகப்படுத்தப் போவதாகவும் சொல்லப்பட்டு வந்தது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த வாரம் நடிகர் தனுஷ், தான் இயக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகும் அப்படத்திற்கு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. அனிகா சுரேந்திரன் கதாநாயகியாக நடிக்கும் அந்த படத்தில் தனுஷும் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாகவும், நடிகர் சரத்குமாரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இவர்களுடன் பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கவிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தனுஷின் ஒண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் முழுக்க முழுக்க இளசுகளை கவரும் வண்ணம் ஒரு ஃபீல் குட் காதல் படமாக உருவாக இருக்கிறதாம்.
நடிகர் தனுஷ் 3-வதாக இயக்கப் போகும் திரைப்படத்தின் போஸ்டர்கள்
தமிழ் திரையுலகில் நடிகர்கள் படத்தின் கதை விவாதங்களில் கலந்து கொள்வதும், கதை எழுதுவதும் என படம் வெற்றி பெறுவதற்காக தனி பங்களிப்பை கொடுப்பது என்பது அன்றுதொட்டு இன்று வரை தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கு உதாரணமாக நடிகர் ரஜினிகாந்த் 'வள்ளி', 'பாபா' போன்ற படங்களில் கதை மற்றும் திரைக்கதையில் தன் பங்களிப்பை அளித்தது போலவே, அஜித்தும் 'அசல்' படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியதை கூறலாம். இவர்கள் தவிர எம்.ஜி.ஆர், சத்யராஜ், சிம்பு, விஜயகாந்த் போன்ற நடிகர்கள் இயக்குநராகவும் அவதாரம் எடுத்து வெற்றிக் கண்டிருந்தாலும், பெரும்பாலும் அவர்கள் இயக்கிய படங்கள் தங்களுக்கு ஏதுவான ஜானரில் மட்டுமே படம் எடுத்து புதிய முயற்சி எதுவும் மேற்கொள்ளாமல் இருந்தனர். இவர்களில் விதிவிலக்காக நடிகர் கமல்ஹாசன் மட்டும் `அவ்வை சண்முகி'யின் இந்தி ரீமேக்கான `சாச்சி 420' , `ஹே ராம்', `விருமாண்டி', `விஸ்வரூபம்' என ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத வித்தியாச வித்தியாசமான படங்களை இயக்கி முத்திரை பதித்தார். அந்த வரிசையில் கமலை போலவே நடிகர் தனுஷும் தற்போது ஃபேமிலி, ஆக்சன், லவ் என வெவ்வேறு ஜானர் படங்களை இயக்கி வருகிறார். இதன் மூலம் நடிகர் தனுஷ், நடிப்பில் மட்டும் அல்ல இயக்கத்திலும், தான் ஒரு பன்முக கலைஞன் என்பதை நிரூபித்துள்ளார்.