
'பிரேமம்' திரைப்பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் சினிமாத் துறையிலிருந்து விலகப்போவதாக தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
2015 ஆம் ஆண்டு, மலையாளத்தில் வெளியாகி பிளாக் பஸ்ட்டர் ஹிட்டடித்த திரைப்படங்களுள் ஒன்று 'பிரேமம்'. இதன் இயக்குநர்தான் அல்போன்ஸ் புத்திரன். இந்த திரைப்படத்தில் நிவின் பாலி, சாய்பல்லவி, மடோனா செபஸ்டியன், அனுபாமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இது மலையாளம் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடிய சிறந்ததொரு திரைப்படமாக அமைந்திருந்தது. 'பள்ளி பருவத்தில் இருந்து 30 வயதான நிலையிலும் தனது காதலில் வெற்றியைக் காண இயலாத ஒருவனுக்கு எதிர்பாராத தருணத்தில் கைகூடும் காதல்' என்ற கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் 'பிரேமம்' என்ற திரைப்படம்.
ஆனால் 'பிரேமம்' திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே 2013ஆம் ஆண்டு திரையில் வெளிவந்த திரைப்படம்தான் 'நேரம்'. இதையும் அல்போன்ஸ் புத்திரன்தான் இயக்கியுள்ளார். மேலும் இதில் நிவின் பாலி மற்றும் நஸ்ரியா இருவரும் ஜோடியாக இணைந்து நடித்திருந்தனர். இது குறைந்த பட்ஜெட் திரைப்படமாக இருந்தாலும்கூட வெகுவான மக்களை ஈர்த்த திரைப்படமாக ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இது போன்ற மிகச்சிறந்த திரைப்படங்களை தனது படைப்பாக்கத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்த இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், 2015ஆம் ஆண்டு வெளிவந்த தனது 'பிரேமம்' திரைப்படத்திற்கு பின், நீண்ட இடைவெளிக்கு பிறகு, 2022ஆம் ஆண்டு 'கோல்ட்' என்ற திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இத்திரைப்படம் இவர் எதிர்ப்பார்த்த வெற்றியைத் தரவில்லை.
இனி திரைப்படங்கள் இயக்கப்போவதில்லை:
அல்போன்ஸ் புத்திரன் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார். அது சினிமா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் வெளியிட்ட அந்த பதிவில், தனக்கு ஆட்டிஸம் ஸ்பெக்டரம் குறைபாடு இருப்பதாகவும், இதனால்தான் இனி திரைப்படங்கள் எதுவும் இயக்கப்போவதில்லை என்றும், ஓடிடி தளங்களில் குறும்படங்கள் இயக்குவதை மட்டுமே தொடரப்போவதாகவும் அப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் சினிமாவை விட்டு விலக ஆசை இல்லை என்றும், தனது உடல் ஒத்துழைக்காததால் மட்டுமே இந்த முடிவை எடுத்திருப்பாதகவும் கூறியுள்ளார். இந்நிலையில் இவரின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் தீயாக பகிரப்பட்டு வரும் இந்த சமயத்தில், இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்அந்தப் பதிவை பேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். இது அவரது ரசிகர்களிடையே திரைப்படம் இயக்குவதை தொடர்வார? இல்லையா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
