இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் திரையுலகில் இசை இளவரசனாக, அசுரனாக கொண்டாடப்படும் ஒருவர் யாரென்றால் அது இன்றைய சூழலில் ஜி.வி.பிரகாஷ் குமார்தான். இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என்று பன்முகக் கலைஞராக வலம்வந்து தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டவர். ‘பச்சை தமிழன்டா’ என்று பலரும் வெறும் வாயளவில் மார்தட்டிக்கொள்ளும் இந்த சமூகத்தில் ஜி.வி.பிரகாஷ் மட்டும் அந்த வார்த்தையை உண்மையாக்கும் விதமாக சமூகம் சார்ந்த பிரச்சினைகளையும் உன்னிப்பாக கவனித்து, அதற்காக முதல் ஆளாக நின்று குரல் கொடுத்தும் வருகிறார். அதற்கு உதாரணமாக தமிழ்நாட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம், அனிதா மரணம், விவசாயிகள் பிரச்சினை போன்ற பல நிகழ்வுகளை சொல்லலாம். இப்படி எல்லா தளங்களிலும் தன்னை முன்னிறுத்தி தன் எண்ணங்களை, சிந்தனைகளை பதிய வைத்து வரும் ஜி.வி., அதன் அடுத்த முயற்சியாக தான் நடிக்கும் படங்களின் வாயிலாகவும், தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கும் புதிய யுத்தியை கையில் எடுத்துள்ளார். அந்த வகையில், ஜி.வி. நடிப்பில் ‘ரெபல்’ திரைப்படமும் தமிழக மக்களின் உணர்வுகளை, அவர்களுக்கான உரிமைகளை பேசும் படமாக வெளிவரவுள்ளது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம் மார்ச் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், ஜி.வி பிரகாஷின் திரைப்பயணம், சமூகம் சார்ந்து அவர் வெளிப்படுத்திய உணர்வுமிக்க செயல்கள், 'ரெபல்' படத்தின் ட்ரெய்லர் சொல்ல வருவது என்ன என்பது குறித்தெல்லாம் இந்த தொகுப்பில் காணலாம்.

இசையமைப்பாளர் டு நடிகர் அவதாரம்

தமிழ் சினிமா திரையிசை வானில் இளையராஜா, தேவா தொடங்கி இன்றைய யுவன் சங்கர் ராஜா, அனிருத், டி.இமான், சந்தோஷ் நாராயணன் வரை எத்தனையோ இசையமைப்பாளர்கள் கோலோச்சி வளர்ந்து கொண்டிருந்தாலும், பின்னணி இசையில் தனித்துவம் காட்டி, அந்த வரிசையில் தனது பெயரையும் ஒளிர வைத்த பிஜிஎம் மாஸ்டரான ஜி.வி.பிரகாஷ் குமார் புத்தகப் பையை சுமந்துகொண்டு பள்ளிக்குச் செல்லும் வயதில் மாமா ரஹ்மானின் உந்துதலால் ‘சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே..’, ‘குச்சி குச்சி ராக்கம்மா..’ போன்ற பாடல்களின் வாயிலாக தனது மழலைக் குரலை தமிழ் சினிமாவில் பதியவைத்தார். இருப்பினும் இசையை விட கிரிக்கெட் அல்லது கணினி தொழில்நுட்பத்தில் உயர் அதிகாரியாக வர வேண்டும் என்ற கனவோடு ஓட ஆரம்பித்தவரை காலம் அதே இசைத்துறைக்குள்ளேயே அழைத்து வந்துவிட்டது. அதற்காக தனது பள்ளி படிப்பை 11-ஆம் வகுப்போடு நிறுத்திவிட்டு, இசையில் மட்டும் கவனம் செலுத்தி வந்தவர், மேலும் அதற்காக லண்டனில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்து இசை தொடர்பாக படித்து பட்டம் பெற்றார். இதற்கு பிறகு தனது 19-வது வயதில் வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவந்த ‘வெயில்’ படத்தின் வாயிலாக இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் கால்தடம் பதித்தவர், முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்து அனைவரின் மனங்களையும் கிளீன் போல்டு ஆக்கினார். இப்படத்தில் இடம்பெற்ற ‘வெயிலோடு விளையாடி, ‘உருகுதே மருகுதே..’ போன்ற பாடல்கள் இன்றும் மனதை கரைய வைக்கும் பாடல்களாக இருந்து வருகின்றன. அடுத்ததாக அஜித் நடித்து வெளிவந்த ‘கிரீடம்’ படத்தில் இடம்பெற்ற ‘அக்கம் பக்கம்’ பாடல் அன்று பல இளசுகளின் இதயத்தையும் வருடிச் சென்றது.


'சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே' பாடலில் பிரபுதேவா, கௌதமி மற்றும் சிறுவனாக ஜி.வி.பிரகாஷ்

இதனை தொடர்ந்து தனுஷின் ‘பொல்லாதவன்’, சிம்புவின் ‘காளை’, கார்த்தியின் ‘ஆயிரத்தில் ஒருவன்’, ஆர்யாவின் ‘மதராசபட்டினம்’, வெற்றிமாறனின் ‘ஆடுகளம்’, சியான் விக்ரமின் ‘தெய்வத்திருமகள்’ என இசையமைத்தவருக்கு பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட் பாடல்களாக அமைந்தன. அதிலும் தனுஷ் - டாப்ஸி நடிப்பில் வெளிவந்து தேசிய விருதுபெற்ற படமான ‘ஆடுகளம்’ படத்தில் ஜி.வி. இசையமைத்திருந்த ‘ஒத்த சொல்லால..’, ‘யாத்தே யாத்தே’ ஆகிய பாடல்கள் எல்லா தரப்பினரையும் கவர்ந்தன. மேலும் குத்துப்பாடல்களை பெரிதும் விரும்பாத ஜி.வி., அதிகமாக கவனம் செலுத்தியது மெலோடி, ராப் போன்ற பாடல்களில்தான். அதனால்தானோ என்னவோ இவரின் மெலோடி பாடல்களுக்கு என்று எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த அளவுக்குப் பல மெலடிப் பாடல்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் இவர். அதுமட்டுமின்றி, அவரின் பாடல்களை கேட்கும் அனைவரின் மனங்களையும் கரைய வைக்கும் விதமாக பல பாடல்களுக்கு இசையமைத்து அதன் வாயிலாகவும் பலரின் கண்களை குளமாக்கியிருக்கிறார். இத்தகைய சிறப்புகளை கொண்டிருந்ததால்தான் 2020-ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘சூரரைப் போற்று’ படத்திற்காக தேசிய விருதினையும் தட்டிச் சென்றார் ஜி.வி.


'ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் பாடல் காட்சி ஒன்றில் நடிகர் கார்த்தி - ஜி.வி.பிரகாஷ்

இப்படி இசையுலகில் புதிய ராஜாங்கம் படைத்து ஜி.வி. பயணித்து வந்த நேரத்தில்தான் கதாநாயகனவும் நடிக்கும் வாய்ப்பு தேடிவர, தன் இசைப் பயணத்தையும் விடாமல் தொடர்ந்துகொண்டே நடிகராகவும் களமிறங்கினார். அப்படி தான் இசையமைக்கும் படங்களில் அவ்வப்போது ஏதாவது ஒரு பாடலில் கேமியோ ரோலில் வந்து நடனம் ஆடிவிட்டுபோன ஜி.வி., முதல் முறையாக ‘டார்லிங்’ படத்தின் மூலமாக நாயகனாக களமிறங்கினார். அப்படத்திற்கு இசையும் அமைத்திருந்தார். காமெடி ஜானரில் பேய் கதையாக உருவாகியிருந்த இப்படம் ஜி.வி. ரசிகர்கள் மத்தியிலும், குழந்தைகள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து ‘திரிஷா இல்லனா நயன்தாரா', ‘நாச்சியார்’, ‘செம்ம’, ‘சர்வம் தாளமயம்’, ‘குப்பத்து ராஜா’, ‘வாட்ச்மேன்’, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’, ‘பேச்சிலர்’, ‘100 சதவிகிதம் காதல்’, ‘ஜெயில்’, ‘செல்ஃபி’, ‘ஐங்கரன்’, ‘அடியே’ என வரிசையாக நடித்தார். இதில் 'செல்ஃபி' போன்ற சில படங்கள் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை பேசி வெற்றிப் படங்களாக அமைந்திருந்தாலும், பெரும்பாலானவை காதலை மையமாக வைத்தே வெளிவந்தன. குறிப்பாக இவர் நடிப்பில் வெளிவந்த ‘நாச்சியார்’, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’, ‘சர்வம் தாளமயம்’ போன்ற படங்கள் இவரை நல்ல நடிகராக அடையாளப்படுத்தின. இதனிடையே அவ்வப்போது சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வந்த ஜி.வி. தற்போது நடிப்பு, இசை இரண்டையும் விடாமல் தொடர்ந்து வெற்றியோடு பயணித்துக் கொண்டிருக்கிறார்.


'டார்லிங்' மற்றும் 'நாச்சியார்' படங்களில் ஜி.வி.பிரகாஷின் தோற்ற காட்சிகள்

சமூக அரசியல் பார்வை

“வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக் கூடாது” என்ற பழமொழியை அவ்வப்போது பலரும் கூற கேட்டிருப்போம். அப்படிப்பட்ட இந்த புகழ்வாய்ந்த வாக்கியத்திற்கு பொருத்தமானவர்தான் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். காரணம் எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் பல நலத்திட்ட உதவிகளையும் இவர் செய்து வருவதால்தான். அதுதவிர ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி மாணவி அனிதா மரணம், விவசாயிகள் பிரச்சினை, ஸ்டெர்லைட் பிரச்சினை, காவிரி பிரச்சினை, அரசு பள்ளி மாணவ - மாணவிகளின் பிரச்சினை என சமூகம் சார்ந்த பல நிகழ்வுகளுக்கு முதல் ஆளாக சமூக ஊடகங்கள் வாயிலாக குரல் கொடுப்பதுடன் நின்றுவிடாமல், அவர்களுக்காக போராட்ட களத்தில் இறங்கி போராடவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு துணையாக நிற்கவும் செய்துள்ளார். இதில் மாணவி அனிதா இறந்து முதலாமாண்டு நினைவு தினம் அன்று "மறதி ஒரு தேசிய வியாதி" என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதில் தொடங்கி அரசு பள்ளியை காப்பாற்றுவோம் என்று குரல் எழுப்பி வீடியோ பதிவிட்டதுவரை இவர் செய்துள்ள விஷயங்கள் பலரால் பாராட்டப்பட்டன.


ஜி.வி. பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய தருணம்

அதில் மிக முக்கியமான ஒன்று தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தால் அரசு பள்ளிகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை கேள்விப்பட்ட ஜி.வி. முதல் நபராக களத்தில் இறங்கி ஒரு சிறு முயற்சியாக மற்றவர்களையும் தூண்டும் வகையில் சென்னையில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியரின் முழு சம்பளத்தையும் வழங்கும் பொறுப்பை தானே ஏற்றுக்கொண்டார். அதுதவிர அரசு பள்ளிகளில் படித்துவிட்டு வெளிநாட்டில் நல்ல வேலையில் இருக்கும் தமிழர்களான தனது ரசிகர்களையும் அவரவர் கிராமத்தில் பள்ளியை தத்தெடுத்து உதவிட வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார். வெறும் பேச்சளவில் மட்டுமே வெற்று அறிவிப்புகளை கூறிவரும் பலருக்கு மத்தியில் ஜி.வி-யின் இந்த செயல் அன்று பலராலும் பாராட்டப்பட்டது. இதுமட்டுமின்றி மாணவ - மாணவிகளின் அடிப்படை தேவைகளில் ஒன்றான கழிப்பறை வசதி இல்லாத அரசு பள்ளிகளில் கழிவறையும் அமைத்து கொடுத்துள்ளார். மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களின் குழந்தைகள் படிக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ள ஜி.வி., நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில் இலவச செயலி ஒன்றையும் அறிமுகப்படுத்தினார். சாதாரண மனிதர்கள் தொடங்கி சினிமா பிரபலம், அரசியல்வாதி என்று ஒவ்வொருவரும் தான் செய்யும் உதவிகளை உடனே சமூக வலைதளங்களில் போட்டு பெரியதாக காட்டி பப்ளிசிட்டி தேடிக்கொள்ளும் இந்த காலத்தில். இவர் செய்த இத்தகைய விஷயங்கள் பல இளைஞர்களுக்கு தூண்டுகோலாக அமைந்தன. அதனால்தான் ஜி.வி. பிரகாஷின் சமூக நலப் பணிகளை பாராட்டி St.Andrews இறையியல் பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிப் பெருமைப்படுத்தியது.

கிளர்ச்சியாளராக ஜி.வி.

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம்தான் 'ரெபல்'. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் ஜி.வி. பிரகாஷுடன் மமிதா பைஜூ, நடிகர் கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், ஆதித்யா பாஸ்கர், ஆதிரா, வெங்கி, கல்லூரி வினோத் உட்பட பலர் நடித்துள்ளனர். மார்ச் 22ஆம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி கடந்த 12-ஆம் தேதி அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்ட நிலையில், மேடையில் பேசிய நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், “பா.ரஞ்சித்தின் தங்கலான் படத்திற்கு இசையமைத்து வருகிறேன். அடுத்ததாக அவருடைய தயாரிப்பில், அவருடன் ஒரு படம் பண்ண போகிறேன். அவருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சி. ‘ரெபல்’ படம் மிகவும் சூப்பராக வந்துள்ளது. சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நீங்கள் ஏன் இன்னும் அரசியல் சார்ந்த கதைகளை தேர்தெடுத்து நடிக்காமல் இருக்கிறீர்கள் என்று பலரும் கேட்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கான சந்தர்ப்ப, சூழ்நிலைகள் அமையாமல் இருந்தது. தற்போது அது ‘ரெபல்’ படம் மூலமாக நிறைவேறியுள்ளது. இயக்குநர் நிகேஷ் தன்னுடைய குடும்பத்தில் ஒருவருக்கு நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கதையை படமாக எடுத்துள்ளார். இப்படம் தமிழ் பேசும் குரலாக இருக்கும். இப்படியான கதை என் கைக்கு வந்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது. ‘டார்லிங்’, ‘கொம்பன்’ ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ போன்ற படங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் ஸ்டுடியோ கிரீன் உடன் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளேன். நிச்சயம் இந்த படம் வெற்றிப்படமாக அமையும்” என்று கூறியிருந்தார்.


ஜி.வி-யின் 'ரெபல்' பட காட்சிகள்

இசை வெளியீட்டு நிகழ்ச்சியை தொடர்ந்து அன்றைய தினமே ‘ரெபல்’ படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த ட்ரெய்லர் காட்சியில் ஜி.வி.பிரகாஷ் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும், தமிழர்கள் ஒவ்வொருவரின் உணர்வையும் அப்படியே படம்போட்டுக் காட்டுவது போல் அமைந்துள்ளது. அதிலும் குறிப்பாக 'நாங்க தமிழனா பொறந்தது தப்பா' என கேட்கும் கேள்வி துவங்கி, தமிழன் எப்படியெல்லாம் அவமானப்படுத்தப்படுகிறான், உணர்வு ரீதியாக எப்படியெல்லாம் காயப்படுத்தப்படுகிறான் என்பதை மிக அழகாக ட்ரெய்லர் காட்சிகள் காட்டியிருந்ததோடு, போரட்டம் நடைபெறும் ஒரு இடத்தில் மத்தவன் ஜெயிக்கிறதுக்காக விழுந்த ஒவ்வொரு தமிழனோட ஓட்டும், இனி ஒரு தமிழனுக்காகத்தான் விழனும் என்று முதல் முறையாக ஜி.வி. பேசியிருக்கும் அந்த வீர வசனமும் கேட்கும் நமக்கே கூஸ் பம்ஸ் ஏற்படுத்தி விடுகிறது. இதன் மூலம் தமிழ் தேசியம்தான் ஜி.வி.யின் அரசியல் அடையாளமோ என்கிற சந்தேகம் பலரிடத்தில் எழுந்திருந்தாலும், களத்தில் நேரடியாக இறங்கி போராடுவது மட்டுமல்ல இனி படங்கள் வாயிலாகவும் என் சமூகத்திற்கு குரல் கொடுப்பதே என் அடையாளம் என ஜி.வி. இப்படம் வாயிலாக உரக்க கூறியுள்ளார். இவரின் இந்த சமூக குரல் இனி அடுத்ததடுத்த படங்களிலும் ஒலிக்கும் என்று நம்புவோம்.

Updated On 25 March 2024 11:13 PM GMT
ராணி

ராணி

Next Story