இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஒருசில படங்களை பார்க்கும்போது அவை நம் நெஞ்சைத் தொடும். சில படங்கள் எத்தனை வருடங்கள் கழித்து பார்த்தாலும், எத்தனை முறை பார்த்தாலும் அவை நம் உணர்ச்சிகளோடு கலந்து மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும். முதல் படமே பெரிய பெரிய இயக்குநர்களின் பாராட்டை பெற்றதுடன், ஒரு க்ரேட் டெக்னீஷியனை உருவாக்கிவிட்டீர்கள் என்று ஜாம்பவான்களே பாராட்டும் அளவிற்கு உணர்ச்சிப்பூர்வமான அதேசமயம் யதார்த்தமான கதைகளால், காதல், பாசம், கோபம், பகை, பிரிவு போன்ற அனைத்து உணர்வுகளையும் நம் கண்முன் நிறுத்தியவர் இயக்குநர் விக்ரமன். குறிப்பாக, இவருடைய படங்களை பார்த்துவிட்டு, க்ளைமாக்ஸில் கண்ணீர் சிந்தாமல் யாராலும் இருக்கமுடியாது. 90களில் அப்படிப்பட்ட படங்களை வரிசையாக கொடுத்து இன்றும் நம் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும் விக்ரமனுடன் ஒரு நேர்காணல்...

‘வானத்தை போல’ மற்றும் ‘மரியாதை’ ஆகிய படங்களில் விஜயகாந்துக்காக சண்டைக்காட்சி வைக்கப்பட்டதாக திரை வட்டாரங்களில் சொல்கிறார்களே? அவரை எப்படி பார்க்கிறீர்கள்?

விஜயகாந்த் சார் போன்று ஒரு ஜென்டில்மேனை பார்க்கவே முடியாது. அவர் எப்போதும் டெக்னீஷியன்களுக்கு மரியாதை கொடுக்கக்கூடியவர். என்னுடைய படத்தில் நடிப்பதற்கு முன்பே அவர் நூறு படங்களுக்கும் மேல் நடித்திருந்தார். அவருக்கு டைரக்‌ஷன் நன்றாக தெரியும். அதேபோல் லைட்டிங்கும் நன்றாக தெரிந்து வைத்திருப்பார். சிவாஜி கணேசன் போன்று இவரும் எங்கு நின்றால் லைட்டிங் சரியாக இருக்கும் என்பதை புரிந்துகொண்டு, அங்கு நின்றுதான் டயலாக் பேசுவார். அவரிடம் கேமராமேன்கள் கரெக்‌ஷன்ஸ் சொல்லவேண்டிய அவசியமே இருக்காது. ஆனால் அவர் எங்குமே தனக்கு எல்லாம் தெரியும் என்று காட்டிக்கொண்டதே கிடையாது. அதுமட்டுமல்லாமல் எந்த ஒரு இயக்குநரும் அவரிடம் சென்று கதை சொல்லி, அந்த கதை பிடிக்கவில்லை என்று இயக்குநர்களை அவர் திருப்பி அனுப்பியதே கிடையாது. ஒரு இயக்குநர், தயாரிப்பாளர் நம்மை நம்பி படம் எடுக்கிறார் என்று அவர் தனது முழு ஒத்துழைப்பையும் கொடுப்பார். ஒரு இயக்குநர் தவறாக ஷாட் எடுத்தாலும், அவருக்கு தெரிந்தாலும் அதை காட்டிக்கொள்ள மாட்டார். எல்லா பெரிய இயக்குநர்கள் படத்திலும் நடித்த, புதுமுக இயக்குநர்களின் படங்களிலும் நடித்து ஹிட்டாக்கி கொடுத்த, 150 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் ஒரு மாஸ் ஹீரோ. இயக்குநர்களின் வேலையில் எப்போதும் தலையிடவே மாட்டார்.


வானத்தை போல படக்காட்சி & பொது நிகழ்ச்சி ஒன்றில் விஜயகாந்த்

விஜயகாந்த் இறப்பதற்கு கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு முன்பு அவரை, நான், ஆர்.வி. உதயகுமார், பேரரசு, ஆர்.கே. செல்வமணி என சில இயக்குநர்கள் வீட்டிற்கே சென்று பார்த்தோம். கம்பீரமாக பார்த்த ஒரு மனிதரை அந்த நிலையில் பார்த்தபிறகு, அன்று இரவெல்லாம் தூங்கவே முடியவில்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோதுகூட அவர் சரியாகிவிடுவார் என்ற நம்பிக்கை எனக்கு ஆழமாக இருந்தது. அவரைப்போன்ற ஒரு ஹீரோவை நம்மால் பார்க்கவே முடியாது.

நீங்கள் அறிமுகப்படுத்தியதில் உங்களுக்கு பிடித்த நடிகர், நடிகை யார்?

நான் என்னுடைய கடைசிப் படத்தில்தான் ரிஜீத் என்பவரை அறிமுகப்படுத்தினேன். அதற்கு முன்பே ரமேஷ் கண்ணாவை நான் அறிமுகப்படுத்தினேன். நான் அறிமுகப்படுத்தினேன் என்று சொல்வதைவிட அதற்கு முன்பே அவர் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அவரிடம் நல்ல காமெடி சென்ஸ் இருக்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அவர் சில படங்களில் உதவி இயக்குநராகவும், இணை இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார். அப்போதே அவரிடம் எனக்கு நல்ல பழக்கம் இருந்தது. அவர் இந்திய மொழிகள் மட்டுமல்லாமல் உலக மொழிப்படங்கள் பலவற்றை பார்த்திருக்கிறார். அவரைப்போன்ற சினிமா ஆர்வம் உள்ள ஒருவரை இதுவரை நான் பார்த்ததில்லை. ஒரு கதையை கேட்டால் அதில் எது சரி? எது தவறு? என்பதை மிகச்சரியாக கணிப்பார். ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் முதலில் சார்லி நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் ‘நிலாவே வா’ படத்தில் கமிட்டாகி இருந்ததால் டேட்ஸ் இல்லையென சொல்லிவிட்டார். அந்த படத்தையே 40 நாட்களில் முடிப்பதுதான் என்னுடைய திட்டமாக இருந்தது. அப்போது முந்தைய நாள் இரவு ரமேஷ் கண்ணாவை கூப்பிட்டு அடுத்த நாள் ஷூட்டிங்கிற்கு வரச்சொன்னேன். அப்போதுகூட படம் முழுக்க வருவார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. டப்பிங்கின்போது பார்த்து அவரே மிரண்டு விட்டார். அன்றுமுதல் இன்றுவரை ஆண்டுதோறும் புது வருடத்திற்கு கேக் வாங்கிக்கொண்டு என் வீட்டிற்கு வந்து என்னை பார்த்துவிட்டுதான் போவார்.


ரமேஷ் கண்ணா மற்றும் சித்தாரவை முக்கிய கதாபாத்திரங்களில் அறிமுகப்படுத்தியது குறித்து...

அதேபோல் மலையாளத்தில் பெரிய ஆர்ட்டிஸ்டாக இருந்த ஜெயராமை ‘கோகுலம்’ படத்தின்மூலம் தமிழில் அறிமுகப்படுத்தினேன். ‘பூவே உனக்காக’ படத்தின்மூலம் அஞ்சு அரவிந்தையும் தமிழில் அறிமுகப்படுத்தினேன். ‘புது வசந்தம்’ படத்தில் நடிக்க ரேவதியிடம் கதை சொன்னேன். ஆனால் அந்த படத்தில் நடிக்க ரேவதியால் முடியவில்லை. அப்போது ஆர்.சுந்தர்ராஜன் ஆபீஸில் ஒரு மலையாளப் பெண்ணை செலக்ட் செய்து வைத்திருப்பதாக சொன்னார்கள். அவருடைய ஆபீஸிலிருந்து போட்டோ வாங்கி பார்த்ததும் அந்த பெண்ணை பிடித்திருந்தது. அதற்கு முன்பே பாலசந்தரின் இயக்கத்தில் ‘புதுபுது அர்த்தங்கள்’ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்த சித்தாரா, எனது படத்தில் முதன்மை கதாநாயகியாக நடித்தார்.

‘புதிய மன்னர்கள்’ படத்தில் பார்த்த விக்ரமுக்கும் இப்போது இருக்கிற விக்ரமுக்கும் வித்தியாசமாக எதை பார்க்கிறீர்கள்?

அப்போதே அவர் புத்திசாலிதான். அவர் ஆரம்பத்தில் நடித்த சில படங்கள் சரியாக ஓடவில்லை. இருந்தாலும் அவர் ஒரு நல்ல நடிகர் மற்றும் பார்ப்பதற்கும் ஹேண்ட்ஸமாக இருக்கிறார் என்று சொல்லித்தான் ‘புதிய மன்னர்கள்’ படத்தில் அவரை கமிட் செய்தேன். நன்றாக நடித்தார், டான்ஸும் ஆடினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த படம் நன்றாக ஓடவில்லை. அது வெற்றியடைந்திருந்தால் அப்போதே அவர் பெரிய நடிகனாகி இருப்பார்.

உங்களுடைய மகனை வைத்து நீங்களே ஒரு படம் இயக்கலாமே?

இயக்கலாம். ஆனால் என்னுடைய மனைவிக்கு உடல்நலம் சரியில்லை. அவரை பார்த்துக்கொள்ள வேண்டுமென்பதாலேயே பெரும்பாலும் நான் வெளியே போவதில்லை. நெருங்கியவர்களின் நிகழ்ச்சிகளுக்கு மட்டும்தான் போவேன். படங்கள் பார்ப்பது மட்டும்தான் இப்போது பொழுதுபோக்கு. நான் ஒரு படம் எடுத்தாலும் அதில்தான் என்னுடைய முழு ஈடுபாடும் இருக்கும். பூஜை போடுவது முதல் ரிலீஸாகி படத்தின் ரிவ்யூ கிடைக்கும்வரை முழுமூச்சாக அந்த படத்திலேயே இறங்கிவிடுவேன். படம் ரிலீஸாகும் தியேட்டர்களின் போன் நம்பர்களை வாங்கி வைத்துக்கொண்டு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக போன் செய்து பேசி, படம் ஹிட்டா என்பதை தெரிந்துகொள்வேன். ஆனால் என் மனைவியை யார் பார்த்துக்கொள்வார்கள் என்ற கேள்வி இருப்பதால் இப்போது படம் எடுக்கவில்லை. அவருடைய சகோதரி யாராவது வந்து அவரைப் பார்த்துக்கொண்டால் என் மகனை வைத்து படம் இயக்குவேன். அதற்காக ஒரு ஸ்க்ரிப்ட் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் இப்போது அவர் தமிழ் - தெலுங்கு மொழிப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அந்த படம் முடிந்தபிறகு தமிழிலும் அடுத்து ஒரு படத்தில் கமிட்டாக இருக்கிறார். 90ஸில் ‘புது வசந்தம்’ எப்படி ட்ரெண்ட் செட்டராக இருந்ததோ, அதேபோல் இப்போது நான் எழுதிக்கொண்டிருக்கும் கதை இந்த தலைமுறைக்கு ஏற்றாற்போல் ஒரு ட்ரெண்டு செட்டராக இருக்கும் என நம்புகிறேன்.


விக்ரமன் மற்றும் அவருடைய மகன் விஜய் கனிஷ்கா

உங்களுக்கு பிடித்த இயக்குநர் யார்? நெருங்கிய நண்பரான இயக்குநர் என்றால் யாரை சொல்வீர்கள்?

நான் அதிகமாக நேசிக்கும் இயக்குநர்கள் என்றால் நிறையப்பேர் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, எனக்கு பீம் சிங், கே.எஸ். கோபால கிருஷ்ணன், தேவராஜ் மோகன், துரை போன்ற பழைய இயக்குநர்களின் படங்கள் மிகவும் பிடிக்கும். 80களில் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்களில் பிரபலமாக இருந்த ஆபாவாணன் படங்கள் ரொம்ப பிடிக்கும். அதேபோல் டி.ராஜேந்தர் படங்கள் என்றால் எனக்கு ரொம்ப ஃபேவரிட். 2000த்தில் வாங்கிய அவருடைய பாடல்கள் அடங்கிய சிடிக்களை இன்னும் வண்டியில் வைத்திருக்கிறேன். ‘மைதிலி என்னை காதலி’ படத்தை கிட்டத்தட்ட 4 முறை பார்த்தேன். அதேபோல் ‘ஒருதலை ராகம்’ என்னுடைய ஆல் டைம் ஃபேவரிட். நான் இயக்குநரான பிறகு, ஷங்கர், மணிரத்னம், பாலா, வெற்றிமாறன், மாரி செல்வராஜ் போன்ற இப்போதுள்ள இயக்குநர்களையும் எனக்கு பிடிக்கும். ஒரு நடிகர், ஒரு இயக்குநருக்கு மட்டுமே ரசிகனாக இருக்கிறேன் என்று சொல்கிறவன் உண்மையான சினிமா ரசிகனாக இருக்கமுடியாது. நல்ல படைப்புகள் யார் கொடுத்தாலும் அதை ரசிக்கவேண்டும்.

கே.எஸ் ரவிக்குமார் உங்களுக்கு நெருக்கமானவர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவரைப்பற்றி சொல்லுங்கள்!

‘புது வசந்தம்’ படத்தில் அசோசியேட் டைரக்டராக பணிபுரிந்தார். நானும் சரி, என்னுடைய பையனும் சரி, என்னுடைய குடும்பமே அவருக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். ஒரு புதுமுக இயக்குநரிடம் கதைகேட்ட பிறகு, என்னுடைய மகன் விஜய் கனிஷ்காவை வைத்து இயக்க நான்தான் பரிந்துரை செய்து கே.எஸ். ரவிக்குமாரிடம் அனுப்பினேன். பட பூஜைக்காக 5 லட்சம் செலவழித்து ஏற்பாடுகள் செய்து கிட்டத்தட்ட 80 இயக்குநர்களுக்கு அழைப்பு கொடுத்த பிறகு, பூஜைக்கு ஒரிரு நாட்களுக்கு முன்பு அந்த இயக்குநர் என்னிடம் வந்து உடல்நிலை சரியில்லை என்றுகூறி படத்தை இயக்க மறுத்துவிட்டார். பூஜையை போட்டபிறகு 2 மாதங்கள் இடைவெளி எடுத்துக்கூட இயக்குங்கள் என்று கேட்டுப்பார்த்தேன். ஆனால் அவர் ஏனோ மறுத்துவிட்டார்.


கே.எஸ். ரவிக்குமாருக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக கூறும் இயக்குநர் விக்ரமன்

கிட்டத்தட்ட 2 வருடங்கள் கொரோனா காலத்தில் அலுவலகத்தில் வைத்து அவரிடம் பேசித்தான் அந்த கதையை ஓகே செய்தார்கள். ஒருசில ஆர்ட்டிஸ்ட்களிடம் அந்த கதையை சொல்லி ஓகே வாங்கியிருந்தார்கள். எடுக்காத படத்திற்கு கிட்டத்தட்ட 27 லட்சம் அவர் செலவு செய்திருந்தார். அப்படியிருந்தும் பூஜை தடைபட்டதால் வேறு யாராக இருந்தாலும் மீண்டும் எனது மகனை வைத்து படம் இயக்க யோசித்திருப்பார்கள். ஆனால் கே.எஸ். ரவிக்குமாரோ, அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல், என்னையும் சமாதானப்படுத்தி, இரண்டு மாதங்களுக்குள் பல்வேறு கதைகளை கேட்டு, அதில் ‘ஹிட் லிஸ்ட்’ கதையை ஓகே செய்து எனது மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அந்த படம் தியேட்டரில் எதிர்பார்த்த வெற்றியை பெறாவிட்டாலும் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டது. அதன்மூலம்தான் இப்போது தெலுங்கு - தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகிவரும் படத்தில் என் மகன் நடித்துக்கொண்டிருக்கிறான்.

நீங்கள் யாரிடம் பாராட்டு வாங்கிய தருணத்தை ஸ்பெஷலாக நினைக்கிறீர்கள்?

‘புது வசந்தம்’ படத்தை பார்த்துவிட்டு, பாலசந்தர் சார் பாராட்டி ஒரு லெட்டர் எழுதியிருந்தார். அதை ஃப்ரேம் போட்டு மாட்டி வைத்திருக்கிறேன். கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, என்னுடைய பெரும்பாலான படங்களை போட்டுக் காட்டினேன். அவருக்கு எல்லா படங்களுமே பிடித்திருந்தாலும் ‘வானத்தை போல’ மிகவும் பிடித்திருந்தது. அதிகாலை 5 மணிக்கு கலைஞர் போன் போட்டு பாராட்டியிருக்கிறார். அதேபோல் ஜெயலலிதா அம்மாவும் ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ படம் மிகவும் பிடித்திருந்ததாக பாராட்டினார். ‘புது வசந்தம்’ படத்தை நிறையப் பேருக்கு ஸ்பெஷல் ஸ்க்ரீனிங் செய்தோம். எல்லாருக்கும் பிடித்திருந்தது. ஆனால் ஆபாவாணன் மற்றும் பாக்கியராஜ் இருவருக்கும் தனியாக ஷோ போட்டேன். பாக்கியராஜ் சார் படம் நன்றாக இருப்பதாக பாராட்டிச் சென்றார். ஆனால் ஆபாவாணன் சார், என்னிடம் எதுவும் சொல்லாமல் சௌத்ரி சாரின் கையைப் பிடித்து ஒரு க்ரேட் டெக்னீஷியனை உருவாக்கிவிட்டீர்கள் என பாராட்டிச் சென்றார். என்னால் மறக்கமுடியாத பாராட்டு என்றால் இதுதான். என்னுடைய புது வசந்தம் பட பூஜைக்கு சினிமா உலகத்திலிருந்து வந்த ஒரே விஐபி பாக்கியராஜ் சார்தான். அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Updated On 28 Jan 2025 9:19 AM IST
ராணி

ராணி

Next Story