தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர்களில் ஒருவர் விக்ரமன். குடும்பப்பாங்கான, உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உணர்ச்சிப்பூர்வமான கதைகளை இயக்கி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற இவர், தமிழ் தவிர, தெலுங்கிலும் படங்களை இயக்கியுள்ளார். அவர் ராணி நேயர்களுக்கு அளித்த நேர்காணலின் முதல் இரண்டு பகுதிகளில் இயக்குநர் அறிமுகம், சந்தித்த சவால்கள், குடும்பம் மற்றும் திரை அனுபவங்கள் குறித்து நம்முடன் உரையாடினார். இந்த பகுதியில் அவருடைய படத்தில் இடம்பெறும் பாடல்களின் வெற்றி ரகசியம் குறித்தும், காதல் குறித்தும் நம்முடன் பகிர்கிறார்.
‘சூரிய வம்சம்’ படத்தில் நடித்த சரத்குமாருக்கும் இப்போது ‘ஹிட் லிஸ்ட்’டில் நடித்திருக்கும் சரத்குமாருக்கும் இடையே என்ன வித்தியாசத்தை பார்க்கிறீர்கள்?
பெரிய வித்தியாசமெல்லாம் இல்லை. இப்போது அவருக்கு 70 வயது இருக்கும். ஆனாலும் அவர் இன்னும் 45 - 50 வயதைப் போன்று இளமையாக இருக்கிறார். படத்தில் சீரியஸாக நடித்தாலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லாரையும் கலாய்த்து சிரித்துப் பேசிக்கொண்டிருப்பார். ‘ஹிட் லிஸ்ட்’ படத்தில் எனது மகனை நன்றாக ஊக்குவித்ததுடன், எனக்கும் ஃபோன் செய்து, முதல் படத்தில் நடிப்பது போன்று தெரியவில்லை. நன்றாக நடிக்கிறார் என்று சொன்னார். பல மொழிகளில் 150 படங்களுக்கும்மேல் நடித்திருக்கும் அவர் எனது மகனை பாராட்டுவது பெரிய விஷயம்தானே. ராதிகாவிடமும் எனது மகனை அறிமுகப்படுத்திவைத்து நன்றாக நடிக்கிறான் என்று சொல்லியிருக்கிறார். அதுபோன்று எதார்த்தமான மனநிலை கொண்டவர். ‘ஹிட் லிஸ்ட்’டில் அவரை ஓகே செய்தபோதுகூட கதைகூட கேட்காமல் உடனே ஓகே சொல்லிவிட்டார். அப்போதிருந்து இன்றுவரை உருவத்திலும் கேரக்டரிலும் சரத்குமாரிடம் எந்த மாற்றமும் இல்லை.
‘சூர்ய வம்சம்' மற்றும் ‘ஹிட் லிஸ்ட்’ படங்களில் நடித்திருக்கும் சரத்குமார் பற்றி விக்ரமன் பகிர்வு
‘உன்னை நினைத்து’ திரைப்படத்தில் பார்த்த சூர்யாவுக்கும் ‘கங்குவா’ சூர்யாவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
‘உன்னை நினைத்து’ திரைப்படத்திற்கு பிறகு இப்போது சூர்யா ஒரு ஆக்ஷன் ஹீரோவாக உருவாகிவிட்டார். விஜய்கூட அப்படித்தான். ஆனால் ரொமான்ட்டிக் ஹீரோ என்ற பெயரை ‘பூவே உனக்காக’ படத்தில்தான் எடுத்தார். சூர்யாவை நான் ‘உன்னை நினைத்து’ படத்திற்கு கமிட் செய்தபோது ‘நந்தா’ ரிலீஸாகவில்லை. அப்போது அந்த படத்தை நான் பார்க்கவும் இல்லை. நந்தாவுக்காக சூர்யா முடியை ஒட்ட வெட்டியிருந்ததால் ‘உன்னை நினைத்து’ படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பிக்க 2 மாதங்கள் காத்திருந்தேன். அந்த இடைவெளியில்தான் ‘நந்தா’ ரிலீஸானது. அந்த படத்தை பார்த்துவிட்டு, ‘இந்த படத்தில் சூர்யாவை ஆக்ட்டிவாக காட்டியிருக்கிறார்களே. நாம் ரொம்ப சாஃப்ட்டாக காட்டுகிறோமோ என்று நினைத்தேன். அதன்பிறகு ஸ்க்ரிப்டையும் மாற்றமுடியவில்லை. இருந்தாலும் என் படத்தில் ஒரு சண்டைக்காட்சி மட்டும் வைத்திருந்தேன். முன்பே தெரிந்திருந்தால் கதையை கொஞ்சம் வித்தியாசமாக எடுத்திருப்பேன்.
உங்களுடைய படத்தில் மட்டும் எப்படி எல்லா பாடல்களுமே ஹிட்டாகின்றன?
நான் ஒரு இசை ரசிகன். இன்று வருகிற இளம் இசையமைப்பாளர்கள் எனக்கு அவர்களுடைய பாடல்களை அனுப்பும்போது கேட்டுவிட்டு, நன்றாக இருந்தால் உடனே அவர்களுக்கு ரிப்ளை கொடுப்பேன். பாடல் முழுவதையும் கேட்பேன். அது தெரிந்தவர்களாக இருந்தாலும் சரி, தெரியாதவர்களாக இருந்தாலும் சரி. இப்போது சினிமாவில் மோனோபோலி இல்லை. முன்பெல்லாம் 10 -15 இயக்குநர்கள்தான் இருப்பார்கள். ஆனால் இப்போது 30, 40 நல்ல இயக்குநர்கள் இருக்கிறார்கள். அதேபோல் சிறந்த இசையமைப்பாளர்களும், கேமராமேன்களும் இருக்கிறார்கள். இவ்வளவு திறமையானவர்களுக்கு ஆர்ட்டிஸ்தான் கொஞ்சம் குறைவாக இருக்கிறார்கள். குறிப்பாக, இளம் நடிகர்களுக்கு வாய்ப்பு அவ்வளவாக கொடுக்கப்படுவதில்லை.
‘உன்னை நினைத்து’ மற்றும் ‘நந்தா’ படங்களில் சூர்யாவின் கேரக்டர் மற்றும் கெட்டப் வித்தியாசம்
உண்மையான காதலுக்கு போராடிக்கொண்டிருக்கிற இளைஞர்களுக்கு நீங்கள் சொல்லக்கூடிய அறிவுரை என்ன?
என் படத்தில் சொன்னதுதான் தனிப்பட்ட கருத்தும்கூட. நேர்மையாக இருந்துகொண்டு போராடினால் நிச்சயம் ஜெயிக்கலாம். குறிப்பாக, தன்னம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பு மிகவும் முக்கியம். சினிமாவுக்கு வரவேண்டும் என நினைக்கிற இளைஞர்களுக்குக்கூட நான் இதைத்தான் சொல்லுவேன். இன்று நாம் பார்க்கிற மிகப்பெரிய ஜாம்பவான்கள்கூட மிகவும் கஷ்டப்பட்டுதான் இந்த நிலைமைக்கு வந்திருக்கின்றனர். காதலில் இப்போது புரிதல் முக்கியம் என்று நினைக்கின்றனர். முதலில் பேசிப்பழகி பார்த்துவிட்டு ஒத்துப்போகவில்லை என்றால் உடனே ப்ரேக்-அப் செய்துகொள்கின்றனர். அது நல்லதுதான். ஏனென்றால் செட் ஆகுமா ஆகாதா என்ற கேள்வியோடு திருமணம் செய்துகொண்டு, அதன்பிறகு பிரிவதைவிட காதல் என்ற நிலையில் பிரிவதே நல்லது. குழந்தை பிறந்தபிறகு பிரிந்தால் பெற்றோருக்கு வலி இல்லாவிட்டாலும் குழந்தைகளுக்கு நிச்சயம் வலி இருக்கும். இப்போதுள்ள காதலர்களிடையே நல்ல புரிதல் இருப்பதால் இருவரும் சேர்ந்திருந்தால் நன்றாக இருக்குமா என்பதை அவர்களே முடிவுசெய்துதான் கல்யாணமே செய்துகொள்கிறார்கள். அதேபோல் ஒரு ப்ரேக்-அப் ஆகிவிட்டாலும் அதன்பிறகு வேறு யாரையாவது பிடித்திருந்தால் கல்யாணம் செய்துகொள்கின்றனர். எனவே முன்புபோல முதல் காதல்தான், ஒரு தடவைதான் காதல் என்றெல்லாம் இப்போது சொல்லமுடியாது. எத்தனைமுறை வந்தாலும் காதல் புனிதமானதுதான். காதலிப்பது ஒன்றும் குற்றமல்ல. இன்னொன்று இப்போதுள்ள பெற்றோரிடம் மனதளவில் மிகப்பெரிய மாற்றம் வந்திருக்கிறது. நான் சிறுவயதில் இருந்தபோது நான் வசித்த ஊரில் ஒரே ஒரு அப்பா மட்டும்தான் தனது மகனின் காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால் இப்போது நிறைய பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு பிடித்திருந்தால் அதை அரேஞ்ச் மேரேஜாகவே செய்துவைத்து விடுகின்றனர்.
நீங்கள் எடுத்த படங்களில் உங்களுடைய மனைவிக்கு பிடித்த படம் எது?
அவருக்கு ‘பிரியமான தோழி’ திரைப்படம் மிகவும் பிடிக்கும். அதேபோல் ‘பூவே உனக்காக’ படத்தை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்து இரவெல்லாம் அழுதுகொண்டே இருந்தார். ‘சூரிய வம்சமும்’ அவருக்கு பிடித்த படங்களில் ஒன்று.
‘புது வசந்தம்’ படக்காட்சி & கார்த்திக்
பல்வேறு தடைகளைத் தாண்டி சினிமாத்துறையை தேர்ந்தெடுக்க என்ன காரணம்?
நான் ஒரு நல்ல ரசிகன். எனக்கு 10 வயதாக இருந்தபோதிருந்தே தியேட்டர்களுக்குச் சென்று சினிமா பார்ப்பேன். நல்ல சினிமாக்கள் பலவும் என்னை ஈர்த்தன. 15, 16 வயதில் எல்லாருக்குமே சினிமாவில் நடிக்கவேண்டுமென்றுதான் தோன்றும். ஆனால் எனக்கு ஏனோ டைரக்டர் ஆகவேண்டுமென்று மட்டும்தான் தோன்றியது. அதற்கு ‘மூன்று முடிச்சு’, ‘அவர்கள்’, ‘நிழலும் நிஜமும்’ போன்ற பாலசந்தர் சாரின் படங்கள் முக்கிய காரணம். அதேபோல் ‘16 வயதினிலே, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ என பாரதிராஜா சாரும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். மகேந்திரன் சாரின் ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப் பூக்கள்’ போன்ற படங்களும் மிகவும் பிடிக்கும். எனவேதான் சினிமாவுக்குச் சென்று டைரக்டர் ஆகவேண்டுமென்றுதான் ஆசைப்பட்டேன். பி.காம் டிகிரி முடித்துவிட்டு ரிசல்ட்கூட பார்க்காமல் நேராக சினிமாவுக்கு வந்துவிட்டேன். முதலில் மணிவண்ணன் சார், அடுத்து பார்த்திபன் சாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து அடுத்து இயக்குநர் ஆகிவிட்டேன். பார்த்திபன் சார் பற்றி சொல்லவேண்டுமானால் அவரும் சரி, அவருடைய படைப்பும் சரி, அவர் ஒரு வித்தியாசமான மனிதர்.
முரளி சாரை ‘புது வசந்தம்’ படத்தில் இயக்கிய அனுபவம் பற்றி சொல்லுங்கள்!
முரளி சார் என்னுடைய நல்ல நண்பர். ‘புது வசந்தம்’ கதையை முடித்தவுடனே முரளிதான் என் படத்தில் ஹீரோ என்பதில் உறுதியாக இருந்தேன். சௌத்ரி சாரிடம் கதை சொல்லும்போதும் முரளி மாதிரி ஒரு ஹீரோ என்று சொல்லித்தான் கதை சொன்னேன். அப்போது அவர், நான் இப்போதுதான் முதல் படம் எடுக்கிறேன். அது மிகவும் பிரம்மாண்டமாக இருந்தால்தான் எனக்கும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இருக்கும், முரளிக்கு பெரிய மார்க்கெட் இல்லை, கார்த்திக்கை போடுங்கள் என்று சொன்னார். ஆனால் நான் அவரிடம் கார்த்திக்கிற்கு ரொமான்ட்டிக் ஹீரோ என்ற பெரிய இமேஜ் இருக்கிறது, அவரை ஒரு பெண்ணை காதலிக்காமல் ஃப்ரண்டாக இருக்கிறார் என்று காட்டினால் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கும். அவர் ரகுமானை சொன்னார். ஆனால் நான் முரளியைத்தான் கேட்டேன். அவரும் எனக்காக நடித்தார். ‘புது வசந்தம்’ படம் வெற்றிபெறும் என்பதில் என்னைவிட முரளிதான் அதிக நம்பிக்கையுடன் இருந்தார்.
மணிவண்ணன் மற்றும் பார்த்திபனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விக்ரமன்
உங்களுடைய திரைத்துறை வெற்றிக்கு காரணமானவர் யார்?
என்னுடைய ஊரான திருநெல்வேலியைச் சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான சூரிய நாராயணன் என்பவர் என்னை முதன்முதலில் சினிமாவுக்கு அழைத்துவந்தார். என்னுடைய தலைப்புகள், கவிதைகள் மற்றும் சிறுகதைகளை படித்துப்பார்த்த மணிவண்ணன் அடுத்த நாளே என்னை உதவி இயக்குநராக சேர்த்துக்கொண்டார். ராஜேந்திர குமார் என்ற எனது நண்பருடன் ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற பெயரில் ஒரு படத்திற்கு வேலைசெய்தேன். அந்தப் படம் பாதியில் நின்றுபோனது. அதன்பிறகு, ‘சிறையில் சில ராகங்கள்’ என்ற பெயரில் பின்பு வெளியானது. அதன்பிறகு பார்த்திபன் சார் என பலர் இருக்கிறார்கள்.
இந்த நபரை சந்தித்திருந்தால் நன்றாக இருக்குமென்றால் யாரை சொல்வீர்கள்?
நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே சிவாஜியை வைத்து படம் இயக்கவேண்டும். அந்த படத்திற்கு எம்.ஜி.ஆர் கையால் விருது வாங்கவேண்டும் என்று நினைத்தேன். நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆகிவிட்டதால் அவரை வைத்து படம் இயக்கமுடியாது என்பது தெரிந்துவிட்டது. ஆனால் சிவாஜியை வைத்து ஒரு படமாவது இயக்கிவிட வேண்டுமென மிகவும் ஆசையாக இருந்தேன். ‘பூவே உனக்காக’ படத்திற்கு பிறகு சிவாஜி தாத்தா மற்றும் கார்த்திக் பேரன் என வைத்து முழுக்க முழுக்க நகைச்சுவையாக ஒரு கதை எழுதினேன். கடைசியில் ஒரு எமோஷனல் டச் மட்டும் இருக்கும். அந்த கதையை சிவாஜியின் மகன் ராமிடம் சென்று சொன்னேன். ஆனால் அந்த சமயத்தில் ‘அப்பா இப்போது நடிப்பதில்லை. ஓய்வில் இருக்கிறார். பிரபுவை வைத்து ஒரு படம் பண்ணுங்களேன்’ என்று சொன்னார். ‘சின்ன தம்பி’ அப்போதுதான் மிகப்பெரிய ஹிட்டடித்திருந்தது. அப்போது என்னிடம் அவருக்கு ஒரு ஸ்கிரிப்ட் இல்லை. ஆனால் சிவாஜி சாருக்காக எழுதிய அப்படியொரு நல்ல ஸ்க்ரிப்ட்டை இன்றுவரை நான் பண்ணவே இல்லை. ஏனென்றால் இன்னொரு சிவாஜி இல்லை. இன்றுவரை அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை. எனக்கு நோ சொன்னபிறகும், ‘படையப்பா’ மற்றும் ‘பூ பறிக்க வருகிறோம்’ போன்ற படங்களில் சிவாஜி நடித்திருந்தார். என்னுடைய படத்தில் நடிக்கவில்லையே என்ற வருத்தம் இப்போதும் இருக்கிறது.
படையப்பா படத்தில் ரஜினி & சிவாஜி இடம்பெற்ற காட்சி
இயக்குநர் சங்க தலைவராக இருந்த விக்ரமனுக்கும், இப்போது இருப்பதற்கும் உள்ள வேற்றுமைகள் என்ன?
அப்போது நான் தலைவராக இருந்தேன். இப்போது கௌரவ ஆலோசகராக இருக்கிறேன். இப்போதும் அதே டீம்தான். உதயகுமார் இப்போது சிறப்பாக செயல்படுகிறார். பேரரசு, சரண் போன்றோரும் நன்றாக செயல்படுகிறார்கள். குழு உறுப்பினர் ஏதேனும் குறையுடன் வந்தால் உடனே சரிசெய்யவேண்டுமென்று நினைப்பேன். ஒரு படம் எடுக்கும்போது தயாரிப்பாளருக்கும் ஏற்றவாறு விசுவாசமாக இருந்தேன். கடைசி படம் எடுக்கும்வரை எனெக்கென்று கேரவன் வைத்துக்கொண்டதே கிடையாது. கேரவன் பயன்படுத்தாத ஒரே இயக்குநர் நான்தான். தயாரிப்பாளர்களிடம் எப்படி இருப்பேனோ அதேபோலத்தான் என்னுடன் வேலைசெய்த டெக்னீஷியன்களுக்கும் இருந்திருக்கிறேன்.
இயக்குநர் என்றாலே கோபப்படுவார்கள் என்று சொல்வார்களே! நீங்கள் எப்படி?
சினிமாவுக்கு வருவதற்கு முன்பு நான் மிகவும் கோபக்காரனாக இருந்தேன். சினிமாவிற்கு வந்து நிறைய தோல்விகள் மற்றும் அவமானங்களை சந்தித்தபிறகுதான் எனக்குள் பக்குவமும், மெச்சூரிட்டியும் வந்தது. எல்லோரையும் பொறுமையாகத்தான் கையாளுவேன். ஆனாலும் என்னையும் அறியாமல் சில நேரங்களில் கோபப்பட்டிருக்கிறேன்.