இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

அனைத்து இளைஞர்களின் வாழ்க்கையுடனும் ஒத்துப்போகும் ஒரு படம் என்றால் அது ‘பொல்லாதவன்’. இளைஞர்களிடைய ஃபேவரிட் படங்கள் லிஸ்ட்டில் இந்த படம் இல்லாமல் இருக்காது. அப்பா பேச்சை கேட்காத பிள்ளை, காதலியைவிட பைக் மீதான காதல், தேடல், பாசம் என ஒரு இளைஞனின் அனைத்துவிதமான உணர்ச்சிகளையும் ஒருசேர திரையில் காட்டியிருப்பார் இயக்குநர் வெற்றிமாறன். அந்த படத்தால்தான் பல இளைஞர்களுக்கு பல்சர் பைக்மீது ஒரு மோகமே வந்தது என்றே சொல்லலாம். தனுஷின் கெரியரில் இந்த படத்திற்கு எப்போதும் முக்கியப்பங்கு உண்டு. அதேபோலத்தான் வெற்றிமாறனுக்கும். அதன்பின் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி என்றாலே மாஸ் ஹிட்தான் என்ற பெயர் உருவாகிவிட்டது. இப்போது இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உருவாகியிருக்கும் வெற்றிமாறன், நாளை (04.09.2024) தனது 49-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். வெற்றிமாறனின் சினிமா பயணம் எப்படி தொடங்கியது? திரைத்துறையில் இந்த இடத்தை அடைய அவர் கடந்துவந்த பாதை எப்படியானது? போன்ற தகல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

பாலு மகேந்திராவுடனான நாட்கள்!

ஒரே ஒரு அறைகொண்ட சிறிய வீட்டிலிருந்து பள்ளிக்குச் சென்ற மாணவன்தான் வெற்றிமாறன். அடுத்து லயோலா கல்லூரியில் பி.ஏ ஆங்கில படிப்பு. சிறுவயதிலிருந்தே கதை சொல்லும் ஆர்வம்கொண்ட வெற்றிமாறனுக்கு சினிமாக்களின்மீது தீராக்காதல். ஆனால் வீட்டில் அப்பாவுக்கு சினிமா என்றாலே பிடிக்காது. படித்துக்கொண்டிருந்தபோதே ஒருவழியாக தனது கல்லூரி ஃபாதர் ராஜநாயகம் என்பவரின் உதவியுடன் இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக வேலைசெய்யும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பும் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. 1997ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் முதலில் அவரிடம் வேலைகேட்டு சென்றபோது, பல புத்தகங்களை கொடுத்து சினாப்சிஸ் எழுதச் சொல்லியிருக்கிறார். இப்படி கிட்டத்தட்ட 3 மாதங்கள் சினாப்சிஸ் மட்டுமே எழுதிக் கொண்டிருந்த சமயத்தில் ஏற்கனவே பாலு மகேந்திராவின் உதவியாளராக பணிபுரிந்த முத்துக்குமார் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் ஒரு எதார்த்த நண்பர்கள் ஆகியிருந்த சமயத்தில், இரண்டு மாதங்கள் கழித்து பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.


இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக பணிபுரிந்த நாட்களில்...

இப்படி மூன்று மாதங்கள் கல்லூரி செல்வது, பாலு மகேந்திரா அலுவலகத்திற்கு செல்வது என மாறி மாறி நாட்கள் ஓடிக்கொண்டே இருக்க, அடுத்து எம்.ஏ பட்டபடிப்பில் சேர்ந்த வெற்றிக்கு, படிப்புக்கும் சினிமாவுக்கும் மட்டுமே நேரம் இருந்ததால் தனது நண்பர்களுடன் செலவழிக்க நேரம் கிடைக்கவில்லை. இருந்தாலும் பாலு மகேந்திராவின் அலுவலகத்தில் இருந்த முத்துக்குமார் நாளுக்குநாள் இவருடைய நெருங்கிய நண்பராகவே மாறிவிட்டார். அவர்மூலம் சீனிவாசன், ஐந்துகோவிலான் போன்றோரின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அவர்கள் எல்லாருமே வடபழனியில் ஒரு அறை எடுத்து தங்கி சினிமா வாய்ப்புக்காக முயற்சித்துக்கொண்டிருந்தவர்கள். அவர்கள்தான் பின்னாளில் நம் அனைவராலும் நன்கு அறியப்பட்ட பாடலாசிரியர் நா. முத்துக்குமார், இயக்குநர் சீனு ராமசாமி மற்றும் ஐகோ ஆகியோர். பாலு மகேந்திராவிடம் தினமும் திட்டுவாங்கும் வெற்றிமாறனை அவர் எப்போதும் ‘வெட்டி’ என்றுதான் அழைப்பாராம். 3 வருடங்களுக்குள் எப்படியாவது சினிமா முழுக்க கற்றுக்கொண்டு அடுத்த ஆண்டே எப்படியாவது படம் இயக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் சேர்ந்த வெற்றிக்கு கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் அவருடனேயே பயணிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன்பிறகுதான் ‘பொல்லாதவன்’ உருவானது.

விசாரணையும் வெனிஸ் விழாவும்

வெற்றிமாறனின் முதல் இயக்கம் ‘பொல்லாதவன்’. தனுஷ் - ஜி.வி. பிரகாஷ்குமார் - வெற்றிமாறன் கூட்டணியில் முதல்படமே இளைஞர்களின் மனதை வென்றுவிட்டது. இந்த படமும் அவ்வளவு சுலபத்தில் உருவாகிவிடவில்லை. பாலு மகேந்திராவின் ‘அது ஒரு கனா காலம்’ திரைப்படத்தின்போதே தனுஷிடம் ஒரு கதையை சொல்லியிருக்கிறார் வெற்றிமாறன். அவருக்கும் அந்த கதை பிடித்துப்போகவே ஓகே சொல்லிவிட்டார். அந்த கதையை படமாக தயாரிக்க முதலில் வெற்றிமாறன் அணுகிய தயாரிப்பாளார்கள் யாரும் ஒத்துக்கொள்ளாததால் ஷூட்டிங் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. கடைசியாக தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டு 2 நாட்கள் ஷூட்டிங்கும் நடந்த நிலையில் அவரும் படத்தை கைவிட்டுவிட்டார். அதன்பிறகு தனுஷும் ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்திற்கு சென்றுவிட்டார். ஒருவழியாக தயாரிப்பாளர் கதிரேசன் அந்த கதையை தயாரிக்க ஒப்புக்கொள்ள, 2007ஆம் ஆண்டு வெளியானது ‘பொல்லாதவன்’.


‘பொல்லாதவன்’ பட ஷூட்டிங்கில் வெற்றிமாறன் - தனுஷ்

பல தடைகளுக்கு பிறகு உருவாகியிருந்தாலும் ‘வொர்த் த வெயிட்’ என வெற்றிமாறனுக்கு ஆறுதலாக அமைந்தது இப்படம். ஒரு மிடில் க்ளாஸ் இளைஞனுக்கு பைக் மீது இருக்கும் ஆசை, அப்படி பார்த்து பார்த்து வாங்கிய பைக் திருட்டுபோகும்போது அவனுக்குள் ஏற்படும் தவிப்பு போன்றவற்றை தனுஷ் தனது எதார்த்தமான நடிப்பால் திரையில் கொண்டுவந்திருப்பார். முதல் படத்திலேயே வெற்றிமாறன், ஜி.வி. மற்றும் தனுஷிற்கு இடையே நல்ல நட்பு உருவானதாலேயே அடுத்த படமான ஆடுகளத்திலும் இந்த கூட்டணி மீண்டும் சேர்ந்தது. இப்படம் சிறந்த இயக்குநர் மற்றும் திரைக்கதைக்கான தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றது.

முதல் இரண்டு படங்களுமே மாபெரும் வெற்றிபெற, அடுத்து ஏதாவது வித்தியாசமாக செய்யவேண்டும் என தோன்றவே உருவான கதைதான் ‘விசாரணை’. இப்படம் தியேட்டர்களில் ஓடாது, ஆனால் கண்டிப்பாக திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன், தனுஷிடம் சென்று, கதை சொல்ல ஆரம்பித்திருக்கிறார் வெற்றிமாறன். ஆனால் கதையை கேட்காமலேயே, ஓகே சொல்லியிருக்கிறார் தனுஷ். அப்படி உருவான படத்தை எப்படியாவது கேன்ஸ் திரைப்பட விழாவில் காட்சியிட நினைத்து, எடிட்டர் கிஷோரை சந்தித்து பேசியிருக்கிறார். இவர்தான் வெற்றியின் முதல் இரண்டு படங்களுடைய எடிட்டர். கிஷோரிடம் இதுகுறித்து பேசிக்கொண்டிருந்தபோது அங்கேயே மயங்கி விழுந்திருக்கிறார். அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த ஒரே வாரத்தில் கிஷோர் இறந்துவிட, வெற்றியின் கேன்ஸ் கனவு முடிந்துவிட்டது. கிஷோரின் இழப்பிலிருந்து மீண்டுவந்தபிறகு, ‘விசாரணை’ படத்தை பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் உதவியுடன் வெனிஸ் திரைப்பட விழாவிற்கு அவரே நேரில் சென்று கொடுத்திருக்கிறார். ஆனால் மெயில் அனுப்புகிறேன் என்று சொல்லி திருப்பி அனுப்பியிருக்கிறார்கள்.


வெனிஸ் திரைப்பட விழாவில் பாராட்டுபெற்ற ‘விசாரணை’ திரைப்படம்

அதனால் மனம் சோர்ந்துபோய் தனது காதல் மனைவியுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு டின்னர் சாப்பிட சென்றிருந்த சமயத்தில் ‘விசாரணை’ படம் தேர்வான மெயில் வந்திருந்தது. வெனிஸ் திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ் திரைப்படம் என்ற பெயரையும் பெற்றது இப்படம். அதன்பிறகு படத்தை பார்த்த ரஜினி உட்பட பல பிரபலங்கள் வெற்றிமாறனை நேராக அழைத்து பாராட்டினர். தியேட்டர்களில் ஓடாது என்று, தானே சொல்லிய ‘விசாரணை’ திரைப்படம் ரசிகர்களையும் கவர்ந்ததுதான் அங்கு வெற்றிமாறனுக்கு அமைந்த டிவிஸ்ட்! அதனைத் தொடர்ந்து ‘வட சென்னை’ உருவானது. முதலில் சிம்புவை வைத்து இப்படத்தை இயக்க திட்டமிட்டிருந்த நேரத்தில், அதில் பல மாற்றங்கள் ஏற்பட்டு, பிறகு தனுஷே அதை தயாரித்து, நடிக்கவும் செய்தார். வட சென்னை பகுதியில் கடலோரம் வாழும் மக்களை அரசாங்கம் உட்பட அனைவருமே எப்படி நிராகரிக்கிறார்கள் என்பதை கதையாகக் கொண்ட இப்படம், வடசென்னை வாசிகளின் வாழ்க்கையை அப்படியே திரையில் பிரதிபலித்தது. அதனைத்தொடர்ந்து உருவானதுதான் ‘அசுரன்’. சாதிய ஒடுக்குமுறைகளால் மகனை இழந்த தந்தையின் பாசம், ஏக்கம், வலி ஒருபுறம், இருக்கும் இன்னொரு மகனையும் இழந்துவிடக்கூடாது என்ற பரிதவிப்பு மறுபுறம் என உணர்ச்சிபொங்க காட்டியிருப்பார் வெற்றிமாறன். இந்த படத்திற்காக தனுஷிற்கு தேசிய விருதும் கிடைத்தது. அதன்பிறகு ‘பாவக் கதைகள்’ என்ற பெயரில் ஓடிடி தளத்தில் வெளியான 4 குறும்படங்களில் ஒன்றை இயக்கியிருந்தார் வெற்றிமாறன். எப்போதும் தனுஷை வைத்துதான் படம் எடுப்பார் என்று சொல்லப்பட்ட நிலையில், கடந்த வருடம் வெளியானது ‘விடுதலை 1’.


‘விடுதலை 1’ பட ஷூட்டிங்கின்போது

காமெடியனை கதாநாயகனாக்கும் சூத்திரம்!

சூரியை அனைத்து இயக்குநர்களும் ஒரு நகைச்சுவை நடிகனாக மட்டுமே பார்த்த நேரத்தில், அவருக்குள் இருக்கும் கதாநாயகனை வெளிக்கொண்டுவந்தார் வெற்றிமாறன். போலீஸ் வேலையில் மலைகிராமத்துக்கு ட்ரான்ஸ்பராகிப்போகும் ஒரு கிராமத்து இளைஞனின் அப்பாவித்தனம், நேர்மை மற்றும் அதனால் சந்திக்கும் பிரச்சினைகள் போன்றவற்றை உணர்ச்சிப்பூர்வமாக திரையில் கொண்டுவந்திருப்பார். இந்த படத்தில் வாத்தியார் (பெருமாள்) கதாபாத்திரத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருப்பார். முதல் பாகத்தில் அவர் நிறையக் காட்சிகளில் இடம்பெறவில்லை என்றாலும் இரண்டாம் பாகத்தில் பெருமாளின் காதல் கதை இடம்பெறவுள்ளதாக கூறப்பட்டிருக்கிறது. அவருக்கு ஜோடியாக மஞ்சுவாரியார் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எப்போது படம் எடுத்தாலும் அதிக சீன்களை எடுத்து வைத்துக்கொள்வாராம் வெற்றிமாறன். அப்படி எடுக்கப்பட்ட சீன்கள் நன்றாக இருந்ததாலேயே இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸுக்கு தயாராகிவரும் நிலையில், வட சென்னை அடுத்த பாகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

தனுஷ் - வெற்றிமாறன் நட்பு

‘அது ஒரு கனா காலம்’ படத்தில் தனுஷிற்கு டயலாக் சொல்லிக்கொடுக்கும் பொறுப்பை தனது உதவி இயக்குநரான வெற்றிமாறனிடம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாலு மகேந்திரா. ஆரம்பத்தில் இருவருக்குமிடையே நிறைய சண்டைகள் வந்திருந்தாலும் அதன்பிறகு அது நட்பாக மாறிவிட்டது. வெற்றிமாறன் ஒரு கதை கொண்டுவந்தாலே தனுஷ் நோ சொல்லவே மாட்டாராம். கதையைக் கூட கேட்காமல் ‘உங்கமேல நம்பிக்கை இருக்கு வெற்றி’ என்று உடனே ஓகேயும் சொல்லிவிடுவாராம். அந்த அளவிற்கு இருவருக்குமிடையே நட்பும் நம்பிக்கையும் இன்றளவும் வேரூன்றி நிற்கிறது.


தனுஷ் - வெற்றிமாறன் இடையேயான நெருக்கம்

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி என்றாலே வெற்றிதான் என்பதற்கு சான்றுகள்தான் ‘பொல்லாதவன்’ முதல் ‘அசுரன்’ வரையிலான படங்கள். ஒரு படத்தை பொருத்தவரை நடிகர் - இயக்குநர் - தயாரிப்பாளர் மூன்றுபேருக்கும் இடையேயான புரிதல் என்பது மிகவும் முக்கியமானது. அப்படி தனுஷ் - வெற்றிக்கு இடையே புரிதலையும் தாண்டி ஒரு நட்பு உருவாக காரணமாக அமைந்தது வெற்றியின் வித்தியாசமான அணுகுமுறையும், ஆங்கில புலமையும் தனுஷை ஈர்த்ததுதான். ஒரு சிறந்த நடிகனிடமிருந்து தனக்கு தேவையானதை வாங்கத் தெரிந்த இயக்குநரான வெற்றியும், தன்னை வித்தியாசமான கதைக்குள் புகுத்தி தன்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் திரையில் அசத்தும் நடிகனான தனுஷும் ஒன்றுசேர்ந்தாலே அங்கு வெற்றிதான். அதற்கு சான்றுதான் ‘ஆடுகளம்’ மற்றும் ‘அசுரன்’ ஆகிய படங்களுக்காக தனுஷிற்கு கிடைத்த தேசிய விருதுகள். தனுஷ் எப்போதும் தனது அண்ணனும், இயக்குநருமான செல்வ ராகவனைத்தான் தனது குரு என்று சொல்வதுண்டு. அதற்கு அடுத்த இடத்தில் எப்போதுமே வெற்றிமாறனை வைத்திருப்பதாக பலமுறை தனுஷே கூறியிருக்கிறார். இப்படிப்பட்ட கூட்டணிக்காகத்தான் ‘வட சென்னை 2’ அன்புவின் எழுச்சி எப்போ? என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். அதையேதான் தானும் வெற்றியிடம் கேட்பதாக தனுஷும் பல மேடைகளில் இன்றுவரை கூறிவருகிறார். இந்நிலையில் விரைவில் வட சென்னை இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்கலாம் என தெரிவித்திருக்கிறார் வெற்றிமாறன்.


‘அசுரன்’ பட ஷூட்டிங் ஸ்பாட்டில்...

வெற்றிமாறனின் காதல் கதை

‘எவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது’ என்பதுபோல, கல்லூரி முடித்துவிட்டு எப்படியாவது இயக்குநராகிவிட வேண்டும் என்ற கனவுடன் ஓடிக்கொண்டிருந்த வெற்றிமாறனை துரத்தி துரத்தி காதலித்தார் ஒரு பெண். முதலில் ஒரு டீக்கடையில் பார்த்தபோதே அந்த பெண்ணுக்கு வெற்றிமாறனை பிடித்துப்போனது. ஆனால் அவர் அந்த பெண்ணை கண்டுகொள்ளவே இல்லை. இருந்தாலும் அந்த பெண் தைரியமாக அவரிடம் தனது காதலை சொல்ல, தனது கனவுகளைக் கூறி 10 வருடங்கள் காத்திருக்க தயாரா? என கேட்டிருக்கிறார். அந்த பெண்ணும் ஓகே என்று சொல்லிவிட, இருவரும் காதலிக்கத் தொடங்கினர். ஐடி துறையைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கு ஹைதராபாத்தில் வேலை கிடைத்தபோதும், வெற்றிமாறனை பிரிந்து அங்கு செல்லமுடியாது என கூற, நம்முடைய வேலைக்கு இந்த காதல் தடையாக இருந்தால், நாம் இருவருமே பிரிந்துவிடலாம் என வெற்றி கூறிவிட்டாராம். காதல் பிரியக்கூடாது என்பதற்காகவே காதலனை பிரிந்து ஹைதராபாத்திற்கு சென்றிருக்கிறார். இதற்கிடையே வீட்டில் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியிருக்கின்றனர். ஆனால் தான் வெற்றிமாறன் என்பவரை காதலிப்பதாகவும், அவரைத்தான் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருப்பதாகவும் வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கிறார். இதை பார்த்த அப்பெண்ணின் அப்பா, கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் அவரிடம் பேசாமலேயே இருந்திருக்கிறார். இதற்கிடையே தான் முதலில் படம் இயக்கினால்தான் திருமணம் என்று கூறிவிட்டார் வெற்றிமாறன். இப்படி தொடர்ந்து காதல் ஓடிக்கொண்டிருக்க, ஒருநாள் அப்பெண்ணிடம் வந்து எனக்கு பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அட்வான்ஸ் பத்தாயிரம் கொடுத்திருக்கிறார்கள். வீட்டில் திருமணத்திற்கு பேசிவிடு என்று கூற, அவரும் பேசி சம்மதம் வாங்கிவிட்டார். அந்த நேரத்தில் படம் ட்ராப்பாகிவிட்டது. இதனால் திருமணத்தையும் நிறுத்திவிடலாம் என்று கூறினாராம். ஆனால் வெற்றிமாறனின் அம்மாதான் பிடிவாதமாக திருமணம் நடந்தே ஆகவேண்டும் என்று கூற 8 ஆண்டு காதல் திருமணத்தில் முடிந்திருக்கிறது.


மனைவி ஆர்த்தியுடன் வெற்றிமாறன்

இதுதான் ஆர்த்தி வெற்றிமாறன் பல இடங்களில் பகிர்ந்த காதல் கதை. திருமணத்திற்கு முன்பே, தனது காதலன் பேருந்துகளில் பயணிப்பது, நண்பர்களிடம் பைக் கடன் வாங்குவது போன்றவை தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதால் வீட்டிற்கு தெரியாமல் அவருக்கு பைக் வாங்கி கொடுத்தாராம். மேலும் வெற்றிமாறனுடைய முதல் செல்போன், முதல் லேப்டாப் போன்ற அனைத்துமே ஆர்த்தி வாங்கி கொடுத்ததுதானாம்.

இப்படி பல தடைகள் மற்றும் போராட்டங்களுக்கு பிறகு கெரியரிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஜெயித்த வெற்றிமாறனின் வாழ்க்கை கதை ஒரு புத்தகமாக வெளியானது. ‘மைல்ஸ் டு கோ’ என்ற பெயரில் வெளியான அந்த புத்தகத்தில், தனது வாழ்க்கை எங்கு ஆரம்பித்தது, தான் சந்தித்த சவால்கள் என்னென்ன? தோல்விகளில் துவண்டபோதும் அப்படியே நின்றுவிடாமல் அதிலிருந்து மீண்டுவந்தது எப்படி? என்பதுபோன்ற தனது சொந்த அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார் வெற்றிமாறன். அடுத்தடுத்து கிடைத்த கதைகளை இயக்காமல் ஒரு கதையை விமர்சனரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றிபெற வைக்க எப்படி படம் எடுக்கவேண்டும்? என்பதற்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாக திகழும் வெற்றிமாறன், மேலும் பல வெற்றிகளை காண வேண்டும் என பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துக்கொள்வோம்.

Updated On 9 Sept 2024 9:52 PM IST
ராணி

ராணி

Next Story