
ஒரு படம் சுவாரஸ்யம் நிறைந்ததாக காணப்படுவதற்கு மிக முக்கிய காரணம் அப்படத்தில் இடம்பெறும் நகைச்சுவை காட்சிகளும், கதாபாத்திரங்களும், வசனங்களும்தான். அப்படி நகைச்சுவை, சமூக கருத்துக்கள், ரசிகர்களை கவரும் விதமான கதாபாத்திர தேர்வுகள் என்று ஒட்டுமொத்தமாக கொண்டாடி தீர்க்கப்பட்ட படங்கள் நமது தமிழ் சினிமாவில் நிறையவே உள்ளன. அப்படி எல்லா வகையிலும் நம்மை திருப்திப்படுத்திய படங்களின் வரிசையில் இருப்பதுதான் வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைபபடம். நமது சமூகத்தில் கார்ப்பரேட்டாக செயல்படும் சாமியார்கள் எப்படியெல்லாம் ஆன்மிகத்தை வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் நயன்தாரா, ஊர்வசி என்று மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தகியுள்ளது. காரணம் புதிய கூட்டணி, புதிய முயற்சி, முதல் முறையாக சுந்தர்.சி, நயன்தாரா காம்பினேஷன் என்று பல சுவாரஸ்யங்கள் அடங்கியுள்ளன. அது என்ன என்பது குறித்த தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.
மெகாஹிட் ஆன 'மூக்குத்தி அம்மன்'
'மூக்குத்தி அம்மன்' முதல் பாகத்தின் இறுதி காட்சியில் நயன்தாராவுடன், ஆர்.ஜே.பாலாஜி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர், ஹீரோ, இயக்குநர் என்று பல தளங்களில் வெற்றிகரமாக இயங்கி வருபவர்தான் ஆர்.ஜே.பாலாஜி. ஆர்.ஜே-வாக தன் கெரியரை வெற்றிகரமாக தொடங்கிய இவர் முதலில் சில சறுக்கல்களை சந்தித்து இருந்தாலும் 2015ஆம் ஆண்டு நானும் ரவுடிதான் படத்தின் வெற்றிக்கு பிறகு பல படங்களில் நடித்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இந்த நேரம் தன் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடிவு செய்து அவர் நகைச்சுவை நடிகராக இல்லாமல் ஹீரோவாகவும், எழுத்தாளராகவும் களமிறங்கினார். அப்படி முதல் முயற்சியாக அவரின் வசனம் மற்றும் நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான ‘எல்.கே.ஜி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொட்டதெல்லாம் வெற்றி என்பது போல ஆர்.ஜே.பாலாஜிக்கு வெற்றிமேல் வெற்றி வந்து சேர அடுத்ததாக இயக்குநராக களத்தில் குதித்தார். அப்படி அவரின் முதல் முயற்சியிலேயே இயக்குநராக வெற்றிகண்ட திரைப்படம்தான் ‘மூக்குத்தி அம்மன்’. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்திருந்த இப்படத்தில் மூக்குத்தி அம்மனாக முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க, அவருடன் நடிகை ஊர்வசி, ஆர்.ஜே.பாலாஜி, ஸ்மிருதி வெங்கட், மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
அம்மனாக வரும் நயன்தாராவுடன் ஆர்.ஜே.பாலாஜி
ஆன்மிகத்தை மையமாக வைத்து பணம் சம்பாதிக்கும் கார்ப்பரேட் சாமியார்களின் போலி நாடகங்களை அம்மனே நேரில் வந்து தோல் உரித்துக்காட்டுவதுபோல் எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில் வசனங்களும் நகைச்சுவையோடு கூடிய பாணியில் எடுத்துச்செல்லப்பட்டு இருந்தன. அதிலும் நடிப்பில் மிகவும் தேர்ந்த நடிகையான ஊர்வசி நான்கு பிள்ளைகளுக்கு அம்மாவாக வந்து வழக்கம் போல் தன் நடிப்பில் ஸ்கோர் செய்திருந்தார். அதேபோன்று நோன்புக்கஞ்சியை குடிப்பேன்... புனித அப்பத்தை புசிப்பேன்... ஆனால் ஒருபோதும் ஆடிமாதம் ஊற்றும் கூழை குடிக்கவே மாட்டேன்… என்று திராவிடர் கழகத்தை சேர்ந்த ஒருவர் பேசுவது போன்ற வசனமும், அதைத்தொடர்ந்து மூக்குத்தி அம்மனாக வரும் நயன்தாரா சொல்லும், கடவுளே இல்லைன்னு சொல்றான் பாரு அவன நம்பு... ஆனா இது மாதிரி ஒரு கடவுளை ஏத்துக்கிட்டு இன்னொரு கடவுள் இல்லைன்னு சொல்றான் பாரு... அவனை நம்பாதே… போன்ற வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் ஒருபுறம் வரவேற்பையும், மற்றொரு புறம் விவாதத்தையும் உண்டாக்கின. இப்படி பாசிட்டிவ், நெகட்டிவ் என்று எல்லா தரப்பினரையும் மகிழ்விக்கும் வகையில் உருவாக்கி கொடுக்கப்பட்டிருந்த இப்படம் அன்றைக்கு கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூலில் நல்ல சாதனை படைத்தது. இருப்பினும் இப்படம் கொரோனா காரணமாக நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டதால், பெரிய திரையில் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தமும் பல ரசிகர்களிடையே இருந்தது.
புதிய கூட்டணி புதிய இயக்குநர்
'மூக்குத்தி அம்மன்' முதல் பாகம் அறிவிப்பு போஸ்டர்
‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? இல்லையா? என்ற கேள்வி பலரிடமும் எழுந்திருந்தது. இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்த நேரத்தில், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ‘மூக்குத்தி அம்மன் 2’ உருவாக இருப்பதை உறுதிப்படுத்தியது. இதிலும் முன்னணி கதாநாயகியாக நயன்தாராவே நடிக்கிறார் என்பது அப்போது உறுதியான போதும் மற்ற நடிகர்கள், படத்தின் இயக்குநர், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த எந்த அறிவிப்பும் அப்போது வெளியாகவில்லை. இந்த படத்தையும் ஆர்.ஜே.பாலாஜியே இயக்கினால் நன்றாக இருக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நேரத்தில், ஆர்.ஜே பாலாஜி நடிகர் சூர்யாவின் 45வது படத்தை இயக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளிவந்து, ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்க வாய்ப்பே இல்லை என்ற சூழ்நிலை உருவானது. முன்னதாக மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை த்ரிஷாவை வைத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கப்போவதாக தகவல்கள் வெளிவந்து பரபரப்பானது. ஆனால், மீண்டும் நயன்தாரா உடன் இணைந்தே மூக்குத்தி அம்மன் படத்தை எடுக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது. இந்த குழப்பமான சூழ்நிலையில்தான், ஆர்.ஜே. பாலாஜி அளித்திருந்த பேட்டி ஒன்றில் "எனக்கு ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை இயக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. தயாரிப்பு நிறுவனமே அதை இயக்க திட்டமிட்டிருந்தது. ஆனால் எனக்கு அதில் ஈடுபாடு இல்லை. எனவே வேறு இயக்குநரை வைத்து படத்தை உருவாக்குகிறார்கள். மூக்குத்தி அம்மன் இல்லையென்றால் என்ன? நான் வேறு எதாவது படம் இயக்குவேன். அது டைட்டானிக் இல்லையே! மூக்குத்தி அம்மன் இல்லையென்றால் மாசாணி அம்மன், அதுவும் இல்லையென்றால் இன்னும் 108 அம்மன் பெயர்கள் இருக்கின்றன. அதில் ஒன்றை இயக்கிவிடுவேன்!” என நகைச்சுவையாக கூறி இருந்தார்.
இரு கைகூப்பியபடி காணப்படும் ஆர்.ஜே.பாலாஜி
மேலும், நான் சில படங்களில் நடித்து வருகிறேன். அதேசமயம், நான் எழுதிய கதையில் நடிகர் சூர்யாவை இயக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது என்ற தகவலையும் அப்போது அவர் தெரிவித்திருந்தார். இருப்பினும் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தில் பாலாஜி பணியாற்றாமல் போனதற்கு நயன்தாராவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படியான பரபரப்பான சூழ்நிலை நிலவி வந்த நேரத்தில்தான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’ குறித்து புதிய அறிவிப்பு வெளியானது. இதில், இப்படத்தை பிரபல இயக்குநர் சுந்தர்.சி இயக்குவார்கள் என தயாரிப்பு நிறுவனம் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும், இப்படத்தின் தயாரிப்பில் நயன்தாராவின் 'ரவுடி பிக்சர்ஸ்' மற்றும் சுந்தர்.சியின் 'அவ்னி சினிமேக்ஸ்' நிறுவனங்களும் இணைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டது. இதற்குப் பிறகு, இப்படத்துக்கான எந்தவித அப்டேட்டுகளும் வெளிவராத நிலையில், சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளது என்பதும், இதற்கான தயாரிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ள இப்படம், சுந்தர்.சி இயக்கியிருக்கும் படங்களில் மிகுந்த பொருட்செலவில் தயாராகும் படமாகும். மேலும், நயன்தாரா - சுந்தர்.சி கூட்டணியில் உருவாகும் முதல் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் இது ஏற்படுத்தியுள்ளது.
நயன்தாரா - சுந்தர்.சி சாதிப்பார்களா?
'மூக்குத்தி அம்மன் 2'-ல் கை கோர்க்கும் சுந்தர்.சி மற்றும் நயன்தாரா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ரசிகர்கள் மத்தியில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்போடு அழைக்கப்படும் இவர், பல வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் ஆவார். அருமையான கதைக்களங்களைக் கொண்ட பல வெற்றி படங்களில் நடித்திருந்தாலும், சமீபகாலமாக இவர் நடித்த திரைப்படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. குறிப்பாக, ‘மூக்குத்தி அம்மன்’ படத்திற்குப் பிறகு, நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்த எந்த படங்களும் பெரும் வரவேற்பைப் பெறவில்லை. அதில் ‘நெற்றிக்கண்’, ‘அன்னபூரணி’, ‘கனெக்ட்’, ‘O2’ போன்ற படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன. தற்போது, இவர் கைவசம் ‘டெஸ்ட்’, ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’, ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’, ‘டாக்ஸிக்’, ‘ராக்காயி’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் உள்ளன. இதில், மாதவன் மற்றும் சித்தார்த்துடன் இவர் இணைந்து நடித்துள்ள ‘டெஸ்ட்’ திரைப்படம், திரையரங்கில் ரிலீஸ் ஆகாமல், நேரடியாக ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான் தற்போது ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் இயக்குநர் சுந்தர். சி யுடன் முதல் முறையாக இணைந்து பணியாற்ற உள்ளார் நயன்தாரா.
'மூக்குத்தி அம்மன் 2' அறிவிப்பு போஸ்டர்
ஏற்கனவே கடந்த ஆண்டு 'அரண்மனை' திரைப்படத்தின் நான்காம் பாகத்தை வெளியிட்டு அதை மெகா ஹிட் திரைப்படமாக மாற்றிய சுந்தர் சி, தொடர்ச்சியாக ‘கேங்கர்ஸ்’ என்கின்ற திரைப்படத்தையும் இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடித்து வந்தார். இதில் குறிப்பாக வடிவேலுவும் இவருடன் இணைந்து நகைச்சுவையில் கலக்கி வந்த சமயத்தில்தான், இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த கையோடு இந்த ஆண்டு துவக்கத்தில் பொங்கல் தினத்தன்று பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த ‘மதகஜராஜா’ திரைப்படமும் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது. இதனால் சுந்தர் சி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி மிகவும் பிஸியான நிலையில், ஏற்கனவே ஒப்பந்தமாகி இருந்த ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை இயக்குவதற்கான முயற்சியில் இறங்கினார். இது தவிர கலகலப்பு 3 மற்றும் விஷால் உடன் ஒரு படம் என சுந்தர் சி-யின் லைன் அப் நீண்டு கொண்டே இருந்தாலும், தற்போது ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்திற்கான ஷூட்டிங்கிற்குத்தான் அவர் தயாராகி வருகிறார். இதற்கு முன்பு வெளியான முதல் பாகம், ஒரு சாதாரண இளைஞன் அம்மனை சந்திக்க நேரிடும் அனுபவங்களை மையமாகக் கொண்டு எளிமையான முறையில் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், இரண்டாவது பாகம் மிகவும் பிரம்மாண்டமாக 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருப்பதால், சுந்தர் சி, இதை அரண்மனை பாணியில் பெரிய அளவில் தயாரிப்பாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த படம் நயன்தாராவிற்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என அவரது ரசிகர்களும் உறுதியுடன் நம்புகின்றனர்.
