![அது ரகசியம் என்கிறார் இயக்குநர் கே.பாக்யராஜ்! அது ரகசியம் என்கிறார் இயக்குநர் கே.பாக்யராஜ்!](https://www.ranionline.com/h-upload/2025/02/07/386331-kalanjiyam-dp.webp)
(20.01.1980 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)
டைரக்சனில் நான் கற்றுள்ளது கடுகு அளவே! கற்கவேண்டியது கடல் அளவு உள்ளது!
இந்தத் துறையில் எனக்குக் குரு பாரதிராஜா.
முதல் முயற்சி
அவரது அடிச்சுவட்டிலேதான், "சுவர் இல்லாத சித்திரங்கள்" படத்தை டைரக்டு செய்தேன். எனது முதல் முயற்சி, பெருவெற்றி பெறாவிட்டாலும், தரமான படம் என்று பலரால் பாராட்டப்பட்டது. "ஆனந்த விகடன்" 44 மார்க் அளித்துப் பாராட்டியது. நிச்சயமாக எனது அடுத்த படம் 60 மார்க்குக்குமேல் பெறவேண்டும். அதற்காக, இப்பொழுது கவனமாக உழைத்து வருகிறேன்.
"சு. இ. சி." படத்துக்குப் பிறகு, டைரக்டு செய்ய பல வாய்ப்புகள் வந்தன. அவற்றை எல்லாம் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஓரிரு படங்களுக்கு மட்டும் ஒப்புக் கொண்டுள்ளேன். எனது சொந்தப் படம் ஒன்றையும் நானே டைரக்டு செய்கிறேன்.
இயக்குநர் கே.பாக்கியராஜ்
அளவோடு
கதை-வசனம், நடிப்பு, டைரக்ஷன் என்று மூன்று துறையிலும் நான் ஈடுபட வேண்டியிருப்பதால், ஒவ்வொன்றிலும் அளவோடு செய்து வருகிறேன்.
"புதிய வார்ப்புகள்" படத்தோடு நடிப்புக்கு முழுக்குப் போட இருந்தேன். அடுத்து ராஜ்கண்ணு படத்தில் தவிர்க்க முடியாமல் நடித்தேன். இப்படியாக நடிப்பது, தொடர்கதை ஆகிவிட்டது. இப்பொழுது நான் டைரக்டு செய்யும் இரண்டு படம் போக, “பாமா ருக்மணி", “தேனீர்” உள்பட மூன்று வெளிப்படங்களிலும் நடிக்கிறேன்.
போகப் போக நடிப்பதை குறைத்துக்கொண்டு, வசனத்திலும், டைரக்ஷனிலும், முழு கவனத்தை செலுத்துவேன். அகலக் கால் வைப்பதும் ஆபத்து ஆயிற்றே!
'பாமா ருக்மணி'யில் நடிகை பிரவீனாவுடன் ஒரு காட்சியில் நடிகர் பாக்யராஜ்
காதலிகள்
படங்கள் பெருகுவதைப் போலவே, காதலிகளும் பெருகிக்கொண்டு போகிறார்கள்.
முதலில் "புதிய வார்ப்புகள்" உஷாவை வம்புக்கு இழுத்தார்கள். நானும் உஷாவும் காதல் திருமணம் செய்துகொள்ளப் போவதாக செய்தி வெளியிட்டார்கள்.
இடையில் சுமதி (சு. இ. சி.) வீட்டில் போய் நான் படுத்துவிட்டதாக கிசுகிசுத்தார்கள்.
நடிகை பிரவீனா
பிரவீனா
இப்பொழுது, பிரவீனாவை எனக்கு ஜோடி சேர்த்து செய்தி பரவி இருக்கிறது.
இந்த செய்தியை பத்திரிகைகளில் பார்த்துவிட்டு, நண்பர்களும், தெரிந்தவர்களும் என்னிடம் கேள்விமேல் கேள்வி கேட்கிறார்கள்.
ரசிகர்கள், "உண்மையா, பொய்யா?" என்று "டிரங்கால்" போட்டு கேட்கிறார்கள். கடிதம் எழுதி அவசரமாகப் பதில் கேட்கிறார்கள்.
இவர்களுக்கு நான் சொல்வது:--
“இப்படி சில விஷயங்களைக் கேட்டு, என்னை வம்பில் மாட்டி வைப்பது அவசியமா?"
திருமணம் குறித்து பேசிய இயக்குநர் கே.பாக்கியராஜ்
திருமணம் எப்போது?
அப்படியென்றால், நீங்கள் யாரையுமே காதலிக்கவில்லையா? எப்பொழுது திருமணம்? அது காதல் திருமணமா? பெற்றோர் பார்த்து முடித்து வைக்கும் திருமணமா?
இப்படியெல்லாம் என்னிடம் உங்களுக்குக் கேட்கத் தோன்றும். உங்களுக்கு நான் சொல்லும் ஒரே பதில் அது ரகசியம்! காலம் வரும்பொழுது அந்த ரகசியம் வெளிப்படும்!
அதுவரை பொறுத்து இருங்கள்!...
![ராணி ராணி](/images/authorplaceholder.jpg?type=1&v=2)