இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(09.11.1980 மற்றும் 16.11.1980 ஆகிய தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

1975-ல் டைரக்டர் பீம்சிங் டைரக்டு செய்த படம் "ராகம்" (மலையாளம்). சாரதா, லட்சுமி, மோகன் ஆகியோர் நடித்தார்கள். அந்தப்படத்தில் ஓர் ஆசிரியை வேடம் இருப்பதாகவும், அதில் நான் (தாயார் பிரேமா) நடிக்க வேண்டும் என்றும், அப்போது புரொடக்சன் மானேஜராக இருந்த டேவிட் என்னை வந்து அழைத்தார். அப்போது, ஷோபாவை தொண்டை ஆபரேஷனுக்காக, விஜயா ஆஸ்பத்திரியில் சேர்த்து இருந்தோம். டாக்டர் ரெங்கா அறுவை சிகிச்சை செய்தார். நான் ஷோபாவோடு ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டியிருந்தது. இதை சொன்னபோது, "சிறு பாத்திரம்தான். அரை நாள் கால்ஷீட் போதும்" என்று டேவிட் சொன்னார்.

பாலு அறிமுகம்

நானும் நடிக்க சம்மதித்தேன். ஷோபாவுக்கு துணையாக அவளுடைய பாட்டியை வைத்துவிட்டு, படப்பிடிப்புக்குச் சென்றேன். படப்பிடிப்பு நடந்த இடத்தில், 'மேல் சட்டை இல்லாமல், தலைக்குத் தொப்பியும், பேண்டும் மட்டும் அணிந்து, கழுத்தில் "ஒளி அளவை கருவி"யை (கேமராமேன்கள் ஒளியின் வேகத்தை அளக்கப் பயன்படுத்தும் கருவி) போட்டுக் கொண்டு, அங்கும் இங்கும் போய்க்கொண்டிருந்தார், ஒருவர். “யார் இது? சட்டை இல்லாமல்!" என்று நான் டேவிட்டிடம் கேட்டேன். "இவர்தான் ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா" என்று டேவிட் கூறினார். பாலுமகேந்திரா என்ற பெயரை நான் கேள்விப்பட்டு இருந்தேன். ஆனால், அன்றுதான் அவரை முதல் முறையாகப் பார்த்தேன்.

அகிலா பாலுமகேந்திரா அறிமுகம்

நாங்கள் அப்போது, அசோக் நகரில் 53–வது தெருவில் குடியிருந்தோம். (வீட்டு எண்: சி-581) அதே தெருவில்தான் மலையாள சிரிப்பு நடிகர் பகதூரின் வீடு. பகதூர் எங்கள் குடும்ப நண்பர். அதனால் நான் அடிக்கடி அவரது வீட்டுக்கு செல்வேன். பகதூர் மனைவி ஜமீலாவும் நானும் உயிர்த் தோழிகள். அப்படி ஒரு நாள் நான் பகதூர் வீட்டுக்குச் சென்று ஜமீலாவுடன் பேசிக்கொண்டிருந்த போது, அவர்கள் வீட்டுக்கு ஓர் அம்மா வந்தார்கள்.

ஆள் அழகாக இருந்தார்கள். நல்ல சிவப்பு. முகம் அழுது இன்னும் சிவந்து போய் இருந்தது. "இவர்களை உனக்குத் தெரியுமா? " என்று ஜமீலா என்னிடம் கேட்டாள். தெரியவில்லையே என்றேன், நான். "கேமராமேன் பாலுமகேந்திராவை உனக்குத் தெரியுமா? அவருடைய மனைவி. பெயர் அகிலா" என்றாள், ஜமீலா. நான் அகிலாவுக்கு வணக்கம் தெரிவித்தேன். அகிலாவும் பதிலுக்கு வணக்கம் சொன்னார். அதுபோல் என்னையும் "ஷோபாவின் அம்மா” என்று அகிலாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள், ஜமீலா.

உடல் நலம் இல்லை

நானே அகிலாவிடம் முதலில் பேச்சுக் கொடுத்தேன். ஏன் முகம் ஒரு மாதிரியாக இருக்கிறது? என்று கேட்டேன். "பையனுக்கு உடம்பு சரியில்லை. காய்ச்சல் அதிகமாகி உளறுகிறான். காலையில் போனவரை இன்னும் காணவில்லை. “மஞ்சுளாஸ்" படக் கம்பெனிக்குப் போன் செய்து கேட்டால் தெரியும்" என்றார், அகிலா. "சரி, போன் பண்ணிக் கொள்ளுங்கள்" என்று ஜமீலா கூறினாள். "நீங்களே பண்ணுங்கள்" என்று சொன்னார், அகிலா. எனக்கு மஞ்சுளாஸ் படக் கம்பெனியை நன்றாகத் தெரியும். அவர்கள் தயாரிப்பில் பல படங்களில் நடித்து இருக்கிறேன். எனவே நானே போன் செய்தேன். கம்பெனியில் இருந்து, பாலன் என்ற பையன் பேசினான். பாலுமகேந்திரா அங்கு வந்து இருக்கிறாரா என்று கேட்டேன். இங்கே வரவில்லை, ஏன்? என்று பாலன் வினவினான். வந்தால், அவர்கள் வீட்டுக்கு அவசரமாகப் போக வேண்டுமாம் என்று சொல்லிவிடு என்று கூறிவிட்டு போனை வைத்தேன். ஒன்னும் ஆகாது கவலைப்படாதீங்க என்று அகிலாவிடம் சொல்லி அனுப்பினோம்.


இயக்குநர் பாலு மகேந்திரா

அகிலா வீட்டுக்கு வருகிறாயா?

அகிலா போன பிறகு, பாலுமகேந்திரா வீடு, ஜமீலா வீட்டுக்குப் பின் பக்கம் இருப்பதாக ஜமீலா சொன்னாள். மாலையில், அந்தப் பையனை (பாலுமகேந்திராவின் மகனை) பார்க்க அகிலா வீட்டுக்குப் போகிறேன். நீயும் வருகிறாயா? என்று என்னிடம் ஜமீலா கேட்டாள். பழக்கம் இல்லாத வீட்டுக்கு நான் எப்படி வர முடியும்? நீயே போய் பார்த்துவிட்டு வா என்று நான் கூறினேன். மறுநாள் ஜமீலாவிடம், அகிலா பையனுக்கு எப்படியிருக்கிறது என்று கேட்டேன். நன்றாக இருக்கிறது என்றாள், ஜமீலா.

பாலு பார்த்தார்!

அத்தோடு பல மாதங்களுக்குப் பிறகுதான் பாலுமகேந்திராவைப் பார்த்தேன். ஒருநாள் மாலையில் நான், ஷோபா, அவளுடைய அப்பா எல்லோரும் எங்கள் வீட்டு முன் இருந்த பெரிய வேப்ப மரத்துக்கு அடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது, பாலுமகேந்திரா தன் மனைவி, மகனோடு எங்கள் வீட்டுக்கு முன் நடந்து போய்க்கொண்டு இருந்தார். எங்களை சாதாரணமாக பார்ப்பது போல பார்த்தார்.

ஆமை புகுந்த வீடு!

நான் (தாயார் பிரேமா) ஏற்கனவே, ஒரு முறை படப்பிடிப்பில் பாலுமகேந்திராவை பார்த்து இருக்கிறேன். அகிலாவை பகதூர் வீட்டில் சந்தித்து இருக்கிறேன். அந்த மரியாதைக்காக எழுந்து வாசலுக்கு சென்று "அலோ!" என்றேன். அகிலாவும், பாலுமகேந்திராவும் பதிலுக்கு புன்முறுவலித்தார்கள். “சூப்பர் மார்க்கெட்டுக்கு போகிறோம்” என்றார் பாலுமகேந்திரா. "வீட்டுக்கு வாருங்களேன். காபி சாப்பிட்டுவிட்டுப் போகலாம்” என்று அழைத்தேன், நான். அவர்களும் மறுக்கவில்லை.

ஆனால், அப்போது நாங்கள் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. "இவள் என் மகள் ஷோபா. படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாள்” என்று ஷோபாவை நான் அறிமுகப்படுத்தி வைத்தேன். படம் பிடித்தார். அதன் பிறகு, ஒரு மாதம் கழித்து, ஒரு நாள் மத்தியானம் பாலுமகேந்திரா வீட்டுக்கு வந்தார். அப்போது ஷோபா வீட்டில் இல்லை. நானும், ஷோபாவின் அப்பாவும் மட்டும் இருந்தோம். “ஷோபாவை படம் எடுக்கணும்” என்றார். “சிங்கீதம் சீனிவாசராவ் டைரக்டு செய்கிற தெலுங்குப் படத்தில் நடிக்க வைக்கிறீர்களா?" என்றும் கேட்டார். "நல்ல பாத்திரம் என்றால் நடிக்க வைக்கலாம்" என்றோம், நாங்கள்.

"அருணா ஓட்டலில் தயாரிப்பாளர்கள் தங்கயிருக்கிறார்கள். ஷோபாவை அழைத்துப்போய் பாருங்கள்” என்றார், பாலுமகேந்திரா. “எங்களுக்கு ஓட்டலில் போய்ப் பார்த்துப் பழக்கம் இல்லை. தேவை என்றால், அவர்கள் வரட்டும்" என்றேன், நான். “அவர்கள் அப்படி வீட்டுக்கு வருவதாக இருந்தால், போன் செய்யுங்கள்” என்று எங்கள் போன் நம்பரைக் கொடுத்தேன். “ஓகே” என்று பாலுமகேந்திரா போனார்.


ஒளிப்பதிவாளராக ஷோபா குடும்பத்துக்கு அறிமுகமான பாலுமகேந்திரா

சிபாரிசு

அடுத்து ஒரு நாள் பாலுமகேந்திரா வந்தார். "ஷோபாவை படம் எடுக்கணும்” என்றார். மேக்கப் இல்லாமல் ஷோபாவை படம் பிடித்தார். பாலு அந்தப் படங்களை தயாரிப்பாளரிடம் கொண்டு போய் காட்டியிருக்கிறார். அவர்களுக்கு பிடித்துவிட்டது.! வீட்டுக்கு வந்து பேசினார்கள். ஆனால், நாங்கள் கேட்ட பணம் கொடுக்க மறுத்தார்கள். மிகவும் குறைத்து சொன்னார்கள். அதனால், “பாலுவிடம் சொல்லி அனுப்புகிறேன்” என்று அவர்களை அனுப்பி வைத்தேன். மறுநாள் பாலு வந்தார். "நல்ல கம்பெனி மிகவும் நலிந்து போய் இருக்கிறார்கள். அதனால், எப்படியும் அவர்கள் சொல்லும் தொகைக்கு ஒப்புக் கொள்ளுங்கள்" என்று பாலு சொன்னார்.

டைரக்டர் சிங்கீதம் சீனிவாசராவை நினைத்து நானும் சம்மதித்தேன். ஷோபா "தரமாருந்தி" என்ற தெலுங்குப் படத்தில் நடிக்கத் தொடங்கினாள். விஜயவாடா பக்கத்தில் உள்ள "சிந்தப்பள்ளி" என்ற இடத்தில் படப்பிடிப்பு நடந்தது.! பாலு சொல்வது போல, சிந்தப்பள்ளிக்கு ஷோபாவை, நாங்கள் தனியாக அனுப்பி வைக்கவில்லை. ஷோபாவோடு என் தம்பி ஜோதி (ஷோபாவின் மாமா), லட்சுமி ஆயா ஆகியோரும் சென்றார்கள். “தரமாருந்தி” என்ற படத்தின் கதாநாயகன் ஸ்ரீதர். கதாநாயகி பல்லவி என்ற ஒரு புதுமுகம். கதாநாயகனின் தங்கையாக ஷோபா நடித்தாள்.! நடிகர் - நடிகைகள் கலைஞர்கள் தங்குவதற்கு சிந்தப்பள்ளியில் உள்ள பழைய பங்களாவை எடுத்து, சுத்தப்படுத்தி வைத்திருந்தார்கள். அதில் தண்ணீர் வசதி குறைவாக இருந்தது. அதனால், காலையில் எழுந்து குளிப்பதற்கு போட்டியாக இருந்தது.

பல்லவி கோபம்

இதற்காக ஷோபா, அதிகாலையில் 4 மணிக்கே எழுந்து குளிக்கச்சென்று விடுவாள். இதனால் ஷோபா மீது, பல்லவி கோபப்பட்டாள். நான் கதாநாயகி. நான் குளிப்பதற்கு முன்னால், அவள் (ஷோபா) எப்படி குளிப்பாள்? என்பது போல, ஷோபாவை ஏளனமாக பார்ப்பதும், முறைப்பதுமாக இருந்தாள். அப்போது எங்களுக்கு யாரையும் தெரியாது. பாலுமகேந்திரா மூலம் நடிக்கச் சென்றதால், அவரைத்தான் கொஞ்சம் தெரியும். அதனால், அவரிடம் சென்று விஷயத்தைச் சொன்னேன். "ஓகே! நான் சொல்லுகிறேன்” என்று பாலு கூறினார். அதை அடுத்து சில நாளில் ஷோபாவும் - பல்லவியும் தோழிகள் ஆனார்கள்.


மேக்கப் இல்லாமல் ஷோபாவை படம் பிடித்த பாலு மகேந்திரா

பெரிய கலைஞர்களுக்கு மாடியிலேயும், மற்றவர்களுக்கு கீழேயும் சாப்பாடு! அதன்படி நாங்கள் சாப்பாட்டுக்கு மேலே செல்லும்போது, பாலுவும் எங்களோடு உட்கார்ந்து சாப்பிடுவார். பாலு சாப்பாட்டுக்குப் பிறகு, ஏதாவது ஒரு சுவீட் சாப்பிடுவார். அதில் எங்களுக்கும் ஆளுக்கு ஒன்று கொடுத்து, அனுப்புவார். படப்பிடிப்பு இல்லாத போது, எல்லோரும் மாடியில் உட்கார்ந்து, ஆடிப்பாடுவார்கள். கதாகாலட்சேபம், கதை எல்லாம் நடக்கும். பொழுது போவதே தெரியாது. அப்பொழுது எல்லாம் பாலுமகேந்திராவிடம் ஷோபா, நேருக்கு நேர் நின்று பேசவே அஞ்சுவாள். ஒரு கேமராமேன், ஒரு நடிகை என்ற அறிமுகம் மட்டுமே இருந்தது.

மீன் குழம்பு

சிந்தப்பள்ளியில் படப்பிடிப்பு முடிந்தபிறகு, முத்தியாலா பேலஸ் என்ற மாளிகையில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது. அங்கும் சாப்பாடு இரண்டு வகை! அதோடு, பாலு, கையில் இருந்து பணம் கொடுத்து, மீன் வாங்கி சமைக்கச் செய்வார். எங்களுக்கும் கம்பெனி சாப்பாட்டோடு, மீன் வரும். ஓய்வு நேரத்தில் எல்லோரையும் உட்கார வைத்து, பாலுமகேந்திரா "பிளாக் மேஜிக்” (மந்திர தந்திரம்) செய்து விளையாட்டுக் காட்டுவார். “நீ மனதில் நினைத்து இருப்பதை நான் கூறுகிறேன்" என்று, தன் முன்னால் உட்கார்ந்து இருப்பவர்களின் மனதில் உள்ளதைச் சொல்லுவார். எல்லோரும் சிரிப்பார்கள்!

வெயில்

"தரமாகுந்தி” படத்தின் மூன்றாவது ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்த போது, நான் (பிரேமா) போயிருந்தேன். அப்போது சரியான வெயில்! இரவில் உடம்பில் தண்ணீர் ஊற்றிக் கொண்டுதான் நானும் ஷோபாவும் தூங்குவோம்! ஒருநாள் பகலில் வெயில் அதிகம் இருந்ததால், மம்மி! நீங்கள் ஏன் வீணாக வந்து வெயிலுக்குள் நிற்க வேண்டும். இங்கேயே இருங்கள். நான் போய் நடித்துவிட்டு வந்து விடுகிறேன் என்றாள், ஷோபா. என் மகள் நீ வெயிலுக்குள் நிற்கும்பொழுது நான் நின்றால் என்ன? என்று நானும் படப்பிடிப்புக்குச் சென்றேன். அங்கே உட்கார நாற்காலி எதுவும் கிடையாது. நின்றுகொண்டே இருந்தேன். ஷோபா, கம்பெனி ஆட்களிடம், "அம்மாவுக்கு உட்கார கல் எடுத்துப் போடுங்கள்" என்றாள்.

அவர்களுக்கு ஷோபா மீது ஒரு மரியாதை. உடனே, எங்கோ இருந்து இரண்டு கல்லை எடுத்து வந்து போட்டார்கள். நான் உட்கார்ந்தேன். ஷோபா அடிக்கடி ஓடிவந்து என் தலையில் கை வைத்துப் பார்ப்பாள். "மம்மியின் தலை என்னமா கொதிக்கிறது" என்பாள்.! ஒருவழியாக “தரமாகுந்தி" படப்பிடிப்பு முடிந்து, ஊருக்குக் கிளம்பினோம். எல்லோரும் “குரூப்" போட்டோ எடுக்க வேண்டும் என்றார்கள்.! ஷோபாவிடம் "மகள்" என்ற உறவு முறையை ஏற்படுத்தினார், பாலு. அது எப்படி?

இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்…

Updated On 16 Dec 2024 6:26 PM GMT
ராணி

ராணி

Next Story