இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சினிமாத்துறையில் தனக்கென ஒரு அடையாளத்தை எட்டி பிடிக்க ஒவ்வொரு நாளும் ஓடிக்கொண்டிருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை என்பது ஏராளம். அதிலும் குறிப்பாக பெண்கள் என்று பார்த்தோமேயானால் அவர்களுக்கான சவால்களும், பிரச்சினைகளும் சற்று கூடுதலாகவேதான் இருக்கும். அந்தவகையில், எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், தனது உழைப்பையும், திறமையையும் மட்டுமே நம்பி தனித்து தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக சினிமாத் துறையில் வலம் வருபவர்தான் நடிகை சரண்யா ரவிசந்திரன். ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக பயணத்தை தொடங்கிய இவர், சினிமாவில் பெரியளவிலான திரைப்படங்களில் கால்பதிக்க தொடங்கி தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இவரோடு நடத்திய உரையாடல் இப்பதிவில் பின்வருமாறு.

உங்களுக்கு இந்தியன் 2 திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தபொழுது எப்படி இருந்தது?

எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது. அதுமட்டுமில்லாமல் மேலும் அது எதிர்பாராத ஒன்றாகவும் இருந்தது. இயக்குநர் சங்கரின் திரைப்படம் என்றாலே பிரம்மாண்டம்தான். மிகச்சிறந்த திரைப்பிரபலங்களின் கூட்டணிதான் இருக்கும். அதனைப்போலவே அதற்கான போட்டிகளும் ஏராளம் இருந்தபோதிலும் எனக்கான வாய்ப்பு கிடைத்தபொழுது எனக்கு அது மிகுந்த ஆனந்தத்தைத் தந்தது. நான் என்னுடைய சிறுவயதில் முதன்முதலாக பார்த்த படமும் கூட ஷங்கர் சாரின் படம்தான். என்னுடைய அப்பா தீவிர சினிமா ரசிகர். எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததால் அவரும் கூட பேரானந்தமாக இருந்தார். அப்பாவும் சரி, நானும் சரி இத்திரைப்படத்தின் ரிலீசுக்காகத்தான் காத்துக்கொண்டு இருக்கிறோம்.


வித்தியாசமான தோற்றங்களில் நடிகை சரண்யா ரவிச்சந்திரன்

உங்களுக்கு பிரபல இயக்குநர்கள் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவு இருந்திருக்கிறதா?

தற்போது நடப்பவை அனைத்துமே எனக்கு ஒரு கனவாகத்தான் இருக்கிறது. நான் சினிமாவைப் பார்த்து மயங்கி சென்னைக்கு வந்தவள். அதாவது நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட ‘அலைபாயுதே’ திரைப்படம் மற்றும் எக்மோர் சென்ட்ரல் பகுதியில் எடுக்கப்பட்ட ‘காதல்கோட்டை’ திரைப்படம் என இவ்விரண்டு திரைப்படங்களையும் பார்த்துதான் எனக்கு சென்னையின் மீது தீரா காதல் என்பதே ஏற்பட்டது. அதுபோக மற்றவை அனைத்துமே எனக்கு எதிர்பாராத ஒன்றாகத்தான் நடந்துகொண்டிருக்கிறது.

இந்தியன் 2 திரைப்படத்தில் உங்களுக்கான ரோல் குறித்த கருத்து?

இந்தியன் 2 திரைப்படத்தைப் பொறுத்தவரையில் எனக்கான கதாபாத்திரம் என்பது ஒரு முக்கியமான கதாபாத்திரம்தான். அது சின்னதாக அமைந்தாலும் கூட அத்திரைப்படத்தில் அது ஒரு முக்கியக் கதாபாத்திரமாகும்.


நடிகை சரண்யா ரவிச்சந்திரன் மற்றும் 'இந்தியன் 2' போஸ்டர்

நீங்கள் முதன்முதலாக கேமராவிற்கு முன்பாக நின்று நடித்த அந்த அனுபவம் எப்படி இருந்தது?

நான் முதன்முதலாக நடித்த திரைப்படம் என்றால் அது ‘இறைவி’ தான், ஆனால் என்னுடைய நடிப்பில் முதலாவதாக வெளிவந்த திரைப்படம் ‘காதலும் கடந்து போகும்’. அதற்கெல்லாம் முன்னதாகவே நான் பெரும்பாலான திரைப்படங்களில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாகதான் அதிகம் நடித்தேன். '36 +', 'வலியவன்', 'பசங்க 2', 'புரியாதப் புதிர்' போன்ற திரைப்படங்களில் எல்லாம் நான் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாகத்தான் நடித்து வந்தேன். பிறகு சில தீர்மானங்களின் அடிப்படையில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக நடிப்பதை விட்டுவிட்டு, திரைப்படக் கதாப்பாத்திரமாக மாற வேண்டும் என்ற முடிவை எடுத்தேன். என்னுடைய முதல் கேமரா அனுபவம் என்றால் அது ‘காதலும் கடந்து போகும்’ திரைப்படத்தில் வரும் எனக்கான ஒரு சிறிய காட்சிதான். அது சிறியதொரு காட்சியாக இருந்தாலும்கூட, அன்றைய தினமானது பேரானந்தத்தை எனக்கு கொடுத்தது.

இயக்குநர்களிடம் திட்டு வாங்காமல் நடிப்பது என்பது நடிகர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று, அது குறித்த உங்களது அனுபவத்தை எங்களோடு பகிருங்களேன்..

பொதுவாகவே சினிமாவைப் பொறுத்தவரையில் நான் துணை நடிகையாக நடிக்கும் சமையத்தில் எல்லாம் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடிக்கும் நடிகைகளுக்கு மட்டும்தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ என்றெல்லாம் நான் நினைத்திருக்கிறேன். ஏனென்றால் பெரும்பாலான ரோல்களை நான் ஒரே டேக்கில் முடித்திருக்கிறேன். அப்பொழுதுதான் எனக்கு புரிந்தது சில இயக்குநர்களுக்கு ஒரே டேக்கில் அந்த காட்சியானது மன நிறைவைத் தந்திருக்கிறது என்று. சினிமாவைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு நிமிடமும் பணம் செலவாகிக் கொண்டேதான் இருக்கும். அதுபோக இயக்குநர்களுக்கும், அதிகளவில் ப்ரஷரும் இருந்து கொண்டேதான் இருக்கும். அந்த சமயத்தில் நாம் நமக்கு கொடுக்கும் கதாபாத்திரத்தை சரிவர முடிப்பது அவசியமாகும். நான் இதுவரையில் இந்த ஏழு ஆண்டுகளில் நாற்பதுக்கும் அதிகமான சின்ன சின்ன காட்சிகளில் மட்டுமே இடம்பெறும் ரோல்களில் நடித்திருந்தாலும் கூட இன்றும் எனக்குரிய காட்சிகளை, ஒரே டேக்கில் முடிக்க வேண்டும் என்ற வைராக்கியம் எனக்குள் எப்பொழுதும் இருப்பது உண்டு. இப்பொழுதும் கூட அது எனக்கு ஒருவித பதட்டமாகவே இருக்கும்.


புடவையில் அழகாக காட்சியளிக்கும் நடிகை சரண்யா ரவிச்சந்திரன்

'இந்தியன் 2' திரைப்பட ஆடிஷனில் இயக்குநர் ஷங்கர் உங்களிடம் கூறிய வார்த்தைகள் என்ன? படப்பிடிப்பின் இறுதியில் உங்களிடம் கூறிய வார்த்தைகள் என்னென்ன?

இந்த திரைப்படத்திற்கு முன்னர்வரையில் நான் ஷங்கர் சார் குறித்து வேறுவிதமாகத்தான் நினைத்திருந்தேன். ஆனால் படப்பிடிப்புத் தளத்தில் அவர் அனைவரிடத்திலும் பழகும் விதமானது மிகவும் எளிமையாகவும், சாதாரணமாகவும் இருந்தது. என்னுடைய காட்சியை எடுத்து முடித்த பிறகு ஷங்கர் சார், நடிகர் சமுத்திரக்கனியிடம் “பரவாயில்லையே இதுபோன்று நன்றாக நடிக்கும் பெண்களெல்லாம் இருக்கிறார்களே” என்று கூறினார். அதற்கு சமுத்திரகனி சார், நான் அவருடன் நடித்த 'ஏலே', 'வெள்ளை யானை' போன்ற திரைப்படங்களின் அனுபவங்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தார்.

உங்களுக்கான முதல் அங்கீகாரம் எங்கிருந்து கிடைத்தது? அந்த அனுபவம் உங்களுக்கு எப்படி இருந்தது?

2017 ஆம் ஆண்டு ‘ஆறாது சினம்’ சன் டிவியில் ஒளிபரப்பான பின்பு நடந்த நிகழ்வு இது. ‘ஆறாது சினம்’ படத்தில் நான் ரிப்போர்ட்டராக நடித்திருந்தேன். வடபழனி குமரன் காலனிக்கு நான் என்னுடைய சொந்த வேலையாக சென்றிருந்தபோது சாலையில் சென்ற ஒருவர் என்னை சரியாக அடையாளம் கண்டார். அந்த தருணமானது எனக்கு மிகவும் மகிழ்ச்சியானத் தருணமாக மாறியது. அதையே என்னுடைய முதல் அங்கீகாரமாக கருதுகிறேன். அடுத்ததாக கொரோனா காலகட்டத்தில் மாஸ்க்கோடு இருந்தபோதும்கூட என்னை சிலர் “சீறு” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் எளிதாக அடையாளம் கண்டுபிடித்தனர். ஆம் இதுபோன்ற தருணங்களைத்தான் நான் சிறந்த அங்கீகாரமாக கருதுகிறேன்.


'ஆதித்ய வர்மா' பட காட்சி, நடிகை சரண்யா ரவிச்சந்திரன் மற்றும் இயக்குனர் பாலா

உங்களது இந்த ஏழு ஆண்டு சினிமா அனுபவத்தில், படப்பிடிப்பு தளத்தில் உங்களுக்கு நடந்த மறக்க முடியாத நிகழ்வு ஏதேனும் இருக்கிறதா?

மறக்க முடியாத நிகழ்வுகள் என்றால் ஏராளம். அதில் ஒரு சில முக்கியமான நிகழ்வுகள் என்ற அடிப்படையில் பார்த்தால் ஒருமுறை இயக்குநர் வசந்த பாலன் எனக்கு இருந்த சினிமா ஆர்வத்தை பாராட்டி படப்பிடிப்பு தளத்தில் என்னிடம் பேசிய தருணம் மிகுந்த மகிழ்ச்சி அளித்த நிகழ்வாகும். மற்றொரு மறக்க முடியாத மிக முக்கியமான நிகழ்வாக நான் கருதுவது, ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தில் நான் நடித்து முடித்த பிறகு அப்படத்தின் இயக்குநரான பாலா சார், என்னை அழைத்து 10,000 ரூபாயை ஆசீர்வதித்து வழங்கியது மிகுந்த மகிழ்ச்சியளித்தது.

Updated On 6 Dec 2023 1:08 PM IST
ராணி

ராணி

Next Story