இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் திரையுலகில் கதாநாயகன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று காலங்காலமாக வகுத்து வைக்கப்பட்டிருந்த கொள்கைகளை முற்றிலும் உடைத்து ஒரு ஹீரோவுக்கு அழகு தேவையில்லை, திறமை இருந்தால் போதும் என சாதித்துக் காட்டியவர் நடிகர் தனுஷ். இவர் ஒரு நடிகராக மட்டுமின்றி பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் எனப் படிப்படியாக உயர்ந்து ஒரு இயக்குனராகவும் வெற்றிக்கொடி நாட்டியவர். தற்போது இவர் நடிப்பில் வெளிவரவுள்ள 'கேப்டன் மில்லர்' படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'D50' படத்திற்கான பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுவாகவே எல்லா ஹீரோக்களும் தங்களது வாழ்க்கையில் முக்கிய கட்டமாக கருதும் 50 வது படத்தை, மிக கவனமாக கையாள்வார்கள். அதில் சிலர் சாதித்ததிலும், பல நடிகர்கள் சறுக்கியதே வரலாறு. அந்த வகையில் நடிகர் தனுஷ் இந்த முறை எந்த பிசிறும் இல்லாமல் ஜெயித்துக் காட்டுவதற்காக நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது 50வது படத்தில் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இவர் திரையுலகிற்கு வந்து 21 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், தனுஷின் திரைப்பயணம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இங்கே காணலாம்…

ஆரம்பகால வாழ்க்கை சவால்கள்

நம்மில் ஒருவரைப் போல் வெகு சாதாரணமான இளைஞனாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்து சாதித்துக் காட்டிய நடிகர் தனுஷ், இயக்குநர் கஸ்தூரி ராஜா - ராஜேஸ்வரி தம்பதியருக்கு இரண்டாவது மற்றும் கடைக்குட்டி மகனாக 1984ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 28 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். ஆழ்வார்த் திருநகரில் உள்ள செயின்ட் ஜான்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தவர், பிறகு 12 ஆம் வகுப்பை அங்கு வெற்றிகரமாக முடித்தார். இந்நேரத்தில்தான் அவரது சகோதரரும், இயக்குனருமான செல்வராகவன் சினிமாவிற்குள் வரும்படி மிகவும் வற்புறுத்தி அவரை அழைக்க, படிப்பில் பெரிதும் நாட்டம் இல்லாமல் இருந்த தனுஷ், தனது அண்ணனின் பேச்சை தட்ட முடியாமல், அதோடு தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு திரைத்துறைக்குள் நுழைந்தார்.


ஆரம்பகால திரைப்படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிகர் தனுஷ்

அப்படி தான் அண்ணன் செல்வராகவன் திரைக்கதையில், தந்தை கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் பள்ளிக்குச் செல்லும் விடலைப் பையனாக 2002ஆம் ஆண்டு வெளிவந்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் மகேஷாக அறிமுகமானார். தந்தை கஸ்தூரி ராஜாவின் பெயரை முன்னிறுத்தி அண்ணனின் இயக்கத்தில் தம்பி நடித்து வெளிவந்த முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்ற போதிலும், தனுஷின் தோற்றம் குறித்த எதிர்மறையான விமர்சனங்கள் அவரை பெரிதும் காயப்படுத்தியன. “இதெல்லாம் ஒரு மூஞ்சியா… இவனெல்லாம் ஹீரோவா” என்று நடிகர் தனுஷின் காதுபடவே அன்று பேசியவர்கள் ஏராளம். இவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து பின்னாளில், தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகமே கொண்டாடும் ஒரு நடிகராக அவர் அசுர வளர்ச்சி பெறுவார் என்று அப்போது யாரும் எதிர்பார்க்கவில்லை.

தனித்துவமான நடிப்புத் திறன்

‘துள்ளுவதோ இளமை’ படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டே மீண்டும் இரண்டாவதாக அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில்,‘காதல் கொண்டேன்’ என்ற படத்தில் நடித்தார். இப்படத்தில் அநாதை ஆசிரமத்தில் வளரும் ஒரு இளைஞன் வெளியுலகத்திற்கு வந்து என்ன மாதிரியான பிரச்சினைகளை எதிர் கொள்கிறான் என்பதை தன் எதார்த்தமான நடிப்பாலும், உடல் தோற்றத்தாலும் வெகு சிறப்பாக மெருகேற்றி நடித்து பலரின் பாராட்டையும் பெற்றார். இதற்குப் பிறகுதான் தனுஷ் என்ற நடிகன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழத்தொடங்கியது. இருப்பினும் இவர் அடுத்தடுத்து தேர்வு செய்து நடித்த 'திருடா திருடி', 'சுள்ளான்', 'புதுப்பேட்டை' போன்ற படங்களில் சில படங்கள் மாஸ் வெற்றியையும், பல படங்கள் படு தோல்விகளையும் கொடுக்கவே, தனுஷின் திரைப்பயணத்தில் சில தடுமாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. இதில் குறிப்பாக, மூன்றாவதாக தனது அண்ணனுடன் இணைந்து நடித்து வெளிவந்த ‘புதுப்பேட்டை’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டை பெற்ற போதிலும், வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது.


புதுப்பேட்டை படத்தில் நடிகர் தனுஷ்

இதற்கு பிறகு நின்று நிதானமாக படங்களை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்த தனுஷிற்கு, மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம்தான் ‘பொல்லாதவன்’. இதில் இயக்குனர் வெற்றிமாறனுடன் முதன்முறையாக கூட்டணியமைத்து கமர்ஷியலாக வெற்றி கண்ட நடிகர் தனுஷ், தொடர்ந்து ‘யாரடி நீ மோகினி’ படத்தில் வாசுவாக, ‘ஆடுகளம்’ படத்தில் கே.பி.கருப்புவாக, மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த ‘3’ படத்தில் ராமச்சந்திரனாக, ‘அசுரன்’ படத்தில் சிவசாமியாக, ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் ரகுவரனாக, ‘கர்ணன்‘ படத்தில் கர்ணனாக மற்றும் ‘திருச்சிற்றம்பலம்‘ படத்தில் திருவாக என மாறி மாறி மாஸ், கிளாஸ், மாஸ், கிளாஸ் என நடித்து தனது தனித்துவமான நடிப்பால் பலரின் மனங்களையும் கொள்ளை கொண்டு போனார். இதில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஆடுகளம்’ மற்றும்‘ அசுரன்’ படத்திற்காக இரண்டு தேசிய விருதுகளை வென்ற நடிகர் தனுஷ், தனது சொந்த தயாரிப்பில் வெளிவந்த ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் மூலம் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக மாறிப்போனார்.

நடிகர் டு இயக்குனர்

நடிப்பை தாண்டி பல்வேறு திறமைகளை உள்ளடக்கியவர் தனுஷ் என்பதை நிரூபிக்கும் விதமாக அடுத்தடுத்து பாடகராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக என அவர் பயணித்து வந்த அதே வேளையில், தனித்துவமிக்க திறமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களை அறிமுகம் செய்வதிலும் வல்லவராகவே இருந்து வந்தார். அதில் குறிப்பாக, நடிகர் சிவகார்த்திகேயனை தான் நடித்த '3' மற்றும் 'எதிர்நீச்சல்' படத்தின் மூலம் அடுத்தகட்டத்திற்கு அழைத்து சென்றவர். வெற்றிமாறன் மற்றும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜை இயக்குனராக அறிமுகப்படுத்திய பெருமையும் தனுஷையே சேரும். இவர்கள் தவிர இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரனையும் ஒரு இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தி ‘ஒய் திஸ் கொலவெறி’என்ற ஒற்றை பாடலால் தேசிய அளவில் கவனம் பெறச் செய்தார். பின்னர் கோலிவுட்டை தாண்டி கடந்த 2013 ஆம் ஆண்டு 'ரஞ்சனா' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான தனுஷ் தொடர்ந்து அமிதாப்பச்சனுடன் 'ஷமிதாப்', அக்‌ஷய் குமாருடன் ‘அட்ராங்கி ரே’ போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்றார். பின்னர் அங்கிருந்து ஹாலிவுட்டிற்கும் சென்று ‘The Extraordinary Journey of the Fakir’ மற்றும் ‘The Gray Man’ ஆகிய படங்களில் நடித்து அங்கும் தனது வெற்றி முத்திரையை பதித்த நடிகர் தனுஷ், பான் இந்தியா ஸ்டார் என்பதை கடந்து ஹாலிவுட் ஹீரோவாக மாறிப்போனார்.


நடிகர் தனுஷ் அடையாளம் காட்டிய பிரபலங்கள்

இப்படி ஒரு சிறந்த நடிகராக தொடர்ந்து நாளுக்கு நாள் தன்னை மெருகேற்றிக் கொண்டிருக்கும் நடிகர் தனுஷ், கடந்த 2017 ஆம் ஆண்டு முதன்முறையாக ஒரு இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். அந்த படம்தான் 'ப.பாண்டி'. இதில் சிறப்பு என்னவென்றால் தன் தந்தை கஸ்தூரி ராஜா இயக்கிய முதல் படமான ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் கதையின் நாயகனாக எப்படி ராஜ்கிரண் நடித்தாரோ, அதே போன்று தான் இயக்கும் முதல் படத்திலும் அவர்தான் இருக்க வேண்டும் என்று 'ப.பாண்டி' படத்தினை ராஜ்கிரணை முன்னிலைப்படுத்தியே எடுத்தார். இப்படத்தில் முதலில் தனுஷ் நடிப்பதாக இல்லையாம். பின்னர் நடிகர் ராஜ்கிரண் அறிவுறுத்தலால் இப்படத்தில் தனுஷ் நடித்தாராம். இப்படி ஆரம்பித்த இந்த படம், எந்த ஆரவாரமும் இன்றி வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் அன்று மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, முதல் படத்திலேயே ஒரு வெற்றி இயக்குனராகவும் நடிகர் தனுஷ் சாதித்துக் காட்டினார்.


'ப.பாண்டி' படத்தை இயக்கிய போது ராஜ்கிரணுடன் நடிகர் தனுஷ்

மீண்டும் இயக்குனர் அவதாரம்

'ப.பாண்டி' படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த தனுஷ், தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளிவரவுள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் டிசம்பர் மாதம் 15 தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில், நடிகர் தனுஷ் ஏழு வருட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இயக்குனராக தனது 50 வது படத்தினை தானே இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயனும், முக்கியக் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்திப் கிஷன், துல்கர் சல்மான், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் நடித்து வருவதாகவும், இவர்களுடன் நித்யா மேனனும் இணைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. வடசென்னை தொடர்பான கதையை பின்னணியாக கொண்ட கேங்க்ஸ்டர் படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதற்காக, சென்னையின் பிரபல ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 'கேப்டன் மில்லர்' படத்தில் நீண்ட தலைமுடி, தாடி, மீசையுடன் காணப்பட்ட தனுஷ், இந்தப் படத்திற்காக திருப்பதி சென்று மொட்டையடித்து புதிய கெட்டப்பிற்கு மாறினார். அப்போது தனுஷின் இந்த கெட்டப்பை பார்த்த அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தது மட்டுமின்றி படம் வேற லெவலில் இருக்கப்போவதாக கருத்து தெரிவித்தனர்.


'D50' படத்தை இயக்கி வரும் நடிகர் தனுஷ்

அதற்க்கேற்றார் போலவே, தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக நடிகர் தனுஷ் தான் மொட்டை தலையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பதிவிட்டுள்ளார். மேலும், தனுஷ் தனது 50வது படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க, தன்னை அழைத்ததாக நேர்காணல் ஒன்றில் இசையமைப்பாளர் தேவா தெரிவித்திருந்தார். ஆனால் அப்படியொரு கெட்டப்பில் நடிக்க விருப்பம் இல்லை என்று அவர் மறுத்துவிட்டதாகவும் கூறியிருந்தார். இந்தப் படத்தை நிறைவு செய்தவுடன் இந்த ஆண்டின் இறுதியிலேயே அடுத்ததாக இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ், இந்தி, தெலுங்கில் உருவாகவுள்ள புதிய படத்தில் இணையவுள்ளார் தனுஷ். பொதுவாக இதுவரை தனுஷ் நடித்து வெளிவந்துள்ள கேங்ஸ்டர் கதையம்சம் உள்ள படங்கள், அவரது நடிப்பிற்காக பாராட்டினைப் பெற்றாலும், அவை அனைத்துமே வசூல் ரீதியாக தோல்வி படங்களாகத்தான் இருந்துள்ளது. அந்த வகையில் தற்போது மீண்டும் அவர் இயக்கி நடித்து வரும் ‘D50’ திரைப்படமும் கேங்ஸ்டர் ரோல் பின்னணியில்தான் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், முடியுமா ? என்ற வார்த்தையை முடித்துக் காட்டுவதையே வரலாறாக கொண்டுள்ள நடிகர் தனுஷ் இந்த முறை நிச்சயம் ஜெயித்துக் காட்டுவார் என நம்புவோம்.

Updated On 17 Oct 2023 1:01 AM IST
ராணி

ராணி

Next Story