90களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடிகட்டி பறந்தவர் தேவயானி. பொதுவாக மும்பை வரவுகள் என்றாலே மாடர்ன் மற்றும் க்ளாமருக்கு பொருத்தமாக இருப்பார்கள் என்ற பெயரையே மாற்றி, ஹோம்லி கெட்டப்களுக்கு பெயர்பெற்ற இவர், ‘காதல் கோட்டை’, ‘சூரிய வம்சம்’, ‘நினைத்தேன் வந்தாய்’, ‘நீ வருவாய் என’ போன்ற பல சூப்பர் ஹிட் படங்களால் தமிழ் ரசிகர்களின் மனதில் குடிபுகுந்தவர். பல மொழி திரைப்படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் சீரியல், ரியாலிட்டி ஷோக்கள் போன்றவற்றின்மூலமும் தொடர்ந்து கேமரா முன்பு ஆக்ட்டிவாக இருந்துவந்த தேவயானி, முதன்முறையாக கேமரா பின்பும் தனது திறமையை காட்டியதுடன், அதற்காக விருதும் வென்றுள்ளார். நடிகையாக மட்டுமே அறியப்பட்ட தேவயானி தற்போது இயக்குநராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். தான் இயக்கிய முதல் குறும்படத்திற்கே சர்வதேச திரைப்பட விழாவில் விருதும் பெற்று அசத்தியிருக்கிறார். தனது முதல் இயக்கத்திற்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் பற்றியும், குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு குறித்தும் பகிர்ந்துள்ளார் தேவயானி.
காதல் கோட்டை டூ கைக்குட்டை ராணி!
30 ஆண்டுகளாக திரையுலகில் தனக்கென தனியிடத்தை பிடித்திருக்கும் தேவயானி பிறந்து வளர்ந்தது எல்லாம் இப்போது மும்பையாக அறியப்படுகிற பாம்பேயில்தான். இருப்பினும் இவருடைய அம்மா ஒரு மலையாளி அப்பா ஒரு கொங்கனி ஆவர். சுஷ்மா என்ற தனது இயற்பெயரை முதல் ஓரிரு படங்களில் பயன்படுத்தி இருந்தாலும் பின்னர் சினிமாவுக்காக தேவயானி என மாற்றிக்கொண்டார். 1993ஆம் ஆண்டு முதன்முதலில் பெங்காலி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் தனது தாய்மொழியான மலையாளத்தில் அறிமுகமானார். இரண்டு ஆண்டுகள் கழித்து ‘தொட்டா சிணுங்கி’ என்ற படத்தின்மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகி இருந்தாலும் முதல் ஓரிரு படங்கள் இவருக்கு எதிர்பார்த்த பெயரை பெற்றுத்தரவில்லை. அதன்பிறகுதான், அஜித்துக்கு ஜோடியாக ‘காதல் கோட்டை’ படத்தில் நடித்தார். கமலி என்ற அந்த கதாபாத்திரம் தேவயானியின் கெரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து ‘சூரிய வம்சம்’, ‘மறுமலர்ச்சி’, ‘நினைத்தேன் வந்தாய்’, ‘நீ வருவாய் என’, ‘ஃப்ரெண்ட்ஸ்’, ‘பஞ்ச தந்திரம்’ போன்ற படங்கள் மாபெரும் வெற்றிப்படங்களாக அமைந்தன. குறிப்பாக, அந்த படங்களில் இடம்பெற்ற பாடல்கள் இன்றுவரை 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் லிஸ்ட்டில் இடம்பிடித்திருக்கின்றன. 90களின் முன்னணி ஹீரோக்களான விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என அனைவருடனும் ஜோடிபோட்ட இவர், ‘நீ வருவாய் என’ மற்றும் ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ போன்ற படங்களை இயக்கிய ராஜகுமாரனை காதலித்தார். பெற்றோர் இவர்களுடைய காதலுக்கு சம்மதிக்காத போதிலும், எதிர்ப்பைமீறி அவரை திருமணம் செய்துகொண்டார்.
ஹோம்லி கெட்டப்களுக்கு பெயர்பெற்ற நடிகை தேவயானி
அந்த செய்தி திரையுலகினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. திருமணத்துக்கு பிறகு சினிமா வாய்ப்புகள் குறைந்தாலும் ‘கோலங்கள்’ சீரியல் மூலம் ஒவ்வொரு வீட்டிலுள்ள பெண்களையும் தனக்கு ரசிகைகளாக்கிக்கொண்டார். சின்னத்திரையில் பல நடிகைகள் இருந்தபோதிலும், அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெயரை பெற்றார் தேவயானி. தொடர்ந்து ரியாலிட்டி ஷோக்களில் ஜட்ஜாகவும், ஸ்பெஷல் கெஸ்ட்டாகவும் அவ்வப்போது கலந்துகொண்டு வந்த இவர், சினிமாக்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதனிடையே மிகவும் எளிமையான வாழ்க்கையையே தான் வாழ விரும்புவதாக பல பேட்டிகளில் கூறியிருக்கும் தேவயானி, தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் கணவரின் சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் அந்தியூரில் செட்டிலானார். அங்கு ஒரு தனியார் பள்ளியில் சில ஆண்டுகள் ஆசிரியையாகவும் பணியாற்றினார். மேலும் பண்ணை வீடு, கோழிப்பண்ணை, விவசாயம், அமைதியான குடும்பம் போன்றவைதான் தனக்கு பிடித்திருக்கிறது என்று கூறும் இவர், வேலைநிமித்தமாக மட்டுமே சென்னைக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இரண்டு மகள்களின் மேற்படிப்புக்காக சென்னையிலேயே தற்போது அதிக நாட்களை செலவழிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் என்னதான் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என பிஸியாக இருந்தாலும் அவற்றுக்கு நடுவே தனது ஆசிரியை பணியை மிகவும் மிஸ் செய்வதாக கூறியுள்ளார் தேவயானி.
‘கைக்குட்டை ராணி’ எப்படியிருக்கிறது?
தேவயானி ஒரு சிறந்த நடிகை, யதார்த்தமான அதேசமயம், அனைவருடனும் அன்பாக பேசக்கூடியவர் என்பதாலேயே திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் இவர் ஆல் டைம் ஃபேவரிட். சுஹாசினி, ரேவதி போன்ற நடிகைகளும் டைரக்ஷனில் கவனம் செலுத்திவரும் நிலையில், தேவயானியும் முதல் முயற்சியாக ‘கைக்குட்டை ராணி’ என்ற குறும்படத்தை அவரே எழுதி, இயக்கியதுடன் தயாரித்தும் இருக்கிறார். இன்றைய சமூகத்தில் குழந்தைகள் சந்திக்கின்ற உணர்ச்சி சிக்கல்களை அழகாக திரையில் கொண்டுவந்து நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார். அதாவது தாயை இழந்த ஒரு டீனேஜ் சிறுமியை மையப்படுத்திய கதை இது. அப்பாவும் வேலைநிமித்தமாக வெளியூரில் இருப்பதால், பெற்றோரின் ஆதரவின்றி வளரும் அச்சிறுமி, தனது வாழ்க்கையில் என்னென்ன தடைகளை சந்திக்கிறாள்? என்னென்ன சிக்கல்களை கையாள்கிறாள்? என்பதில் தொடங்கி, அவளைப்போலவே தன்னுடைய வயதிலிருக்கும் குழந்தைகள் எப்படி உணர்வுப்பூர்வமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதை வெளியுலகிற்கு காட்டும்விதமாக எழுதப்பட்டிருக்கிறது திரைக்கதை.
தேவயானி இயக்கிய முதல் குறும்படமான ‘கைக்குட்டை ராணி’
இந்த படத்தில் நவீன், நிஹாரிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். பிரபல எடிட்டர் பி. லெனின் படத்தொகுப்பு செய்திருக்கிறார். ராஜன் மிர்யாலா சினிமட்டோகிராபியை கையாள, லட்சுமி நாராயணன் ஒலிப்பதிவு செய்திருக்கிறார். தேவயானி இயக்கிய முதல் குறும்படமே உணர்வுப்பூர்வமாகவும், எதார்த்தமான அணுகுமுறையுடனும் இருப்பதை பார்த்த பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். சுமார் 25 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குறும்படத்திற்கு 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் குழந்தைகளுக்கான சிறந்த குறும்படத்திற்கான விருது கிடைத்திருக்கிறது. இயக்குநராக அவதாரமெடுத்த முதல் குறும்படமே சர்வதேச விருது வென்றதையடுத்து, இதுவரை திரை முன்பு மட்டுமே நடித்துவந்த ஒருவர், திரைக்கு பின் எடுத்த முதல் முயற்சியே வெற்றிபெற்றிருப்பதாக பலரும் தேவயானிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
"கைக்குட்டை ராணி" என்ற குறும்படத்தை முதன்முறையாக இயக்கி, எழுதி, தயாரித்த தோழி நடிகை தேவயானி அவர்களுக்கு ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் குழந்தைகளுக்கான சிறந்த திரைப்படத்திற்கான விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
— R Sarath Kumar (@realsarathkumar) January 20, 2025
முதல்முயற்சியில் வெற்றி பெற்ற… pic.twitter.com/0yivffxiiG
விருது குறித்து தேவயானி!
தான் இயக்கிய முதல் படத்திற்கே சர்வதேச விருது கிடைத்திருப்பது குறித்து தேவயானி பகிர்கையில், “30 வருடங்களாக திரைத்துறையில் நடிகையாக இருக்கிறேன். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இதுவரை நான் நடித்த எந்த படங்களும் சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெற்றதில்லை. இப்போது முதன்முறையாக நானே தயாரித்து இயக்கிய குறும்படம் ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. என்னுடைய சொந்த வாழ்க்கையில் நடந்ததைத்தான் இந்த படத்தின் கதையாக தேர்வு செய்தேன். அப்பா, மகளின் உணர்வை பிரதிபலிப்பதை மையமாக வைத்தே இப்படத்தை எடுத்தேன். படப்பிடிப்பிற்குக்கூட நாங்கள் ஜாலியாகத்தான் சென்றோம். ஆனால் இத்தனை ஆண்டுகள் நடிகையாக இருந்தாலும், இயக்குநராக நிற்கும்போது எதையாவது சொதப்பி விமர்சனங்களுக்கு ஆளாகிவிடக்கூடாது என எனக்குள் ஒரு பயம் இருந்தது. இருந்தாலும் கேமரா ரோல் ஆனதும் என்னையும் அறியாமல் இயக்குநர் அவதாரம் எடுத்துவிடுவேன். அப்போது மழை சமயமாக இருந்ததால் இரண்டே நாட்களில் மொத்த குறும்படத்தையும் எடுத்து முடித்துவிட்டேன். என்னுடன் ‘காதல் கோட்டை’ திரைப்படத்திலிருந்து ஒன்றாக பயணித்துவந்த மேக்கப் ஆர்ட்டிஸ்டும், காஸ்டியூம் டிசைனரும், கூடவே இருந்து என்னுடைய வேலை முழுவதையும் பார்த்து பாராட்டியது, என்னுடைய வேலையை சரியாக செய்திருக்கிறேன் என்ற நம்பிக்கையை எனக்கு அளித்தது.
இயக்குநர் அவதாரமெடுத்த தேவயானிக்கு முதல் படத்திற்கு கிடைத்த சர்வதேச விருது
அதேபோல் அனைத்து பணிகளும் முடித்துவிட்டு படம் முழுவதையும் பார்த்து முடித்தபோது ஏதோ ஒருவகையான உணர்வு எழுவதை உணர்ந்தேன். அது ஒரு அழகான அனுபவமாக இருந்தது. எனவேதான் இதை திரைப்பட விருதுக்காக அனுப்பி வைத்தேன். மேலும் இந்த குறும்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். ராஜன் மிர்யாலா, பி.லெனின், லெட்சுமி நாராயணன் போன்ற பெரிய ஆளுமைகள் இதில் பணியாற்றியிருப்பதால் எனக்கு இந்த குறும்படத்திற்கு ஏதேனும் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கைக்கு பலனாக இப்போது விருதும் கிடைத்திருக்கிறது” என்றார். மேலும் இன்றைய இளம்பெற்றோர்கள் எப்படி தங்களது குழந்தைகளை வளர்க்கவேண்டும் என்ற அட்வைஸும் கொடுத்துள்ளார். தனது குழந்தைகளுக்கு ஸ்வீட் அம்மா, கோபக்கார அம்மா மற்றும் பாசக்கார அம்மா என பல ரூபங்களை காட்டினாலும் எந்த நேரத்தில் எது முக்கியம் என்பதை எந்தவித சமரசமும் இல்லாமல் கொடுத்துவிடுவாராம் தேவயானி. ஆனால் இன்றையப் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சமாளிக்க செல்போன் கொடுத்துவிடுவதாகவும், ஆனால் அது குழந்தைகளின் பாதையை மாற்றுவதில் முக்கியப்பங்கு வகிப்பதாகவும் கூறியுள்ளார். சிறுவயதிலிருந்தே குழந்தைகளை சரியாக கையாண்டால் அவர்களின் எதிர்காலமும் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பள்ளியிலும், வெளியிடத்திலும் என்ன நடக்கிறது? என்பதை குழந்தைகள் பெற்றோரிடம் மறக்காமல் சொல்ல பழக்கவேண்டும், பெற்றோர்களும் அதற்கேற்றார்போல் அவர்களிடம் நல்ல நண்பர்களாக பழகவேண்டுமென கூறியுள்ளார்.