இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நடிப்பு, நளினம், கிளாமர் என அனைத்து ரோல்களிலும் அசத்தும் நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே. சென்னை எக்ஸ்பிரஸ், பாஜிராவ் மஸ்தானி, பத்மாவதி போன்ற திரைப்படங்களால் இந்தி மட்டுமில்லாமல் தென்னிந்திய ரசிகர்களிடமும் பிரபலமானார் தீபிகா. கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோனேவின் மகள்தான் தீபிகா.

பள்ளிப்பருவத்திலேயே மாடலிங்மீது கொண்ட ஈடுபாட்டால் கல்லூரியில் சேர்ந்தவுடனே தன்னை மெருகேற்றிக்கொள்ள மும்பை சென்றார் தீபிகா. அதனாலேயே தன்னால் ஒரு டிகிரி கூட முழுமையாக படித்து முடிக்க முடியவில்லை என்று பலமுறை அவரே சொல்லியிருக்கிறார். ஆனால் மும்பை சென்ற தீபிகா தனது அயராத உழைப்பு மற்றும் தனித்திறமையால் க்ளோஸ் அப் டூத் பேஸ்ட், லிரில் மற்றும் டாபர் போன்ற பிரபல பிராண்டு விளம்பரப்படங்களில் நடித்து பலரின் கவனத்தையும் ஈர்த்தார். விளம்பர மாடலுக்கான விருதையும் பெற்றார்.


`ஓம் ஷாந்தி ஓம்’ திரைப்படம் மற்றும் விருது வாங்கிய தருணங்களில்...

பின்னர் 2006ஆம் ஆண்டு 'ஐஸ்வர்யா’ என்ற கன்னட படத்தில் நடித்தார். தொடர்ந்து 2007-இல் ஷாருக்கானின் ஜோடியாக ‘ஓம் ஷாந்தி ஓம்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதற்காக சிறந்த அறிமுக நடிகை என்ற ஃபிலிம் ஃபேர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த தீபிகா, பாலிவுட்டின் ஜொலிக்கும் நட்சத்திரமாக வலம்வந்தார். பாலிவுட் என்றாலே நட்சத்திர நடிகர்களின் வாரிசுகளுக்குத்தான் சினிமாவில் வாய்ப்புகள் அளிக்கப்படும் என்ற போக்கு இன்றுவரை நீடித்து வருகிறது. நெப்போடிசம் என்ற வார்த்தையையும் பாலிவுட்டையும் பிரித்துபார்க்க முடியாது என்பதுதான் பாலிவுட்டுக்கு ஒரு கரும்புள்ளி என்றே சொல்லலாம். ஆனால் அதற்கு நடுவில் சினிமா பின்னணி இல்லாமல் பாலிவுட்டில் வெற்றிபெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அப்படி உருவான ஒருசில நடிகர் நடிகைகளில் தீபிகாவும் ஒருவர்.


ஹிட் படங்கள் மற்றும் கணவர் ரன்வீர் சிங்குடன்

தீபிகாவின் ஹிட் படங்களும் காதலும்

ஓம் ஷாந்தி ஓம், லவ் ஆஜ் கல், காக்டெய்ல், யே ஜவானி ஹை திவானி போன்ற படங்களில் தனது சிரிப்பு, சிறந்த நடிப்பு மற்றும் கிளாமரால் பலரின் மனதிலும் இடம்பிடித்தார் தீபிகா. அதன்பிறகு நடித்த சென்னை எக்ஸ்ப்ரஸ், ராஸ் லீலா ராம் லீலா, பிகு, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் போன்ற படங்களில் ஆழமான மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பால் இந்தி மட்டுமில்லாமல் இந்திய அளவில் ரசிகர்ளை பெற்றார். இதற்கிடையே ஹாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு தீபிகாவிற்கு தேடிவந்தது. வின் டீசலுடனான நெருக்கமான நடிப்பு மற்றும் ஆக்ஷன் காட்சிகளால் உலகளவில் ரசிகர்களைப் பெற்றார். இதனால் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரானார். இதற்கிடையே லீலாவின் ராமாக, மஸ்தானியின் பாஜிராவாக, பத்மாவத் மீது வெறிகொண்ட அலாவுதீன் கில்ஜியாக தன்னுடன் திரையில் நடித்த ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.


KA எண்டர்பிரைசஸ் நிறுவனம்

தொழிலதிபராக உருவெடுத்துள்ள தீபிகாவின் நெட் வொர்த் தெரியுமா?

தீபிகா படுகோனே ​​KA எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் ஸ்டார்ட்அப் நிறுனங்களுக்கு நிதி முதலீடு செய்யும் நிறுவனம் ஒன்றை 2014 -இல் தொடங்கி நடத்திவருகிறார். இந்நிறுவனம் மூலம் புதிதாக உருவாகிவரும் தொழிலதிபர்கள் கோடிகளில் லாபம் ஈட்ட வழிவகை செய்து தரப்படுகிறது. இந்த நிறுவனத்தை தொடங்கிய காலகட்டத்தில் வளரும் ஸ்டார்ட்அப்களில் சிறிய முதலீடுகளைச் செய்யத் தொடங்கினார் தீபிகா. இப்போது ​​KA ஒரு மிகப்பெரிய மூலதன நிறுவனமாக மாறியிருக்கிறது. இந்நிறுவனம் தற்போது ஆண்டுக்கு பல கோடிகள் வருமானம் ஈட்டி வருகிறது.


KA நிறுவன நிதி மேலாளருடன் தீபிகா படுகோனே

​​KA நிறுவனத்தின் நிதி மேலாளர் பிசினஸ் டுடேவுக்கு சிறப்பு பேட்டி அளித்திருக்கிறார். அதில், ”​​KA நிறுவனத்தை நாங்கள் ஒரு முழுமையான நிறுவனமாக நடத்தி வருகிறோம். இந்த திட்டத்தை செயல்படுத்தும் முடிவானது தீபிகாவுக்கு மிகவும் சவாலானதாகவே இருந்தது. இதற்காக நான் நிறைய வணிக மாதிரிகள், சேனல்களை ஆராய்தல் போன்றவற்றில் விடாமுயற்சியுடன் பங்கேற்றேன். இந்த நிறுவனத்தை பொருத்தவரை தீபிகா இதயம் என்றால் நான் மூளை என்று சொல்லலாம்” என்று கூறியிருந்தார். தீபிகா முதலீடு செய்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் எபிகாமியா, ஃபர்லென்கோ, ப்ளூ ஸ்மார்ட், பெல்லாட்ரிக்ஸ், ஆட்டம்பெர்க் டெக்னாலஜிஸ், ஃப்ராண்ட் ரோ, மோகோபாரா, பர்பிள், நுவா போன்றவை தற்போது முன்னணி நிறுவனங்களாக உருவாகியிருக்கின்றன.


`ஜவான்’ திரைப்படத்தில் சிறப்புத்தோற்றத்தில்...

இந்த நிறுவனங்களில் தீபிகா கோடிகளில் முதலீடு செய்து அதனை இரட்டிப்பாக உதவுவது மட்டுமில்லாமல், அவர்களுடைய நிறுவனங்களுக்கு விளம்பரத் தூதராகவும் இருப்பதாலேயே அந்த நிறுவனங்கள் எளிதில் சாமானியர்களை சென்றடைந்திருக்கின்றன. இதற்கு சிறந்த உதாரணம், எபிகாமியா மற்றும் நுவா. தீபிகாவின் KA எண்டர்ப்ரைசஸ் நிறுவனமானது முதலில் 2-3 கோடி மட்டுமே ஸ்டார்ட் -அப் நிறுவனங்களில் முதலீடு செய்கிறது. பின்னர் அதன் வருமானம் அதிகரிக்க அதிகரிக்க முதலீட்டையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை ரூ.200 கோடி முதலீடு செய்திருப்பதாக அந்நிறுவனத்தின் வெப்சைட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபிகா படுகோனின் நெட் வொர்த் ரூ.500 கோடி என லைவ் மின்ட் தகவல் தெரிவித்திருக்கிறது. பாலிவுட்டில் ஜொலிக்கும் பணக்கார நடிகைகளில் முன்னணியில் இருக்கிறார் தீபிகா.


விளம்பரப்படங்களில் தீபிகா

விளம்பரப்படங்களுக்கு கோடிகளில் சம்பளமா?

ஷாருக்கான் - நயன்தாரா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ஜவான் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் தீபிகாவுக்கு சம்பளம் ரூ. 20 கோடி எனவும், இது ஹீரோயினின் சம்பளத்தை விடவும் அதிகம் எனவும் சமூக ஊடங்களில் கடந்த சில வாரங்களாகவே வைரலாகி வருகிறது. சினிமா மட்டுமல்லாமல் விளம்பரப்படங்களிலும் கவனம் செலுத்திவரும் தீபிகா, ஒவ்வொரு விளம்பரத்திற்கும் கோடிகளில்தான் சம்பளம் பெறுகிறாராம். சமீபத்தில் பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹருடன் இவர் நடித்திருக்கும் ஒரு பெயிண்ட் விளம்பரப்படம் வைரலாகி வருகிறது.

காரணம், நீண்ட நாட்களுக்குப்பிறகு தீபிகா - கரண் கூட்டணியானது விளம்பரப்படத்திற்காக இணைந்திருக்கிறது. சீக்கிரத்தில் தீபிகாவை வைத்து மாஸ் படம் ஒன்றை இயக்குமாறு கரணுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Updated On 5 Sept 2023 12:01 AM IST
ராணி

ராணி

Next Story