இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்திய சினிமாவில் எப்படிப்பட்ட கதையம்சம் உள்ள படங்களாக இருந்தாலும், அவற்றில் ஆக்சன் காட்சிகள் இல்லாமல் எந்த திரைப்படமும் முழுமையடையாது. அப்படிப்பட்ட சண்டைக் காட்சிகளை திரையில் காணும் போது நமக்கு வெகு சாதாரணமாக தோன்றினாலும், உயிருக்கு மிகவும் ஆபத்தான அத்தகைய ஸ்டண்ட்டுகள் மிக எளிதாக படமாக்கப்படுவதில்லை. ஒவ்வொரு ஹீரோக்களின் மாஸான தருணங்களுக்கு பின்னாலும், ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் என்ற மனிதர்களின் வலி நிறைந்த வாழ்க்கையும், காயத்தால் வந்த தழும்புகளும், அவர்களின் தியாகங்களும் இருக்கிறது என்பதை நம்மால் நிச்சயம் மறுக்க முடியாது. சில சமயங்களில் உயிரை பணயம் வைத்து கூட ஆக்சன் காட்சிகளில் நடிக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படும். இப்படிப்பட்ட ரிஸ்க்கான ஸ்டண்ட் துறைக்கு ஆண்கள் மட்டும்தான் பொருத்தமாக இருப்பார்கள் என்ற நிலை இருந்து வரும் நிலையில், அதனை தகர்த்தெறியும் வேகத்துடன் அவ்வப்போது சில பெண் சண்டை கலைஞர்களும் இங்கு ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர்.

இந்திய சினிமாவில் ‘பெண் ஸ்டண்ட் கலைஞர்கள்’

சினிமாவை பொறுத்தவரை ஆடை வடிவமைப்பாளர்., ஒளிப்பதிவாளர்., இசையமைப்பாளர்., பாடலாசிரியர்., நடன இயக்குநர்., ஒப்பனையாளர் என சினிமாவின் பலதுறைகளிலும் பெண்கள் மெல்ல மெல்ல காலூன்றி ஆண்களுக்கு இணையாக சாதித்து வருகின்றார்கள். இதில் குறிப்பாக நடிப்பை தாண்டி ஆடை வடிவமைப்பு மற்றும் நடனம் ஆகிய இரண்டு துறைகளிலும் பெண்கள் புரிந்த சாதனை அளப்பரியது. இருப்பினும் சினிமா ‘ஸ்டண்ட்’ என்று வரும் பொழுது தற்காப்பு கலைகளை நன்கு கற்றுத் தேர்ந்த பெண்கள் கூட இந்த துறைக்கு வர அஞ்சுகின்றனர். சினிமாவின் அனைத்து துறைகளிலும் ஆண்களுடன் இணைந்து பெண்கள் பணியாற்றி வரும் நிலையில், பெண்களால் இத்துறையில் மட்டும் இன்றுவரை பெரிய அளவில் கால்பதிக்க முடியாமல் போனதற்குக் காரணம், அதற்கு பின்னால் இருக்கும் கடினமான ‘ஸ்டண்ட்’ சீக்குவன்ஸ் காட்சிகள்தான். ஆண்கள் எவ்வளவு பெரிய கடினமான ஸ்டண்ட் சீக்குவன்ஸ் காட்சிகளையும் எளிதாக கையாண்டு விடுவார்கள். சில நேரங்களில் அவர்களே தங்கள் உயிரை பணயம் வைத்துதான் சில ரிஸ்க்கான காட்சிகளை படமாக்குகிறார்கள். அதற்காக தங்கள் உயிரை பறிகொடுத்தவர்களும் இருக்கிறார்கள். அதனால்தான் இத்துறையில் பெண்கள் இன்னும் பெரிய அளவில் சாதிக்கவில்லை என கூறப்பட்டாலும், ரேஷ்மா பதான்., சனோபர் பார்டிவல்லா., கீதா டாண்டன் போன்ற பெண்மணிகள் அன்று முதல் இன்று வரை இதே 'ஸ்டண்ட்' துறையில் பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டினார்கள், தொடர்ந்து காட்டியும் வருகிறார்கள்.


ரேஷ்மா பதான், சனோபர் பாட்டிவல்லா, கீதா டாண்டன்

இந்தியாவின் முதல் 'பெண் ஸ்டண்ட் கலைஞர்'

1972 ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த 'ஏக் கிலாடி பவன் பட்டே' என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவருக்கு, சண்டை காட்சி ஒன்றில் டூப்பாக நடித்ததன் மூலம் இந்திய திரையுலகில் முதல் பெண் ஸ்டண்ட் கலைஞராக அறிமுகமானவர் 'ரேஷ்மா பதான்'. தன்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக 14 வயதிலேயே ஸ்டண்ட் கலைஞராக மாறிய இவர், 1975 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஷோலே' படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான ஸ்டண்ட் கலைஞராக அறியப்பட்டார். இதன் மூலம் அன்றைய திரைத்துறையில் பெண் ஸ்டண்ட் கலைஞர்களும் இருக்கிறார்கள் என்ற அடையாளத்தை முதன்முதலில் இவர் உருவாக்கியதோடு, தன்னுடைய குடும்ப தேவைக்காக தொடர்ந்து அதே பாதையில் ஓடத் துவங்கினார். கட்டிடத்தின் உச்சியில் இருந்து குதிப்பது, ஓடும் ரயிலில் பெட்டிக்கு பெட்டி தாவுவது, குதிரை சவாரி செய்தபடியே சண்டை போடுவது என ஆபத்தான பல சண்டைக் காட்சிகளில் ஆண்களுக்கு நிகராக நடித்து வந்த இவர் 1970 மற்றும் 80களில் மிகவும் பிஸியான ஸ்டண்ட் கலைஞராக வலம் வந்தார். குறிப்பாக, நடிகை ரேகா, ஹேமமாலினி, ஸ்ரீதேவி, டிம்பிள் கபாடியா போன்ற நடிகைகளுக்கு தொடர்ந்து டூப்பாக சண்டைக் காட்சிகளில் நடித்ததன் மூலம் அவர்களது ஆஸ்தான கலைஞராக மாறிப்போனார். ரேஷ்மா கிட்டத்தட்ட 400 -க்கும் அதிகமான படங்களில் , ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபத்தான ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார். மேலும் திரைப்பட ஸ்டண்ட் கலைஞர்கள் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.


பெண் சண்டைபயிற்சியாளர் ரேஷ்மா பதான்

ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த தமிழ் ‘ஸ்டண்ட்’ துறை

‘தமிழ் சினிமாவை பொறுத்தவரை அன்றைய எம்.கே.டி தியாகராஜ பாகவதர்., பி.யு.சின்னப்பா காலம் தொடங்கி., அடுத்து வந்த எம்ஜிஆர்., சிவாஜி கணேசன்., கமல்., ரஜினி., விஜயகாந்த்., விஜய்., அஜித்., சூர்யா என இன்றைய காலம் வரை, ஒவ்வொரு ஹீரோக்களின் படங்களிலும் ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை எனலாம். ஒரே வித்தியாசம் அன்று கத்தி சண்டை என்றால், இன்று கை துப்பாக்கி... அதேபோல் அன்று சிலம்பு கம்பு என்றால் இன்று மறைக்கப்பட்ட ரோப் கயிறுகள், இருப்பினும் 'ரிஸ்க்' என்பது மட்டும் அன்று முதல் இன்று வரை எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. பொதுவாகவே தமிழ் சினிமா ‘ஸ்டண்ட்’ துறையை பொறுத்தவரை ஆண்கள்தான் அதிகம். அது அன்றைய மூத்த ஸ்டண்ட் கலைஞரான ஜூடோ ரத்தினம் தொடங்கி அடுத்தடுத்து வந்த ஜாக்குவார் தங்கம் ., பொன்னம்பலம்., கனல் கண்ணன்., திலீப் சுப்புராயன்., ‘பம்மல்’ ரவி., ‘மகாநதி’ ஷங்கர்., ‘தளபதி’ தினேஷ்., ஸ்டண்ட் சில்வா., மொட்ட ராஜேந்திரன்., தற்போதைய பீட்டர் ஹெயின்., அன்பறிவு வரை ஆண்களின் எண்ணிக்கைதான் அதிகரித்துள்ளதே தவிர ஸ்டண்டில் பெண்களின் பங்கு என்பது பெரிய அளவில் இல்லாமலேயே இருந்து வருகிறது. அதற்கான காரணம், இந்த துறையில் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை மிக அதிகம் என்பதே. இத்தனைக்கும் அன்றைய விஜயசாந்தி துவங்கி இன்றைய திரிஷா வரை பெண்களை முன்னிறுத்தி பல ஆக்சன் திரைப்படங்கள் இங்கு வந்தாலும், அத்தகைய பெண் நடிகைகளுக்கு அமைக்கப்படும் எளிமையான ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடுவதற்கு கூட பெண் ஸ்டண்ட் கலைஞர்கள் இங்கு இல்லையாம், முழுக்க முழுக்க ஆண்களுக்கு பெண் வேடம் போட்டுத்தான் அந்த காட்சிகள் இங்கு எடுக்கப்படுகின்றனவாம். இந்த நிலை குறித்து பிரபல சண்டை இயக்குனர் ஸ்டண்ட் சில்வா ஒருமுறை பேசும்போது, "தமிழ் சினிமாவை பொறுத்தவரை நிறைய பெண் சண்டைக் கலைஞர்கள் பயிற்சி எடுக்க முன் வருகின்றனர். ஆனால் கடைசி நேரத்தில் தங்களுடைய பெற்றோர் அனுமதிக்கவில்லை என்றும், திருமணம் நிச்சயமாகி விட்டது என்றும் சொல்லி இந்த ஸ்டண்ட் துறையை விட்டு ஒதுங்கி விடுகின்றனர். பெண்கள் நிச்சயம் துணிச்சலுடன் இத்துறையில் பணியாற்ற முன்வர வேண்டும். இப்போது பல ஹீரோயின்கள் அதிரடி ஆக்சன் படங்களில் நடித்து வருவதால், அவர்களுக்கு உதவி செய்வதற்கு பெண் சண்டைக் கலைஞர்களின் தேவை அதிகரித்துள்ளது'' என தெரிவித்துள்ளார்.


தமிழ் சினிமாவின் ஆண் சண்டைப்பயிற்சியாளர்கள்

‘ஸ்டண்ட்’ துறையில் பெண்களின் சாதனையும்... சவால்களும்...?

தமிழ் சினிமாவை போலவே பிற பிராந்திய மொழி திரைப்படங்களிலும் பெரிய அளவில் பெண் ஸ்டண்ட் கலைஞர்கள் இல்லாவிட்டாலும். பாலிவுட் சினிமாவை பொறுத்தவரை அன்று தொட்டு இன்று வரை பல்வேறு ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பதற்கு தொடர்ந்து பெண் ஸ்டண்ட் கலைஞர்கள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கு உதாரணமாக, தற்போது பாலிவுட்டின் மிக பிரபலமான பெண் ஸ்டண்ட் கலைஞராக வலம் வரும் சனோபர் பார்டிவாலாவை சொல்லலாம். இவர் தனது 12 வயது முதலே இந்த ஸ்டண்ட் துறையில் பயணிக்க துவங்கியதோடு, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார். இதில் 2006 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளிவந்த 'தூம்-2' படத்தில் வரும் ஆக்ஷன் காட்சியில் ஐஸ்வர்யா ராய்க்கு டூப்பாக நடித்து பல்வேறு பாராட்டுகளை பெற்றிருந்த இவர், கத்ரீனா கைப், ப்ரியங்கா சோப்ரா போன்ற பல முன்னணி நடிகைகளுக்கும் டூப்பாக நடித்துள்ளார். குறிப்பாக, கடந்த 2009 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'ராவணன்' படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு டூப்பாக மலையிலிருந்து விழுகின்ற காட்சியில் நடித்திருந்தவரும் இவர்தான். அந்த நிகழ்வை தன் வாழ்நாளில் என்றுமே மறக்கவே முடியாது என ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். காரணம், அந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது சனோபர் கிட்டத்தட்ட 150 அடி உயரத்தில் இருந்து குதிக்க வேண்டி இருந்ததாம், இதற்காக கிரேன் கொண்டு வரப்பட்டு காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த போது தீடீரென 'சேப்டி கேபிளில்' பழுது ஏற்பட்டதால், அந்த மிகப்பெரிய நீர்வீழ்ச்சிக்கு நடுவே 75 அடி உயரத்தில் சுமார் 30 நிமிடங்கள் அந்தரத்திலேயே அவர் தொங்கிக் கொண்டிருந்தாராம். இதுகுறித்து இப்போது விவரிக்கும் போது கூட, அவரது உடல் சிலிர்த்துப் போகிறது. தன் வாழ்நாளில் மறக்க முடியாத 'திகில்' சம்பவம் என்றே அந்த நிகழ்வை குறிப்பிடுகிறார்.


சண்டைக்காட்சி படப்பிடிப்பில் சனோவர் பார்டிவல்லா

இப்படி பல ரிஸ்க்கான விஷயங்கள் இருப்பதால்தான் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பெண் ஸ்டண்ட் கலைஞர்கள் உருவாகவில்லை என கூறப்பட்டாலும், உயிர் பயம் என்பது எந்த துறையில்தான் இல்லை என்கிறார்கள் சிலர். லாரி, பேருந்து போன்ற கனரக வாகனங்கள் ஓட்டும் பெண்கள் முதல் ரயில், விமானம் என பல்வேறு உயிர்களை தன் ஒரு கை அசைவில் வைத்திருக்கும் பெண்கள் வரை அனைவரும் ரிஸ்க் எடுத்துத்தான் தங்கள் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அப்படி இருக்க, 'ஸ்டண்ட்' துறை என்பது பெண்களின் வீரத்திற்கு முன்னால் எளிமையான ஒன்றுதான் என கூறினாலும், ஆண்களுடன் ஒப்பிடும் போது உடலளவில் சில சிக்கல்கள் பெண்களுக்கு இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. இப்போதும் பாலிவுட்டில் 'ஜவான்' போன்ற திரைப்படங்களில் பல்வேறு பெண் ஸ்டண்ட் கலைஞர்களை பயன்படுத்தி சூப்பரான ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், இதே வாய்ப்பும், மாற்றமும் மிக விரைவில் தமிழ் சினிமாவிலும் நிகழும் என நாம் நம்பலாம்.

Updated On 11 Sep 2023 6:55 PM GMT
ராணி

ராணி

Next Story