இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

அன்பு மகளே...

மகள் பவதாரிணியின் இறப்பால் உடைந்துபோயுள்ள இளையராஜா, எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது, அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது. தனது மனதில் உள்ள தாங்க முடியாத வலியை இரண்டே வார்த்தைகளில் வெளிப்படுத்தியுள்ள இளையராஜா, பவதாரிணி சிறுமியாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து ‘அன்பு மகளே’ என்று உருக்கமாகப் எழுதியுள்ளார். அந்த பிளாக் அண்ட் வொயிட் புகைப்படத்தில் ஹெட்செட் மாட்டிக் கொண்டிருக்கும் இளையராஜா ஏதோ ஒரு புகைப்படத்தைக் காட்ட, அதை சிறுமியாக இருக்கும் பவதாரிணி உன்னிப்பாகப் பார்த்துச் சிரிக்கிறார்.

இந்தப் பதிவிற்குக் கீழே எக்ஸ் பதிவர் ஒருவர், ‘’இறைவனும் உங்கள் குருநாதர்களும் உங்களுக்கு மனஉறுதியைத் தர வேண்டும்’’ எனப் பதிவிட்டுள்ளார். இன்னொரு எக்ஸ் பதிவர், ‘’ தாயுடன் சேர்ந்த அன்பு மகள். இந்த உலகிற்காக உங்களை விட்டுச் சென்று இருக்கிறார்கள் ஞானியே'’ என ஆறுதல் கூறியுள்ளார்.

கதறி அழுத இளையராஜா

இருந்தபோதிலும், இதுவரை இளையராஜா இப்படி முழுவதும் உடைந்து பார்த்ததில்லை என்றும், மகளின் உடலை பார்த்து கதறி அழுததாகவும், அவரை தேற்றவே முடியவில்லை என்றும் உறவு வட்டாராங்கள் தெரிவிக்கின்றன.

என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன்? - பாரதிராஜா

இந்த நிலையில் பல்வேறு பிரபலங்கள் இளையராஜாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இளையராஜாவின் நெருங்கிய நண்பரான பாராதிராஜா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன்.. மகள் பவதாரிணியின் மறைவு, எங்கள் குடும்பத்தினருக்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பு என்று தெரிவித்துள்ளார்.

இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்றே தெரியவில்லை - கமல்ஹாசன்

மனம் பதைக்கிறது. சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாகப் பற்றிக்கொள்கிறேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மயிலிறகாய் மனதை வருடிய பவதாரிணி - ஏ.ஆர்.ரகுமான்

மயிலிறகாய் மனதை வருடிய பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்வதாக தெரிவித்துள்ள ஏ.ஆர்.ரகுமான், இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோருக்கு துணை நிற்பதாக கூறியுள்ளார்.

நொறுங்கிவிட்டேன் - வடிவேலு

பவதாரிணியின் இறப்பை கேள்விப்பட்டு நொறுங்கிப் போய்விட்டதாக நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். இளையராஜா அண்ணன் மனம் தைரியமாக இருக்க என்னுடைய குலதெய்வம் அய்யனார், கருப்புசாமி என எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொள்கிறேன். இதற்கு மேல என்னால பேச முடியலை” என அழுதபடி ஆடியோவை வெளியிட்டுள்ளார்.

மிகச்சிறந்த மனிதர்களில் ஒருவர் பவதாரிணி - சின்மயி

“நான் அறிந்த மிகச்சிறந்த மனிதர்களில் பவதாரிணியும் ஒருவர். மிகவும் அன்பான பெண். அவர் மறைந்த செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியைப் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.” என பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

Updated On 29 Jan 2024 11:08 AM IST
ராணி

ராணி

Next Story