இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(13.01.1985 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

மஞ்சுவாக நான் நாடகங்களில் நடித்த போது, சினிமா நடிகை ஆவேன் என்று நினைக்கவில்லை. நானே எதிர்பார்க்காத ஒரு வாய்ப்பை கங்கை அமரன் எனக்கு அளித்தார். “கொக்கரக்கோ” படத்தில் என்னை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார்! ஆனாலும், ஒரு முழுக் கதாநாயகியாக உயர்ந்திருப்பது இப்போதுதான்!. ஆமாம், “கொக்கரக்கோ” படத்தில் கதாநாயகியாக அறிமுகமான எனக்கு, அடுத்து கிடைத்த வாய்ப்புகள் துணைப் பாத்திரங்கள்தான்!. கதாநாயகியின் தங்கையாக; மகளாக; துணைக் கதாநாயகனின் காதலியாக… இப்படி எல்லாமே சின்ன வேடங்கள்!.

கதாநாயகி

ஒரு காட்சியில் வந்து போகிற பாத்திரம் என்றால் கூட, அதை நிறைவாகச் செய்தால், ரசிகர் மனதில் இடம்பெற முடியும் என்பதை மனதில் கொண்டு, நானும் கிடைத்த வேடத்தில் எல்லாம் நடித்தேன். இளவரசி என்ற பெயர் ரசிகர்களின் இதயத்துக்குள் புகுந்தது. தயாரிப்பாளர்கள், டைரக்டர்களின் நினைவையும் தொட்டது. நான் மீண்டும் கதாநாயகி ஆகிவிட்டேன். துணைக் கதாநாயகியான என்னை “ஜீவ நதி” என்ற படம் மீண்டும் கதாநாயகியாக உயர்த்திவிட்டது. சிவகுமாருக்கு ஜோடியாக நடிக்கிறேன். அதைத் தொடர்ந்து, “அன்னை பூமி”, “குங்குமச்சிமிழ்”, “மண்ணுக்கேத்த பொண்ணு”, “கடைக்கண் பார்வை”, “ஜெயின் ஜெயபால்”, “அந்தஸ்து”, “கரையைத் தொடாத அலைகள்” என்று எத்தனையோ படங்கள். எல்லா முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துவிட்டது. நான் படிப்படியாக உயர்ந்து பெற்ற இந்த கதாநாயகி வாய்ப்பு தொடர வேண்டும் என்று எல்லோரும் வாழ்த்துங்கள்.


மகிழ்ச்சி, கோபம் என இரு மாறுபட்ட தோற்றங்களில் நடிகை இளவரசி

சினிமா வாய்ப்பு என்பது வரும் போகும் என்பார்கள். என்னைப் பொறுத்தமட்டில் வந்து கொண்டே இருக்கிறது. இது தொடர வேண்டும். அதற்கு ஏற்ப என்னை நானே தயார் படுத்திக்கொள்ள வேண்டும். இதுவரை நான் எந்த பாத்திரத்தையும் உதாசீனப்படுத்தியது இல்லை. இந்த வேடத்தில்தான் நடிப்பேன்; கதாநாயகியாகத்தான் தோன்றுவேன் என்று நிபந்தனை போட்டது இல்லை. தயாரிப்பாளரோ, டைரக்டரோ எனக்கு தேடித்தந்த வேடத்தை ஏற்று நடித்தேன். எனது நடிப்பின்மூலம் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றேன்.

முதல்தர நடிகை

எனது கடின உழைப்புக்கும், தொழில் விசுவாசத்துக்கும் பலன் கிட்டிவிட்டது. என்னை முதல்தர நடிகையாக தமிழ் சினிமா உலகம் ஏற்றுக்கொண்டது. சினிமாவில் முதல் இடத்தை பிடிப்பது பெரிது அல்ல. அதை நிலைப்படுத்திக் கொள்ளுவதே கடினம்!. கதாநாயகியாக புகுந்த எத்தனையோ நடிகைகள் இப்போது திரையில் இல்லை. “தனக்குத்தான் மார்க்கெட்” என்று தலைகால் புரியாமல் அழிந்து போனவர்களும் உண்டு. உடல் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வாய்ப்பை இழந்தவர்களும் இருக்கிறார்கள்! இவற்றில் எதிலும் நான் சிக்கிக்கொள்ள மாட்டேன்! கதாநாயகி ஆகிவிட்டதால் கதாநாயகனோடு ஆடிப்பாடும் வேடம் மட்டுமே செய்வேன் என்பது இல்லை. நடிப்பை வெளிப்படுத்தும், குணச்சித்திர வேடங்களிலும் நடிப்பேன்!.


அழகிய தோற்ற பொலிவுடன் காட்சியளிக்கும் நடிகை இளவரசி

கவர்ச்சி

இளமைக் கவர்ச்சியால் மட்டுமே ஒரு நடிகை கதாநாயகியாக மின்னிவிட முடியும் என்று நான் நம்பவில்லை. நடிப்புத் திறமையும் வேண்டும். அப்போதுதான் நிலையான கதாநாயகியாக ஜொலிக்க முடியும். அதுமட்டும் அல்ல. ஒரு நடிகைக்கு வளர வளர அடுத்தவரை மதிக்கவும் தெரியவேண்டும். பிரச்சினைகளில் மாட்டிக்கொண்டால், நிலைத்து நிற்பது கடினம்!.

என் தந்தை ஜம்பு ஏற்கனவே சினிமா உலகத்தை அறிந்தவர்! நடிப்புத் தொழிலில் எப்படி நடந்துகொண்டால், பிரச்சினைக்குரிய நடிகையாக இல்லாமல், எல்லோருக்கும் வேண்டிய நடிகையாக திகழமுடியும் என்பது அவருக்குத் தெரியும். அவருடைய அறிவுரைப்படி நடப்பதால், இதுவரை பிரச்சினை இல்லாத நடிகை என்ற பெயரோடு இருக்கிறேன். தொடர்ந்து அந்தப் பெயரை எடுக்க வேண்டும். அதுவே எனது ஆசை.

Updated On 4 March 2024 11:50 PM IST
ராணி

ராணி

Next Story