இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(19.09.1971 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை சுருக்கம் வருமாறு:

1909-ம் ஆண்டு செப்டம்பர் 5-ந் தேதி காஞ்சிபுரத்தில் நடராசன் - பங்காரு அம்மையார் தம்பதிக்கு மகனாக அறிஞர் அண்ணா பிறந்தார்.

1915-ம் ஆண்டு காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் சேர்ந்து படித்தார். பின்னர் பச்சையப்பன் கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்பை முடித்துவிட்டு பி.ஏ. ஆனர்ஸ் தேர்வு எழுதினார்.

1930 - ராணி அம்மையாருக்கும் அண்ணாவுக்கும் திருமணம்.

1935-ம் ஆண்டு கோவை மாவட்டம் திருப்பூர் நகரில் நடந்த செங்குந்தர் மாநாட்டில் பெரியாரைச் சந்தித்தார். பின்னர் சென்னை மாநகராட்சிக்கு ஜஸ்டிஸ் கட்சி சார்பில் உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு, வெற்றி வாய்ப்பை இழந்தார். தொழிற்சங்கங்களில் தொடர்பு கொண்டார்.

1937-ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது அண்ணா கைது செய்யப்பட்டார்.

சேலம் பொதுக் கூட்டத்திற்குப் பேசவந்த அண்ணாவை பெரியார் வலியுறுத்தி “விடுதலை” பத்திரிகையின் ஆசிரியராக்கினார்.

1942 - காஞ்சியில் “திராவிட நாடு” பத்திரிகையை அண்ணா தொடங்கினார்.


நிகழ்ச்சி ஒன்றில் பெரியாருடன் ஒரே மேடையில் தோன்றிய அறிஞர் அண்ணா

1944 - சேலம் ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் புகழ்மிக்க தீர்மானத்தை அண்ணா கொண்டு வந்தார். திராவிடக் கழகம் என்ற பெயரை ஜஸ்டிஸ் கட்சிக்குத் தரும் தீர்மானம் அது.

1946 - இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முதல் தளபதியாக அண்ணா நியமிக்கப்பட்டார்.

1947 - சுதந்திர நாள் பற்றி அண்ணா ‘இது மகிழ்ச்சி நாள்’ என எழுதினார்.

1949 - பெரியார் திருமணம். அதையடுத்து திராவிடக் கழகத்திலிருந்து அண்ணா முதலியோர் விலகல்.

1949 - செப்டம்பர் 17-ம் நாள் சென்னை ராபின்சன் பூங்காவில் தி.மு.கழகத் தொடக்க விழாவை அண்ணா நடத்தினார்.

1950 - மீண்டும் இந்தித் திணிப்பு அண்ணாவின் போர்முரசம்! இரண்டே மாதத்தில் அரசாங்கம் பின்னடைந்து கட்டாய இந்தியைக் கைவிட்டது. அண்ணா எழுதிய கட்டுரை நூல்களுக்காக ஆறு மாதச் சிறைத் தண்டனை.

1950 - அக்டோபரில் எழுத்துரிமை பேச்சுரிமைப் பாதுகாப்புப் போர். அண்ணா எழுதிய "இலட்சிய வரலாறு" எனும் நூலின் மீது போட்ட வழக்கில் வெற்றி.

1953 - ஜூலை 15: கழகத்தின் மகத்தான மும்முனைப் போராட்டம் தொடங்கியது. அண்ணா முன்னரே சென்னையில் கைதானார்.

1956 - திருச்சி மாநில மாநாட்டில் கழகம் தேர்தலில் புகுவது பற்றிய ஆலோசனை. அதிலும் ஓட்டு முறையைக் கொண்டு வந்தார் அண்ணா! தேர்தலில் ஈடுபட முடிவு.

1957 - காஞ்சிபுரத்தில் இருந்து தமிழ்நாடு சட்டசபைக்கு அண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இருவேறு தோற்றங்களில் காட்சியளிக்கும் அண்ணா

1958 - ஜனவரி : நேருவுக்குக் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தின் விளைவாக அண்ணா கைது செய்யப்பட்டார்.

1961 - ஜூலை : மதுரை மாநில மாநாடு தேர்தலில் முழுமூச்சுடன் ஈடுபட அண்ணா அறைகூவல்.

1962 - காஞ்சிபுரத்தில் அண்ணா தோல்வியடைந்தார். எனினும் சில நாட்களுக்குள்ளேயே டெல்லி மாநிலங்களவை உறுப்பினரானார்.

1962 - ஜூலை 17: விலைவாசிக் கண்டனப் போரில் ஈடுபட்டு அண்ணா பத்து வாரம் சிறை தண்டனை பெற்றார்.

1965 - இந்தி ஆட்சி மொழியாகும் நாளை “துக்க நாள்” என அறிவித்தது தமிழகம். தமிழ் காத்திட கழகத்தை ஊக்குவித்தார் அண்ணா. இந்தி எதிர்ப்பு தொடர்பாக மீண்டும் கைது செய்யப்பட்டார்.

1967 - மார்ச் 6 : பொதுத் தேர்தலில் கழகம் வெற்றிவாகை சூடி அமைச்சரவை அமைத்தது. அண்ணா முதலமைச்சர் ஆனார்.

1968 - ஜனவரி : உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினார்.

புகழ்பெற்ற இரு மொழித் திட்டத்தை ஜனவரி 23-ந் தேதி அண்ணா கொண்டு வந்தார்.

ஏப்ரல் மாதம் 22-ந் தேதி யேல் பல்கலைக்கழகத்தில் அண்ணா பட்டம் பெற்றார்.

செப்டம்பரில் அண்ணாவின் உடல்நலம் குன்றத் தொடங்கியது.

செப்டம்பர் பத்தாம் நாள் அமெரிக்காவில் சிகிச்சை பெற பயணமானார்.

நவம்பர் ஆறாம் நாள் சிகிச்சை முடிந்து தாயகம் திரும்பினார்.

1969 - ஜனவரியில் மீண்டும் உடல்நலம் கெட்டது. அமெரிக்காவில் இருந்து டாக்டர்கள் இங்கு வந்து சிகிச்சை அளித்தார்கள்.

1969 - பிப்ரவரி இரண்டாம் நாள் நள்ளிரவு 12:22 மணிக்கு அறிஞர் அண்ணா மீளாத் துயில் கொண்டார்.

Updated On 1 Jan 2024 6:25 PM GMT
ராணி

ராணி

Next Story