இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக "டைம் டிராவல்", "டைம் லூப்" , "சினிமாட்டிக் யுனிவர்ஸ்", "மல்டி யுனிவர்ஸ்" போன்ற விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு பல புதுமையான திரைப்படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதற்கு உதாரணங்களாக ‘24’, ‘இன்று நேற்று நாளை’, ‘மாநாடு’, ‘கைதி’, ‘விக்ரம்’, சமீபத்தில் வெளி வந்த ‘அடியே’ மற்றும் விரைவில் திரைக்கு வரவுள்ள ‘மார்க் ஆன்டனி’ போன்ற திரைப்படங்களை சொல்லலாம். இந்த அத்தனை படங்களுமே ஹாலிவுட் திரைப்படங்களின் தாக்கங்களாக இருந்தாலும், திரைக்கதையை உருவாக்கிய விதத்தில் நம்ம ஊர் திரைப்படத்திற்க்கே உரிய பல விஷயங்களை உள்வாங்கி படமாக்கிய விதம் பாராட்டும் படியாகவே இருக்கும். இதில் குறிப்பாக தற்சமயத்தில் “சினிமாட்டிக் யுனிவர்ஸ்” மற்றும் “மல்டி யுனிவர்ஸ்” என்கிற விஷயங்கள் மக்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளதோடு, தமிழ் சினிமாவிலும் இப்படியெல்லம் படமெடுக்க முடியுமா என்ற ஆச்சரியத்தையும் சில இயக்குனர்கள் ஏற்படுத்தி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் "சினிமாட்டிக் யுனிவர்ஸ்"

பொதுவாகவே "சினிமாட்டிக் யுனிவர்ஸ்" எனப்படுவது ஒரு படத்தில் இருக்கும் கதாபாத்திரம், வேறொரு படத்திலும் அதே பெயரில் இடம்பெற்று அந்த படத்தின் கதைக்கும் இந்தப் படத்தின் கதைக்கும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு இருப்பது போல ஒரு நிகழ்வை உருவாக்கி, அடுத்த கட்டத்திற்கு படத்தை எடுத்து செல்லும் முயற்சியின் ஒரு தொடர் சங்கிலியை தான் இந்த பெயரில் அழைக்கிறார்கள். இந்த மாதிரியான வழக்கம் "மார்வல் சினிமாட்டிக் யுனிவர்ஸ்" போல ஹாலிவுட் திரைப்படங்களிலேயே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் என்ற இயக்குனரின் வருகைக்கு பின்னர் தமிழ் சினிமாவிலும் இப்படியான ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டது. மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அடுத்தடுத்து ‘கைதி’, ‘மாஸ்டர’, ‘விக்ரம்’ என பல வெற்றிப்படங்களை தந்துள்ள நிலையில், இவற்றில் பெரும்பாலான படங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்ததோடு, சில கதாபாத்திரங்கள் அடுத்தடுத்த படங்களிலும் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதற்கு எடுத்துக்காட்டாக ‘கைதி’ படத்தின் கிளைமேக்ஸில் தில்லியை கண்டதும் அடைக்கலம் அதிர்ச்சியடைவதும், ‘விக்ரமின்’ கிளைமேக்ஸில் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தை புகுத்தி அதில் அடைக்கலம், அன்பு இடம்பெற்றிருக்கும் வகையில் காட்சி அமைக்கப்பட்டிருந்ததையும் சொல்லலாம். இதனால் ‘LCU’ என்கிற பெயரில் லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்கிற வார்த்தை சமீபகாலமாக ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில், உண்மையாகவே "சினிமாட்டிக் யுனிவர்ஸ்" என்ற இந்த கான்செப்டை லோகேஷ் கனகராஜ்தான் முதல் முறையாக தமிழ் சினிமாவில் கொண்டு வந்தாரா என்ற கேள்வியும் பலரிடத்தில் எழுந்துள்ளது.


இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது சினிமாடிக் கதாபாத்திரங்கள்

நாங்க எல்லாம் அப்பவே அப்படி...!

லோகேஷ் கனகராஜ்க்கு முன்பே 1970களின் ஆரம்பத்திலேயே எஸ்.பி.முத்துராமன், பாரதிராஜா, மணிவண்ணன் போன்றவர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு அடுத்து வந்த அருண்பாண்டியன், சுரேஷ் கிருஷ்ணா, கே.வி.ஆனந்த், உள்ளிட்ட பல இயக்குனர்கள் இதே "சினிமாட்டிக் யுனிவர்ஸ்" முயற்சியை சற்று வேறுவிதமாக கையாண்டு இருக்கிறார்கள். உதாரணமாக இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில், ஒரு கல்யாண காட்சியில் மொய் வைப்பவர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கும். அப்போது ‘16 வயதினிலே’ படத்தில் இடம்பெற்ற மயில் மற்றும் சப்பாணி கதாபாத்திர பெயர்கள் வாசிக்கப்படும். இந்த படத்திற்கு முன்பு வெளியான ‘16 வயதினிலே’ படத்தின் இறுதி காட்சியில் சப்பாணி ஜெயிலுக்கு போவது போன்றும், அவருக்காக மயிலு காத்திருப்பது போலவும் சோகமாக படத்தை முடித்திருப்பார் பாரதிராஜா. இருப்பினும் படத்தின் சோகமான முடிவுக்கு ஒரு சந்தோஷமான ட்விஸ்டை கொடுக்கும் விதமாக அதைத் தொடர்ந்து வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் மயிலுக்கும் சப்பாணிக்கும் திருமணம் ஆனதாகவும், அவர்கள் அந்த ஊரில் ஒரு பெட்டிக்கடை வைத்திருப்பதாகவும் காட்டியிருப்பார்.


மயில் மற்றும் சப்பாணி கதாபாத்திரங்கள்

அதே போல் 1998ஆம் ஆண்டு ராஜ்கபூர் இயக்கத்தில் வெளிவந்த ‘கல்யாண கலாட்டா’ படத்தில் நடிகர் சத்யராஜ், தனது காதல் கதையை, மணிவண்ணனிடம் சொல்வது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். அந்த காட்சியில் அகத்தியன் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளிவந்த ‘காதல் கோட்டை’ படத்தில் இடம்பெற்ற அஜித் - தேவயானியின் பார்க்காமலே காதல் கதையை சத்யராஜ் மணிவண்ணனிடம் தன் கதையை போன்று கூறுவார். சத்யராஜின் கதையை கேட்ட மணிவண்ணன் நா இதுக்கு முன்னாடி எஸ்டிடி பூத் வச்சுருந்தே.. அதுக்கு அப்புறம் தான் இந்த டெவலப்மென்ட்லா. அப்போ என்னோட டெலிபோன் பூத்துக்கு வந்து ஒரு பொண்ணு பார்க்காமலே பேசி பேசி லவ் பண்ணுவா என்று தன்னுடைய காதல் கோட்டை கதாபாத்திரத்தை பற்றி அந்த படத்தில் பேசியிருப்பார்.

மேலும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாபா’ படத்தில் வரும் ஒரு காட்சியில், ‘படையப்பா’ படத்தின் நீலாம்பரி கதாபாத்திரம் இடம் பெற்றிருந்ததோடு, கேவி ஆனந்த் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ‘மாற்றான்’ படத்தில், அவரது முந்தைய படமான ‘கோ’ படத்தில் வரும் அஜ்மல் கதாபாத்திரம் குறித்த போஸ்டர் ஒன்றும் இடம் பெற்றிருக்கும். இது தவிர, ‘பானா காத்தாடி’ படத்தில் இதயம் முரளி கதாபாத்திரம், ‘மாஸ் என்கிற மாசிலாமணி’ படத்தில் ‘எங்கேயும் எப்போதும்’ ஜெய் கதாபாத்திரம், ‘ரஜினி முருகன்’ படத்தில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ சிவகார்த்திகேயன் கதாபாத்திரம், ‘வை ராஜா வை’ படத்தில் ‘புதுப்பேட்டை தனுஷ்’ கதாபாத்திரம் என ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த புதுவித முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்ததோடு, ‘காதல் சடுகுடு’, ‘சாமுராய்’ , ‘தேவன்’, ‘கோவை பிரதர்ஸ்’, ‘ஆரண்ய காண்டம்’, ‘கோவா’, ‘புலி’, ‘பீஸ்ட்’ உட்பட பல படங்களில் இதே “சினிமாட்டிக் யுனிவர்ஸ்” கான்செப்ட் வெவ்வேறு விதமாக கையாளப்பட்டிருந்தது.


‘பாபா’ திரைப்படத்தில் ‘படையப்பா’ படத்தின் நீலாம்பரி கதாபாத்திரம்

தமிழ் சினிமாவில் "மல்டி யுனிவர்ஸ்"

தற்போது, "சினிமாட்டிக் யுனிவர்ஸை" போலவே "மல்டி யுனிவர்ஸ்" என சொல்லப்படக்கூடிய மற்றும் ஒரு புதிய கான்செப்ட் ஒன்று தமிழ் சினிமாவில் அடையாளம் பெற துவங்கியுள்ளது. பொதுவாகவே நம்மில் பலர் "சினிமாட்டிக் யுனிவர்ஸ்" மற்றும் "மல்டி யுனிவர்ஸ்" என்கிற இரண்டையும் ஒரே நேர் பார்வையில் பார்க்கும் பழக்கம் இருந்து வரும் நிலையில், இதில் “மல்டி யுனிவர்ஸ்” என்பது சற்று வித்தியாசமானது. அதாவது நம் உலகம் போலவே வேறு ஒரு உலகம் வேறு ஒரு பிரபஞ்சத்தில் இருக்கிறது. அந்த பிரபஞ்சத்தில், உங்களைப் போலவே இருக்கும் ஒருவன் வேறொரு வாழ்வியல் முறையில் வாழ்ந்து வருகிறான். ஏன் சில பிரபஞ்சத்தில் நம்மை போலவே இருக்கும் நபர் நீங்கள் என்னவாக இருக்க வேண்டும் என்று கனவு காண்கிறீர்களோ, அவராகவே அந்த பிரபஞ்சத்தில் இருக்கிறான். இதை அடிப்படையாக வைத்து தான் ‘மல்டி யுனிவர்ஸ்’ என்கிற இந்த கான்செப்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக ஹாலிவுட்டில் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவந்த ‘ஸ்பைடர் மேன்’, ‘நோ வே ஹோம்’ மற்றும் டாக்டர் ஸ்ட்ரேஞ்சு இன் ‘தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்’ போன்ற படங்களை சொல்லலாம். ஏன் சமீபத்தில் ஒரு வித்யாசமான காதல் படமாக வெளிவந்துள்ள 'அடியே' என்கிற நம் தமிழ் படத்திலும் இதே "மல்டி யுனிவர்ஸ்" கான்செப்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது.


‘தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்’ மற்றும் ‘அடியே’ திரைப்படக் காட்சிகள்

சரி இந்த "மல்டி யுனிவர்ஸ்" கான்செப்ட் தமிழ் சினிமாவில் இப்பொழுது தான் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதா என்று கேட்டால், இல்லை என்கிற பதிலே இங்கும் நமக்கு கிடைக்கிறது. ஏனெனில் முந்தைய "சினிமாட்டிக் யுனிவர்ஸ்" கான்செப்ட்டை போலவே மல்டி யுனிவர்ஸ் முயற்சியையும் சற்று வேறுவிதமாக நம் இயக்குனர்கள் அப்போதே கையாண்டு இருக்கிறார்கள். உதாரணமாக எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1990ம் ஆண்டு வெளிவந்த ‘அதிசய பிறவி’ படத்தில் வரும் ஒரு முக்கியமான காட்சியில், ரஜினிகாந்த் திருமணம் செய்து கொள்ள தயாராகும் போது அவரது உயிர் எமதர்மனால் தவறுதலாக பறிக்கப்படும். பின்னர் எமலோகம் செல்லும் ரஜினி அங்கு எமதர்மனிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி என் உடம்பு எனக்கு வேணும் என்று கேட்பார். அப்போது ரஜினியின் உடலை, அவரை போன்று இருக்கும் ஏதாவது உடலில் சேர்ப்பதற்காக பூலோகம் வந்து தேடும் போது ,ரஜினி நடித்த முந்தைய படங்களான ‘அபூர்வ ராகங்கள்’., ‘புவனா ஒரு கேள்விக்குறி’ மற்றும் ‘மூன்று முகம்’ ஆகிய படங்களின் கதாபாத்திரங்கள் இப்படத்தில் காண்பிக்கப்படும். இதில் ஒரே உலகம், ஒரே பிரபஞ்சத்தில் நடக்கும் நிகழ்வு போல படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருந்தாலும், “மல்டி யுனிவர்ஸ்” என்கிற விஷயத்தோடு இணைத்து பார்க்கும் போது வெவ்வேறு உலகத்தில் வாழும் ரஜினியை காட்டுவது போல தான் இன்று நமக்கு சிந்திக்க தோன்றுகிறது. இதே போல் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த இரண்டாம் உலகம் படத்திலும், இதே “மல்டி யுனிவர்ஸ்” கான்செப்ட் வேறுவிதமாக மிக சிறப்பாகவே கையாளப்பட்டிருந்ததோடு, அன்று இந்த திரைப்படம் தோல்வியை சந்தித்திருந்தாலும் அப்போதே இப்படி எல்லாம் சந்தித்திருக்கிறார்கள் என்கிற எண்ணத்தை இப்போது நமக்கு ஏற்படுத்துகிறது.


‘அதிசய பிறவி’ திரைப்படக் காட்சிகள்

ஏன் அப்ப கவனிக்கல... இப்ப கவனிக்கிறோம்...?

இப்படியாக "சினிமாட்டிக் யுனிவர்ஸ்", "மல்டி யுனிவர்ஸ்* போன்ற விஷயங்கள் அந்தந்த சூழலுக்கு ஏற்றவாறு, வெவ்வேறு விதமாக, வெவ்வேறு காலங்களில் தமிழ் சினிமாவில் கையாளப்பட்டு இருந்தாலும், இவையெல்லாம் அன்றைய காலகட்டத்தில் பெரிதாக பேசப்படவும் இல்லை, கவனிக்கப்படவும் இல்லை. அதற்கு காரணம் இன்று இருப்பது போன்ற அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அன்று பெரிதாக இல்லை என்பதேயாகும். அதிலும் குறிப்பாக இன்று ஹாலிவுட் படங்களின் வீச்சு என்பது டெக்னாலஜி உதவியுடன் இந்தியாவின் கடைக்கோடி கிராமம் வரை சென்றுள்ளதோடு, உலகின் எந்த நாட்டு, எந்த மொழி திரைப்படங்களையும் கையளவு கைபேசியில் மிக எளிதாக பார்க்க முடிகிறது. இதனால் இன்றைய பார்வையாளர்களின் சிந்தனை என்பது சற்று விரிவடைந்து பல புதிய விஷயங்களையும் புரிந்துக்கொள்ளும் மனநிலைக்கு மாறியுள்ளதால், இந்த மாதிரியான யுனிவர்ஸ் கான்செப்ட்டுகளை மிக எளிதில் அவர்களால் தொடர்புப்படுத்தியும் பார்க்க முடிகிறது. அதனாலயே நமது இயக்குநர்கள் அன்று எடுத்த இத்தகைய முயற்சிகள் பெரிதாக கவனிக்கப்படாமல் போயிருந்தாலும், அவர்கள் அன்று போட்ட விதைகளின் மரம் தான், இந்த புதிய கற்பனை உலகம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Updated On 11 Sep 2023 6:56 PM GMT
ராணி

ராணி

Next Story