இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

எந்த பக்கம் திரும்பினாலும் தலைவர் பட ஹைப்தான். ஆம்! ஆயுத பூஜையை முன்னிட்டு ரஜினி நடிப்பில் ‘வேட்டையன்’ படம் ரிலீஸாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதே நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் ‘விடாமுயற்சி’ இப்போதைக்கு வெளியாகாது என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் ‘குட் பேட் அக்லி’ விரைவில் வெளியாகி அஜித் ரசிகர்களுக்கு மாஸ் ட்ரீட்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் முழுக்க புதிய படங்களின் டீசர், ட்ரெய்லர் மற்றும் அப்டேட்ஸ்தான் வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றில் அதிகம் ட்ரெண்டான சிலவற்றை பார்க்கலாம்.

உறுதியான குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி

அஜித் நடிப்பில் உருவாகிவரும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் குறித்து அவ்வப்போது அப்டேட்ஸ் வெளியாகி ரசிகர்களை குஷிபடுத்தி வருகின்றன. இதனிடையே ‘விடாமுயற்சி’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று முதலில் கூறப்பட்ட நிலையில், பின்பு டிசம்பர் மாதம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. அதன்பிறகு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இதனிடையே ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் இரண்டு படங்களும் ஒன்றாக வெளியாக வாய்ப்பில்லை.


பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’

இதனால் ‘விடாமுயற்சி’ ரிலீஸூக்காக ‘குட் பேட் அக்லி’ ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இதனிடையே ‘குட் பேட் அக்லி’யில் அஜித்தின் மாஸான லுக் புகைப்படங்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கின்றன. எப்போதும்போல சால்ட் & பெப்பர் லுக்கில் இல்லாமல் கோட் சூட் அணிந்து 'பில்லா' லுக்கைபோல ஸ்டைலாக இருக்கும் அஜித்தை பார்த்து ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.

‘கூலி’ படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் இவ்ளோவா?

ரஜினி நடிப்பில் ‘வேட்டையன்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. இதனிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்திலும் ரஜினி நடித்துவருகிறார். அந்த படம் குறித்த அறிவிப்பும் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கிறது. மேலும் ‘கூலி’ பட அறிவிப்பிலிருந்தே லோகேஷ் பல்வேறு வதந்திகளில் சிக்குவதும் அதற்கு விளக்கமளிப்பதுமாகவும் இருக்கிறார். ஏற்கனவே கமலை வைத்து இயக்கிய லோகியின் ‘விக்ரம்’ மற்றும் விஜய் நடித்த ‘லியோ’ ஆகிய திரைப்படங்கள் ப்ளாக் பஸ்டர்களாக அமைந்த நிலையில், ‘கூலி’ படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை வாங்க பல முன்னணி ஓடிடி நிறுவனங்கள் போட்டிபோட்டு வருகின்றன.


‘கூலி’ படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை வாங்க 2 நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி

குறிப்பாக, இரண்டு நிறுவனங்கள் 175 கோடி வரை கொடுக்க தயாராக இருப்பதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்திவரும் அவை இரண்டிற்குமிடையேதான் கடுமையான போட்டி நிலவுவதாகவும் தகவல்கள் கசிந்துவருகின்றன. இதனால் 180 முதல் 200 கோடி வரை ‘கூலி’ படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிராமி விருது - ஏ.ஆர் ரஹ்மான் விளக்கம்

இந்த ஆண்டு கிராமி விருதுகளுக்காக ‘ஆவேஷம்’ மற்றும் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ ஆகிய படங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இவை இரண்டுக்குமே சுஷின் சியாம்தான் இசையமைத்திருக்கிறார். இதனிடையே, 28 வருடங்களுக்கு பிறகு ஏ.அர். ரஹ்மான் இசையமைத்த மலையாளப்படமான ‘ஆடுஜீவிதமும்’ கிராம விருதுக்காக அனுப்பி வைக்கப்பட்டு தேர்வு கமிட்டியால் நிராகரிக்கப்பட்டது. இப்படம் ஏன் நிராகரிக்கப்பட்டது? என்பது குறித்து கேள்விகள் எழுந்த நிலையில், ரஹ்மானே அதற்கு விளக்கமளித்திருக்கிறார்.


கிராமி விருது குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்

அதில் ‘ஆடுஜீவிதம்’ சவுண்டு ட்ராக் அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட ஒரு நிமிடம் குறைவாக இருந்ததால்தான் தேர்வுக்குழுவால் நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்ததுடன், கிராமி விருது ஆஸ்கர் விருது போல அல்ல; அதற்கு நிறைய விதிமுறைகள் இருக்கின்றன. அவற்றை பூர்த்திசெய்தால் மட்டுமே கலந்துகொள்ள முடியும் எனவும், விருதுகளை இலக்காக வைத்துக்கொள்வது தனது நோக்கமல்ல எனவும் தெரிவித்திருக்கிறார்.

தொடங்கும் கமலின் அடுத்த படம்

‘இந்தியன் 2&3’ படங்களின் படபிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பானது இடைவெளி விட்டுவிட்டு நடந்து ஒருவழியாக முடிந்திருக்கிறது. இந்தப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், கமலின் 237வது படமான அடுத்த படத்தை பிரபல சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் இயக்கப்போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இதன் படபிடிப்பை ஜனவரி மாதம் தொடங்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


கமலின் 237வது படத்தை இயக்கும் சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ்

இந்த படத்தில் நடிப்பதற்காக கமல் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாலும் சண்டை பயிற்சியாளர்கள் இயக்கும் படம் என்பதாலும் படம் அதிரடி ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் எந்தெந்த நடிகர்கள் இடம்பெறுவார்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் யார் யார்? என்பது குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘கோட்’டை முந்துமா ‘வேட்டையன்’?

ரஜினி நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் ‘ஜெயிலர்’ படத்தை காட்டிலும் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சற்று ஏமாற்றத்தையே அளித்திருக்கிறது. படம் சுமாராக இருப்பதாக ரசிகர்கள் கூறும் நிலையில், ப்ரீ புக்கிங் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேதான் போகிறது. இருப்பினும் படம் வெளியான முதல்நாளில் இந்தியாவில் ரூ.30 கோடிதான் வசூலித்திருக்கிறது.


‘கோட்’ வசூல் சாதனையை முறியடிக்கும் போட்டியில் ‘வேட்டையன்’

இந்த ஆண்டின் மிகப்பெரிய ஓபனிங்காக ‘வேட்டையன்’ இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் நடிப்பில் வெளியான ‘கோட்’ படத்தின் முதல் நாள் கலெக்‌ஷனைவிட குறைவாகத்தான் வசூலித்திருக்கிறது. ‘கோட்’ படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.44 கோடி வசூலித்திருந்தது. இருப்பினும் ‘வேட்டையன்’ மொத்த வசூலில் ‘கோட்’ படத்தை முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாமனாருக்கு ஐஸ்வர்யா வாழ்த்து!

ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் விவாகரத்து குறித்த பேச்சானது கிட்டத்தட்ட ஓராண்டாக பாலிவுட் வட்டாரத்தில் அடிபட்டு வருகிறது. குடும்பத்தில் பிரச்சினை இருப்பதால் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதை இருவரும் பொதுவெளியில் சொல்லாவிட்டாலும், அபிஷேக் தனது குடும்பத்துடன், ஐஸ்வர்யா தனது மகள் ஆராத்யாவுடன் தனியாக நிகழ்ச்சிகளுக்கு வருவதை வைத்தும் புரிந்துகொள்ள முடிகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யாவின் மாமனாரான அமிதாப் பச்சன் சமீபத்தில் தனது 82வது பிறந்தநாளை கொண்டாடினார். பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க, யாரும் எதிர்பாராதவிதமாக பிறந்தநாள் முடிவதற்கு ஒருசில நிமிடங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா, தனது மகளும் அமிதாபும் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ‘ஹேப்பி பர்த்டே பா-டாடாஜி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் ஐஸ்வர்யா தனது விவாகரத்து குறித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்திருப்பதாக ஒருதரப்பினர் சொன்னாலும், இரவு 12 மணியளவில் வாழ்த்து தெரிவித்ததை அடுத்த சர்ச்சையாக்கி இருக்கின்றனர் சிலர். இதற்கு முன்பே மனைவியுடனான பிரிவு குறித்து அபிஷேக்கிடம் கேட்டபோது, தனது விரலில் அணிந்திருந்த திருமண மோதிரத்தை காட்டி, நான் இன்னும் திருமண உறவில்தான் இருக்கிறேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யாவும் தங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்பதை உறுதிபடுத்தியிருக்கிறார்.

Updated On 21 Oct 2024 9:07 PM IST
ராணி

ராணி

Next Story