இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

வேலை, வீடு என பிஸியாக ஓடிக்கொண்டிருக்கும் நம் எல்லோருக்குமே ரிலாக்ஸ் வேண்டுமென்றால் முதலில் மனதில் தோன்றுவது சினிமாதான். ஒரு நல்ல சினிமா 100 விஷயங்களை நமக்கு கற்றுத்தருகிறது. சோஷியல் மீடியாக்களின் வளர்ச்சிக்குப் பிறகு சினிமா பற்றிய அப்டேட்ஸுடன் நடிகர் நடிகைகளை பற்றிய அப்டேட்ஸையும் தெரிந்துகொள்வதற்கான ஆர்வம் நெட்டிசன்களிடையே அதிகரித்திருக்கிறது. இந்த வாரம் திரையுலகில் நடந்த சம்பவங்களின் சில சுவாரஸ்ய அப்டேட்ஸ்...

25 வருடங்களுக்கு பின் ரீ - எண்ட்ரி கொடுத்த சக்சஸ்

மும்பையை சேர்ந்த நடிகை ஜோதிகா முதலில் அறிமுகமானதே ‘டோலி சஜா கே ரக்னா’ என்ற இந்தி திரைப்படத்தில்தான். ஆனால் அதன்பிறகு தமிழில் பிஸியாகிவிட்ட ஜோதிகா இந்தி பக்கம் செல்லவில்லை. இந்நிலையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஷைத்தான்’ திரைப்படம் மூலம் இந்தியில் ரீ- என்ட்ரி கொடுத்தார். விக்ரம் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கன், மாதவனுடன் இணைந்து இப்படத்தில் நடித்திருக்கிறார் ஜோதிகா. பிளாக் மேஜிக்கை மையக்கருவாக வைத்து ஹாரர் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனால் முதல் நாளிலேயே ரூ.15 கோடி வசூலை ஈட்டிய இப்படம் சில நாட்களிலேயே ரூ.100 கோடி வசூல் சாதனையை படைத்திருக்கிறது.


‘ஷைத்தான்’ திரைப்படத்தில் நடிகை ஜோதிகா

இந்த ஆண்டு தொடக்கத்தில் விஜய் சேதுபதி - கத்ரீனா காம்போவில் வெளியான ‘மேரி கிறிஸ்துமஸ், ஹிருத்திக் ரோஷன் - தீபிகா படுகோனே காம்போவில் வெளியான ‘ஃபைட்டர்’ போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் ‘ஷைத்தான்’ திரைப்படம் பாலிவுட்டையே கலக்கி வருகிறது. இதனால் 25 ஆண்டுகளுக்குப் பின் இந்தியில் அடியெடுத்து வைத்திருக்கும் ஜோதிகாவுக்கு இப்படியொரு வரவேற்பு கிடைத்திருப்பதை நினைத்து சூர்யா மகிழ்ச்சி கொள்வதாக தெரிவித்திருக்கிறார். வெறும் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் தற்போது 100 கோடி வசூல் சாதனை புரிந்திருக்கும் நிலையில், 200 முதல் 300 கோடி வரை வசூலை ஈட்டும் என எதிர்பார்ப்பதாக படக்குழு மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறது.

6வது முறை விஜய்யுடன் ஜோடியா?

விஜய்யுடன் அதிகம் ஜோடி சேர்ந்த நடிகைகளில் ஒருவர் திரிஷா. ஏற்கனவே 5 முறை விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கும் இவர், 6வது முறையாக மீண்டும் ஜோடி சேரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் ‘தி கோட்’ திரைப்படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. இதுகுறித்த அப்டேட்ஸ் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார். அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகா நடிக்கும் நிலையில், மகன் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் மீனாட்சி சௌத்ரி.


‘தி கோட்’ திரைப்பட போஸ்டர் மற்றும் நடிகை திரிஷா

இந்நிலையில் இப்படத்தில் கேமியோ ரோலில் திரிஷா வந்துபோவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்காவைத்தான் படக்குழு அணுகியதாம். ஆனால் அவர் நோ சொல்ல, அடுத்து திரிஷா ஓகே சொல்லியிருக்கிறார். கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என தொடர்ந்து 4 படங்களில் நடித்ததால் பெஸ்ட் ஆன்ஸ்க்ரீன் ஜோடி என்ற பெயரை இவர்கள் பெற்றிருந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு ‘லியோ’ படத்தில் இந்த ஜோடி மீண்டும் இணைய, ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாடினர். இப்போது ‘தி கோட்’ படத்திலும் திரிஷா நடிக்கவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது. இதுகுறித்த அப்டேட்ஸ் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்ட்டி பண்ணிய லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். 2017ஆம் ஆண்டு ‘மாநகரம்’ திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் எல்சியூ என தனக்கென ஒரு கான்செப்ட்டை உருவாக்கி அதற்கு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார். ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ என அடுத்தடுத்து ப்ளாக் பஸ்டர் படங்களைக் கொடுத்த லோகேஷ், கடந்த ஆண்டு வெளியான ‘லியோ’ படத்தில் சற்று சொதப்பிவிட்டதாக அவரே ஒத்துக்கொண்டார். இருப்பினும் எல்சியூ மீதான ரசிகர்களின் ஈர்ப்பானது இன்னும் குறைந்தபாடில்லை. அடுத்து ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை இயக்குகிறார். அதற்காக சமூக வலைதளங்களிலிருந்து விலகியிருக்கிறார்.


இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

இந்நிலையில் மார்ச் 14ஆம் தேதியன்று லோகேஷ் தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதற்காக முந்தைய நாள் இரவே பார்ட்டி நடைபெற்றது. அதில் DC மற்றும் LCU என எழுதப்பட்ட பெரிய கேக் வெட்டப்பட்டது. லோகேஷின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அர்ஜுன் தாஸ், இயக்குநர் ரத்னகுமார், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். லோகேஷ் கனகராஜ் சமூக ஊடகங்களிலிருந்து விலகியிருக்கும் நிலையில் அவருடைய நண்பர்கள் பார்ட்டி புகைப்படங்களை பகிர்ந்திருக்கின்றனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் லோகிக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறது. தலைவர் 171-ஐ அடுத்து பான் இந்தியா ஸ்டார் பிரபாஸை வைத்து லோகி ஒரு படத்தை இயக்கவிருப்பதாக செய்திகள் உலாவருகின்றன.

சூப்பர் ஸ்டாருடன் எனது அனுபவம் - ரித்திகா சிங் நெகிழ்ச்சி!

‘ஜெய்பீம்’ படத்தை இயக்கி தன்னை சக்சஸ்ஃபுல் இயக்குநராக்கிக் கொண்டவர் த.செ. ஞானவேல். இவர் தற்போது ரஜினிகாந்தை வைத்து ‘வேட்டையன்’ என்ற படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பானது தென் தமிழக பகுதிகள், மும்பை, ஆந்திரா என மாறி மாறி நடந்துவருகிறது. குறிப்பாக, இப்படத்தில் இதுவரை ரஜினியுடன் இணைந்து நடித்திராத அமிதாப் பச்சன், மஞ்சு வாரியார், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பானது அடுத்தமாதம் முடிவடையும் எனக் கூறப்படுகிறது.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிகை ரித்திகா சிங் - வேட்டையன் பட போஸ்டர்

ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் வைத்து ரஜினி மற்றும் ரித்திகா சிங் இடையேயான சீன்ஸ் படமாக்கப்பட்டுள்ளன. ரஜினியுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து ரித்திகா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன், “லெஜண்டரி தலைவர் ரஜினிகாந்துடைய அருள், ஆரா மற்றும் அவருடையான தருணங்கள் உண்மையில் நிகரற்றவை. நான் இப்போது அவருடன் செட்டில் பணிபுரிந்து வருகிறேன். நான் எப்போதும் இந்த வாய்ப்பிற்கு நன்றியுள்ளவளாக இருப்பேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். ‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

அழகைவிட இது முக்கியம் - நடிகை கத்ரீனா கைஃப்

பாலிவுட்டின் டாப் ஹீரோயின்களில் ஒருவர் கத்ரீனா கைஃப். மை நேம் ஈஸ் ஷீலா மற்றும் சிக்கினி சம்மேளி போன்ற பாடல்களின் மூலம் நாடு முழுவதுமே ரசிகர்களை பெற்றார் இவர். சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த ‘மேரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியானது. படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் கத்ரீனா மீண்டும் இங்கு ஃபேமஸ் ஆவதற்கு ஓர் தளமாக அமைந்தது அப்படம். இந்நிலையில் சமீபத்திய நேர்க்காணல் ஒன்றில் அழகு குறித்து தனக்கு தவறான கருத்துகள் இருந்ததாகவும், அதை தனது கணவர்தான் மாற்றினார் எனவும் மனம்திறந்து பேசியிருக்கிறார் கத்ரீனா. அந்த பேட்டியில், “அழகு குறித்து இங்கு தவறான மதிப்பீடுகள் இருக்கின்றன. நான் எப்போது வெளியே சென்றாலும், நாம் அழகாக இல்லையே என யோசித்து கவலைப்பட்டு, ஒருவித தயக்கத்துடனேயே செல்வேன்.


கணவர் விக்கி கௌஷாலுடன் நடிகை கத்ரீனா கைஃப்

நான் பார்க்க அழகாக இல்லையோ எனவும் வருத்தப்பட்டிருக்கிறேன். அழகாக தெரியவேண்டும் என்பதற்காக எனக்கு பிடிக்காததை எல்லாம் பிறர் சொல்வதைக் கேட்டு செய்திருக்கிறேன். பின்னர் ‘நீ நீயாக இருப்பதுதான் அழகு’ என என் கணவர் எனக்கு தெளிவுப்படுத்தினார். எப்போதும் நமது தனித்துவத்தை சரியாக வைத்துக்கொள்வதுதான் முக்கியம். மற்றவர்கள் சொல்வதை வைத்தோ, பிறருடன் ஒப்பிட்டோ நாம் யார் என்பதை நம்மால் அறியமுடியாது. இப்போதெல்லாம் நான் அழகாக தெரியவேண்டும் என்பதைவிட தன்னம்பிக்கையுடனும், தெளிவான சிந்தனையுடனும், தனித்துவத்துடனும் இருக்கவேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்துகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Updated On 25 March 2024 11:55 PM IST
ராணி

ராணி

Next Story