தளபதி விஜய்யைக் கொண்டு வெங்கட் பிரபுவால் இயக்கப்படும் ‘தளபதி 68’ படத்தின் பூஜை படங்களும் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் நடிகைகளின் பெயர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தளபதியின் ‘லியோ’ திரைப்படம் பல சர்ச்சைகளை கடந்து வெற்றிகரமாக கடந்த 19 ஆம் தேதி வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப இந்த திரைப்படம் பல ட்விஸ்ட்களையும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸையும் (LCU) கொண்டு படத்தின் முதல் நாளே சுமார் 148.5 கோடி வசூல் பெற்று இந்திய சினிமாவின் அதிக முதல் நாள் வசூல் பெற்ற படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.
‘லியோ’ வைத் தொடர்ந்து நடிகர் விஜய் தனது அடுத்த படமான ‘தளபதி 68’ காக மங்காத்தா அணியுடன் இணைந்துள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி ஏ.ஜி.எஸ் என்டர்டெய்ன்மெண்டால் தயாரிக்கப்படும் இத்திரைப்படத்தின் பூஜை அக்டோபர் 2ஆம் தேதி நடத்தப்பட்டு, அடுத்த நாளே படப்பிடிப்பு தொடங்கியது. வெங்கட் பிரபு ஏற்கனவே தனது எக்ஸ் தள பக்கத்தில் ‘லியோ’ திரைப்படம் வெளியானவுடன் தளபதி 68 -இன் பூஜை புகைப்படங்கள் வெளியிடப்படும் என்று பதிவிட்டிருந்தது போல 24.10.2023 விஜயதசமியான நேற்று பூஜை புகைப்படங்களை வெளியிட்டுள்ளது அப்படக்குழு.
மேலும் அந்த திரைப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டிருக்கிறது. நடிகர் விஜய் ஹீரோவாக நடிக்கும் இத்திரைப்படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, விடிவி கணேஷ், பிரேம்ஜி அமரன், வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள் என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அனிருத்தின் மிரட்டலான இசையில் லியோ பாடல்கள் அமைந்ததைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இன்னும் சிறப்பாக ‘பிகில்’ மற்றும் ‘மெர்சல்’ படங்களில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்ததைப் போல இந்த திரைப்படத்திலும் தந்தை - மகன் என்று இரு கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்.
பொதுவாக காமெடியை அதிகம் வைத்து இயக்கும் வெங்கட் பிரபுவின் கதைகளில் இந்த திரைக்கதை எப்படி இருக்கப்போகிறது? இது ஆக்ஷன் படமாக அமையப்போகிறதா அல்லது காதல் படமாக இருக்கப்போகிறதா? அல்லது நகைச்சுவையான திரைப்படமாக இருக்கப்போகிறதா? படத்தின் பெயர் என்னவாக இருக்கும்? இந்த திரைப்படத்தில் தளபதி என்ன மாஸ் காட்ட இருக்கிறார்? போன்றவை குறித்த அடுத்தடுத்த அப்டேட்களுக்காக காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.