
தமிழ்நாட்டில் கிரிக்கெட்டும் சினிமாவும் இரு கண்களை போன்றவை. கிரிக்கெட் என்றாலும் சரி, சினிமா என்றாலும் சரி கொண்டாடி தீர்ப்பர். அப்படி கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதேபோல் தற்போது திரையரங்கில் வெளியாகியிருக்கும் ப்ளூ ஸ்டார் படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சாதி அரசியலையும், கிரிக்கெட் அரசியலையும் விளாசியிருக்கிறார் இயக்குநர் எஸ்.ஜெயக்குமார். இதற்கு முன் வந்த கிரிக்கெட் படங்களில் ப்ளூ ஸ்டார் எப்படி தனித்து நிற்கிறது என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
சென்னை - 600028 பார்ட் 1 & 2
'சென்னை 28' படத்தின் போஸ்டர்
இந்த படம் தமிழ் சினிமாவிற்கு பல நல்ல நடிகர்களை கை காட்டிய படம். 2007-இல் புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்த படம் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணம் கிரிக்கெட். தெருவில் விளையாடும் நண்பர்களுக்கு இடையே இருக்கும் உறவு, காதல், காமெடி என்று அனைத்தும் சேர்ந்த கலவையாக வெளியானது. இந்த படம் வெங்கட் பிரபுவிற்கு முதல் படம். இதற்கு முன் நடிகராக, பாடகராக வலம் வந்த வெங்கட் பிரபு இந்த படத்தில் இயக்குநராக முத்திரை பதித்தார். இந்த படத்தில் நடித்த பலரும் இப்பொழுது பெரிய நட்சத்திரங்களாக இருக்கின்றனர். ஜெய், மிர்ச்சி சிவா, விஜய் வசந்த் மற்றும் விஜயலட்சுமி என இந்த படத்தில் நடித்ததற்கு பிறகுதான் பெரிய நட்சத்திரங்களாக உருவாகினர். தயாரிப்பாளர் எஸ்.பி. சரணிற்கும் இது முதல் படம். யுவன் சங்கர் ராஜா இசை படத்தை மேலும் மெருகேற்றியது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வசூலை ஈட்டியது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 8 வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. முதல் பாகத்தில் நடித்த அதே நட்சத்திர பட்டாளம் இங்கேயும் களமிறங்கியது. பார்ட் ஒன்றில் சிவாவின் காதலை சுற்றி நகர்ந்த படம், பார்ட் இரண்டில் ஜெய்யின் காதலை சுற்றி நகரும். தனக்கென்று ஒரு குடும்பம் வந்த பிறகு மீண்டும் எப்படி நண்பர்கள் அனைவரும் இணைந்து கிரிக்கெட் விளையாடுகிறார்கள் என்பதே இப்படத்தின் கரு. இது ஒரு ஜாலியான படம் என்பதால் மக்கள் இரண்டு பாகங்களுக்கும் அமோக வரவேற்பு கொடுத்தனர்.
ஜீவா
'ஜீவா' படத்தில் கிரிக்கெட் வீரராக நடித்துள்ள விஷ்ணு விஷால்
இந்த படம் தமிழ்நாட்டில் நடக்கும் கிரிக்கெட் அரசியலை அப்படியே காட்டிய படம். ஜீவா என்கிற இளைஞன், தடைகளை மீறி எப்படி இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தான் என்பதே இந்த படத்தின் கரு. நடிகர் விஷால் மற்றும் ஆர்யா தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா மற்றும் சூரி நடிப்பில் 2014 ஆம் ஆண்டு படம் வெளியானது. இது ஒரு சீரியஸான கிரிக்கெட் படம் என்பதால் குடும்பங்கள் கூட்டம் பெரிதாக திரையரங்கிற்கு வரவில்லை. இளைஞர்களைத்தான் இந்த படம் வெகுவாக கவர்ந்தது. ஜீவா எப்படி கிரிக்கெட்டிற்குள் நுழைந்தான், கிரிக்கெட்டினால் எதையெல்லாம் இழந்தான், கிரிக்கெட்டில் நடக்கும் அரசியலை தாண்டி அவன் எப்படி இந்திய அணியில் விளையாடினான் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையுடன் கூறியிருந்தார் இயக்குநர் சுசீந்திரன். மக்களிடையே நல்ல படம் என்று பெயர் பெற்றாலும் வசூலை குவிக்க தவறியது ஜீவா.
கனா
'கனா' படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்
பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் கனா. நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோர் நடித்தனர். சிறப்பு தோற்றத்தில் சிவகார்த்திகேயனும் நடித்தார். கிரிக்கெட்டையும் விவசாயத்தையும் கருவாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் வசூலில் சக்கை போடு போட்டது. ஐஸ்வர்யா ராஜேஷ் கௌசல்யா என்கிற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருந்தார். சிவகார்த்திகேயனும், சத்யராஜும் தங்கள் கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்திருந்தனர். பயிற்சியாளராக வரும் சிவகார்த்திகேயன் குறைந்த நேரம் வந்தாலும் நெல்சன் திலீப்குமார் என்கிற கதாபாத்திரத்தில் ரசிகர்களின் மனதில் நின்றுவிட்டார். கிராமத்திலிருந்து வரும் பெண் எப்படி சாதிக்கிறாள், விவசாயத்தால் முருகேசன்( சத்யராஜ் ) என்ன கஷ்டப்படுகிறார் என்பதை நேர்த்தியான திரைக்கதையில் கூறியிருந்தார் இயக்குநர் அருண்ராஜா. பாடகராக, காமெடியனாக, பாடல் ஆசிரியராக கலக்கிய அருண்ராஜா இந்த படத்தில் இயக்குநராகவும் முத்திரைப் பதித்தார். தனது நண்பனுக்காகவே இந்த படத்தை தயாரித்தார் சிவகார்த்திகேயன். திபு நின் தாமஸின் இசை பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. சீரியஸ் ஆன படமாக வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது கனா.
போட்டா போட்டி
'போட்டா போட்டி' படத்தில் கிரிக்கெட் வீரராக வரும் சடகோபன் ரமேஷ்
2011 ஆம் ஆண்டு ஸ்போர்ட்ஸ் காமெடி திரைப்படமாக வெளியான படம்தான் போட்டா போட்டி. யுவராஜ் தயாளன் இயக்கத்தில் பிரபல கிரிக்கெட்டர் சடகோபன் ரமேஷ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது போட்டா போட்டி. இந்த படமும் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணம் கிரிக்கெட்தான். அறிமுகமில்லாத பலர் நடித்தும், மக்கள் இந்த படத்தை கொண்டாடினர். இரு மாமன்கள் தனது முறைபெண்ணிற்காக கிரிக்கெட் விளையாடுவதே படத்தின் கரு. கிராமத்து பின்னணியில் பயங்கர காமெடியுடன் வெளியாகி நல்ல வசூலை ஈட்டியது படம். இந்த படத்திற்கு பிறகுதான் இப்படத்தின் இயக்குநருக்கு வடிவேலுவின் தெனாலி ராமன் பட வாய்ப்பு கிடைத்தது. லகான் திரைப்படம் போல் இருந்தாலும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது போட்ட போட்டி.
ப்ளூ ஸ்டார்
'ப்ளூ ஸ்டார்' படத்தில் நடிகர் சாந்தனு பாக்கியராஜ் மற்றும் அசோக் செல்வன்
தற்போது திரையரங்கில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுக்கொண்டிருக்கும் படம்தான் ப்ளூஸ்டார். இயக்குநர் ரஞ்சித் தயாரிப்பில் அவரது உதவி இயக்குநர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் மற்றும் சாந்தனு ஆகியோர் நடித்துள்ளனர். சாதியையும் தமிழ்நாடு கிரிக்கெட்டில் நடக்கும் அரசியலையும் விளாசியுள்ளது ப்ளூ ஸ்டார். அசோக் செல்வன் ரஞ்சித்தாகவும், சாந்தனு ராஜேஷ் ஆகவும் மிரட்டி உள்ளனர். அரக்கோணத்தை மையமாக வைத்து படம் நகர்கிறது. ரஞ்சித், ராஜேஷ் இருவரும் கிரிக்கெட்டை அதிகமாக நேசிக்கின்றனர். ஆனால் இவர்களது ஆசைக்கு சாதி பெரும் தடையாக வருகிறது. ஆரம்பத்தில் விரோதிகளாக இருக்கும் ராஜேஷும், ரஞ்சித்தும் எப்படி இணைந்து கிரிக்கெட் விளையாடுகின்றனர். சாதியின் ஆதிக்கத்தால் இவர்களது கிரிக்கெட் வாழ்க்கை எப்படி பாதிக்கிறது? விளையாட்டு வீரர்களுக்கு எப்படிப்பட்ட ஒழுக்கத்தை கற்று கொடுக்கிறது? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையுடன் கூறியிருக்கிறார் இயக்குநர் எஸ்.ஜெயக்குமார். கீர்த்தி பாண்டியன் சிறிது நேரம்தான் வருகிறார். அதனால் அவரது கதாபாத்திரம் பெரிதாக மனதில் நிற்கவில்லை. ஆனால் இம்மானுவேலாக வரும் பகவதி பெருமாளின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம். குறிப்பாக இயக்குநர் பாண்டியராஜனின் மகன் பிரித்விராஜ் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம். இதற்கு முன் பல படங்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து வந்திருந்தாலும் ப்ளூ ஸ்டார், சாதிக்கு எதிராகவும், கிரிக்கெட்டில் நடக்கும் அரசியலை உடைத்தும் காண்பித்திருக்கிறது. ஸ்போர்ட்ஸ் பாலிடிக்ஸ் என்று புதிய ஜானரில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ப்ளூ ஸ்டார்.
