நம் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் நகைச்சுவையை காண முடியும். எகத்தாளம், ஏகடியம், நையாண்டி, பகடி, அபத்தம் போன்ற பல வடிவங்களில் நகைச்சுவை அமைந்திருந்தாலும் அபத்தத்தில் இருக்கும் நகைச்சுவையை நாம் பெரும்பாலும் உணர்வதில்லை. இந்த மாதிரி துயரமான நிலையில் இருக்கும் நகைச்சுவையை சுட்டிக் காட்டுவதுதான் பிளாக் காமெடி எனப்படும் அவல நகைச்சுவையாகும்.
பிதாமகன்
அவல நகைச்சுவையின் பிதாமகன் என்று நாம் சார்லி சாப்ளினை சொல்லலாம். அவருடைய பெரும்பாலான நகைச்சுவைக் காட்சிகள் எல்லாமே சோகத்திலிருந்துதான் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். ‘சிட்டி லைட்’ திரைப்படத்தில் கண் தெரியாத பூ விற்கும் பெண் மீதான அன்பை சாப்ளின் வெளிப்படுத்தும் ஒவ்வொரு கணமும் சிரிப்புடன் அவருடைய ஏழ்மையின் அவலத்தை சுட்டிக் காட்டியிருப்பார். எப்படியேனும் அந்த காதல் வென்றிடாதா என்ற ஏக்கத்தை பார்வையாளர்களுக்குள் கடத்தியிருப்பார் சாப்ளின். அதேபோன்று கோல்டு ரஷ் திரைப்படத்தில் அன்றைய காலகட்டத்தின் பஞ்சத்தை விளக்கும் விதமாக காலணியை வேகவைத்து சாப்பிடுவதற்கு சாப்ளின் செய்யும் முயற்சிகள் குபீர் சிரிப்பை வரவழைத்தாலும் அந்த அவலத்தின் தீவிரத்தை நாம் படம் முடிந்த பிறகு கட்டாயம் உணர முடியும். இப்படி நகைச்சுவையாக இருந்தாலும் இதற்குப் போய் சிரித்தோமா என்ற எண்ணத்தை நமக்குள் விதைப்பதைதான் உண்மையில் அவல நகைச்சுவை என்று சொல்லலாம்.
‘சிட்டி லைட்’ திரைப்படக் காட்சிகள்
இலக்கணம்
பொதுவாக அவல நகைச்சுவைக்கு இலக்கணம் என்று எடுத்துக் கொண்டால், நாம் மூன்று விஷயங்களைக் கூறலாம். முதலாவது, பிம்பங்களை உடைத்தல்; இந்த முறையில் நமக்குள் இருக்கும் நம்பிக்கைகள் மற்றும் வழக்கங்கள் மீதான பிம்பங்களை கேள்விக்குறியாக்குவது. தொன்றுதொட்டு பின்பற்றப்பட்டு வரும் சம்பிரதாயங்கள், சடங்குகள், சித்தாந்தங்கள் உள்ளிட்ட கருத்துகளை நையாண்டித்தனத்துடன் சுட்டிக் காட்டுவது. இரண்டாவது, சுய எள்ளல்; தம்மை தாமே பகடியாக்கி அதன் மூலம் அவலத்தை உணரச் செய்யும் முறை. மூன்றாவது, தப்பிக்கும் மனப்பாங்கு; ஒரு இக்கட்டான சூழலை நகைச்சுவை மூலம் சமாளித்து அதிலிருந்து தப்பித்துக் கொள்வது அல்லது அதிலிருந்து தம்மை விலக்கிக் கொள்வது.
தமிழ் திரையில்
தமிழ் சினிமா ஆரம்பத்தில் பாடல்களுக்கும் வசனங்களுக்கும்தான் முக்கியத்துவம் தந்தது. அதிலும் அவை பெரும்பாலும் புராணப் படங்களாகத்தான் அமைந்திருந்தன. சமூகப் படங்கள் வெளிவரத் தொடங்கிய காலத்தில்தான் தமிழ் சினிமாவுக்கு அவல நகைச்சுவை தேவைப்பட்டது என்றே சொல்லலாம். மூடநம்பிக்கைளை சுட்டும் விதமாக என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா போன்றோர் அவல நகைச்சுவையை கையாண்டிருப்பார்கள். கமல்ஹாசன் ‘பேசும் படம்’ திரைப்படத்தில் அவல நகைச்சுவையை முயற்சித்திருப்பார். ‘பஞ்ச தந்திரம்’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ ஆகிய படங்களில் பெரியளவில் கையாண்டிருப்பார். பஞ்ச தந்திரம் ஜனரஞ்சகமான வரவேற்பை பெற்றாலும் மும்பை எக்ஸ்பிரஸ் பெரிதாக ரசிக்கப்படவில்லை.
Kamal Haasan's classic comedy scene which is even relevant to this very day and still funny AF.
— Waran clips (@ClipsWaran) August 3, 2023
Singeetam Srinivas Rao and Kamal are a match made in heaven.#Pushpak #PushpakaVimana #pesumpadam #KamalHaasan pic.twitter.com/JiIex7Yken
அவல நகைச்சுவையின் ஆரம்பப்புள்ளியாக ‘ஆரண்ய காண்டம்’ படத்தைக் கருதலாம். 2011-இல் வெளிவந்த இந்தத் திரைப்படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதினைப் பெற்றார். இந்தப் படம் வெளியான சமயத்தில் ரசிகர்கள் இதை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆரம்பத்தில் இது தோல்வி படமாகவே கருதப்பட்டது. ஆனால் பின்னாளில் அதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்புக் கிடைத்தது. அடுத்தாண்டு வெளியான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ அவல நகைச்சுவை ரகத்திலான படம் என்றாலும் இதுவும் ஒரு காமெடி படமாகப் பார்க்கப்பட்டது. இந்தப் படத்தின் வெற்றி அடுத்தடுத்து பிளாக் காமெடி படங்கள் வெளிவர வழிவகுத்தன என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவில் 2013-ஆம் ஆண்டை பிளாக் காமெடி ஆண்டு என்று கூறலாம். நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘சூது கவ்வும்’, அல்போன்ஸ் புத்ரனின் ‘நேரம்’, நவீன் இயக்கி நடித்த ‘மூடர்கூடம்’ என மூன்று பிளாக் காமெடி திரைப்படங்கள் வெளியாயின. இந்த படங்கள் திரையரங்குகளில் சிறப்பாக ஓடியதோடு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றன.
தமிழின் அவல நகைச்சுவை திரைப்படங்கள்
நெல்சன் திலீப்குமார் இயக்குநராக அறிமுகமான “கோலமாவு கோகிலா” திரைப்படத்தைத் தொடர்ந்து “டாக்டர்”, “ஜெயிலர்” என அடுத்தடுத்து பிளாக் காமெடி வகையான படங்களை இயக்கி வெற்றியும் பெற்றிருக்கிறார். இதுபோக, முண்டாசுப்பட்டி, மரகத நாணயம், சவரக்கத்தி, சரோஜா போன்ற படங்களும் அவல நகைச்சுவையால் கவனம் ஈர்த்த படங்களாக கருதப்படுகிறன. தமிழ் சினிமாவில் பிளாக் காமெடி என்பது தற்போது பலதரப்பினராலும் ரசிக்கப்படுவது உண்மைதான் என்றாலும், காமெடிக்கு இருக்கும் முக்கியத்துவம் அதன் கருத்தியல் தாக்கத்திற்கு இருக்கிறதா என்பது சற்றே யோசிக்க வேண்டிய விஷயம்.