இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்த சிறிய உருவத்துக்குள் இப்படியொரு குரல்வளமா? என பார்க்கும் அனைவரையும் தனது குரல் மற்றும் இசையால் ஆச்சர்யபடுத்துபவர் அனிருத் ரவிசந்தர். தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம்வரும் இவர் 2கே கிட்ஸ்களின் ஃபேவரிட். ராக் ஸ்டார் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படுகிறார். எல்லாருடைய வாழ்க்கையிலும் வெற்றி தோல்வி என்பது மாறி மாறி வரும். ஆனால் அனிருத்தை பொருத்தவரை மியூசிக்கில் தோல்வி என்பதே கிடையாது. எப்போதும் கைவசம் குறைந்தது 5 படங்களையாவது வைத்துக்கொண்டு பிசியாகவே ஓடிக்கொண்டிருக்கும் இவர்தான் பெரிய ஸ்டார்களின் படங்களுக்கு ஃபர்ஸ்ட் சாய்ஸாக இருக்கிறார். தனிப்பட்ட வாழ்க்கையில் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கினாலும், அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு விருது வாங்கி அந்த சர்ச்சைகளை சரிகட்டிவிடுவதில் வல்லவரான அனிருத், அக்டோபர் 16ஆம் தேதி (16.10.2024) தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இசையமைப்பாளர், பாடகர் என்பதை தாண்டி தற்போது பிசினஸிலும் இறங்கியிருக்கும் அனிருத்தின் வெற்றி ரகசியம் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

வெற்றியில் ஆரம்பித்த பயணம்

பொதுவாகவே சினிமாத்துறையை பொருத்தவரை முதல் படம் வெற்றிபெறுவதென்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. இன்று சூப்பர் ஸ்டார்களாக வலம்வரும் பலரும் ஆரம்பத்தில் கால்பதிக்க போராடியவர்கள்தான். ஆனால் ஒரு சிலர் அதற்கு விதிவிலக்காக இருப்பார்கள். அதில் அனிருத்தும் ஒருவர். சிறுவயதிலிருந்தே இசையின்மீது அதீத ஆர்வம்கொண்ட அனிருத், எப்போதும் ஏதேனும் ஒரு டியூனை வாசித்துக்கொண்டே இருப்பாராம். 2004ஆம் ஆண்டு ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர் தனுஷ், எப்போதும் கீபோர்டில் எதையோ வாசித்துக்கொண்டே இருந்த குட்டிபையன் அனிருத்தை கவனித்து, அவருடைய விருப்பங்களை கேட்டு தெரிந்துகொண்டாராம். தனுஷுக்கும் இசையின்மீது ஆர்வம் என்பதால் ஐஸ்வர்யாவின் அத்தை மகனான அனிருத்தை எப்போதும் தன்னுடன் வைத்துக்கொண்டு ஏதேனும் மியூசிக் வாசிக்க சொல்லி கேட்டுக்கொண்டே இருப்பாராம். அதன்பிறகு 2007ஆம் ஆண்டிலிருந்து தனுஷ் ஷார்ட் ஃபிலிம்களை தயாரிக்க, அவற்றுக்கு இசையமைப்பாளராக பணியாற்றும் வாய்ப்பு அனிருத்துக்கு கிடைத்தது.


தனுஷ் மற்றும் ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் அனிருத்

அனிருத்தின் இசையின்மீது தனுஷுக்கு அதீத நம்பிக்கை உருவாகவே, 2011ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான ‘3’ படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பை அவருக்கு வழங்கினார். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் பையனிடம் எப்படி ஒரு ஸ்டார் நடிகரின் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பை கொடுப்பது என அனைவரும் தயங்கிய சமயத்தில், எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று அனைவரையும் சமாதானப்படுத்தி அனிருத்தை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார் தனுஷ். முதல் படத்தின் முதல் சிங்கிளாக வெளியான ‘வை திஸ் கொலவெறி’ உலகெங்கும் எந்த அளவிற்கு பிரபலமானது என்பது அனைவருக்குமே நன்கு தெரியும். இப்படி ஆரம்பித்த அனிருத்தின் சினிமா கெரியர், ‘எதிர் நீச்சல்’, ‘டேவிட்’, ‘வணக்கம் சென்னை’ என அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்தது. இடையிடையே ‘சென்னை சிட்டி கேங்க்ஸ்டா’, ‘இறைவா’ என ஆல்பம் பாடல்களையும் தயாரித்து வெளியிட்டு வந்தார். இசையமைப்பாளராக அறிமுகமான ஆரம்பத்திலேயே தன்னைபோலவே ஆல்பம் பாடல்களை வெளியிட்டுவந்த ஹிப்ஹாப் தமிழா ஆதி, யோயோ ஹனிசிங் போன்றோரை தனது படங்களில் பாடவைத்து பின்னணி பாடகர்களாக அறிமுகப்படுத்தினார்.

தீம் மியூசிக் நாயகன்

பின்னணி இசையில் ஒருபுறம் ஸ்கோர் செய்தாலும், அனிருத் இசையமைக்கும் படங்கள் என்றாலே கட்டாயம் ஒரு பாடலாவது மாஸ் ஹிட்டடிக்கும் என்ற பெயரை பெற்றார். தொடர்ந்து விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்துக்கு கிடைத்தது. குறிப்பாக, ‘வேலையில்லா பட்டதாரி’ மற்றும் ‘கத்தி’ ஆகிய படங்களில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசை என அனைத்துமே அனிருத்தின் கெரியரில் மைல்கல்லாக அமைந்தன. தேனிசை தென்றல் தேவாவின் இசை எப்படி இன்றுவரை சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற பெயருக்கு தீம் மியூசிக்காக ஒலிக்கப்படுகிறதோ, அதேபோல, தனுஷின் தயாரிப்பு நிறுவனத்துக்கு தீம் மியூசிக்காக மாறியது ‘விஐபி’ பிஜிஎம். விஜய்யைத் தொடர்ந்து அஜித் படமான ‘வேதாளம்’ திரைப்படத்துக்கும் இசையமைத்தார்.


விஜய் மற்றும் அஜித் படங்களை தெறிக்கவிட்ட அனிருத்தின் மியூசிக்

அனிருத் என்றாலே பேங் பேங் இசையுடன் அதிரடி காட்டி செவிகளை கிழியவைப்பார் என்ற பெயரை மாற்றியது 2017ஆம் ஆண்டு வெளியான ‘விவேகம்’ திரைப்படம். இந்த படம் முழுக்க, வெஸ்டர்ன் ஸ்டைலில் மென்மையான இசையை தந்து தனக்கு வேறு பாணியிலும் இசையமைக்கத் தெரியும் என்பதை நிரூபித்துக் காட்டினார். மேலும் தான் இசையமைக்கும் ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு பாடலையாவது தனது சொந்த குரலில் பாடுவதை வழக்கமாக வைத்திருக்கும் அனிருத், வேறு மொழிகளின் முன்னணி பாடகர்களையும் தமிழுக்கு கூட்டிவந்து அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். மேலும் எந்தவித ஈகோவும் காட்டாமல் பிற இசையமைப்பாளர்களுக்கு பாடுவதும், அவர்களை தனது படங்களில் பாட வைப்பதும் அனிருத்தின் வெற்றிக்கு மற்றொரு காரணமாக பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டாரின் வெறியன்!

எல்லாரும் தன்னை ஒரு நடிகருக்கு ரசிகர் என்று சொல்லிக்கொள்வார்கள். ஆனால் அனிருத் தன்னை சூப்பர் ஸ்டாரின் வெறியன் என்று சொல்லிக்கொள்வதையே விரும்புவார். தனுஷ் - அனிருத்தின் காம்போ எந்த அளவிற்கு வெறித்தனமாக இருக்குமோ, அதே அளவிற்கு தலைவர் படம் என்றாலே அனிருத் தனது ஃபேன் - பாய் மொமெண்டை பாடல்களிலும் பின்னணி இசையிலும் கொட்டிவிடுவார். ஆரம்பத்திலிருந்தே தமிழில் முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் பணியாற்றிவந்த அனிருத்துக்கு சூப்பர் ஸ்டாரின் ஒரு படத்துக்காவது இசையமைக்கவேண்டும் என்ற ஆசை இருப்பதாக பல பேட்டிகளில் கூறிவந்தார். அந்த ஆசையை நிறைவேற்றி வைத்தார் கார்த்திக் சுப்பராஜ். 2019ஆம் ஆண்டு வெளியான ‘பேட்ட’ படத்தில் அனிருத்தின் பின்னணி இசை மட்டுமல்லாமல் அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன.


சூப்பர் ஸ்டாரின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறிய அனிருத்

குறிப்பாக, ‘மரண மாஸ்’ மற்றும் ‘உல்லாலா’ போன்ற பாடல்கள் இன்றுவரை ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல் இளம்தலைமுறையினருக்குக்கூட மிகவும் பிடித்தமான பாடல்களாக இருக்கின்றன. இந்த படத்தின் இசைக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பால் ரஜினிக்கு பிடித்த இசையமைப்பாளராக மாறிவிட்டார் அனிருத். அதனாலேயே தனது அடுத்தடுத்த படங்களுக்கு அனிருத்தையே இசையமைக்க ரஜினியே பரிந்துரைத்து வருகிறார். அப்படித்தான் ‘தர்பார்’, ‘ஜெயிலர்’ மற்றும் இப்போது ‘வேட்டையன்’ என 4 படங்களுக்கு இசையமைத்திருக்கும் அனிருத், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘கூலி’ படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

பான் இந்தியா ஸ்டார் அனிருத்!

என்னதான் ரஜினியின் தீவிர வெறியனாக இருந்தாலும் ‘3’ படத்தில் ஆரம்பித்து விஐபி, மாரி, தங்க மகன், திருச்சிற்றம்பலம் என தனுஷின் பல வெற்றிப்படங்களுக்கும் உறுதுணையாக அமைந்தது அனிருத்தின் இசை. இதுபோக, விஜய்யின் ‘மாஸ்டர்’ மற்றும் ‘லியோ’, விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ போன்ற படங்களும் அனிருத்தின் கெரியரில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. இசையமைப்பாளராக அறிமுகமான பத்தே ஆண்டுகளில் பல முன்னணி ஹீரோக்களின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறியிருக்கும் அனிருத். தமிழ் மட்டுமல்லாமல் ‘ஜவான்’ படத்தின்மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகியிருக்கும்‘தேவரா’ படத்தின்மூலம் டோலிவுட் அறிமுகமும் கிடைத்திருக்கிறது.


கமலின் ‘விக்ரம்’ படத்தில் மாஸ் காட்டிய அனிருத்

மிக இளம் வயதிலேயே முன்னணி இசையமைப்பாளர்களுக்கு டஃப் கொடுக்கும்விதமாக அனிருத் வளர்ந்திருப்பதற்கு அவருடைய அயராத உழைப்பும் திறமையும்தான் காரணம் என்று சூப்பர் ஸ்டார் உட்பட பலரும் பாராட்டி இருக்கின்றனர். மேலும் இந்த காலத்து இளம்வயதினருக்கு பிடித்தவகையில் ராப் மற்றும் ஹிப் ஹாப் போன்ற மியூசிக் வகைகளை பாடல்களின் இடையே சொருகுவது மற்றும் அதிரடி - மெலடி என கலந்து கட்டுவது போன்றவற்றால் அதிக ரசிகர்களை பெற்றிருக்கிறார் அனிருத். இசையமைப்பாளராக அறிமுகமான 13 ஆண்டுகளில் இதுவரை கிட்டத்தட்ட 45 படங்களுக்கு இசையமைத்திருக்கும் அனிருத், கைவசம் எப்போதும் குறைந்தது 5 படங்களையாவது வைத்திருக்கிறார்.

அடுத்த இலக்கு பிசினஸ்

அனிருத் இசை அனைவருக்கும் பிடிப்பதற்கு முக்கிய காரணம் அவருடைய பேண்டு என்று அவரே பலமுறை சொல்லியிருக்கிறார். பள்ளி மற்றும் கல்லூரி காலத்திலிருந்தே தன்னுடன் இணைந்து திருமணம் மற்றும் கச்சேரிகளில் வாசித்துவந்த பேண்டு குழுதான் இன்றும் அனிருத்தின் டீமாக இருக்கிறது. அவர்கள் அனைவருமே நண்பர்கள் என்பதால், தினசரி பேசுவது கேட்பது, ட்ரெண்டிங் இருப்பது போன்றவற்றையே தனது பாடல்களிலும் பயன்படுத்துவதும் அதற்கேற்ப இசையமைப்பதும் தனக்கு சுலபமாக இருப்பதாக அனிருத்தே கூறியிருக்கிறார். மேலும் ஸ்டூடியோ என்றாலே பாடுவதற்கு மைக் பூத் தனியாகத்தான் இருக்கும். ஆனால் அனிருத் ஸ்டூடியோ அதற்கு விதிவிலக்காக இருக்கிறது. மியூசிக் சிஸ்டமும், பேண்டும், பாடகர்களும் ஒரே அறையில் இருப்பதால் அனைத்து பாடல்களையும் உணர்வுப்பூர்வமாக ரெக்கார்டு செய்யமுடிவதாகவும் கூறுகிறார் அனிருத்.


விஸ்.எஸ். மணி & கோ ஃபில்டர் காபி நிறுவனத்தின் இணை நிறுவனராக அனிருத்

இசை மட்டுமல்லாமல் விஸ்.எஸ். மணி & கோ என்ற தென்னிந்திய ஃபில்டர் காபி நிறுவனத்திற்கு இணை நிறுவனராகவும் தன்னை இணைத்து பிசினஸிலும் இறங்கியிருக்கிறார். ஸ்டார்ட் - அப் நிறுவனமான இந்நிறுவனத்தின் ப்ராண்டு அம்பாசிடரும் அனிருத்தான். தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரீடைல் கடைகளுடன் இணைந்து தங்களது ப்ராண்டை விரிவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது விஸ்.எஸ். மணி & கோ. இப்படி பிசினஸ் மற்றும் திரைப்படங்கள் என அயராது ஓடிக்கொண்டிருக்கும் அனிருத் மேன்மேலும் வெற்றிகளை காண வாழ்த்துகள்!

Updated On 21 Oct 2024 3:46 PM GMT
ராணி

ராணி

Next Story