
பெரிய படங்கள் குறித்த எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட்டாக அமைந்திருக்கிறது இந்த வாரம். அடுத்தடுத்து எந்தெந்த படங்கள் வெளியாகவிருக்கின்றன என்பது குறித்த அப்டேட்கள். தென்னிந்திய திரைப்படங்கள் மற்றும் திரை உலகங்கள் குறித்த சில முக்கியமான செய்திகள் உங்களுக்காக...
‘தக் லைஃப்’ படத்தின் முதல் பாடல்!
கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் 18ஆம் தேதி வெளியாகியிருக்கிறது. ‘ஜிங்குச்சா’ என பெயரிடப்பட்டிருக்கும் அந்த பாடலில் ஒரு பீட்டு இரண்டு தக்ஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாடலின் வரிகளை கமல்ஹாசனே எழுதியிருக்கிறார். 36 வருடங்களுக்கு பின் இந்த படத்தில் இணைந்திருக்கும் கமல் - மணிரத்னம் கூட்டணி மீது சினிமா ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.
மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் ஜிங்குச்சா பாடல்
இந்த படத்தில் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, ராஜ்கமல் ஃபிலிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய 3 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது.
சத்தமில்லாமல் 2ஆம் திருமணம்!
பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியின் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே தனது இரண்டாவது திருமணத்தை சத்தமில்லாமல் முடித்திருக்கிறார். இசை, டான்ஸ், சமையல், பொழுதுபோக்கு என பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்துவழங்கி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இவர் தன்னுடன் பணிபுரிந்த பிரவீன் என்பவரை காதலித்து கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2022ஆம் ஆண்டு சட்டப்படி பிரிந்தனர்.
தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே மற்றும் நடிகை அபிநயாவின் திருமண புகைப்படங்கள்
அதுகுறித்து பொதுவெளியில் வெளிப்படையாக பேசுவதை முதலில் தவிர்த்துவந்த இவர் ஒருகட்டத்தில் அதுகுறித்து மனம்திறந்தார். இருந்தாலும் தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்த பிரியங்கா தற்போது வசி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்திருக்கும் பிரியங்கா ‘Going to be chasing sunsets with this one’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அஜித் அடுத்த படம்!
அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 100 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறது. இந்த படம் வெற்றிபெற்றால் அடுத்த படம் குறித்து யோசிக்கலாம் என்று ஏற்கனவே அஜித் தன்னிடம் சொல்லியிருந்ததாக படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்திருந்தார். அதனால் இந்த கூட்டணி மீண்டும் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித்
ஆனால் ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற படங்களை இயக்கிய வெங்கி அட்லூரியிடம் அடுத்த படம் குறித்து அஜித் கலந்தாலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே சூர்யாவின் 46வது படத்தை இவர் இயக்கவிருக்கும் நிலையில் அடுத்து அஜித்தின் படத்திலும் கமிட்டாகவிருப்பதாக பேசப்படுகிறது. சூர்யா படத்தை முடித்த கையோடு அஜித்திற்கான கதையுடன் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடிவேல் மீது வருத்தம் - மனம்திறந்த சுந்தர் சி
சுந்தர் சி - வடிவேலு காம்போவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கேங்கர்ஸ்’. இந்த படம் வருகிற ஏப்ரல் 24ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுந்தர் சி, வடிவேலு குறித்து பேசியிருக்கிறார். அதில் இருவரும் ஒன்றாக இணைந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பணியாற்றி வருவதாகவும், ஒவ்வொரு காட்சியிலும் வடிவேலுவின் எக்ஸ்ப்ரஷன்ஸ் அற்புதமாக இருக்கும் எனவும் கூறினார்.
வடிவேலு குறித்து மனம்திறந்த இயக்குநர் சுந்தர் சி
மேலும் ஒரு காட்சிக்கு தான் 10% யோசித்தால் 90% தனது நடிப்பால் அதை சிறப்பாக்கிவிடுவார் என்றும் கூறியதுடன், அவருடன் பணியாற்றும்போது தான் ஒரு இயக்குநராக இல்லாமல் ரசிகனாகவே அவரை ரசித்துக்கொண்டிருப்பேன் எனவும் கூறியுள்ளார். இடையில் கொஞ்ச நாட்கள் அவர் நடிக்காமல் இருந்தது தனக்கு வருத்தம் எனவும், அந்த கேப்பில் அவர் நடித்திருந்தால் நிறைய படங்களை நாம் ரசித்திருக்கலாம் எனவும் மனம்திறந்து பேசியுள்ளார்.
10 நாட்களுக்கு ஒருமுறை இசை ட்ரீட்!
தனுஷ், நாகர்ஜூனா மற்றும் ராஷ்மிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க நேரடியாக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் திரைப்படம் ‘குபேரா’. இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் நிறைவடைந்த நிலையில் வருகிற ஜூன் 20ஆம் தேதி உலகெங்கும் இப்படம் ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் இறுதிகட்ட பணிகள் வேகம் எடுத்திருக்கும் நிலையில், முதல் பாடலின் ப்ரோமோ முதலில் வெளியானது. அதனையடுத்து ஏப்ரல் 20ஆம் தேதி ‘போய் வா நண்பா’ என தனுஷே பாடி ஆடும் அந்த பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், அடுத்தடுத்து 10 நாட்களுக்கு ஒருமுறை ஒரு சிங்கிள் என பாடல்களை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அடுத்தடுத்து வெளியாகவிருக்கும் ‘குபேரா’ திரைப்பட பாடல்கள்
அது மட்டுமல்லாமல் மிகப்பெரிய பட்ஜெட்டில் ஆடியோ லான்ச்சும் நடைபெறவிருக்கிறது. இந்த படம் பான் இந்தியா படமாக வெளியாகவிருப்பதாகவும் தனுஷே ஒவ்வொரு மாநிலமாகச் சென்று புரமோஷன் பணிகளில் ஈடுபடவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதை தொடர்ந்து ‘இட்லி கடை’ திரைப்படமும் அடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போதைப்பொருள் பயன்படுத்துபவரா? - நோ!
மலையாள திரையுலகில் சமீபகாலமாக பெயர்சொல்லும் படங்களில் நடித்துவருகிறார் நடிகை வின்சி அலோசியஸ். இவர் போதைபொருள் பயன்படுத்தும் நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கமாட்டேன் என கூறியிருந்தார். அவருடைய இந்த கருத்துக்கு ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தான் ஏன் நடிக்கமாட்டேன்? என்று கூறியதற்கான விளக்கத்தை கொடுத்திருக்கிறார் வின்சி. அவர் சமீபத்தில் ஒரு பெரிய ஸ்டாருடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தபோது அந்த நடிகர் போதைப்பொருள் பயன்படுத்திக்கொண்டு தன்னிடமும் தன் சக நடிகையிடமும் அத்துமீறினார் என்று கூறியுள்ளார்.
போதைப்பொருள் பயன்படுத்தும் நடிகர்களுடன் நடிக்காதது குறித்து நடிகை வின்சி
அப்போதே அந்த படத்தில் இருந்து விலகுவதாக அவர் கூறியபோது படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும்தான் தன்னை சமாதானம் செய்து அதில் நடிக்கவைத்ததாகவும், அந்த அனுபவத்திற்கு பிறகு இனிமேல் போதைப்பொருட்கள் பயன்படுத்தும் நடிகர்களுடன் சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவெடுத்திருப்பதாகவும் விளக்கமளித்திருக்கிறார்.
15 வருட காதலனை கரம்பிடித்த நடிகை அபிநயா
ஆந்திராவைச் சேர்ந்த அபிநயா, மாடலாக இருந்து பிறகு நடிகையாக மாறினார். காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று ஐந்து மொழிகளிலும் அபிநயா நடித்துக் கொண்டிருக்கிறார். 2009-ஆம் ஆண்டு நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அபிநயாவுக்கு அத்திரைப்படத்திற்காக பல விருதுகள் கிடைத்தன. ஈசன், ஏழாம் அறிவு, வீரம், தனி ஒருவன், தாக்க தாக்க, குற்றம் 23 போன்ற திரைப்படங்களில் அபிநயாவின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.
15 வருட காதலனை கரம்பிடித்த நடிகை அபிநயா
இதனிடையே, நடிகர் விஷாலுடன் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ஒன்றாக நடிக்கும்போது இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இதையடுத்து பேட்டியளித்த அபிநயா, 15 வருடங்களாக தான் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், சொன்னதைப்போலவே கடந்த மார்ச் மாதம் அபிநயாவுக்கு அவருடைய காதலருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கடந்த வாரம் ஹைதராபாத்தில் திருமணமும் நடந்து முடிந்துள்ளது.
விவாகரத்து பாதையில் அடுத்த சினிமா ஜோடி?
நஸ்ரியா நசீம் மற்றும் ஃபஹத் ஃபாசில் ஜோடி விவாகரத்து செய்யப்போவதாக தகவல் பரவி வருகிறது. நஸ்ரியாவின் சமீபத்திய சோஷியல் மீடியா பதிவுகளும் அதையே உணர்த்துவதாக நெட்டிசன்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஃபஹத் - நஸ்ரியா விவாகரத்து குறித்து வெளியாகும் செய்திகள்
குறிப்பாக, "நான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ‘சூக்ஷமதர்ஷினி’ திரைப்பட வெற்றியை கூட என்னால் கொண்டாட முடியவில்லை. இது கடினமான நேரம்" என நஸ்ரியா சில தினங்களுக்கு முன் பதிவிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
