இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(07.12.1980 மற்றும் 14.12.1980 ஆகிய தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

தமிழ்த் திரையுலகில் பாலசந்தர் போன்ற திறமையான டைரக்டர் மூலம் ஷோபா அறிமுகமாக வேண்டும் என்று நான் (பிரேமா) ஆசையோடு இருந்தேன். அந்த ஆசை நிறைவேறும் விதமாக, பாலசந்தரிடம் இருந்து அழைப்பு வந்ததும் நாங்களே சென்றோம். பாலசந்தர் என்ன சொல்லப் போகிறாரோ என்று பயந்து கொண்டே வந்தாள், ஷோபா. ஆனால், மேக்கப் டெஸ்ட், வாய்ஸ் டெஸ்ட் எதுவும் பார்க்காமலே ஷோபாவை ஒப்பந்தம் செய்தார், பாலசந்தர். மறுநாள், பணத்தைப் பற்றிப் பேச தயாரிப்பாளர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். தொகையைப்பற்றிக் கவலைப்படாமல், “நிழல் நிஜமாகிறது" படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டோம். முதலில் ஷோபாவுக்கு சிறிய பாத்திரம்தான் கொடுக்கப்பட்டது. ஆனால் அவளது நடிப்பைப் பார்த்துவிட்டு, அந்தப் பாத்திரத்தை வளர்த்ததாக பாலசந்தர் ஒருநாள் கூறினார். அதைக் கேட்க எனக்கு பெருமையாக இருந்தது.

"முள்ளும் மலரும்”

"ஷோபாவை சிறந்த நடிகையாக உருவாக்கியவனே நான்தான்” என்று பாலுமகேந்திரா சொல்லிக் கொண்டிருக்க, “நிழல் நிஜமாகிறது” படத்துக்குப் பிறகு ஷோபாவுக்கு, முள்ளும் மலரும் படம் ஒப்பந்தமானது. கால்ஷீட் விஷயமாகப் பேச, “முள்ளும் மலரும்” படத் தயாரிப்பாளர் வேணு செட்டியார் ஒருநாள் எங்கள் வீட்டுக்கு வந்தார். அப்போது பாலுமகேந்திராவும் வீட்டில் இருந்தார். பாலுவை வேணு செட்டியாருக்கு நான் அறிமுகப்படுத்தி வைத்தேன். “இவர்தான் பாலுமகேந்திரா. மலையாளம், தெலுங்கு, கன்னட சினிமா உலகில் சிறந்த கேமராமேன். எங்களுக்கு மிகவும் வேண்டியவர்” என்று சொன்னேன். “பாலுமகேந்திராவைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால், இப்போது தான் பார்க்கிறேன்” என்றார், வேணு செட்டியார். பிறகு, கமல்ஹாசன், டைரக்டர் மகேந்திரன் ஆகியோரிடம் பாலுவைப் பற்றி விசாரித்து இருக்கிறார்.

பாலுவுக்கு வாய்ப்பு

சில நாள் கழித்து வேணு செட்டியார் மீண்டும் எங்கள் வீட்டுக்கு வந்தார். “அம்மா! உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி சொல்லப் போகிறேன். பாலுமகேந்திராவையே "முள்ளும் மலரும்” படத்துக்கு “கேமராமேன்” ஆக ஒப்பந்தம்" செய்துவிட்டேன். இப்போது அவருக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டுதான் வருகிறேன்” என்று சொன்னார். எனக்கும் ஷோபாவுக்கும் உண்மையாகவே மகிழ்ச்சியாக இருந்தது. அதைச் சொல்லிவிட்டு, “இதனால் எனக்கு 10 ஆயிரம் ரூபாய் நஷ்டம். ஆனாலும் பரவாயில்லை, பாலு உங்களுக்கு வேண்டியவர். அவரும் படத்தில் இருந்தால், ஒரு யூனிட்டாக இருந்து படத்தை முடிக்க வசதியாக இருக்கும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு" என்றும் வேணு செட்டியார் கூறினார். அதன் பிறகுதான் எனக்குத் தெரியும் “முள்ளும் மலரும்” படத்துக்கு ஏற்கனவே ஒரு கேமராமேனை ஒப்பந்தம் செய்து, முன்பணம் கொடுத்து இருக்கிறார்கள். எங்களுக்காக பாலுவை ஒப்பந்தம் செய்ததும், அந்த கேமராமேன் சங்கத்தில் புகார் செய்து இருக்கிறார். அதனால் பேசியபடி, அவருக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்து கணக்கு முடித்து இருக்கிறார்கள்!. இந்த விஷயத்தை பின்னால்தான் வேணு செட்டியார் சொன்னார். எப்படியோ, அப்போது பாலு, "முள்ளும் மலரும்" படத்துக்கு கேமராமேன் ஆனது, எங்களுக்கு மகிழ்ச்சியையே அளித்தது. படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. ஷோபாவுடன் என் தம்பி ஜோதி போயிருந்தான்.


ஷோபாவால் "முள்ளும் மலரும்" படத்துக்கு கேமராமேன் ஆன பாலுமகேந்திரா

அப்பா பயணம்

அப்போது ஷோபாவின் அப்பா விடுமுறை முடிந்து மீண்டும் துபாய்க்குப் புறப்பட்டுக் கொண்டு இருந்தார். "இனிமேல் நீங்கள் வேலை செய்து ஒன்றும் ஆக வேண்டியது இல்லை. எனது சம்பாத்தியம் போதும். இங்கேயே இருங்கள். துபாய்க்குப் போக வேண்டாம்" என்று ஷோபா, எவ்வளவோ சொன்னாள். நானும் கூறினேன். அவர் கேட்கவில்லை. அவருக்கு எப்போதும் சும்மா இருக்கப் பிடிக்காது. எதாவது செய்துகொண்டு இருக்க வேண்டும். அதனால், துபாய்க்கு டிக்கெட்டு எடுத்துவிட்டார். அப்போது ஷோபா, ஒரு மலையாளப் படப்பிடிப்பில் இருந்தாள். நானும், ஷோபா அப்பாவும் திருவனந்தபுரத்துக்கு சென்றோம். வழக்கமான அழுகை, கண்ணீர் முத்த மழையோடு அப்பாவை வழி அனுப்பிவிட்டு, ஷோபா ஊட்டி படப்பிடிப்புக்கு சென்றாள். நான் சென்னைக்குத் திரும்பினேன்!. “டைரக்டர் மகேந்திரன், ரஜினிகாந்த், சரத்பாபு எல்லோரும் என்னை நல்ல முறையில் கவனித்துக் கொள்கிறார்கள். நான் சந்தோஷமாக இருக்கிறேன்" என்று, எனக்கு போன் செய்தாள், ஷோபா.

ரஜினி விளையாட்டு!

ஒருமுறை நான் ஊட்டிக்குச் சென்ற போது, ரஜினிகாந்தின் விளையாட்டை நேரிடையாகப் பார்த்தேன். ஷோபா என்னோடு நிற்பாள். அதைப் பார்த்தும் பார்க்காதது போல, “ஷோபா குட்டியை எங்கே, ஷோபா குட்டியை எங்கே!" என்று, நாற்காலிக்குக் கீழும், மேசைக்குக் கீழும் தேடுவார், ரஜினி. எல்லோரும் சிரிப்பார்கள். ஷோபாவுக்கு ரஜினியும், சரத்பாபுவும் வைத்திருந்த பெயர், கிங் எலிஃபெண்ட்! அவர்கள் எல்லோரும் படங்களைப் பற்றி “சீரியஸ்” ஆக விமர்சித்துக் கொண்டு இருந்தபோது, ஷோபா இடையில் புகுந்து "கிங் எலிஃபெண்ட்" படம் பார்த்தீர்களா?” என்று கேட்டாளாம். அதிலிருந்து அந்தப் பெயரையே அவளுக்கு வைத்து விட்டார்கள். அப்பொழுது எல்லாம் ஷோபா, மகேந்திரன் மற்றும் ரஜினியிடம் கலகலப்பாக பேசுவதுபோல கூட, பாலுமகேந்திராவிடம் பேச மாட்டாள்!. ஆனால், நானும் பாலுமகேந்திராவின் மனைவியும் நெருங்கிப் பழகினோம்.


"முள்ளும் மலரும்" படக்குழுவுடன் நடிகை ஷோபா மற்றும் பாலுமகேந்திரா

பெண் குழந்தை

பாலுவுக்கு கவுரிசங்கர் என்ற மகன் மட்டும்தான் இருந்தான். அதனால் ஒரு நாள் பேச்சு வாக்கில் அகிலாவிடம், "நீ ஏன் ஒரு பெண் குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது?" என்று கேட்டேன். அதற்கு அவள்,“எனக்கு ஆசைதான். அவரிடம் சொன்னால், 'நமக்குதான் ஷோபா இருக்கிறாளே!. இன்னொரு பெண் எதற்கு? என்கிறார்” என்று சொன்னாள். என்னதான் ஷோபாவை நீங்கள் மகளாக வைத்துக் கொண்டாலும் இரத்த உறவுக்கு ஒரு மகள் வேண்டாமா? " என்று நான் கேட்டேன்.

''நானும் அவரிடம் இப்படி சொன்னேன். "நான் நினைப்பது போலவே, நீயும் ஷோபாவை உன் வயிற்றில் பிறந்த குழந்தையாகவே நினைத்துக்கொள்" என்று சொல்லி விட்டார்" என்றாள் அகிலா. எனக்கு அவள் சொன்னதைக் கேட்க வியப்பாக இருந்தது. "ஷோபா மீது பாலு இவ்வளவு அன்பு வைத்து இருக்கிறாரா? என்று ஆச்சரியம் அடைந்தேன். அதனால், பாலு மீது, எனக்கு மதிப்பு உயர்ந்தது. ஷோபா கதாநாயகி ஆனபிறகும். வீட்டில் ஒரு குழந்தை போலவே நடந்து. கொள்ளுவாள். அவள் அப்பாவை, அவள் சும்மா இருக்க விடமாட்டாள். தோள் மீது ஏறி உட்கார்ந்துகொண்டு தூக்கச் சொல்லுவாள். அல்லது முதுகு மீது சவாரி ஏறுவாள். என் தம்பி ஜோதி இரண்டு குழந்தைக்கு தந்தை. அவன் தன் குழந்தைகளை தூக்கியதை விட, ஷோபாவை தூக்கி சுமந்த நேரமே அதிகம். வீட்டில் நாலு பேர் வந்து இருந்தால்கூட, ஷோபா அவன் தோள் மீது ஏறி உட்கார்ந்துகொண்டு, தூக்கச் சொல்லுவாள்.


அப்பா மற்றும் மாமா ஜோதியிடம் முதுகில் ஏறி சவாரி செய்யும் ஷோபா

பாலுமகேந்திரா ஒரு நாள் வீட்டுக்கு வந்திருந்தபோதும் ஷோபா, ஜோதியின் முதுகில் சவாரி ஏறினாள். அவன் மாடு போல மருமகளை சுமந்து கொண்டு இருந்தான். அதைக் கவனித்துக் கொண்டு இருந்த பாலு, "நானும் அங்கிள்தானே! என்னிடம் மட்டும் வர மாட்டேன் என்கிறாயே!'' என்று ஷோபாவிடம் கேட்டார். ஷோபா பட்டென்று, "எல்லா அங்கிளும், சொந்த அங்கிள் ஆகிவிட முடியுமா?” என்று கேட்டுவிட்டு, அறைக்குள் போய் விட்டாள்! பாலு மேற்கொண்டு எதுவும் பேசவில்லை! அதற்கு அடுத்த சில நாளில் பாலு ஒரு நாடகம் நடத்தினார். எங்கள் வீட்டில், அகிலா, முன்னிலையிலே அந்த நாடகம் நடந்தது. அந்த நாடகத்துக்குப் பிறகுதான் ஷோபா, பாலுவிடம் நெருங்கிப் பழகினாள். நாங்களும் உறவை பலப்படுத்திக் கொண்டோம்.

வழக்கம் போல ஒரு நாள் பாலுமகேந்திரா, மனைவி, மகனோடு எங்கள் வீட்டுக்கு வந்தார். பேசிக்கொண்டு இருந்தவர் திடீரென்று, "பிரேம்! (பாலு என்னை (பிரேமாவை) "பிரேம்" என்றுதான் அழைப்பார்) எனக்கு என் மனைவி மகனைத் தவிர குடும்பம் என்று வேறு யாரும் கிடையாது. நான் அடிக்கடி வெளியூர் செல்கிறவன். போகிற இடத்தில் எனக்கு எதாவது ஆகிவிட்டால், அகிலாவையும் சங்கியையும் (மகன் கவுரி சங்கர்) நீங்கள்தான் பத்திரமாக ஊருக்கு (இலங்கைக்கு) அனுப்பி வைக்க வேண்டும். என்னைவிட்டால், அகிலாவுக்கும் இங்கே யாரும் கிடையாது" என்று உருக்கமாகப் பேசினார்.

"அதெல்லாம் உங்களுக்கு ஒண்ணும் நடக்காது. எப்பொழுதும் நல்லதையே நினையுங்கள்" என்றேன், நான். "அப்படி அல்ல. எது எப்பொழுது நடக்கும் என்று யாருக்குத் தெரியும்? எனக்கு உங்களைப் போன்று பொறுப்பானவங்க யாரும் கிடையாது. அதனால் சொன்னேன்" என்றார், பாலு. "எங்களுக்கு உங்களை பிடிச்சுப்போச்சு அகிலா. எனக்கு சகோதரி மாதிரி. கவுரிசங்கரை, ஷோபா தன் சொந்த தம்பியாகவே நினைக்கிறாள். நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள்" என்று நான் சொன்னேன்.


ஷோபாவை மகள் என்றே கூறிவந்த பாலுமகேந்திரா

பாக்கியம்

பாலு அதோடு நிற்கவில்லை. மனைவியை புகழத் தொடங்கினார். "அகிலா, எனக்கு மனைவியாகக் கிடைத்தது நான் செய்த பாக்கியம். எங்கள் இடையே இதுவரை சண்டையோ சச்சரவோ ஏற்பட்டது இல்லை" என்று கூறினார். அப்போது ஷோபா, "உங்கள் இடையே எதுக்குமே சண்டை வந்தது கிடையாதா?" என்று, சிரித்துக்கொண்டே கேட்டாள். “அகிலாவுக்கு பிடிக்காத எதையும் நான் செய்ய மாட்டேன். எனக்குப் பிடிக்காத எதையும் அவள் செய்யமாட்டாள். அதனால், எங்களுக்குள் சண்டை வந்தது இல்லை" என்று சொன்னார், பாலு. “இத்தனை வருஷத்திலும், ஒருநாள் கூட சண்டை போட்டது இல்லையா?" என்று வியப்போடு வினவினாள், ஷோபா. "ஒருநாளும் நாங்கள் சண்டைப் போடவில்லை. இனிமேலும் போடமாட்டோம்" என்றார், பாலு. “இப்படித்தான் இருக்க வேண்டும்" என்று பாராட்டினாள், ஷோபா.

தேவை ஒரு குழந்தை

இந்த நேரத்தில் நான் மீண்டும் குழந்தை பிரச்சினையை எழுப்பினேன். "ஏன் பாலு, அகிலா இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறாள். பெற்றுக்கொண்டால் என்ன?" என்று பாலுவிடம் கேட்டேன். உடனே பாலு, "பிரேம், ஒன்று சொல்லுகிறேன். குழந்தையைப் பற்றி மட்டும் பேசாதீங்க. ஷோபாவை ஏன் எங்களிடம் இருந்து பிரித்துப் பார்க்கிறீங்க? என்று கேட்டார். எங்களுக்கு மகனுக்கு மகனாக கவுரிசங்கர் இருக்கிறான். மகளுக்கு மகளாக ஷோபா இருக்கிறாள். இது போதும்" என்று பாலு சொன்னார்.

என் மூத்தமகள்

"எனன இருந்தாலும், சங்கி மீது நீங்கள் காட்டும் பாசத்தை ஷோபா மீது பொழிய முடியுமா?" என்றேன், நான். "எனக்கு மூத்த மகள் ஷோபாதான். ஷோபாவையும், சங்கியையும் நான் ஒன்றாகவே எண்ணுகிறேன். இதை அகிலாவிடமும் கூறிவிட்டேன். அவளும் அப்படித்தான் கருதுகிறாள்" என்ற பாலு, அப்படித்தானே அகிலா? என்று மனைவியிடம் கேட்டார். "எனக்கு முத்த குழந்தை ஷோபாதான்” என்றாள், அகிலா.


தனக்கு பிடித்தவர்களிடம் குழந்தையை போல் நடந்துகொள்ளும் பழக்கம்கொண்ட ஷோபா

பாசமும் நேசமும்

அன்று பாலு பேசிய பேச்சையும் பொழிந்த பாசத்தையும் நாங்கள் உண்மை என்றே நம்பினோம். அது, என் மகள் ஷோபாவை சிக்கவைக்க விரிக்கப்பட்ட பாசவலை என்பதை அப்போது நாங்கள் அறியவில்லை. பாலுவை உயர்ந்த மனிதனாக நினைத்தோம். உண்மை புரியாமல், நாங்கள் பாலு குடும்பம் மீது மெய்யான பாசம் வைத்தோம். பாலுவைப் பார்த்தாலே ஒதுங்கியிருந்த ஷோபா, அடிக்கொரு தடவை பாலுவை "அங்கிள்... அங்கிள்" என்று சொல்லத் தொடங்கினாள்.

சினிமாவுக்கு

பாலுமகேந்திரா அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். அகிலா வீட்டில் தனியாக இருப்பாள். அதனால், அகிலா எங்கள் வீட்டுக்கு வருவதும், நாங்கள் பாலு வீட்டுக்குச் செல்வதும் அதிகமானது. நாங்கள் சினிமாவுக்குப் புறப்பட்டால், அகிலாவையும் அழைப்போம். "அங்கிளிடம் சொல்லாமல் வந்தால் கோபப்படுவார்" என்பாள், அகிலா. "உங்களை இலங்கைக்கு வண்டி ஏற்றிவிடும் பொறுப்பே எங்களுக்குத் தானே! அங்கிள் ஒன்றும் சொல்லமாட்டார். வாருங்கள்" என்று இழுப்பாள், ஷோபா. அகிலா அதன் பிறகு மறுக்கமாட்டாள். இப்படியாக எங்கள் உறவு, ஒன்றுக்குள் ஒன்றானது. சேர்ந்தே சினிமாவுக்கு சென்றோம். கடைத்தெருவுக்கும் அப்படியே!

குழந்தை முன்பு

ஷோபா எப்பொழுதும் தனக்கு பிடித்தவர்களுடன் குழந்தை போல விளையாடுவாள்; பேசுவாள். பாலுமகேந்திரா, அகிலாவிடமும் அப்படியே பழகினாள். படப்பிடிப்பு இல்லாத நாளில் அகிலாவும் பாலுவும் எங்கள் வீட்டுக்கு வருவார்கள். அகிலாவை தனியறைக்குள் அழைத்து போய், ஷோபா விதவிதமாக அலங்காரம் செய்வாள். பிறகு, பாலுவிடம் அழைத்து வந்து, “அங்கிள் நீங்கள் ரொம்பவும் யோகக்காரர். அதனால்தான், ஆண்டி உங்களுக்கு மனைவியாகக் கிடைத்து இருக்கிறார்கள்" என்று கூறுவாள்.


படப்பிடிப்பு ஒன்றில் பாலுமகேந்திராவுடன்...

விளையாட்டு

பாலுவுக்கு தலைமுடி அதிகம் கிடையாது. இருக்கிற முடியையும் ஷோபா விடமாட்டாள். தலையை படிய வாரி, இரண்டாகப் பிரித்து, ரப்பர் பேண்டு போடுவாள். பிறகு அகிலாவை அழைத்து, ''ஆண்டி! அங்கிள் இருக்கிற அழகைப் பாருங்கள்" என்று தலையைத் திருப்பிக் காட்டுவாள். எல்லோரும் சிரிப்போம். ஒருநாள் ஷோபா, பாலுக்கு இப்படி தலை அலங்காரம் செய்து காட்டியபோது, "உன் அங்கிளுக்கு முன்பு இருந்த தலை முடிதான் அழகு" என்றாள், அகிலா. (பாலுக்கு முன்பு தலைமுடி சுருள் சுருள் ஆக இருந்ததாக அகிலா கூறுவாள்)

எண்ணெய்

"அங்கிள்! "அம்லா, ஹேர் ஆயில்” என்ற எண்ணெயை இப்பொழுது தலைக்குத் தேய்த்து வருகிறார். அதனால், தலைமுடி வளர்ந்து வருகிறது" என்றும் அகிலா சொன்னாள். "மம்மி! எனக்கும் அந்த எண்ணெய் வாங்கித் தாருங்கள்” என்று ஷோபா என்னிடம் கேட்டாள். "அங்கிளிடம் கேள். பணம் கொடுத்துவிடலாம்" என்று நான் சொன்னேன். உடனே பாலு, "பிரேம்! ஏன் என்னை பிரித்துப் பார்க்கிறீர்கள்? என் மகளுக்கு நான் வாங்கிக் கொடுக்கமாட்டேனா!'' என்றார். சொன்னபடியே, ஷோபாவுக்கு "அம்லா ஹேர் ஆயில்" பாட்டில் ஒன்று வாங்கிக் கொடுத்தார்.


அழகு பதுமையாக ஷோபா

நரை

அடுத்து ஒருநாள் பாலுவும் அகிலாவும், எங்கள் வீட்டுக்கு வந்தபோது, பாலுவின் தலையில் நரை முடி இருப்பதை ஷோபா, பார்த்துவிட்டாள். ''ஆ! அங்கிளுக்கு முடி நரைத்துவிட்டது" என்று கத்தினாள். "அங்கிள் இரண்டு நாளாக முடிக்கு "டை" அடிக்கவில்லை. அதனால்தான் நரை தெரிகிறது" என்றாள், அகிலா. உடனே ஷோபா, "அங்கிள்! நீங்கள் ஏன் நரையை மறைக்க வேண்டும்? அது இருந்தால்தான் உங்களைப் பார்க்க "மெஜஸ்டிக்" ஆக இருக்கிறது. "ஷோபா அங்கிள்" என்று சொல்லிக்கொள்ளவும் நன்றாக இருக்கும்” என்றாள். “என் அப்பா தலைக்கு "டை" அடிப்பது இல்லை. அம்மாவிடம், "நரை விழுந்தால், மை பூசக்கூடாது" என்று கூறியிருக்கிறேன். பெரியவர்களுக்கு நரை இருந்தால்தான் பெருமை என்று அவள் சொன்னாள். "இருப்பதே நாலு முடி. இதற்கு ஏன் "டை" அடிக்க வேண்டும்? மை தயாரிக்கும் கம்பெனியை மூடிவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? இந்த வயதிலும், இளமையாக இருப்பது போல மற்றவர்களிடம் காட்டிக்கொள்ள ஆசைப்படுகிறீர்களா?" என்றும் ஷோபா கேட்டாள்!

வைத்த குறி

அதற்கு பாலு, "ஷோபா! இன்னும் இரண்டு ஆண்டுக்கு நான் "டை" அடித்தே ஆகவேண்டும். அதன்பிறகு, உனது விருப்பப்படியே "டை" அடிப்பதை விட்டுவிடுகிறேன்" என்றார்! அந்த இரண்டு ஆண்டு "கெடு" எதற்கு என்பதை அப்போது நாங்கள் புரிந்து கொள்ளவில்லை.

(தொடரும்)

Updated On 24 Dec 2024 10:24 AM IST
ராணி

ராணி

Next Story