இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம் ’லால் சலாம்’. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதோடு, விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் கதையின் நாயகர்களாக இணைந்துள்ளனர். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் வரும் ரஜினிகாந்த், ஸ்டைலான தாடி மற்றும் கருப்பு கண்ணாடியுடன் வந்து ரசிகர்களை வசீகரித்துள்ளார். 28 ஆண்டுகளுக்கு முன் நடித்த பாட்ஷா படத்திற்கு பிறகு, நடிகர் ரஜினிகாந்த் முஸ்லீம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் இப்படம் கூடுதல் கவனம் பெறுகிறது. பொதுவாகவே நடிகர் ரஜினிகாந்த் மீது ஆன்மீகவாதி, பாஜக ஆதரவாளர் என்ற பிம்பம் இருந்து வரும் நிலையில், ’லால் சலாம்’ படத்தில் அவர் ஏற்றுள்ள கதாபாத்திரம் எந்த மாதிரியான மனநிலை மாற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த போகிறது, இஸ்லாமியர்களுக்கும் ரஜினிக்கும் இடையிலான உறவு கடந்த காலங்களில் எப்படிப்பட்டதாக இருந்தது, தன்னுடைய படங்களில் எந்த அளவிற்கு நடிகர் ரஜினிகாந்த் முஸ்லீம் மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்துள்ளார் போன்ற சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

ரஜினிகாந்த் வாழ்வில் இஸ்லாமியர்கள்

எப்போதுமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று சொன்னாலே நம் மனதில் முதலில் நினைவுக்கு வருவது அவரது ஸ்டைலும், சுறுசுறுப்பான நடிப்பும்தான். இருப்பினும் அவரின் சொந்த வாழ்க்கை மற்றும் சித்தாந்தத்தின் கண்ணோட்டத்தோடு உற்று பார்க்கும் போது அவர் ஒரு ஆன்மீகவாதியாகவும், இந்துத்துவாக் கொள்கைகளை பின்பற்ற கூடிய நபராகவுமே பலருக்கும் புலப்படுவார். இதற்கு சாட்சியாக அவர் அடிக்கடி இமயமலைக்கு செல்லும் நிகழ்வையும், அரசியலில் இறங்க திட்டமிட்டபோது, அவர் அறிவித்த 'ஆன்மீக அரசியல்' தத்துவத்தையுமே கூறலாம். இருப்பினும் பிற மதத்தவர்கள் மீது அன்புக்காட்டுவதிலும், அவர்களை அரவணைப்பதிலும் ரஜினிக்கு நிகர் ரஜினி மட்டுமே என்று தான் கூற வேண்டும். அதிலும் இஸ்லாமியர்கள் மீது அவர் வைத்திருந்த அளவு கடந்த அன்பு என்பது வார்த்தைகளால் சொல்ல முடியாது. இதற்கு உதாரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டில் 2.0 திரைப்படத்தின் ப்ரமோஷனுக்காக துபாய் சென்றிருந்த ரஜினிகாந்த், அங்கு அவருக்கும் இஸ்லாமிய மக்களுக்கும் இடையே இருக்கும் விளக்க முடியாத உறவு குறித்து உணர்வுபூர்வமாக பேசியிருந்தார். அப்போது அவர் “ 70களின் முற்பகுதியில் நான் பேருந்து நடத்துனராக இருந்தபோது, ​​அந்தப் போக்குவரத்தில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் இஸ்லாமியர்கள் தான். அதனால் எனக்கு அப்போது பல முஸ்லிம் நண்பர்கள் இருந்தனர். நான் சென்னை வந்தபோது நண்பர் ஒருவரின் வீட்டில் பேயிங் கெஸ்டாக இருந்தேன். அந்தக் கட்டிடத்தின் உரிமையாளரும் ஒரு இஸ்லாமியர் தான். அவர் எனக்கு நல்ல நண்பராக இருந்தார். பிறகு நான் பிரபலமடைந்து, போயஸ் கார்டனில் சொந்தமாக வீடு ஒன்று வாங்கினேன். அந்த வீடும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவரிடம் இருந்துதான் விலைக்கு வந்தது. ஏன், எனது ராகவேந்திரா மண்டபம் கூட முன்பு இஸ்லாமியர் ஒருவருக்கு சொந்தமானது தான். அந்த வகையில் எப்போதுமே என் வாழ்வில், இஸ்லாமிய சகோதரர்கள் முக்கிய நபர்களாக இருந்துள்ளனர் ” என நெகிழ்ச்சியாக நினைவு கூர்ந்திருந்தார்.


இஸ்லாமியர்களுடன் நட்பு பாராட்டும் நடிகர் ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் படங்களில் இஸ்லாமியர்கள்

எந்த மதத்தினரையும் உயர்த்தியோ, எந்த மதத்தையும் காயப்படுத்தியோ இதுவரை எந்த படத்திலும் நடித்திராத ரஜினிகாந்த் பல படங்களில் இந்துவாக மட்டும் இல்லாமல் கிறிஸ்துவராகவும், இஸ்லாமியராகவும் நடித்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்துள்ளார். இதற்கு உதாரணமாக 'ஸ்ரீ ராகவேந்திரர்' படத்தில் நடித்த இதே ரஜினிகாந்த் தான் 'நான் வாழவைப்பேன்' படத்தில் மைக்கேலாகவும், 'மூன்று முகம்' படத்தில் அலெக்ஸ் பாண்டியனாகவும் நடித்து அசத்தினார். இஸ்லாமிய கதாபாத்திரங்களை பொறுத்தவரை துவக்ககாலத்தில் ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ படத்தில் முஸ்லிமாக நடித்திருந்த ரஜினி, ‘தீ’ படத்தில் ‘786' என எழுதப்பட்டிருக்கும் அடையாளப் பட்டையை அணிந்து கவனம் பெற்றதோடு, அப்படத்தில் ஒரு முஸ்லிம் நண்பர் கதாபாத்திரத்தையும் உருவாக்கி நட்பு பாராட்டியிருந்தார். அதே போல் ரஜினிகாந்த் நடிப்பில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த ‘படிக்காதவன்’ படத்திலும் ரஜினியை வளர்க்கும் நாகேஷ் கதாபாத்திரம் ஒரு இஸ்லாமியராக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.


நடிகர் ரஜினிகாந்தின் படத்தில் வரும் முஸ்லீம் கதாபாத்திரங்கள்

இருப்பினும் இந்த படங்கள் அனைத்துமே இந்தி பட ரீமேக் என்பதால் பெரிய கவனம் பெறவில்லை. பின்னர் 1990-களில் ‘தளபதி’ படத்தில் இஸ்லாமிய வீட்டின் மரணம் ஒன்றில் முன்னணி ஆளாக ரஜினி கலந்துகொள்ளும் படி காட்சி வைக்கப்பட்டு மத ஒற்றுமையை பேசியிருந்த ரஜினி, அவரின் ஆன்மீக அரசியலை முன்னிறுத்தி கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த 'பாபா' படத்திலும் முஸ்லிம் நண்பராக கிட்டி கதாபாத்திரத்தை வடிவமைத்திருந்தார். அதிலும் ரஜினி அவரோடு சேர்ந்து ‘அல்லா அருணாச்சலா’ என்ற காய்கறி கடையில் பணியாற்றுவது போல் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது அந்த சமயம் மிகவும் கவனம் பெற்றது. பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு அடுத்தடுத்த படங்களான ‘கபாலி’ படத்தில் ஜான் விஜயின் அமீர் கதாபாத்திரம், ‘காலா’ படத்தில் ஹூமா குரேஷியின் சரீனா கதாபாத்திரம் என நண்பன், காதலி போன்ற ஒவ்வொரு உறவுகளிலும் முஸ்லீம் சகோதரர்களையும் அரவணைத்துக் கொண்ட ரஜினி, தனது மத சார்பற்ற சிந்தனையை தன் படங்களின் வாயிலாக தொடர்ந்து அடிக்கோடிட்டு காட்டி வந்தார்.

மாணிக் பாட்ஷாவாக கலக்கிய ரஜினி

நடிகர் ரஜினிகாந்துடன் நக்மா, ரகுவரன், சரண்ராஜ், ஜனகராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க கடந்த 1995ம் ஆண்டில் வெளியான சூப்பர்ஹிட் படம் 'பாட்ஷா'. என்ன தான் ரஜினிகாந்த் இதற்கு முன்பும், இதற்கு பின்னரும் பல படங்களில் முஸ்லீம் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருந்தாலும், படத்தின் டைட்டில் தொடங்கி, படத்தின் மையக்கருவரை இந்து-முஸ்லிம் ஒற்றுமை குறித்து பேசியிருந்த முதல் படம் என்றால் அது 'பாட்ஷா' திரைப்படம் தான். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியிருந்த இப்படத்தில், அமைதியான ஆட்டோ டிரைவராக ஒரு பக்கமும், பிளாஷ்பேக்கில் அதிரடி பாட்ஷாவாகவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தார். குறிப்பாக இந்து-முஸ்லீம் ஒற்றுமை குறித்து மிக ஆழமாக பேசியிருந்த இப்படத்தில் மாணிக்கமாக வரும் ரஜினிகாந்த் ஒருகட்டத்தில் நண்பனின் மறைவிற்கு பிறகு, அவனது பெயரையும் சேர்த்து மாணிக் பாட்ஷாவாக மாறும் காட்சியை இன்றும் சிலாகித்து பேசாதவர்கள் இருக்கமாட்டார்கள். “நான் ஒரு தடவ சொன்னா 100 தடவ சொன்ன மாதிரி” என்று இப்படத்தில் ரஜினி பேசிய வசனம் அன்று பட்டித்தொட்டியொங்கும் பட்டையை கிளப்பியது.


'பாட்ஷா' திரைப்படத்தில் மாணிக் பாட்ஷாவாக தோன்றிய நடிகர் ரஜினி

ரஜினியின் மாஸ் ஹீரோ பிம்பத்தை இன்னொரு உயரத்திற்கு எடுத்துச் சென்ற இப்படத்திற்கு பிறகுதான், ரஜினியை சுற்றி அரசியல் பரபரப்புகள் வலுவாக சூழத் தொடங்கின. தமிழ் சினிமா கண்ட இன்டஸ்ட்ரி ஹிட்டில் 'பாட்ஷா' படத்திற்கு எப்போதுமே முக்கிய இடம் உண்டு. பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'பேட்ட' படத்திலும், முஸ்லிம் நண்பன்... உயிர் நண்பனைக் கொன்றவனை அடியோடு அழிப்பது... உயிர் நண்பனின் குடும்பத்தை தன் குடும்பமாக எண்ணி அவர்களை காப்பது என 'பாட்ஷா' பட பாணியிலேயே சற்று வித்யாசமாக நடித்து இந்து-முஸ்லீம் ஒற்றுமையை மறைமுகமாக பேசியிருந்தார் ரஜினி. இதில் உச்சபட்சமான நிகழ்வு என்னவென்றால், படத்தில் வில்லனாக வரும் நவாசுதீன் சித்திக்கை இந்துத்துவா அரசியல்வாதியாக காட்டியதுதான். இந்த நிகழ்வு அந்த சமயம் பேசு பொருளாக மாறியதோடு, ரஜினியின் மதசார்பற்ற நிலைப்பாட்டை வெளிப்படையாக காட்டியுள்ளதாக கூறி அவரது ரசிகர்கள் பாராட்டினர்.

லால் சலாம் டீசரும்... பேசும் அரசியலும்...

என்னதான் நடிகர் ரஜினிகாந்த் இஸ்லாமியர்களை தனக்கு மிகவும் நெருக்கமான நபர்களாக காட்டி பல படங்களில் நடித்திருந்தாலும், சித்தாந்த அடிப்படையில் அவரது பேச்சிலும், செயலிலும் பல முறை பல தடுமாற்றங்கள் இருந்துள்ளது. உதாரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு சிஏஏ எனும் குடியுரிமை திருத்த சட்ட மசோதா மத்திய அரசினால் நிறைவேற்றப்பட்டபோது, குடியுரிமை சட்டத் திருத்தத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்திருந்தார். பின்னர் சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை முஸ்லீம் அமைப்பு தலைவர்கள் சந்தித்து சிஏஏ-வினால் முஸ்லீம்களுக்கு இருக்கும் பாதிப்புகள் குறித்து விளக்கமளித்த போது, நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருப்பதாக ரஜினிகாந்த் அறிவித்தார். இப்படி அரசியல் ரீதியாக சில குழப்பமான மனநிலை அவரிடம் இருப்பதால் தான், ரஜினியை பாஜக ஆதரவாளர் என பலரும் கூறுகின்றனர். இந்த சூழலில்தான் தற்போது நடிகர் ரஜினிகாந்த் அவரின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் 'லால் சலாம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் மொய்தீன் பாய் என்கிற முஸ்லீம் கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


'லால் சலாம்' படத்தில் ரஜினியின் வித்தியாசமான தோற்றங்கள்

சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு, அதில் இடம்பெற்றிருந்த காட்சிகளும், வசனங்களும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக ரஜினியின் மாஸான என்ட்ரிக்கு பிறகு அவர் பேசும் 'விளையாட்டுல மதத்தை கலந்துருக்கீங்க, குழந்தைங்க மனசுல விஷத்தை விதைச்சிருக்கீங்க' என்ற வசனம் இன்றைய உலகக்கோப்பை சமூகவலைத்தள சண்டைகளுக்கு கனகச்சிதமாக பொருந்தியிருந்தது. இப்படி துணிச்சலான பேச்சினால் ரசிகர்களின் மனம் கவர்ந்துள்ள ரஜினிகாந்த், தனது அடுத்தப்படமான ஜெய்பீம் பட புகழ் ஞானவேல் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்திலும் இஸ்லாமிய போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம், அவர் மீது பாஜக-காரர் என்ற முத்திரை குத்தப்பட்டிருப்பதால் அதை நீக்குவதற்காகத்தான் அவர் இஸ்லாமிய கதாபாத்திரங்களை தொடர்ந்து தேர்வு செய்து நடிப்பதாக சிலர் கூறுகின்றனர். இருந்தும் ரஜினியை பொறுத்த வரை கொள்கையில் சில முரண்பாடுகள் பலருடன் அவருக்கு இருந்தாலும், அன்புக் காட்டுவதில் எப்போதுமே மதசார்பற்ற ஒரு மாமனிதர் தான்.

Updated On 28 Nov 2023 12:10 AM IST
ராணி

ராணி

Next Story