“முஸ்தஃபா முஸ்தஃபா டோன்ட் வொர்ரி முஸ்தஃபா” என்று நட்பை கொண்டாடும் இந்த பாடல் யாருக்கு கச்சிதமாக பொருந்துகிறதோ இல்லையோ, இந்த பாடலை இசையமைத்தவருக்கே சரியாக பொருந்தும். காரணம் இவர் இசைக்கு மட்டும் தனித்துவமானவர் அல்ல. நட்பு பாராட்டுவதிலும், நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும், அவர்களை ஊக்கப்படுத்திவதிலும் மிகச்சிறந்த மனிதர். அவர் வேறு யாரும் இல்லை. இசை தேடலில் நாளுக்கு நாள் தனி முத்திரை பதித்து வரும் இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான்தான். இவர் மறைந்த தனது நெருங்கிய நண்பரான பின்னணி பாடகர் ஷாகுல் ஹமீத் மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்டவர். இவ்விருவரின் நட்பையும் வெறும் வார்த்தைகளால் விவரித்திட முடியாது. அதற்கு சாட்சிதான் தன் நண்பனை தான் இசையமைத்த பல படங்களில் பாட வைத்து அழகு பார்த்தது. அப்படிப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மான் செயற்கை நுண்ணறிவு என்று சொல்லப்படும் AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மீண்டும் தனது நண்பனின் குரலுக்கு உயிர் கொடுத்து, பாட வைத்திருக்கும் நிகழ்வு தமிழ் இசை ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது. இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஷாகுல் ஹமீத் இருவருக்கும் இடையே உள்ள ஆழமான நட்பு பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.
ஷாகுல் ஹமீத்தை மறக்க முடியுமா?
மறைந்து சுமார் 26-ஆண்டுகளை கடந்த பிறகும், தமிழ் திரை இசை ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறார் ஒருவர். அவர் வேறு யாரும் இல்லை. தன் மாயாஜாலக் குரலால் அனைவரையும் கட்டிப்போட்டு, நம் நாடி நரம்புகளில் எல்லாம் ஒன்றரக் கலந்திருக்கும் மறைந்த பின்னணி பாடகர் ஷாகுல் ஹமீத்தான். தூத்துக்குடி அருகே வைப்பார் என்ற கிராமத்தில் சையது இப்ராஹிம் - ஆசியா மரியம் என்பவர்களுக்கு மகனாக 1953-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி பிறந்த ஷாகுல் ஹமீத்திற்கு சிறுவயதில் இருந்தே பாடுவது என்றால் மிகவும் பிடிக்குமாம். அதற்கு மிக முக்கிய காரணம் அவரது அம்மா ஆசியா மரியம் தானாம். விவசாய குடும்பம் என்பதால் வயலில் வேலை செய்யும் தருணங்களில் எல்லாம் அவரது அம்மா மரியம் பாடிக்கொண்டே பணி செய்வாராம். இதை பார்த்து வளர்ந்த ஷாகுல் ஹமீத்திற்கும் பாடுவது என்பது மிகவும் எளிதாக வந்துவிட்டது. அந்த சிறுவயதிலேயே இவர் பாடும் பாடல்களால் மிகவும் ஈர்க்கப்பட்ட அப்பகுதி மக்கள் இவரை மாலை நேரங்களில் அமர வைத்து பாட சொல்லி கேட்பார்களாம்.
இப்படி பாடிக்கொண்டே ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் தனது பள்ளி படிப்பை முடித்தவர், மேற்படிப்பிற்காக சென்னை வந்துள்ளார். இங்கு நியூ காலேஜ் அதாவது புது கல்லூரியில் சேர்ந்து படித்தவர், கிராமத்தில் கற்றுக்கொண்ட பாடல்களை காலேஜ் கல்ச்சுரல் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பாடுவாராம். அப்படி பாடல்களில் ஈடுபாட்டோடு பாடி வந்த நேரத்தில்தான் முதல் முறையாக அகில இந்திய வானொலியில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்து பாடியுள்ளார். பின்னர் அங்கிருந்து அப்போது மக்களால் மிகவும் விரும்பி பார்க்கப்பட்ட தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் பாடும் வாய்ப்பு கிடைத்து அதிலும் பாடியவர், இடையிடையே மேடை கச்சேரி நிகழ்ச்சிகளிலும் பாடி வந்தார். 1980 களின் ஆரம்பத்தில் ஷாகுல் ஹமீது தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த இசைத்தென்றல் என்ற பாடல் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு 30-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருந்த நேரத்தில்தான் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் அறிமுகம் கிடைத்துள்ளது. இந்த அறிமுகம்தான் ஷாகுல் ஹமீத் என்ற மேடை பாடகரை, சினிமா பின்னணி பாடகராக உயர்த்தியது.
பாடகர் ஷாகுல் ஹமீது மற்றும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர் ரஹ்மான் - ஷாகுல் ஹமீது நட்பு
தமிழ் திரை இசை உலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகமும், ஹாலிவுட் சினிமாவும் கொண்டாடி தீர்க்கும் ஒருவராக உள்ள ஏ.ஆர்.ரஹ்மானும், ஷாகுல் ஹமீதும் நெருங்கிய நண்பர்கள் என்பது இன்றைய தலைமுறையினருக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் 80, 90-களை கடந்து வந்த, இசையை உயிராக நேசிக்கும் அனைவருக்கும் இவர்களின் நட்பு மிகவும் பரிட்சயமானது. இத்தனைக்கும் இவ்விருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் பெரியளவில் இருந்தாலும், வயதை கடந்து அன்பெனும் கூட்டுக்குள் இருவரது நட்பும் ஒளிர்ந்து வந்தது. தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த இசைத்தென்றல் என்ற பாடல் நிகழ்ச்சி மூலமாக பலருக்கும் பரிட்சயமாகி இருந்த ஷாகுல் ஹமீத்திற்கு, 1982-ஆம் ஆண்டு நடந்த ஒரு இசைக் கச்சேரி வாயிலாகத்தான் ஏ.ஆர்.ரஹ்மானின் அறிமுகம் கிடைத்துள்ளது. அந்த அறிமுகமே பின்னாட்களில் இருவரது குடும்பத்திலும் எந்த விசேஷ நிகழ்ச்சிகள் நடந்தாலும் இருவரும் ஒன்றாகவே கலந்து கொள்ளும் அளவுக்கு இருவரையும் நெருக்கமான நண்பர்களாக மாற்றியது. மேலும், இந்த நெருக்கம்தான் இருவரும் இணைந்து இசை ஆல்பம் அமைத்து வெளியிடும் அளவுக்கு கொண்டு சென்றது. அந்த வகையில், 1989-ஆம் ஆண்டு இருவரும் இணைந்து ” தீன் இசைமாலை ” எனும் இஸ்லாமிய பக்தி பாடல்களை இசையமைத்து அதன் தொகுப்பை வெளியிட்டுள்ளனர். அப்போது ஏ ஆர் ரஹ்மான், திலீப் குமார் என்ற தன் இயற்பெயரில் இசை அமைத்துக் கொண்டிருந்தாராம் .இருவரும் சேர்ந்து வெளியிட்ட அந்த ஆல்பத்தில் “எல்லா புகழும் இறைவனுக்கே“, “எங்கள் அப்துல்“, “நாகூர் ஷாகுல் ஹமீது” , “அற்புதம் ஓங்கும்”, “இறையோரின் இறை பெற்ற”, “எண்திசை உள்ளோரும்” மற்றும் “நபி நாதரின்” என பல பாடல்களை ஏ ஆர் ரஹ்மான் இசையில் ஷாகுல் ஹமீது பாடியிருப்பார். மற்ற பாடல்களை மனோ, சுஜாதா ஆகியோர் பாடினார்களாம்.
இப்படி 90-களின் இறுதிவரை நண்பன் ஷாகுல் ஹமீத்தை வைத்து ஆல்பம் மற்றும் தனிப்பட்ட முறையில் விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 1992-ஆம் ஆண்டு கிடைத்த இயக்குநர் மணிரத்னத்தின் அறிமுகத்தால் இசையமைப்பாளராகும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் ‘ரோஜா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான், தன் முதல் படத்திலேயே தனது நண்பனின் குரலில் ஒரு பாடலை பதிவு செய்யவேண்டும் என விரும்பினாராம். அதற்கான சூழ்நிலை அமையாமல் போகவே மிகவும் வருத்தப்பட்டாராம். இந்த வருத்தத்தை சரி செய்யும் விதமாக அடுத்த ஆண்டே ‘புதிய முகம்’, ‘ஜென்டில்மேன்’, ‘கிழக்கு சீமையிலே’, ‘உழவன்’, ‘திருடா திருடா’ என தான் இசையமைத்த 5 படங்களில், தொடர்ந்து 4 படங்களில் ஷாகுல் ஹமீத்தை பாட வைத்தார். இதில் சிறப்பு என்னவென்றால் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஷாகுல் பாடிய “உசிலம்பட்டி பெண்குட்டி”, “எதுக்கு பொண்டாட்டி”, “மாரி மழை பெய்யாதோ”, “ராசாத்தி” ஆகிய 4 பாடல்களுமே பட்டிதொட்டியெல்லாம் ஒரு கலக்கு கலக்கியதோடு, மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்தன. இதில் குறிப்பாக பிரசாந்த் நடித்து வெளிவந்த ‘திருடா திருடா’ படத்தில் வரும் “ராசாத்தி” பாடல் 90ஸ் கிட்ஸ்களின் வரப்பிரசாத பாடலாக அமைந்தது. இன்றும் இந்த பாடலை தேடிச்சென்று விரும்பி கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட இந்த பாடலின் ரெக்கார்டிங் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் ஷாகுல் ஹமீத் மனைவியிடம் கேட்ட முதல் வார்த்தை நீங்க ஷாகுலை லவ் பண்ணித்தா கல்யாணம் செஞ்சீங்களா?. ஏன்னா உங்க வீட்டுக்கார் ரொம்பவே உருகி ”ராசாத்தி” பாடலை படியிருக்கார் என்று கூறினாராம்.
மனைவி மும்தாஜுடன் பாடகர் ஷாகுல் ஹமீது
இவரைப்போலவே, ராசாத்தி என் உசுரு பாடலை கேட்ட இயக்குநர் இமயம் பாரதிராஜாவும், கவிஞர் வைரமுத்துவிடம் இந்த பாடலை என்னுடைய படத்திற்கு தானே எழுதியிருக்க வேண்டும்; ஏன் மாற்றி எழுதுனீங்க என்று கேட்டு சண்டை போட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளது. பிறகு இந்த பாடலின் தெலுங்கு பதிப்பான “சிட்டாலு” பாடலையும் ஷாகுலே பாடி அங்கும் தெலுங்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் . இதன் பிறகு தொடர்ந்து நண்பனின் இசையிலேயே ஷாகுல் பாடி வெளிவந்த ‘வண்டிச்சோலை சின்ராசு’ படத்தில் “செந்தமிழ் நாட்டு தமிழச்சியே”, ‘கருத்தம்மா’ படத்தில் “பச்சைக்கிளி பாடும்”, ‘காதலன்’ படத்தில் “ஊர்வசி ஊர்வசி” ஆகிய பாடல்கள் ஷாகுலை இன்னும் புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றன. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையில் நண்பனை பாட வைத்து அழகு பார்த்தார் என்பதை விட, தனது நண்பரின் குரலை மிக சரியாக பயன்படுத்தி தமிழ் ரசிகர்களின் மனதை கட்டி போட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி நண்பனின் இசையிலேயே தொடர்ந்து பாடி புகழ்பெற்ற ஷாகுல், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மட்டுமில்லாமல் சௌந்தர்யன், ஆதித்யன், வித்யாசாகர், தேவா போன்ற வேறு சில இசையமைப்பாளர்களின் இசையமைப்பிலும் பாடி அசத்தினார். ஆனால் ஏனோ தெரியவில்லை ‘சிந்துநதி பூ’ படத்தில் வரும் “ஆத்தாடி என்ன உடம்பு”, ‘நேருக்கு நேர்’ படத்தில் வரும் “அவள் வருவாளா” ஆகிய பாடல்களைத் தவிர ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இவர் பாடிய பாடல்கள் அளவிற்கு வேறு எந்த இசையமைப்பாளர்களின் பாடல்களும் ஹிட் கொடுக்கவில்லை.
மீண்டும் உயிர் பெற்ற ஷாகுல் ஹமீது
பொதுவாகவே ஷாகுல் ரெக்கார்டிங்கிற்கு கிளம்பி வெளியில் செல்கிறார் என்றாலே, அவர் பாடி முடித்துவிட்டு வரும்வரை அன்றைய தினம் முழுவதும் ஷாகுலின் மனைவி, இரண்டு மகள்கள் அனைவரும் ரஹ்மானின் வீட்டில்தான் இருப்பார்களாம். இப்படி நெருக்கமாக இருந்த இந்த நண்பர்கள் மீது யார் கண் பட்டதோ காலம் இருவரும் பிரியும்படியான நிலையை ஏற்படுத்திவிட்டது. இடைவிடாத சினிமா பாடல்களுக்கு நடுவிலும், இஸ்லாமிய பக்திப் பாடல்களையும் பாட தவறாத ஷாகுல் ஹமீது, 1998-ஆம் ஆண்டு அவரது 45-வது வயதில் காரில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது உளுந்தூர்பேட்டை அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார் . சினிமாவிலும், வெளியிலும் யாரிடமும் நெருங்கி பழகாத ரஹ்மான், ஷாகுல் ஹமீத்திடம் மட்டும் நெருக்கமான நட்பு பாராட்டி உள்ளார். ஷாகுல் ஹமீது இறந்த போது மிகுந்த மனவேதனையில் இருந்ததோடு, ஒரு நல்ல நண்பனை, சிறந்த மனிதாபிமானியை இழந்து விட்டோமே என்று மிகவும் வருத்தப்பட்டாராம். இருந்தும் இன்றுவரை ஷாகுல் குடும்பத்திற்கு ஏதோ ஒருவகையில் உதவியாக இருந்து வருவதோடு, தந்தை இல்லாத குறையை, அவரது இடத்தில் இருந்து அவரது மகள்களுக்கு செய்து வருகிறார் ரஹ்மான். இன்றும் மகள்கள் இருவருக்கும் நடக்கும் நல்ல காரியங்கள் அனைத்திலும் கலந்துகொண்டு முன்னின்று செய்து வைப்பது ரஹ்மான்தானாம். இதனை ஷாகுலின் மகளே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
'லால் சலாம்' படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி மற்றும் ரஜினிகாந்த், சுபாஸ்கரனுடன் ஏர்.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்ட தருணம்
இந்நிலையில், ஷாகுல் ஹமீது மறைந்து கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் கடந்துவிட்ட இந்த சூழலிலும், தனது நண்பன் ஷாகுல் ஹமீத்தையும் அவரின் தனித்துவமான அந்த மாயாஜாலக் குரலையும் இன்னும் ரஹ்மான் மறக்கவில்லை என்பதற்கு சாட்சியாக சில தினங்களுக்கு முன் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘லால் சலாம்’. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இன்னும் சில தினங்களில் அதாவது பிப்ரவரி 9-ஆம் தேதி அன்று திரைக்கு வர உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்ட இந்த இசை வெளியீட்டு விழாவில் லால் சலாம் பட பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டன. அந்த வகையில் இதில் இடம்பெற்றுள்ள ‘திமிறி எழுடா‘ என்கிற பாடலை மறைந்த பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் ஷாகுல் ஹமீது பாடி உள்ளதாக அங்கு கூறப்பட்டது. ஓராண்டுக்கு முன் இறந்த பம்பா பாக்யாவும், 27 ஆண்டுகளுக்கு முன் மறைந்த ஷாகுல் ஹமீதும் எவ்வாறு இந்த பாடலை பாடி இருக்க முடியும்? எப்படி இது சாத்தியம் ஆனது? என்பதுதான் அப்போது அங்கிருந்த அனைவரது கேள்வியாக இருந்தது.
'லால் சலாம்' படத்தின் போஸ்டரில் பாடகர்கள் பெயர் வரிசையில் ஷாகுல் ஹமீது மற்றும் பம்பா பாக்கியா பெயர்கள்
அப்போதுதான் இப்படத்தில் AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் “திமிறி எழுடா” பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ளார் என்கிற விவரம் பலருக்கும் தெரிய வந்தது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த பதிவில் “பம்பா பாக்யா மற்றும் ஷாகுல் ஹமீது ஆகிய இருவரது குரல் வழிமுறைகளைப் பயன்படுத்தியதற்காக அவர்களது குடும்பத்தினரிடம் அனுமதி பெற்று தகுந்த ஊதியத்தை கொடுத்துள்ளோம். தொழில்நுட்பத்தை நாம் சரியாகப் பயன்படுத்தினால் அது அச்சுறுத்தலும் தொல்லையும் அல்ல... நன்மையே தரும்" என தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் மற்றொரு நண்பரான பம்பா பாக்யாவுடன் ஒப்பிடும்போது ஷாகுல் ஹமீது மிக பெரிய பாடகராக வளர்வதற்கு முன்பே மறைந்துவிட்டார். அப்படி இருந்தும் இசைப்புயலின் மனதிற்கு நெருக்கமான நண்பர் என்பதோடு, தனித்துவமான குரல் வளம் படைத்தவர் என்பதால்தான் இந்த புதிய தொழில்நுட்ப முறையில் தனது நண்பரின் குரலையும் இணைத்துக் கொண்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தான் அறிமுகமான காலம் தொட்டு, AI போன்ற புதிய தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி பாடல் உருவாக்கும் இந்த காலம்வரை தன் நண்பனை நினைவில் வைத்து அடையாளம் கொடுத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மானை, நிச்சயம் நட்பினை போற்றும் அனைவரும் பாராட்டுவார்கள்.