
(22.06.1975 தேதியிட்ட `ராணி’ இதழில் வெளியானது)
எனக்குத் திருமணம் என்றதும் மகிழ்ச்சி அடைந்தவர் பலர். வியப்புக் கொண்டவர் பலர். `நடிகைகளின் பேச்சை நம்ப முடியாது' என்று கேலி செய்தவர், சிலர். அப்படி அவர்கள் கேலி செய்ததற்குக் காரணம் இருந்தது.
கன்னிகா மடம்
`கன்னிகா மடத்தில் சேரப் போகிறேன்' என்று ஏற்கனவே நான் அறிவித்து இருந்தேன். எனவே இப்பொழுது எனக்குத் திருமணம் என்றதும் அவர்கள் கேலி செய்கிறார்கள். ஆனால் எந்த சூழ்நிலையில் நான் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டேன் என்பதை அவர்கள் அறிந்தால், இப்படி கேலி செய்ய மாட்டார்கள். அதற்குப் பதில் என்னை வாழ்த்தவே செய்வார்கள்.
கஷ்டமான குடும்பம்
நான் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவள். குடும்பக் கஷ்டத்தினால்தான் சினிமாவில் நடிக்க வந்தேன். நான் திரையுலகில் புகுந்து 3 ஆண்டுதான் ஆகிறது. இந்தக் குறுகிய காலத்துக்குள் மூன்று மொழிகளில் 32 படங்களில் நடித்து முடித்து விட்டேன். இப்பொழுது 9 படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். இப்பொழுது என் குடும்பம் ஓரளவு வசதியாக இருக்கிறது. தொழிற்சாலைகளை ஏற்படுத்தி இருக்கிறேன். அவை என் குடும்பத்துக்கு நிரந்தரப் பாதுகாப்பாக இருக்கும். எனவே, சினிமாவில் நடித்தது போதும் என்று நான் நினைத்தேன்.
திரையில் நடிகை பிரமிளா
தொண்டு உள்ளம்
எனக்கு இயற்கையாகவே தொண்டு உள்ளம் உண்டு. ஏழைகளிடம் இரக்கம் காட்டுவேன். ஆகவே, எனது வாழ்க்கையை பயனுள்ள வாழ்க்கையில் அர்ப்பணிக்க முடிவு செய்தேன். இந்த உயிரும் உடலும், வாழ்வும், வளமும் கடவுள் கொடுத்தவை. எனவே கடவுள் பணியில் வாழ்க்கையைக் கழிக்க விரும்பினேன். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு அல்லவா? கன்னிகா மடத்தில் சேருவதன் மூலம் கடவுளுக்கும், மக்களுக்கும் ஒன்றுசேர தொண்டு செய்ய முடியும் என்று நான் நினைத்தேன். அந்த முடிவுடன்தான் கன்னிகா மடத்தில் சேரப் போவதாக அறிவித்தேன்.
பெற்றோர் கண்ணீர்
எனது அறிவிப்பைப் பார்த்து என் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தார்கள். நான் குடும்பத்தில் மூத்த பெண். என்னை மணக்கோலத்தில் காண வேண்டும் என்று அவர்களுக்கு ஆசையிருக்காதா? அவர்களின் ஆசையை என்னிடம் தெரிவித்தார்கள். என் முடிவை மாற்றிக் கொள்ளும்படி கண்ணீர் விட்டார்கள். திருமணம் செய்து கொள்ளும்படி கெஞ்சினார்கள். அன்னையும் தந்தையுந்தானே நமக்குக் கண்கண்ட தெய்வம்? `அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்பது ஆன்றோர் மொழி அல்லவா? ஆகவே, அவர்களின் வார்த்தையைத் தட்ட முடியவில்லை. கடவுள் சித்தம் எப்படியோ அப்படி நடக்கட்டும் என்று நான் சொல்லி விட்டேன். திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது. அது எனக்கு நடக்க வேண்டும் என்று இருந்தால் அதை நான் தடுத்துவிட முடியுமா என்ன?
நடிகை பிரமிளாவின் புகைப்பட தொகுப்பு
முதல் சந்திப்பு
சென்ற மாதம் தேனியில் நடந்த ஒரு திருமணத்துக்குப் போயிருந்தேன். அப்படியே தேக்கடிக்கு ஓய்வு எடுக்கச் சென்றேன். அங்கே அழகான இளைஞர் ஒருவரை என் பெற்றோர்கள் அழைத்து வந்தார்கள். `இவரைத்தான் உனக்கு நிச்சயம் பண்ணியிருக்கிறோம் ' என்று சொன்னார்கள். அவரைப் பார்த்ததுமே எனக்குப் பிடித்து விட்டது. முதல் பார்வையிலேயே அவர் மீது எனக்குக் காதல் அரும்பி விட்டது. `உனக்கு சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட கணவர் இவர்தான்' என்று என் மனம் கூறியது. நான் வெட்கத்துடன் தலை குனிந்தேன். அவர் என் உறவுக்காரர் என்ற விவரத்தை பிறகுதான் என் பெற்றோர்கள் தெரிவித்தார்கள். அவரது வீடு திண்டுக்கல்லில் இருக்கிறது. அவரது வீட்டுக்குக்கூட நான் போயிருக்கிறேன். ஆனால், அவரை பார்த்தது இல்லை. எழில்மிக்க தேக்கடியில்தான் எங்களது முதல் சந்திப்பு நடந்தது.
திண்டுக்கல்லில்
திருமணத்துக்குப் பின் நான் சினிமாவில் நடிக்கமாட்டேன். திண்டுக்கல்லில் குடியேறுவேன். என் கணவருடன் சேர்ந்து, புதிய தொழில்கள் தொடங்குவேன். சமூகத் தொண்டிலும் ஈடுபடுவேன். எனது குடும்ப வாழ்க்கை பாதிக்காத அளவில் சமூகப் பணிகள் ஆற்றுவேன். இதன் மூலம், கன்னிகா மடத்தில் சேர்ந்து நான் செய்ய நினைத்த சேவைகளை ஒரு குடும்பத் தலைவியாக இருந்து செய்வேன்.
