
வெயில், அங்காடித் தெரு வரிசையில், ‘அநீதி’ திரைப்படத்தின் மூலம் சாமானிய மக்களின் பிரச்சினைகளைப் பேசியிருக்கிறார் இயக்குநர் வசந்தபாலன். உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களின் வலியை இப்படத்தில் நெகிழ்ச்சியுடன் விவரித்திருக்கிறார்.
சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் அர்ஜுன் தாஸ், தினமும் அவர் சந்திக்கும் வாடிக்கையாளர்களால் அவமானப்படுத்தப்படுகிறார். அதுமட்டுமின்றி, சாக்லெட் மற்றும் சாக்லெட் தொடர்பான விளம்பரங்களும் அவரை வெறுப்பூட்டுகின்றன. இதனால் அவர் ஓசிடி என்ற மனநல குறைபாடு நோயால் பாதிக்கப்படுகிறார். மறுபக்கம் பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில் இருக்க, தனியாக ஒரு பெரிய வீட்டில் வசிக்கும் பணக்காரப் பாட்டி சாந்தா சீனிவாசனுக்கு உதவியாளராக பணியாற்றுகிறார் துஷாரா விஜயன்.
இந்நிலையில் அந்த வீட்டுக்கு உணவு டெலிவரி செய்வதற்காகச் செல்லும் அர்ஜுன் தாஸுக்கு துஷாரா விஜயனுடன் பழக்கம் ஏற்படுகிறது. நாளடைவில் அது காதலாக மலர்கிறது. அர்ஜுன் தாஸ் வாழ்வில் ஏற்படும் இந்த மாற்றம் அவரது மனநோயைக் குறைக்கிறது.
திடீரென சாந்தா சீனிவாசன் இறந்து விடுகிறார். அவர் எப்படி இறந்தார்? அந்த மரணம் அர்ஜுன் தாஸ்-துஷாரா விஜயன் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போடுகிறது என திரைக்கதையை வேறு தளத்திற்கு எடுத்துச் செல்கிறார் இயக்குநர். அதன்பிறகு மீண்டும் உணவு டெலிவரி ஊழியர்களின் போராட்டம், அவர்களுக்கு நேரும் அவலம் எனக் கதையை பழைய இடத்திற்கே இழுத்து வந்து முடிந்திருக்கிறார்.
அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர். பிளாஷ்பேக்கில் சில காட்சிகள் மட்டுமே வரும் காளி வெங்கட் மனதை கலங்கடிக்கும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது நடிப்பு படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. அர்ஜுன் சிதம்பரம், வனிதா விஜயகுமார், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோரின் வில்லத்தனமான நடிப்பு கதைக்கு வலு சேர்த்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை கதையோடு இசைந்து உயிரோட்டமாகச் செல்கிறது. ஏ.எம். எட்வின் சாக்கேயின் ஒளிப்பதிவில் பிளாஷ்பேக் காட்சிகள் மற்றும் இரவு நேரக் காட்சிகள் மனதைக் கவர்கின்றன. முதலாளித்துவ சுரண்டல், கார்பரேட் கலாச்சாரம், எளிய மக்களிடம் நடத்தப்படும் விசாரணை என பல்வேறு விஷயங்களைப் பேசியிருக்கும் ‘அநீதி’ திரைப்படம், பார்ப்பவர்களுக்கு அநீதி இழைக்காது என்றாலும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் நீதி சேர்த்திருக்கலாம்.
