நாம் எங்கு, எப்படி பிறந்து வளர்ந்திருந்தாலும் ஒரு சிறிய வாய்ப்பு நம் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடும். அதுவே ஒரு பெரிய வாய்ப்பு தேடிவந்தால்... அப்படித்தான் லண்டனில் பிறந்து வளர்ந்து அங்கு மாடலிங்கில் ஈடுபட்டு வந்த ஒரு இளம்பெண்ணுக்கு இந்தியாவிலிருந்து, அதிலும் குறிப்பாக தமிழ் திரையுலகிலிருந்து ஒரு வாய்ப்பு தேடிப்போனது. ஆம், இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் ஒரு சலவைத் தொழிலாளிக்கும் ஆங்கிலேய கவர்னரின் மகளுக்கும் இடையேயான காதலை சொல்லும் கதைக்காக இயக்குநர் ஏ.எல். விஜய் கதாநாயகியை தேடிக்கொண்டிருந்த சமயம் அது. அப்போதுதான் கண்ணில்பட்டார் லண்டன் அழகியான எமி ஜாக்சன். அதன்பிறகு என்ன..? நமது நாட்டு பெண்ணாகவே மாறிவிட்டார். தமிழ், தெலுங்கு, இந்தி என பிஸியாக ஓடிக்கொண்டிருந்த எமி, குழந்தை பிறப்புக்கு பிறகு இந்தியா பக்கம் வருவதை குறைத்துக்கொண்டார். இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழ் திரையில், அதுவும் இதுவரை அவர் நடித்திராத மாறுபட்ட கெட்டப்பில் தோன்றவுள்ளார். எமி ஜாக்சனின் திரை வளர்ச்சி மற்றும் இந்திய திரைப்படங்கள்மீது அவருக்குள்ள காதல் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.
எமி ஜாக்சனின் குடும்பத்தினர் மற்றும் மிஸ் டீன் வேர்ல்டு பட்டம் வென்ற தருணம்
யார் இந்த எமி ஜாக்சன்?
எமி லூயிஸ் ஜாக்சன், 1992ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்துக்கு இடையேயுள்ள ஒரு சுய ஆட்சி பகுதியில் பிறந்தார். இவர் இரண்டு வயதாக இருக்கும்போதே இவரது குடும்பம் லண்டனில் குடியேறியது. அங்கு பள்ளிப்படிப்பை முடித்த எமி, கல்லூரிப் படிப்பிற்காக லிவர்பூலுக்கு சென்றார். தொடர்ந்து ஆங்கிலம் மற்றும் தத்துவவியல் மேற்படிப்புக்காக சென்றபோதுதான் எமிக்கு மாடலிங் துறையில் நாட்டம் ஏற்பட்டிருக்கிறது. 2009ஆம் ஆண்டுக்கான ‘மிஸ் டீன் வேர்ல்டு’ பட்டத்தையும் வென்றார். இதன்மூலம் எமிக்கு திரைத்துறையில் வெளிச்சம் கிடைத்ததுடன், வாய்ப்புகளும் வந்து குவிந்தன. தொடர்ந்து 2010ஆம் ஆண்டு ‘மிஸ் லிவர்பூல்’ போட்டியில் வெற்றிபெற்றதுடன், ‘மிஸ் இங்கிலாந்து’ போட்டியில் ரன்னர்-அப் பெற்றார்.
இந்திய திரையுலகில் அறிமுகம்
பல்வேறு அழகிப் பட்டங்களை பெற்று லைம் - லைட்டிற்கு வந்த எமியின் ப்ரொஃபைலை மிஸ் டீன் வேர்ல்டு வெப்சைட்டில் பார்த்த இயக்குநர் ஏ.எல் விஜய், 2010ஆம் ஆண்டு அவரை தனது ‘மதராசப்பட்டினம்’ திரைப்படத்தின் கதாநாயகியாக தேர்ந்தெடுத்தார். அந்தப் படத்தில் பிரிட்டிஷ் கவர்னரின் மகளாக நடித்திருந்தார் எமி. இதனால் இந்திய திரையுலகில் எமிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு, ‘விண்னைத் தாண்டி வருவாயா’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘ஏக் தீவானா தா’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் அந்த படத்திற்கு தமிழில் கிடைத்த வரவேற்பை போல் இந்தியில் கிடைக்கவில்லை.
மதராசபட்டினம் - ஏக் தீவானா தா - ஐ - 2.0 படங்களில் எமி
இருப்பினும் எமிக்கு வரவேற்பு அளித்தது இந்தி திரையுலகம். அதனால் தனது கெரியரை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல எண்ணி மும்பைக்கு சென்றார். அங்கு நடிகர் ப்ரதேக் பாபருடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இருப்பினும் அந்த உறவு நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. ஒரே வருடத்தில் இருவரும் பிரிந்தனர். பின்பு மீண்டும் தமிழில் ஏ.எல் விஜய்யின் ‘தாண்டவம்’ திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றினார். இதில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தமிழில் சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதும் எமிக்கு கிடைத்தது.
அதன்பிறகுதான் 2014ஆம் ஆண்டு தெலுங்கு பட வாய்ப்புகள் இவரை தேடிவந்தன. ‘எவடு’ திரைப்படத்திற்குப் பிறகு சங்கரின் ‘ஐ’ திரைப்படத்தில் 2015ஆம் ஆண்டு நடித்தார். அதில் குறிப்பாக, ‘என்னப்பா லிங்கேசா...’ என தொடங்கும் சீனில் சென்னை ஸ்லாங்கில் பின்னி எடுத்திருப்பார் எமி. அதில் விக்ரமுக்கும் எமிக்கும் இடையே ஒரு பேச்சு போரையே நடத்தியிருப்பார் சங்கர். ‘லண்டன் பெண்ணா இப்படி சென்னை பாஷையில் பின்னி பெடலெடுக்கிறார்!’ என பார்ப்பவர்கள் அனைவரையும் அசால்ட்டான பாடி லேங்குவேஜ் மற்றும் டயலாக்குகளால் தன்வசப்படுத்தினார். அதே ஆண்டு ‘சிங் ஈஸ் ப்ளிங்’ என்ற இந்தி காமெடி படத்திலும், தனுஷ் நடிப்பில் உருவான ‘தங்க மகன்’ படத்திலும் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டில் ‘கெத்து, ‘தெறி’, ‘அபிநேத்ரி’, ‘ஃப்ரீக்கி அலி’ மற்றும் ‘2.0’ போன்ற திரைப்படங்களிலும் நடித்தார்.
எமியின் முன்னாள் இணையர் மற்றும் மகன் ஆண்ட்ரியாஸ்
திருமணம் ஆகாமலேயே குழந்தை
இந்திய திரைப்படங்களில் பிஸியாக ஓடிக்கொண்டிருந்த எமிக்கு இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவுடன் காதல் மலர்ந்தது. இருவருக்கும் நிச்சயதார்த்தம்கூட நடந்தது. இவர்களுக்கு 2019ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. அவருடன் சேர்ந்து வாழ்ந்துவந்த எமி, கருத்து வேறுபாட்டால் பிரிந்ததால் தனது காதலனின் புகைப்படத்தை சமூக ஊடகங்களிலிருந்து நீக்கினார். இந்நிலையில் தற்போது பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்து வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் தனது காதலனுடன் இந்தியா வந்த எமி, மும்பை, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் உதய்ப்பூர் போன்ற பகுதிகளில் ஜாலியாக சுற்றிவந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். தனது காதலன் குறித்து எமி கூறுகையில், “இப்போது எங்கள் இருவருக்குமிடையே நல்ல சூழல் இருக்கிறது. எனது உணர்வுகளுடன் கலந்தவர் எட் வெஸ்ட்விக். நாங்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம். எனது மகன் ஆண்ட்ரியாஸ் இந்த உலகத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் படப்பிடிப்புக்கு அழைத்துச் சென்றேன். நான் எப்படி நடிக்கிறேன் என்பதை எனது மகன் பார்க்கவேண்டும் என நினைத்தேன்” என்று கூறினார்.
மிஷன்: சேப்டர் 1-இல் எமி ஜாக்சன்
மீண்டும் தமிழில்...
கிட்டத்தட்ட ஆறு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தற்போது ‘மிஷன்: சேப்டர் 1’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் எமி. இப்படத்தை ஏ.எல் விஜய் இயக்க அருண் விஜய் ஹீரோவாக தோன்றியுள்ளார். நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில் எமி ஒரு காவல்துறை அதிகாரியாக தோன்றியிருக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். பொங்கலுக்கு பல படங்கள் போட்டி போடவுள்ள நிலையில் ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸாகிறது ‘மிஷன் 1’. இந்த படத்தில் அருண் விஜயுடன் எமி ஜாக்சனும் ஆக்ஷன் காட்சிகளில் புகுந்து விளையாடி இருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லரிலேயே எமியின் சண்டைக்காட்சிகள் இடம்பெற்று மிரட்டியிருக்கின்றன. இந்நிலையில் படப்பிடிப்பின்போது எமி சண்டைக் காட்சிகளுக்காக பயிற்சி செய்த வீடியோ தற்போது சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது. நிஜ ஃபைட்டர்களுக்கே டஃப் கொடுத்திருக்கிறார் என நெட்டிசன்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.