எப்போதும் காதல், நகைச்சுவை, குடும்ப செண்டிமெண்ட், போலீஸ் வேடம் என மாறி மாறி ரசிகர்களை குஷிப்படுத்தி வந்த நடிகர் சிவகார்த்திகேயன் சமீபகாலமாக தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், “டாக்டர்”, “டான்”, “பிரின்ஸ்”, “மாவீரன்”, “அயலான்” என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் ஆக்சன் கலந்த படங்களில் நடித்திருந்தார். இப்படங்கள் அனைத்தும் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்று வசூலில் சாதனை நிகழ்த்தின. அந்த வரிசையில் தற்போது “டாக்டர்” படத்திற்கு பிறகு, ராணுவ அதிகாரியாக கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் “அமரன்” படத்தில் நடித்து வருகிறார். இதில் சிறப்பு என்னவென்றல் இது ஒரு உண்மை சம்பவதை அடிப்படையாக கொண்டது என்பதுதான். ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டுதான் இந்த படம் உருவாகி வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், இதனை உறுதிப்படுத்தும் விதமாக அண்மையில் நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டிருந்த “அமரன்” டீசரில் பல ஆச்சரியமான காட்சிகளும், சில மிரள வைக்கும் சம்பவங்களும் இடம் பெற்றிருந்தன. இது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் காணலாம்.
கமலுடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக, ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக இன்றும் வலம் வருபவர்தான் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் நடிக்காத கதாபாத்திரங்களும் இல்லை. கைகோர்க்காத நடிகர்களும் இல்லை. பிறருடன் இணைந்து நடிப்பதாக இருந்தாலும் சரி, இல்லை தனது சொந்த தயாரிப்பில் வேறொரு ஹீரோவை வைத்து படம் எடுப்பதாக இருந்தாலும் சரி இதுவரை யாரிடமும் எந்தவித ஈகோவும் கமல்ஹாசன் பார்த்ததில்லை. அந்த அளவுக்கு நட்பு பாராட்டுவதில் மிகச்சிறந்த மனிதரான இவர், இதற்கு முன்பு முன்னணி நடிகர்களாக வலம் வந்த சத்யராஜை வைத்து 1987-ஆம் ஆண்டு ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, நடிகர் மாதவனை வைத்து 2003-ஆம் ஆண்டு ‘நள தமயந்தி’ 2019-ஆம் ஆண்டு ‘கடாரம் கொண்டான்’ போன்ற படங்களை தனது ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் தயாரித்திருந்தார். அந்த வரிசையில் தற்போது குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார். இந்தமுறை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம், சோனி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு 'அமரன்' என பெயரிடப்பட்டுள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசனுடன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன்
எஸ்.கே-வின் 21-வது படம், ராஜ்கமல் பிலிம்ஸின் 51-வது படம் என பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவரவுள்ள இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த 2022-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளரான கமல்ஹாசன் முன்பு அவராலேயே அறிவிக்கப்பட்டது. ‘ரங்கூன்’ படத்தினை இயக்கி இயக்குநராக வெற்றி கண்டிருந்த ராஜ்குமார் பெரியசாமி கடந்த 2020-ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கொரோனா லாக்டவுன் காரணமாக வேறு எந்த படங்களையும் இயக்க முடியாமல் இருந்து வந்தார். அப்போதுதான் ஏற்கனவே விஜய் டிவியில் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தயாரிப்பு பணிகளில் ஒருவராக தனது பங்களிப்பை கொடுத்து வந்தபோது கமலே அழைத்து நல்ல கதை இருந்தால் சொல்லு, நானே தயாரிக்கிறேன் என்று கூற அப்படி தொடங்கப்பட்டதுதான் இந்த ‘அமரன்’ திரைப்படம்.
புதிய தோற்றத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் கமல்ஹாசன்
இதனை தொடர்ந்து படத்திற்கு ஹீரோவாக யாரைப் போடலாம் என்று கமல் யோசித்தபோது, ராஜ்குமார் பெரியசாமி இந்த கதையை ஏற்கனவே எஸ்.கே.விடம் கூறினேன். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தயங்கி தயங்கி கூற, கமல் ஏன் இந்த தயக்கம்? சரியான ஆளைத்தான் தேர்வு செய்திருக்கிறீர்கள். அவரை நான் சந்திக்க விரும்புவதாக சொல்லுங்கள் என்று கூற, மறுநாளே சிவகார்த்திகேயனும், கமலை நேரில் சென்று சந்தித்தார். இவர்கள் இருவரின் சந்திப்புக்குப் பிறகு அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளிவந்தன. இந்த கூட்டணி உருவாவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்திருந்த பேட்டி ஒன்றில் தான் தீவிரமான சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர் என்று சிவகார்த்திகேயன் கூறியிருந்தார். அதேநேரம் கமல் பற்றி நெகட்டிவ்வான கருத்துகளை அவர் சொல்லியதாகவும் தவறான செய்திகள் பரப்பப்பட்டன. இந்த ஆத்திரத்தில், மறுநாள் மதுரையில் சிவந்தி ஆதித்தனார் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள சென்ற இடத்தில் மதுரை விமான நிலையத்திற்கு எதிரிலேயே கமல்ஹாசன் ரசிகர்கள் அவரை தாக்கியதாக பரபரப்பு செய்திகள் வெளியாகின. இந்த முரண்பாடான மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 'அமரன்' படம் குறித்து வெளிவந்த அறிவிப்பு இருதரப்பு ரசிகர்களிடையேயும் மிகுந்த வரவேற்பை பெற்றது.
அதிர்வலையை ஏற்படுத்திய 'அமரன்' டீசர்
கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்து வரும் “அமரன்” படத்தில், சிவாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்து வருவதாக முன்பே சொல்லப்பட்ட நிலையில், இதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த 17-ஆம் தேதி அன்று நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘அமரன்’ படத்தின் டீசர் வெளியானது. அந்த டீசரில் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டுதான் படம் உருவாகி இருப்பது உறுதியாகியுள்ளது. குறிப்பாக இந்த டீசரில் சிவகார்த்திகேயனின் பெயர் ‘முகுந்த் வி’ என தனித்து காட்டப்படுகிறது. இதுதவிர மிலிட்டரி சம்மந்தமான காட்சிகள், பாம்பிளாஸ்ட், துப்பாக்கிச்சூடு, சண்டைக்காட்சிகள் என சிவகார்த்திகேயனின் வழக்கமான பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் மிரள வைக்கும் விதமாக டீசர் அமைந்துள்ளது. மேலும், இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் சிவா நடித்துள்ளதால், அவருக்கு இது ஒரு முற்றிலும் வித்தியாசமான படமாக இருக்கும் என்ற பேச்சும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
'அமரன்' திரைப்பட டீசரில் துப்பாக்கி மற்றும் முகுந்த்.வி என்ற பெயருடன் தோன்றும் எஸ்.கே.
சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினையும், தாக்கத்தினையும் ஏற்படுத்தியுள்ள இந்த டீசர் எந்த அளவுக்கு வரவேற்பினை பெற்றிருக்கிறதோ, அதே நேரம் நெகட்டிவ்வான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. காரணம் ராணுவ அதிகாரியாக இருக்கும் ஒருவர், அதுவும் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர் ஒரு காட்சியில் கெட்ட வார்த்தை பேசுவது தவறு என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். எது எப்படி இருந்தாலும், டீசர் வெளியாகி சோஷியல் மீடியா ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. இதுவரை காதல், குடும்பம், நகைச்சுவை என்று சிவகார்த்திகேயனை ஒரு ஜாலியான ஹீரோவாகவே பார்த்துவந்த அவரது ரசிகர்கள் முதல் முறையாக ஒரு மிடுக்கான ராணுவ அதிகாரியாக திரையில் காண காத்திருக்கின்றனர். இதற்காக எஸ்.கே தீவிர உடற்பயிற்சிகள் மேற்கொண்டு 6 பேக் வைத்து தன்னை தயார்படுத்திய புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் சில தினங்களுக்கு முன் வெளியாகி வைரலாகின.
'அமரன்' பட டீசர் காட்சியில் கோபத்துடன் தோன்றும் சிவகார்த்திகேயன்
மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவா
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் 1983-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி பிறந்தவர்தான் மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன். கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும் அவர் வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னையில்தான். தனது பள்ளி படிப்பை சென்னையிலேயே முடித்த முகுந்த் வரதராஜன், கல்லூரி படிப்பை தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவக் கல்லூரியில் தொடர்ந்துள்ளார். அங்கு முதுகலையில் இதழியல் பட்டம் பெற்றவருக்கு ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக பணியாற்ற வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. அதற்கு மிக முக்கிய காரணம் முகுந்த் வரதராஜனின் உறவினர்கள் சிலர் ராணுவத்தில் இருந்ததால்தான். அவர்கள் வழியை பின்பற்றி இந்திய ராணுவத்தில் சேர்ந்தவர், 2006-ஆம் ஆண்டு ராஜ்புத் ரெஜிமென்டில் லெப்டினென்டாக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து 2008-ஆம் ஆண்டு கேப்டனாக பதவி உயர்வு பெற்று அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்ந்தார்.
இந்த நிலையில்தான், மேஜராக பதவி உயர்வு பெற்ற முகுந்த் வரதராஜன், கடந்த 2012-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில், பதற்றமான பகுதி என்று சொல்லப்படும் சோபியான் என்ற இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இங்குதான் அவரது எதிர்காலமே இல்லாமல் ஆகப்போகிறது என்பதை அவரும் சரி, அவரை சுற்றி இருந்தவர்களும் சரி உணர்ந்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் முகுந்த் வரதராஜன் மேஜராக பதவியேற்றிருந்த சோபியான் மாவட்டத்தில் பொதுமக்கள் கூடியிருந்த கட்டிடம் ஒன்றினை கடந்த 2014-ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் சிறைபிடிக்க, அங்கு சிக்கியவர்களை மீட்கும் பொறுப்பு முகுந்திடம் ஒப்படைக்கப்பட்டது. மக்களை மீட்கும் முயற்சிக்கு தலைமையேற்று நண்பர் விக்ரம் சிங் என்பவருடன் கைகோர்த்து, ஆபரேஷனில் இறங்கிய முகுந்திற்கு எடுத்த எடுப்பிலேயே தீவிரவாதிகள் பேரதிர்ச்சியை கொடுத்தனர். அதுதான் நண்பர் விக்ரம் சிங் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு.
மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன்
தனது நண்பனை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்ற ஆவேசத்தில் களத்தில் நேரடியாக இறங்கி அதிரடி தாக்குதலில் ஈடுபட்ட முகுந்த், அங்கிருந்த பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தி இனி எல்லாம் சுபம் என்பதுபோல் வெற்றியோடு கட்டிடத்தை விட்டு வெளியே வந்த அடுத்த சில நிமிடங்களில் மயங்கி கீழே விழுந்து தனது உயிரை விட்ட நிகழ்வு அங்கிருந்தவர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இப்படி எந்த நாட்டை காப்பாற்ற ராணுவத்திற்கு சென்றாரோ, அந்த நாட்டு மக்கள் எதிரிகளிடம் சிக்கிக் கொண்டார்கள் என்பது தெரிந்தவுடன் சற்றும் பின்வாங்காமல் முன்னேறி சென்று அவர்களை காப்பாற்றிவிட்டு தனது 31-வது வயதில் இன்னுயிர் நீத்த மேஜர் முகுந்த் வரதராஜன் என்றுமே நம் நினைவில் வைத்து போற்றப்பட வேண்டிய ஒருவர்தான். அந்த வகையில், அவரின் நினைவுகளை என்றுமே போற்றும் விதமாகவும், ஒரு துணிச்சல் மிக்க ராணுவ வீரரின் பெருமையை இவ்வுலகிற்கு எடுத்து சொல்லும் வகையிலும் அவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் “அமரன்” படம் வெற்றி பெற்று வரலாற்று பதிவில் இடம் பெற வாழ்த்துவோம்.