தமிழ் சினிமாவின் போக்கை ரசிகர்களால் மட்டுமே மாற்றியமைக்க முடியும் என்பதற்கு உதாரணம்தான் அழகி திரைப்படம். இப்படம் எல்லோரது வாழ்விலும் அழிக்க முடியாத ஒரு தடமாகவே மாறிப்போய்விட்டது. 2002-ஆம் ஆண்டு பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு வெளிவந்த இப்படம், பார்த்தவர்கள் அனைவரையும் அன்று அழ வைத்தது. அதற்கு கதை சூழல், அந்த கதையை இயக்குநர் தங்கர் பச்சான் காட்சிபடுத்தியிருந்த விதம், இசைஞானியின் மாறுபட்ட இசை கோர்ப்பு போன்றவை காரணமாக சொல்லப்பட்டாலும், அதில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது அப்படத்தில் தனலட்சுமியாகவே வாழ்ந்து காட்டியிருக்கும் நடிகை நந்திதா தாஸின் நடிப்புதான். அப்பேற்பட்ட திறமையும், அழகும் ஒருங்கே அமைந்த நடிகையான நந்திதா தாஸ் அழகி படத்திற்குள் எப்படி வந்தார்? தமிழ் சினிமாவில் இவரின் கதாபாத்திரங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன? சினிமாவை தாண்டி வேறென்னென்ன தளங்களில் பயணித்து வருகிறார் போன்ற நந்திதா தாஸ் குறித்து பலருக்கும் தெரியாத சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.
இந்திய சினிமாவின் ஆகச்சிறந்த பொக்கிஷம்
‘அழகி’ தனலட்சுமியாக நமக்கெல்லாம் அறிமுகமான நந்திதா தாஸ் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நன்கு படித்த ஒடியா குடும்பத்தில் ஜதின் தாஸ் மற்றும் வர்ஷா தாஸ் ஆகியோருக்கு மகளாக 1969 ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி பிறந்தார். இவர் பிறந்தது மும்பையாக இருந்தாலும், அவர் வளர்ந்தது படித்தது எல்லாமே டெல்லியில்தான். நந்திதாவின் தந்தை ஜதின் தாஸ் இந்திய அளவில் மிகவும் புகழ் பெற்ற ஓவியர் ஆவார். படிப்பில் படு சுட்டியாக இருந்த நந்திதா, டெல்லியில் உள்ள சர்தார் படேல் வித்யாலயா பள்ளியில் சேர்ந்து தனது பள்ளி படிப்பை முடித்தார். பள்ளியில் படிக்கும் காலங்களில் அனைத்து பாடங்களிலும் முதல் மாணவியாக திகழ்வது இவராகத்தான் இருக்குமாம். அந்த அளவுக்கு படிப்பின் மீது அதீத நாட்டம் கொண்ட இவர் சிறுவயதில் இருந்தே சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆவலும் கொண்டவராம். அதனாலேயே தனது உயர்கல்வியை டெல்லியில் உள்ள மிராண்டா ஹவுஸ் யூனிவர்சிட்டியில் தொடங்கிய நந்திதா, அங்கு புவியியல் பாடப் பிரிவில் இளங்கலை பட்டத்தையும், டெல்லி சமூகப்பணி பள்ளியில் சமூகப்பணிக்கான முதுகலை பட்டத்தினையும் பெற்றார்.
நந்திதா தாஸ் ஆரம்பகால புகைப்படங்கள்
இதனை தொடர்ந்து மக்களின் சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு சரியான தேர்வு நாடகக்குழுக்களாகத்தான் இருக்கும் என்று நினைத்து டெல்லியில் உள்ள ஜன நாட்டிய மஞ்ச் என்ற நாடகக் குழுவில் சேர்ந்தார். அந்த நாடகக் குழு ஏற்கனவே சமூக பிரச்சினைகளை முன்வைத்து தெருக்களிலும், பல்வேறு இடங்களிலும் நாடகங்களை நடத்தி வந்ததால், அதனுடன் இணைந்து தானும் சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதற்கு பேருதவியாக இருந்தது. இந்த நாடகப் பயணம் நந்திதாவுக்கு பட வாய்ப்புகளையும் பெற்று கொடுத்தது. அதன்படி முதன் முதலாக 1987-ஆம் ஆண்டு ‘பேங்கில் பாக்ஸ்’ என்ற டெலி ஃபிலிமில் நடித்து ஹிந்தி திரையில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து ‘பரிநதி’, ‘1947 எர்த்’, ‘ஹஜார் சௌராசி கி மா’ போன்ற இந்தி படங்களிலும், Fire(நெருப்பு) என்ற ஆங்கில படத்திலும் நடித்தார். இதற்கு பிறகு வங்காளம், மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் வாய்ப்புகள் வர அவற்றிலும் நடிக்க ஆரம்பித்த போதுதான் தமிழில் அழகி படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளது. இந்த வாய்ப்பினை கூட சினிமாவில் ஏதோ வாய்ப்பு கிடைத்தால் போதும் என்றில்லாமல் அலசி, ஆராய்ந்து நீண்ட யோசனைக்குப் பிறகு ஓகே சொல்லி நடிக்க வந்துள்ளார். அப்படி நடிக்க வந்தவர் இப்படத்திற்குள் கதையின் நாயகியாக நுழைந்ததே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வுதான்.
தமிழில் அழகியாக அறிமுகமான நந்திதா தாஸ்
2002-ஆம் ஆண்டு இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில், பார்த்திபன், தேவயானி, நந்திதா தாஸ், விவேக் என பலர் நடித்து வெளியான திரைப்படம்தான் ‘அழகி’. இப்படத்தினை உதய கீதா என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் வெளிவந்த சமயத்தில் படத்தின் கதையும் சரி, பாடல்களும் சரி தமிழ்நாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. அதிலும் இப்படத்தினை பார்த்துவிட்டு திரையரங்கை விட்டு வெளியே வரும் ஒருவர் கூட அழாமல் வரவில்லை. அந்த அளவுக்கு ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கண்ணீர் கடலில் மூழ்கடித்தது. அதிலும் படத்தில் இசைஞானியின் இசையில் வெளிவந்த “ஒளியிலே தெரிவது தேவதையா”, “பாட்டு சொல்லி பாடச்சொல்லி”, “உன் குத்தமா என் குத்தமா” என அனைத்து பாடல்களும் பட்டிதொட்டியெல்லாம் ஒரு கலக்கு கலக்கியதோடு இசை ரசிகர்களின் மனதையும் மொத்தமாக ஆட்கொண்டது. தமிழ் சினிமாவில் அதுவரை எத்தனையோ காதல் படங்கள் வெளிவந்து கொண்டாடப்பட்டு இருந்தாலும், அழகி அளவுக்கு கொண்டாடப்பட்டு இருக்குமா என்றால் சந்தேகம்தான். அந்த அளவுக்கு மாறுபட்ட முயற்சியாக, அழகு காவியமாக ரசிகர்களால் பார்க்கப்பட்ட இப்படத்தில் பார்த்திபன், தேவயானியின் நடிப்பு ஒரு ரகம் என்றால், பாவப்பட்ட பெண்ணாக தனலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் வரும் நந்திதாவின் நடிப்பு வேறு ஒரு ரகம். அப்படியே அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தி போனது மட்டுமின்றி படம் பார்த்த அனைவரின் உள்ளங்களையும் கரைய வைத்த, கலங்க வைத்த இவரின் நடிப்புதான் படத்திற்கு மிகப்பெரிய பலமாகவும் சொல்லப்பட்டது. அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே தன் திறைமையான நடிப்பால் எல்லோரது மனங்களிலும் இன்றும் ‘அழகி’ தனலட்சுமியாக வாழ்ந்துகொண்டிருக்கும் நந்திதா இக்கதைக்கு தேர்வு செய்யப்பட்டதே வித்தியாசமான ஒரு நிகழ்வுதான்.
'அழகி' திரைப்படத்தில் இருவேறு தோற்றங்களில் நடிகை நந்திதா தாஸ்
முதலில் தனலட்சுமி கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர் ‘புது வசந்தம்’ நடிகை சித்தாரா தானாம். ஆனால் அவரோ இக்கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது என்று மறுத்துவிட, பிறகு ஒருநாள் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வந்த காதல் கோட்டை படமான ‘Sirf Tum’ படம் டெல்லியில் படமாக்கப்பட்டு வந்த சமயத்தில், அங்கு படப்பிடிப்பு தளத்தில் கலை இயக்குநருடன் பணியாற்றி கொண்டிருந்த தங்கர் பச்சான் பிளாஸ்டிக் தொடர்பான போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த நந்திதாவை பார்த்துள்ளார். அப்போது இவர் இந்திய அளவில் மிகவும் புகழ் பெற்ற நடிகையாச்சே… இவரை ஏன் நமது படத்தில் நடிக்க வைக்கக்கூடாது… இவர் நமது கதைக்கு பொருத்தமாக இருப்பார் என்று எண்ணிய தங்கர் பச்சான், நந்திதாவின் முகவரியை கண்டறிந்து வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது நந்திதா ஆங்கிலத்திலேயே பேசிய நிலையில், தங்கர் பச்சான் தமிழில் கதையை கூற, அருகில் இருந்தவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தாராம். பிறகு, "தங்கர் பச்சானிடம் நான் எனது சொந்த செலவிலேயே சென்னையில் வந்து தங்கி படப்பிடிப்பில் கலந்துகொள்கிறேன். ஒரு 10 நாட்கள் கவனிக்கிறேன். எனக்கு செட் ஆனால் நடிக்கிறேன். இல்லாவிட்டால் திரும்பி வந்துவிடுவேன் என்று கூறினாராம் நந்திதா". கதையை பார்க்காமல் ஏதோ வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று நடிக்க வரும் எத்தனையோ கதாநாயகிகளுக்கு மத்தியில் மிகவும் உச்சநட்சத்திரமாக புகழ் பெற்று இயங்கி வரும் ஒரு நடிகை, வேண்டாம் என்று மறுத்துவிடுவார் என்று நினைத்தால், இப்படி சொல்கிறாரே என்று தங்கர் பச்சானுக்கு ஒரே ஆச்சரியமாம். இதனை உடனடியாக தனது படத்தின் தயாரிப்பாளர் உதயகுமாரிடம் தங்கர்பச்சான் கூற, அது எப்படி நமது படத்திற்காக அவர் செலவு செய்து இங்கு வந்து தங்குவது. நாமே ஹோட்டலில் தங்க வைத்துவிடுவோம் என்று ஹோட்டல் அருணாவில் அரை எடுத்து தங்க வைத்தார்களாம்.
இயக்குநர் தங்கர் பச்சான் மற்றும் நடிகை நந்திதா தாஸ்
அப்படி நந்திதா முதல் நாள் படப்பிடிப்பில் வந்து கலந்துகொண்ட போது மீண்டும் தங்கர் பச்சான், மூன்று பேர் கொண்ட குழுவை வைத்து கதையை விளக்க, அப்போதுதான் நந்திதாவுக்கு முழுமையான கதை புரிந்து நானே இதில் நடிக்கிறேன், முழுவதும் இருந்து எனது காட்சிகளை முடித்து கொடுக்கிறேன் என்று சொன்னாராம். மொழி தெரியாவிட்டாலும் கதையை நன்கு உள்வாங்கிக்கொண்ட நந்திதா, அந்த பாத்திரப்படைப்பாகவே வாழ்ந்து இன்றும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். நந்திதாவின் நடிப்பால் மிகவும் கவரப்பட்ட மணிரத்னம் அப்போது தான் இயங்கிக்கொண்டிருந்த ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் ஈழத்து பெண் சியாமா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தார். அந்த படத்தில், அமுதவாக வரும் நடிகர் பார்த்திபனின் மகளுக்கு அம்மாவாக, போராளியாக நடித்து, அதிலும் தன் தனித்துவமான முத்திரையை பதித்திருப்பார் நந்திதா. நந்திதா நடித்த இவ்விரு படங்களுமே ஏதோவொரு வகையில் வெவ்வேறு பிரிவுகளில் தேசிய விருதுகளையும் பெற்றன. அதிலும் குறிப்பாக ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் சிறப்பான நடிப்பை வழங்கியதற்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதினையும் பெற்றார் நந்திதா தாஸ்.
தற்போது என்ன செய்கிறார் நந்திதா தாஸ்
தமிழில் ‘அழகி’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ என இரண்டு சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தாலும் ஏனோ தெரியவில்லை மற்ற மொழி படங்களில் வாய்ப்புகள் கிடைத்த அளவுக்கு பெரிதாக தமிழில் வாய்ப்புகள் வரவில்லை. 2004-ஆம் ஆண்டு மம்மூட்டியுடன் ‘விஸ்வ துளசி’, 2012-ஆம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவந்த ‘நீர்ப்பறவை’ திரைப்படத்தில் எஸ்தர் கதாபாத்திரத்தில் கணவனை இழந்த பெண்ணாக வந்து நடித்தவர், ஒருபுறம் மாற்ற மொழி படங்களிலும் நடித்துக் கொண்டே இயக்குநராகவும் களமிறங்கினார். அப்படி குஜராத் கலவரத்தை அடிப்படையாகக் கொண்டு ‘ஃபிராக்’ என்ற படத்தினை இயக்கி முதல் முறையாக இயக்குநராகவும் வெற்றி கண்டார். இப்படத்திற்காக பல்வேறு விருதுகளையும் அள்ளிக்குவித்தார். இதனை தொடர்ந்து சமூக பிரச்சினைகள் தொடர்பான கதைகளை இயக்கிக்கொண்டும், நடித்துக்கொண்டும் சினிமா துறையில் பயணித்து வருகிறார். 2013 ஆம் ஆண்டில், "டார்க் இஸ் பியூட்டிஃபுல் " பிரச்சாரத்தின் முகமாக விளங்கிய நந்திதாவை மீண்டும் நினைவு படுத்தும் விதமாக கடந்த 29-ஆம் தேதி, ‘அழகி’ திரைப்படம் மீண்டும் ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 22-ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் புதுப்பொலிவுடன் வெளியான இப்படம் அன்று போலவே இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எந்தவித விளம்பரமும் இல்லாமல் தமிழ்நாட்டில் 100 திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி மக்கள் கொண்டாடிய இந்த அழகியை இக்கால தலைமுறையினரும் கண்டு ரசிக்க வேண்டும், மனித மனங்களை பண்படுத்தும் காதலின் மெல்லிய உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கும் நிலையில், அழகி போன்ற திரைப்படங்கள் இக்கால மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்கும் தேவைப்படும் என்ற அடிப்படையிலும் இப்படத்தினை படக்குழுவினர் மீண்டும் வெளியிட்டுள்ளனர். இப்படம் மக்களிடையே மீண்டும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது மட்டுமின்றி பழைய நினைவுகளை ரீ கிரியேட் செய்து பள்ளி பருவத்திற்கே கொண்டு சென்று விட்டதாகவும், முதல் காதலால் ஏற்பட்ட பழைய வலிகளை திரும்ப நினைவுப்படுத்தி விட்டதாகவும் திரையரங்கிற்கு வந்து 'அழகி' படத்தினை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இது தவிர படத்தில் நடித்திருந்த ஒவ்வொரு பாத்திரங்களும் தங்கள் நடிப்பால் மீண்டும் உயிர்பெற்றுள்ளதாகவும் சிலர் சிலாகித்து ஒவ்வொருவரை பற்றியும் பேசியுள்ளனர்.
மராத்தி சினிமாவில் நந்திதா தாஸ் அறிமுகமான 'மாதி மாய்' திரைப்படத்தின் காட்சி
அந்த வகையில், இன்று நந்திதா தாஸ் என்ற நடிகையின் நடிப்பு மீண்டும் உயிர் பெற்றுள்ளது. சமீபத்தில் கூட 'அழகி' படத்தின் ரீ ரிலீசுக்காக பிரத்தியேக பேட்டி ஒன்று கொடுத்திருந்த நந்திதாதாஸ் அதில் 'அழகி' படத்தில் தனக்கு கிடைத்த அனுபவம் குறித்து பகிர்ந்திருந்தார். குறிப்பாக இயக்குநர் தங்கர்பச்சானுடன் ஏற்பட்ட முதல் சந்திப்பு குறித்தும், திரைப்படங்கள் எடுப்பதில் அவருக்கு இருந்த ஆளுமை மற்றும் திறமை குறித்தும் பேசியிருந்த அவர், தங்கர்பச்சானை தமிழர்களின் பெருமைமிகு அடையாளம் என கூறி பாராட்டி இருந்தார். முதல்முறை அவர் தமிழில் கதை சொன்னபோது மொழி தெரியாததால் தெளிவாக தனக்கு கதை புரியாமல் இருந்தாலும், அவர் எடுத்துக்கொண்ட மெனக்கெடலுக்காகவும், ஆர்வத்திற்காகவுமே அப்படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டாராம். பின்னர் படப்பிடிப்பின் போதுதான் 'அழகி' திரைப்படத்தின் உண்மையான அழகு தனக்கு புரிந்ததாகவும், பல விதங்களில் நடிகர் பார்த்திபன் ஷூட்டிங் சமயத்தில் வசனங்கள் பேசுவதற்கு உதவியதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார் நந்திதா. மேலும் இப்படத்தில் இடம்பெற்றிருந்த 'பாட்டு சொல்லி பாட சொல்லி' பாடல் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்ற அவர், இப்படத்திற்கு இசையமைத்திருந்த இளையரஜாவை வெகுவாக பாராட்டி, அவரோடு தான் உரையாடிய நிகழ்வுகள் குறித்தும் பகிர்ந்திருந்தார். இன்றும் உலகில் எங்கு சென்றாலும் அங்கு வாழும் தமிழர்கள் தன்னை 'அழகி' தனலட்சுமியாக பார்க்கிறார்கள் என்றும், படத்தின் ரீ ரிலீசுக்கு வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த பேட்டியில் அவர் கூறியிருந்தார். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ‘அழகி’ போன்ற வரலாற்று சிறப்புமிக்க படங்கள் இருக்கும் வரை நந்திதா தாஸ் போன்ற திறமையான நடிகைகள் கொண்டாடப்பட்டுக் கொண்டே இருப்பார்கள் என்பதற்கு இப்படம் ஒரு மிகச்சிறந்த உதாரணம்.