விடாமுயற்சியில் இரட்டை வேடத்தில் கலக்க வரும் அஜித் !
'துணிவு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். தற்போது இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு அசர்பைஜான் நாட்டில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அங்கு நடிகை திரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சென்னை மற்றும் துபாயில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், இதில் குறிப்பாக துபாய் பாலைவன பகுதியில் ஒரு பிரமாண்டமான சண்டைக் காட்சி ஒன்றை படமாக்க இயக்குனர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் அஜித்துடன் சஞ்சய் தத், திரிஷா, ஹுமா குரேஷி ஆகியோர் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளிவந்திருந்த போதிலும், தற்போது இந்த படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று கசிந்துள்ளது. அதன்படி 'வலிமை' படத்தில் ஏற்கனவே அஜித்துடன் நடித்த ஹுமா குரேஷி, இந்த படத்திலும் ஒப்பந்தமாகி நடித்து வருவதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் படத்தில் இருந்து விலகி உள்ளதாகவும், அவருக்கு பதிலாக நடிகை ரெஜினா கசாண்ட்ராவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்திய போது, அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர இப்படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம் என்றும், ஒரு வேடத்திற்கு ஜோடியாக திரிஷா நடித்து வருவதால் இன்னொரு வேடத்திற்கு நடிகை சம்யுக்தாவை நடிக்க வைக்க படக்குழு தரப்பு முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
நடிகர் அஜித்குமார் மற்றும் 'விடாமுயற்சி' திரைப்பட போஸ்டர்
என்னடா பகல் கொள்ளையா இருக்கு… 'லியோ' படத்தின் டிக்கெட் விலை இவ்வளவா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'லியோ' திரைப்படம் வரும் 19-ம் தேதி சர்வதேச அளவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற அதே வேளையில், அதில் விஜய் பேசிய ஆபாச வார்த்தைகளும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இதுவரை எந்த படங்களுக்கும் இல்லாத அளவிற்கு 'லியோ' படத்திற்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. அதேபோன்று ரசிகர்கள் ஏற்படுத்தும் அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக மற்ற நடிகர்களின் படங்களுக்கு அதிகாலை காட்சி ரத்து செய்யப்பட்டது போலவே விஜய்யின் 'லியோ' படத்திற்கும் அதிகாலை காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டிக்கெட் விலைக்கும் சேர்த்து நிறைய நிபந்தனைகள் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இதுதான் சமயம் என்று ஐமேக்ஸ் போன்ற ஒரு சில திரையரங்குகள் படத்தின் FDFS டிக்கெட் விலையும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுவும் ஒரு FDFS டிக்கெட்டின் விலை 2,500 ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இது தவிர கோவை கேஜி திரையரங்கம் போன்ற ஒரு சில இடங்களில் திரையரங்குகளில் 200 ரூபாயாக இருக்கும் பால்கனி டிக்கெட்டின் விலையை, இந்த முறை காம்போ பேக் என்ற பெயரில் உயர்த்தி, டீ, காபி, தின்பண்டங்கள் ஆகியவற்றை சேர்த்து ரூ.450 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. மேலும் இதுவரை 'லியோ' படத்திற்கு ப்ரீ புக்கிங் ஆரம்பிக்கவில்லை. புக் மை ஷோ என்ற ஆப்பில் மட்டும் அட்வான்ஸ் புக்கிங் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிகிறது. தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இடையே ஷேரிங் தொடர்பாக இன்னும் பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருப்பதால் இன்று அல்லது நாளை தமிழ்நாட்டில் எல்லா திரையரங்குகளிலும் ப்ரீ புக்கிங் தொடங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'லியோ' திரைப்பட போஸ்டர் மற்றும் FDFS டிக்கெட்
பிரபல மலையாள நடிகையிடம் அத்துமீறிய தொழிலதிபர்
தமிழில் கோடியில் ஒருவன், கயல் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை திவ்ய பிரபா. மலையாள நடிகையான இவர் அங்கும் ‘டேக் ஆஃப்’, ‘வேட்டா’, ‘லோக்பால்’ போன்ற எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது பிஸியாக பல படங்களில் நடித்து வருவதால், அடிக்கடி விமான பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ள இவர், கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி மோசமான அனுபவம் ஒன்றை சந்தித்துள்ளார். மும்பையில் இருந்து கொச்சிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் திவ்ய பிரபா பயணம் செய்தபோது, இவரது இருக்கைக்கு அருகில் மது போதையில் அமர்ந்திருந்த ஒருவர், காரணமே இல்லாமல் இவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி, தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது . இந்த பிரச்சினை தொடர்பாக விமான பணிப்பெண்ணிடம் அவர் கூறியபோது, இடத்தை மட்டுமே மாற்றி தந்தாரே தவிர, மோசமான செயலில் ஈடுபட்ட நபருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து கொச்சி காவல்துறைக்கு இமெயில் மூலம் புகார் அளித்துள்ள திவ்ய பிரபா, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் மற்றும் விமான பணிப்பெண்ணுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூறி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், தற்போது நடிகை திவ்ய பிரபாவின் இந்த புகார் தொடர்பாக கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், விமானத்தில் அவரிடம் அத்துமீறிய நபர் திருச்சூரை சேர்ந்த தொழிலதிபர் ஆண்டோ என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து விசாரணைக்கு நேரில் வந்து ஆஜராகுமாறு கொச்சி போலீசார் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மலையாள நடிகை திவ்ய பிரபா
விஜய்யுடன் கலக்கல் நடனமாடிய பிரபு தேவா, பிரசாந்த்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி அன்று ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்ற அதே வேளையில், மேலும் அவர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக ‘விஜய் 68’ படம் குறித்த அறிவிப்புகளும் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன. வெங்கட் பிரபு இயக்கி வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 2003ஆம் ஆண்டு புதிய கீதை படத்தில் விஜய்யுடன் பணியாற்றிய யுவன் 20 வருட இடைவெளிக்குப் பிறகு, இப்படத்தில் இரண்டாவது முறையாக கைகோர்த்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் விஜய்யுடன் நடிகைகள் சினேகா, மீனாட்சி சவுத்ரி, நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம் உட்பட பலர் நடிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கிய நிலையில், முதலில் நட்பு தொடர்பான பாடல் காட்சி ஒன்று படமாக்கி முடிக்கப்பட்டுள்ளது. ராஜு சுந்தரம் நடனம் அமைந்துள்ள இந்த பாடலில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர் இணைந்து தோன்றியுள்ளனர். விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கான பணிகள் சென்னையில் தொடங்க இருப்பதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் விஜய், பிரபு தேவா, பிரசாந்த்
பாடலாசிரியராக களமிறங்கியுள்ள பிரதமர் மோடி
நவராத்திரி விழா நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதிலும் இந்த நவராத்திரி விழாவினை வட மாநிலங்களில் மிகவும் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி 'கர்பா' என்ற பாடலை எழுதியுள்ளார். 190 வினாடிகள் ஓடக்கூடிய இந்த கர்பா பாடலானது 'மாதி' என்ற தலைப்பில் இசையுடன் கூடிய நடனத்துடன் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது. கலாச்சாரத்தின் பன்முகத்தன்மை, ஒற்றுமை ஆகியவற்றை எடுத்துரைக்கும் வகையில், பிரதமர் மோடி எழுதிய பாடலின் வரிகளுக்கு தனிஷ்க் பாக்சி என்பவர் இசையமைக்க, பாடகி த்வனி பனுஷாலி என்பவர் பாடியுள்ளார். வண்ணமயமான காட்சிகளுடன் ரசிக்கும் விதமாக வெளிவந்துள்ள கர்பா பாடல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், “நான் எழுதி தற்போது வெளியாகி இருக்கும் 'கர்பா' பாடல் தனக்கு பல நினைவுகளை தருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய இந்த பாடலை நவராத்திரி விழா சமயத்தில் பகிர்ந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த பாடல் சிறப்பாக வர உதவிய பாடகி த்வனி பனுஷாலி மற்றும் இசையமைப்பாளர் பாக்சிக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.
'கர்பா' பாடல் காட்சி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி
ஷாருக்கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு
பாலிவுட்டின் பாட்ஷா என அழைக்கப்படும் ஷாருக்கான் சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் 'ஜவான்' என்ற படத்தினை சொந்தமாக தயாரித்து நடித்திருந்தார். பான் இந்தியா படமாக வெளிவந்து வெற்றி பெற்ற இப்படம் உலகம் முழுவதும் ரூ.1,100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் நடித்து வெளியான 'பதான்' படமும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. இதனால் ஷாருக்கான் ஒரே வருடத்தில் இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்தது மட்டுமின்றி ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய ஒரே ஹீரோ என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மேலும் இவ்விரு படங்களின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ராஜ்குமார் ஹிரானி என்பவரின் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள 'டங்கி' என்ற படம் வரும் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ஷாருக்கான் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகர் ஷாரூக்கானுடன் எப்போதும் துப்பாக்கி ஏந்திய தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் ஆறு பேர் உடன் இருப்பார்கள். இந்தியா முழுவதும் அவர் எங்கு சென்றாலும் இந்த ஆயுதமேந்திய 6 பெரும் உடன் செல்வார்கள். இதுதவிர ஷாருக்கானின் வீட்டிற்கும் ஆயுதம் ஏந்திய 5 காவலர்களும் மூன்று ஷிப்ட்களில் பணியாற்றுவார்கள். ஏற்கனவே ரவி பிஷ்னோய் கும்பலில் இருந்து நடிகர் சல்மான் கானுக்கும் அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கும் ஒய் பிளஸ் பாதுகாப்பு மற்றும் அமிதாப்பச்சன், அமீர்கான், அக்ஷய் குமார் ஆகியோருக்கு எக்ஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஷாருக்கான் மற்றும் ஒய் பிளஸ் பாதுகாப்பு போலீஸ்