இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

திரை வாரிசுகள் என்றாலே பெரும்பாலும் திரைக்கு முன்னர்தான் இருப்பார்கள் என்ற கருத்து பொதுவாகவே இருக்கிறது. ஆனால் ஒருசில வாரிசுகள் அதனை உடைக்கும்விதமாக திரைத்துறையை விட்டு விலகி சாதித்தும் இருக்கிறார்கள், சிலர் சினிமா உலகிலேயே வேறு தொழிலை தேர்ந்தெடுத்தும் இருக்கிறார்கள். அப்படித்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரு மகள்களும் திரைக்கு முன் வருவதை விரும்பாமல் இயக்குநர்களாக அவதாரம் எடுத்தனர். குறிப்பாக, ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான ‘மூன்று’ படத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்நிலையில் பல்வேறு குடும்ப பிரச்சினைகளால் படம் இயக்குவதை நிறுத்திவைத்திருந்த ஐஸ்வர்யா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது அப்பாவை வைத்து, ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் திரை வெற்றி, திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்புகள் மற்றும் குடும்ப பிணைப்பு குறித்து இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.


நடிகர் சிம்பு - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

இயக்குநராக ஐஸ்வர்யா ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, முதலில் 2000ஆம் ஆண்டு பார்த்தி பாஸ்கர் இயக்கத்தில் உருவான ‘ரமணா’ என்ற படத்தில் ஒரு பாடல் பாடினார். ஆனால் அந்த படம் ரிலீஸாகவில்லை. அந்த படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். அதனையடுத்து 2003ஆம் ஆண்டு வெளியான ‘விசில்’ படத்தில் டி. இமான் இசையில் ‘நட்பே நட்பே’ என்ற பாடலை பாடி பின்னணி பாடகியாக திரையுலகில் அறிமுகமானார். அந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து பாடியிருந்தார். அப்போது சிம்புவும் ஐஸ்வர்யாவும் காதலித்து வந்தனர். பள்ளி, கல்லூரி காலத்திலிருந்தே இருவரும் காதலித்து வந்ததாக செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்த சமயம் அது. குழந்தை நட்சத்திரமான சிம்புவின் முதல் படம் தோல்வியை தழுவிய போதிலும் அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருந்த சிம்பு தனது காதலி ஐஸ்வர்யாவை பார்ப்பதற்காகவே வெளிநாட்டில் இருந்தாலும் கூட கடல்தாண்டி பறந்து வருவாராம். இந்நிலையில் சிம்பு ‘அலை’ படத்தில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் இருவருக்குமிடையே சிறுசிறு சண்டைகள் ஏற்பட தொடங்கியிருக்கிறது. த்ரிஷாவுடன் இணைந்து சிம்பு பொதுவெளியில் சுற்றுவதாக தகவல்கள் வெளியான நிலையில் சிம்பு - ஐஸ்வர்யா இடையேயான சண்டை முற்றி இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது.

காதல் தோல்வியில் சுற்றிவந்த ஐஸ்வர்யாவும், தனுஷின் அக்காவும் தோழிகள் என்பதால் அதன்மூலம் ஏற்பட்ட தொடர்பால் தனுஷும், ஐஸ்வர்யாவும் காதல் ஜோடிகளாகினர். அந்த சமயத்தில் சிம்புவின் படங்கள் அடுத்தடுத்து தோல்விகளை சந்திக்க, தனுஷ் நடித்த படங்கள் வெற்றிகளை அள்ளின. இதனாலேயே ஆண்களை ஏமாற்றும் பெண்களை கொலை செய்வது போன்று கதை எழுதி அதனை தானே படமாக இயக்கினார் சிம்பு. அப்படி வெளியானதுதான் ‘மன்மதன்’. அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதில் தன்னை ஒரு பெண் ஏமாற்றியதாக உருவாக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம் ஐஸ்வர்யாவை வைத்துதான் எழுதியதாக சர்ச்சைகள் எழுந்தன.


தனுஷ் - ஐஸ்வர்யா திருமணம் மற்றும் ஐஸ்வர்யா இயக்கிய திரைப்படங்கள்

தனுஷுடன் திருமணமும் இயக்கமும்

தனுஷ் - ஐஸ்வர்யாவின் காதல் குறித்து கிசுகிசுக்கள் வைரலான நிலையில், ரஜினிகாந்தே நேரடியாக கஸ்தூரி ராஜாவுக்கு ஃபோன் செய்து, “உங்கள் மகனை எனது மகளுக்கு திருமணம் செய்துவைக்க சம்மதமா?” என்று கேட்டதாகவும், கஸ்தூரி ராஜாவும் ஓகே சொல்ல திருமணம் விமரிசையாக நடந்ததாகவும் அப்போதைய செய்திகளில் தீயாய் பரவின. தன்னைவிட இரண்டு வயது குறைவான தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டாலும் ஐஸ்வர்யாவுக்கு தனுஷ்மீது இருந்த காதலை பார்த்து அனைவரும் பொறாமை கொள்ளும்வகையில் இருவரும் வெளியுலகில் வலம்வந்தனர். இவர்களுடைய காதலுக்கு அடையாளமாக யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் பிறந்தனர். குறிப்பாக, திரையுலகில் தனுஷின் அசுர வளர்ச்சிக்கு முதுகெலும்பே ஐஸ்வர்யாதான் என்று பேசப்பட்டது. இதனை தனுஷும் பல இடங்களில் ஆமோதித்திருந்தார்.

இந்நிலையில்தான் 2011ஆம் ஆண்டு தனது கணவர் தனுஷை வைத்தே ‘3’ படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா. இந்த படத்திற்கு ஐஸ்வர்யாவின் உறவினரான அனிருத் இசையமைத்தார். இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, ‘ஒய் திஸ் கொலவெறி டி’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவி ஹிட்டானது. தனது முதல் படத்திலேயே சிறந்த இசையமைப்பாளர் என்ற பெயரை பெற்றார் அனிருத். தொடர்ந்து, கௌதம் கார்த்திக்கை வைத்து ‘வை ராஜா வை’ என்ற படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன்பிறகு, அறிமுக இயக்குநர்களின் குறும்படங்களை ப்ரமோட் செய்ய ‘டென் எண்டர்டெய்ன்மெண்ட்’ என்ற பேனரை தொடங்கவிருப்பதாக 2015ஆம் ஆண்டு அறிவித்தார். அதனையடுத்து, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். மேலும் கணவர் தனுஷுடன் இணைந்து பல்வேறு திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இரண்டு குழந்தைகளுடன் குடும்பமாக வலம்வந்த தம்பதிக்குள் திடீரென விரிசல் விழுந்தது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் தனுஷ் பல நடிகைகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், 18 ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வர்யாவுக்கு இருந்த காதல்கள் குறித்து தற்போது கிளறுவதாகவும் தகவல்கள் வெளியாகின.


தனது அப்பா ரஜினியுடன் ஐஸ்வர்யா - பிரிவு குறித்து தனுஷ் அறிக்கை

அப்பா வீட்டிற்கே சென்ற ஐஸ்வர்யா

இந்நிலையில்தான் 2022ஆம் ஆண்டு இறுதியில் தனது கணவர் தனுஷை பிரியப்போவதாக ஐஸ்வர்யா அறிவித்தார். மேலும் சமூக ஊடகங்களில் தனுஷுடன் இணைந்து போட்டிருந்த பதிவுகளையும் நீக்கினார். இது ரஜினிகாந்த் மற்றும் கஸ்தூரி ராஜா இருவரது குடும்பத்தினருக்குமே அதிர்ச்சியை கொடுத்தது. தொடர்ந்து தனது இரண்டு மகன்களுடனும் அப்பா ரஜினி வீட்டில் இருந்துவந்தார் ஐஸ்வர்யா. மேலும் தனுஷிடமிருந்து விவாகரத்து கோரியதாகவும் கூறப்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு பிறகு இருவரும் விவாகரத்து பெறப்போவது இல்லை எனவும், தனது மகன்களுக்காக இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் கூறி தனுஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “18 வருடங்களாக நண்பர்களாக, தம்பதியாக, பெற்றோராக ஒன்றாக இருந்தோம். வளர்ச்சி, புரிதல், ஒத்துப்போதல் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் என இந்த பயணம் அமைந்தது. இன்று நாங்கள் இருவரும் எங்களுடைய பாதைகளை பிரித்துக்கொள்ளும் இடத்தில் நிற்கிறோம். தம்பதியராக இருந்த ஐஸ்வர்யாவும் நானும் பிரிந்துசெல்ல முடிவெடுத்திருக்கிறோம். எங்களை பற்றி இன்னும் நன்றாக புரிந்துகொள்ள இந்த நேரம் உதவும்” என்று கூறியிருந்தார். இதை ஐஸ்வர்யாவும் தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதுகுறித்து தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா கூறுகையில், “இருவருக்குமிடையே விவாகரத்து ஏற்படவில்லை. கருத்து வேறுபாட்டால்தான் சண்டை ஏற்பட்டிருக்கிறது. இருவரிடமும் இதுகுறித்து அறிவுரை வழங்கியிருக்கிறேன்” என்று கூறினார். ரஜினியும் தனுஷை அவரது வீட்டிற்கே அழைத்து பேசியதாகவும் தெரிகிறது. அதன்பிறகுதான் எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் தனுஷுடனும், ஐஸ்வர்யாவுடனும் இரண்டு மகன்களும் கலந்துகொண்டனர்.

குழந்தைகளுக்காக எடுத்த முடிவு - ‘லால் சலாம்’ மூலம் கம்பேக்

தனது இரண்டு மகன்களையும் வளர்ப்பதில் பிஸியாக ஓடிக்கொண்டிருந்த ஐஸ்வர்யா, திரைப்படங்களை இயக்குவதிலிருந்து சற்று ப்ரேக் எடுத்திருந்தார். இந்நிலையில் கணவனை பிரிந்து தனியாக வாழும் இவர் தனது முழு கவனத்தையும் ஃபிட்னெஸ் மற்றும் திரைப்படங்கள்மீது செலுத்திவருகிறார். ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, சிறப்புத் தோற்றத்தில் அசத்தியிருக்கிறார் ரஜினிகாந்த். செந்தில், தம்பி ராமையா, தான்யா பாலகிருஷ்ணா போன்றோரும் முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர். படத்தின் ட்ரெய்லர் மற்றும் டீசர் இரண்டுமே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.


‘லால் சலாம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவின்போது - ‘லால் சலாம்’ போஸ்டர்

ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியாகியுள்ள பாடல்களும் சிறப்பாக அமைந்திருக்கின்றன. இந்துக்களும், முஸ்லீம்களும் மத நல்லிணக்கத்துடன் இருக்கவேண்டும் என்ற கதையம்சம் கொண்டதாக இப்படம் உருவாகியுள்ளது. இதில் மொய்தீன் பாயாக கவனம் ஈர்க்கிறார் ரஜினி. ‘லால் சலாம்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ஐஸ்வர்யா, “என்னிடம் பலர் பேசுவார்கள். அப்பா, அம்மா குறித்து கேட்பார்கள். ஆனால் கதை குறித்து பேசினால் அது நடக்காமலேயே போய்விடும். சிலர் அப்பா மீதுள்ள மரியாதைக்காக பேசுவார்கள். சூப்பர் ஸ்டார் மகள் என்பதால் வாய்ப்பு கிடைப்பதில்லை. திறமை இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்” என்று பேசினார். தொடர்ந்து தனது அப்பா ஒன்றும் சங்கி கிடையாது. அப்படி சங்கியாக இருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார் என்று அவர் பேசியது சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. தனது மகள் தவறான அர்த்தத்தில் கூறவில்லை என்று ரஜினியும் அதற்கு விளக்கம் கொடுத்திருந்தார். எப்படியாயினும் நீண்ட இடைவெளி மற்றும் பல்வேறு குடும்ப பிரச்சினைகளுக்கு பிறகு ஐஸ்வர்யா மீண்டும் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார். வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ள ‘லால் சலாம்’ படம் ஐஸ்வர்யாவுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை அள்ளித்தருமா? என்பது படம் வெளியான பிறகு தெரியவரும்.

Updated On 12 Feb 2024 11:46 PM IST
ராணி

ராணி

Next Story