நான் உங்களை பார்க்கிறேன்... உங்களை வணங்குகிறேன்... உங்களை பாராட்டுகிறேன்... நான் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை உங்களை வைத்து ஒருநாள் நான் படம் இயக்குவேன் என்று... பெரும்பாலான சமயங்களில் நான் உங்கள் மூலமாகத் தான் இந்த உலகைப் பார்க்கிறேன்... அதன் மூலமாக ஒவ்வொரு நாளும் நான் உணர்கிறேன்.. நீங்கள் தான் நான் என்று.. I Love U அப்பா இந்த உருக்கமான பதிவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதி பதிவிட்டவர் வேறு யாருமில்லை. தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இன்றுவரை வெற்றி நடைப்போட்டு வரும் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா தான்... ‘லால் சலாம்’ படத்தின் ஷூட்டிங்கில் தனது அப்பாவுடன் இணைந்து பணியாற்றிய போது, அவருடனான மகிழ்ச்சிகரமான தருணங்களை மிகவும் உருக்கமாக பகிர்ந்து பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்திருந்தார். தற்போது ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அண்மையில் கூட நடிகர் ரஜினிகாந்த், படத்தில் தனது ரோலுக்கான டப்பிங் பணியை சிறப்பாக செய்து முடித்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலானது. பல வெற்றி கனவுகளோடு முதன் முறையாக தந்தையுடன் கை கோர்த்து திரையில் களமிறங்க உள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் திரை அனுபவம் மற்றும் திரைக்கு வர உள்ள ‘லால் சலாம்’ படம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே காணலாம்.
'3' முதல் 3வது படம்…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் மற்றும் நடிகர் தனுஷின் மனைவி என்ற அடையாளத்துடன் தமிழ் திரையுலகில் களம் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இயக்குனராக அடியெடுத்து வைத்த முதல் முயற்சியிலேயே தேசிய அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கண்டார். அந்த படம் தான் கணவர் தனுஷை வைத்து எடுத்த ‘3’ திரைப்படம். இப்படத்தில் ராம் என்னும் கதாபாத்திரத்தில் வந்து தீவிர மனப்பிறழ்வு நோயால் அவதிப்படும் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருந்தார். இதுதவிர அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படத்திலேயே ‘ஒய் திஸ் கொலவெறி’, பாடல் படம் வெளிவருவதற்கு முன்பே வெளியாகி தேசிய அளவில் ட்ரெண்ட் ஆனது மட்டுமின்றி படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறியது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக 2012ஆம் ஆண்டு படமும் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டுமின்றி, தனுஷின் மிகச் சிறந்த நடிப்பிற்காக 2வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுத்தந்தது. இப்படி முதல் படத்திலேயே வெற்றி முத்திரையை பதித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இரண்டாவதாக 2015ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் ஆகியோரை ‘வைத்து வை ராஜா’ வை என்ற படத்தினை எடுத்தார். இப்படம் முதல் படம் அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இருப்பினும் தனது சினிமா பயணத்தை தொடர்ந்த அவர், கணவர் தனுஷ் தயாரிப்பில் 2017 ஆம் ஆண்டு ‘சினிமா வீரன்’ என்ற ஆவணப்படத்தினை எடுத்து ஓடிடி தளத்தில் வெளியிட்டார். இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றது. பின்னர் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனைகளால் சிறிது காலம் சினிமாவில் கவனம் செலுத்தாமல் இருந்தவர், தற்போது தந்தையை வைத்து ‘லால் சலாம்’ படத்தினை இயக்கி உள்ளார்.
படப்பிடிப்புகளின் போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
‘லால் சலாம்’ படத்தில் என்ன ஸ்பெஷல்?
ஜெயிலர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே ‘லால் சலாம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் நடிகர் ரஜினிகாந்த். இதையடுத்து அப்படத்தினை அவரின் மகள் ஐஸ்வர்யா இயக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதன் பிறகு படப்பிடிப்பு பணிகள் ஆரம்பமாகி நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியானது. தற்போது நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் கதையின் நாயகர்களாக இணைந்து நடித்துள்ள இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் வெறும் 40 முதல் 50 நிமிடங்கள் மட்டுமே இடம்பெறும் வகையில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தில் ரஜினி நடிக்கும் காட்சிகள் முதலில் மும்பையில் படமாக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து பாண்டிச்சேரிக்கு வந்த படக்குழு, அங்குள்ள மில் ஒன்றில் சில நாட்கள் ரஜினி நடிக்கும் காட்சிகளை படமாக்கியது. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் டிசம்பர் 12 ஆம் தேதி, ரஜினியின் பிறந்தநாள் அன்று வெளியாக உள்ளது. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படம் பல உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தமிழ்நாட்டின் பின்தங்கிய குடும்பத்திலிருந்து இரண்டு இளைஞர்கள் இந்திய கிரிக்கெட் டீமுக்கு தேர்வாகி, அவர்கள் மும்பைக்கு கிரிக்கெட்டுக்காக செல்லும்போது அவர்களுக்கு ஒரு சம்பவம் நடக்கிறது. அதில் ரஜினியின் பங்கு என்னவாக இருக்கிறது என்பதுதான் கதை என்று சொல்லப்படுகிறது. இதில் சிறப்பு என்னவென்றால் ரஜினியுடன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், நடிகர் ரஜினிகாந்தும் ஒருமுறை தனது ட்விட்டரில், 'இந்தியாவிற்கு முதன் முறையாக உலகக் கோப்பையை வென்று பெருமைப்படுத்திய கபில்தேவ்ஜியுடன் இணைந்து பணியாற்றுவது எனது பாக்கியம்’ எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
It is my honour and privilege working with the Legendary, most respected and wonderful human being Kapildevji., who made India proud winning for the first time ever..Cricket World Cup!!!#lalsalaam#therealkapildev pic.twitter.com/OUvUtQXjoQ
— Rajinikanth (@rajinikanth) May 18, 2023
மொய்தீன் பாயாக ரஜினிகாந்த்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தில் மொய்தீன் பாய் என்கிற முஸ்லீம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாட்ஷா படத்திற்கு பிறகு, நடிகர் ரஜினிகாந்த் முஸ்லீம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ‘லால் சலாம்’ படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், தற்போது படத்திற்கான, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக படத்திற்கான தனது டப்பிங் பணிகளை முடித்துள்ளார் ரஜினிகாந்த்.
இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கான தனது டப்பிங் பணிகளை முடித்துள்ளார் என்று கூறியுள்ளது. "மதத்தையும், நம்பிக்கையையும் மனதில் வை, மனித நேயத்தை அதற்கு மேல் வை, அதுதான் நம் நாட்டின் அடையாளம்" என்று ரஜினிகாந்த் பேச, “டேக் ஓகே பா” என்று ஐஸ்வர்யா தனது தந்தையை பாராட்டும் வகையில் அந்த வீடியோவில் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் மகள் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்ததற்காக 40 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
'லால் சலாம்' படத்தில் மொய்தீன் பாயாக ரஜினிகாந்த்
சாதிப்பாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
சமீபகாலமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சொந்த வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறார். அதற்கு உதாரணமாக கணவருடனான பிரிவு, அதற்காக அவர் எதிர்கொண்ட எதிர்மறையான விமர்சனங்கள் ஏராளம். இது ஒருபுறம் இருக்க சில மாதங்களுக்கு முன்பு சொந்த வீட்டிலேயே நம்பிக்கைக்குரியவர்களாக பணியாற்றிய ஊழியர்களே நகைகளை திருடி ஏமாற்றிச் சென்ற நிகழ்வு மேலும் இவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. இத்தகைய சூழல்களிலெல்லாம் இவருக்கு உறுதுணையாக நின்றவர்கள் யார் என்றால் இவரது குடும்பத்தினர்தான். அதிலும் குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது இரண்டு மகள்களின் வாழ்க்கையில் எத்தகைய சிக்கல்கள் வந்தாலும், அதனை களைந்து அவர்களுக்கு வழிகாட்டுவதில் என்றுமே ஒரு சிறந்த அப்பாவாக இருக்கிறார். அந்த வகையில் தான் தற்போது தனது மூத்த மகளான ஐஸ்வர்யா 7 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படம் இயக்கலாம் என்ற முடிவுக்கு வந்த போது ஒரு தந்தையாக தனது பங்களிப்பையும் கொடுக்கலாம் என்று ‘லால் சலாம்’ படத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே ஐஸ்வர்யாவின் சகோதரியான சௌந்தர்யா, ரஜினிகாந்தை வைத்து ‘கோச்சடையான்’ என்ற படத்தை இயக்கி தந்தையை வைத்து இயக்கிய முதல் பெண் இயக்குனர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்நிலையில், தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தந்தையை வைத்து எடுத்துள்ள இந்த ‘லால் சலாம்’ படம் திரைக்கு வந்து வெற்றிக்கனியை பெற்றுத்தரும் என்று நம்பலாம்.
இயக்குனராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த்