இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

‘உனக்கு என்ன உலக அழகி ஐஸ்வர்யா ராய் என்ற நினைப்பா?’ என கேட்கும் அளவிற்கு, ஆண்டுகள் பல கடந்தும், எத்தனை உலக அழகிகள் வந்தாலும் ‘உலக அழகி’ என்றாலே முதலில் நினைவுக்கு வருவது என்னவோ ஐஸ்வர்யா ராய்தான். அழகும் அறிவும் திறமையும்மிக்க இவர் முதலில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் ஜொலிக்கும் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரானார். 2000 ஆண்டுகளின் ஆரம்பத்தில் பாலிவுட்டில் பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட ஐஸ்வர்யாவுக்கு சில காதல்கள் இருந்ததாக பேசப்பட்டாலும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து 2007ஆம் ஆண்டு திருமணமும் செய்துகொண்டார். அதன்பின் பச்சன் வீட்டு மருமகளாக, பொறுப்பான மனைவியாக நடந்துகொண்டார் ஐஸ்வர்யா. இந்த தம்பதிக்கு 2011-ஆம் ஆண்டு ஆராத்யா என்ற பெண் குழந்தையும் பிறந்தது. அதன்பின்பு கணவன் - மனைவி இருவருமே ஒருபுறம் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்க, மற்றொரு புறம் நல்ல பெற்றோராகவும் நடந்துகொண்டனர் என்பதை அவர்களுடைய நேர்காணல்களில் இருந்தே நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. என்னதான் எப்போதும் ஒன்றாகவே இருந்தாலும் ஐஸ்வர்யாவுக்கும், அபிஷேக்கிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும், அதனால் இருவரும் பிரிய இருப்பதாகவும் அவ்வப்போது வதந்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் எப்போதும் தனது திருமண மோதிரத்தை கையில் அணிந்திருக்கும் அபிஷேக் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்தபோது மோதிரம் அணியாமல் வந்திருந்தார். இதனால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும், இருவரும் விவாகரத்து பெற இருப்பதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் தீயாய் பரவின. ஐஸ்வர்யா ராயின் திரை வளர்ச்சி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த காதல் கிசுகிசுக்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.


உலக அழகி பட்டம் - விளம்பர படம் - திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய்

திரை அறிமுகம்

1973ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி கர்நாடகாவில் பிறந்தார் ஐஸ்வர்யா ராய். பின்னர் இவரது குடும்பம் மும்பைக்கு குடிபெயரவே, அங்கு தனது பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தார். முதலில் தான் ஒரு மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு படித்திருந்தாலும், மாடலிங் துறையில் வாய்ப்புகள் தேடிவரவே, அதில் தனக்கான கேரியர் பாதையை அமைத்துக்கொண்டார். அமீர் கானுடன் இவர் நடித்த கோக் விளம்பரம் இவரை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது என்றே சொல்லலாம். மாடலிங்கில் இருந்தபோதே பாலிவுட் வாய்ப்புகள் தேடிவந்தாலும் அதனை தவிர்த்துவந்த ஐஸ்வர்யா, தனது 21வது வயதில் 1994-ஆம் ஆண்டு, ‘உலக அழகி’ பட்டம் வென்றார். பல மொழிகளில் இருந்து பட வாய்ப்புகள் வந்து குவிந்த போதிலும், மணிரத்னம் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளிவந்த ‘இருவர்’ திரைப்படம்தான் இவரை நடிகையாக்கியது. அதே ஆண்டு ‘ஆர் ப்யார் ஹோ கயா’ என்ற திரைப்படம் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார். அதன்பின்பு, ‘ஜீன்ஸ்’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ போன்ற அடுத்தடுத்து தமிழ்ப்படங்களில் நடித்துக்கொண்டே இந்தியிலும் பிஸியானார். ‘ஹம் தில் தே சுக்கே சனம்’ மற்றும் ‘தேவ்தாஸ்’ போன்ற திரைப்படங்களில் தனது உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட்டில் கால் பதித்த முதல் நடிகை என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஐஸ்வர்யாதான். தமிழ் படங்களுக்கு சற்று இடைவெளி விட்டிருந்த ஐஸ்வர்யா, ரஜினியுடன் ‘எந்திரன்’, விக்ரமுடன் ‘ராவணன்’ போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் குடிகொண்டார். சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் தோன்றியதன்மூலம் தான் ஒரு சிறந்த நடிகை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார் ஐஸ்வர்யா.


எந்திரன் - ராவணன் - பொன்னியின் செல்வன் திரைப்படங்களில் ஐஸ்வர்யா ராய்

பொதுவாகவே வட இந்தியாவிலிருந்து தமிழில் அறிமுகமாகும் நடிகைகள் என்றாலே தமிழ் ரசிகர்களுக்கு ஒருவித ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. குஷ்பு, மதுபாலா, கஜோல், சிம்ரன், ஜோதிகா, லைலா, மனீஷா கொய்ராலா என தொடங்கி, ஜெனிலியா, இலியானா, ஹன்சிகா மோத்வானி, காஜல் அகர்வால், தமன்னா என மும்பை வரவுகளை வரவேற்று இங்கு தக்கவைக்க தவறுவதில்லை. நடிகைகள் என்றாலே அவர்களுக்கு மார்க்கெட் அதிகபட்சம் 10 ஆண்டுகள்தான். ஆனால் தற்போது திரையுலகில் தனது 25 ஆண்டுகளை வெற்றிகரமாக முடித்துவிட்டார் ஐஸ்வர்யா. இதற்கு காரணம் அவரது பணிவும், தன்னடக்கமும்தான் என்கிறார்கள் சக நடிகர்கள். தான் படித்த காலத்திலிருந்தே கிளாசிக்கல் நடனம் மற்றும் இசை என கற்றுத்தேர்ந்தவர் இவர். தனது கண் அசைவு, நடை மற்றும் நளினம் மூலம் திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிக்கொண்டு வருவார். என்னதான் உலக அழகியாக இருந்தாலும் இவர் ஒரு சிறந்த மனைவி மற்றும் மருமகளாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதிலேயே ஆர்வம் காட்டினார்.


ஐஸ்வர்யா ராயின் முன்னாள் காதலர்கள் சல்மான் கான் மற்றும் விவேக் ஓபராய்

ஐஸ்வர்யாவின் காதல் கிசுகிசுக்கள்

திரையுலகை பொருத்தவரை ஒருவருக்கு பல காதல்கள் இருப்பது என்பது சகஜம்தான். அதுபோலவே ஐஸ்வர்யா, மாடலிங் துறையில் இருந்தபோதே, ராஜீவ் முல்ச்சந்தானி என்பவரை டேட் செய்துவந்தார். ராஜீவும் ஐஸ்வர்யாவும் இணைந்து சில போட்டோஷூட்களை செய்திருக்கின்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த உறவு முறிந்துவிட்டது. அதன்பின்பு பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உருவெடுத்த ஐஸ்வர்யாவுக்கும், சல்மான் கானுக்கும் இடையே காதல் மலர்ந்ததுடன் பாலிவுட்டில் முன்னணி ஜோடியாக வலம்வந்தனர். சல்மான் கானின் கோபம் மற்றும் பொசஸிவ்னெஸ் காரணமாகத்தான் இரண்டு ஆண்டுகளில் அந்த காதலில் விரிசல் ஏற்பட்டு இருவரும் பிரிந்ததாக அப்போதைய பாலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது. அதனை உறுதிசெய்யும் விதமாக ‘சல்தே சல்தே’ ஷூட்டிங் செட்டிற்கு சென்ற சல்மான், அங்கு வைத்து ஷாருக்கானுடன் சண்டையிட்டதால், ஐஸ்வர்யாவுக்கு பதிலாக அந்த படத்தில் ராணி முகர்ஜீயை நடிக்கவைத்துள்ளனர். மேலும், ஐஸ்வர்யாவின் வீட்டிற்கு சென்ற சல்மான் நீண்ட நேரமாக காலிங் பெல்லை அடித்து அவர்களை பயமுறுத்தியதாக ஐஸ்வர்யாவின் அப்பா போலீஸில் புகார் அளித்திருந்தார். ஒருவழியாக அந்த காதல் முடிவுக்கு வந்திருந்தாலும் இன்றுவரை பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படும் ஒரு டாப்பிக்காகவே அது இருக்கிறது.

அதன்பின்பு விவேக் ஓபராயுடன் கிசுகிசுக்கப்பட்டார் ஐஸ்வர்யா. ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் விவேக்கும் அதனை ஒப்புக்கொண்டார். ஆனால் தனது தனிப்பட்ட வாழ்க்கையை ரகசியமாகவே வைத்துக்கொள்ள ஆசைப்படும் ஐஸ்வர்யா, அதனை விரும்பவில்லை. அதன்பிறகு, இருவருக்கும் இடையே விரிசல் விழவே இருவரும் பிரிந்தனர். ஒருவழியாக, 2000ஆம் ஆண்டு, ‘தாய் அக்‌ஷார் ப்ரேம் கே’ திரைப்படத்தில் ஜோடி சேர்ந்த அபிஷேக், ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யாவை ப்ரபோஸ் செய்யவே இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது.


கணவன் அபிஷேக் மற்றும் மகள் ஆராத்யாவுடன் ஐஸ்வர்யா

பச்சன் குடும்பத்து மருமகளாக ஐஸ்வர்யா சந்தித்த பிரச்சினைகள்

தென்னிந்திய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஐஸ்வர்யா, நடிகையாக பிரபலமடைந்த பின்பு, தன்னைவிட வயதில் குறைந்தவரான பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற ஒரு மகளும் உள்ளார். தற்போது குடும்பம், குழந்தை என செட்டிலாகிவிட்டாலும், திருமணத்திற்கு பிறகும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக்கொண்டே இருக்கிறார். என்னதான் ஐஸ்வர்யா குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், பச்சன் குடும்பத்துக்குள் கோல்டு வார் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை அவ்வப்போது மீடியாக்களில் வரும் தகவல்கள் மூலம் பார்க்க முடிகிறது. ஆரம்பத்திலிருந்தே அபிஷேக்கின் அக்கா ஸ்வேதாவிற்கு ஐஸ்வர்யா ராயை தனது குடும்பத்து மருமகளாக்குவதில் விருப்பம் இல்லை என்ற தகவல் அப்போதைய மீடியாக்களில் கசிந்தது. ஏனெனில் அதற்கு முன்பே அபிஷேக்கிற்கும், கரிஷ்மா கபூருக்கும் நிச்சயதார்த்தம் நடந்த போதிலும், சில ரகசிய காரணங்களுக்காக அமிதாப் பச்சன் அந்த திருமணத்தை நிறுத்திவிட்டார். அதற்கு ஸ்வேதா எதிர்ப்பு தெரிவித்தார். அதனாலேயே ‘குரு’ திரைப்பட செட்டில் வலுவான ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக்கின் காதலுக்கு கடைசிவரை எதிர்ப்பு தெரிவித்ததுடன், திருமணத்திற்கு பிறகும் தனது வெறுப்பை பல தருணங்களில் ஐஸ்வர்யா மீது காட்டிவந்தார் ஸ்வேதா. தனது திருமண வாழ்க்கை நன்றாக இல்லாதபோது, ஐஸ்வர்யாவுக்கு, தான் ஆசைப்பட்ட அனைத்தும் கிடைத்தது ஸ்வேதாவுக்கு பிடிக்கவில்லை என்பதே பல ஆண்டுகளாக பாலிவுட்டில் ஒரு பேச்சாகவே இருக்கிறது. தனது மகள் கணவரை பிரிந்து வாழ்வதை கருத்தில்கொண்டு, தனது சொத்துக்களை இரண்டாக பிரித்து தருவதாக ஏற்கனவே அமிதாப்பும் அறிவித்துவிட்டார்.


ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன்

அபிஷேக்குடன் விவாகரத்து?

திருமணமானதிலிருந்தே இதுபோன்ற பல பிரச்சினைகளை ஐஸ்வர்யா சந்தித்து வந்த நிலையில், அபிஷேக்கும், ஐஸ்வர்யாவும் திருமண உறவிலிருந்து பிரிவதாக அவ்வப்போது வதந்திகள் வந்த வண்ணமே உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அபிஷேக் பச்சனின் கையில் திருமண மோதிரத்தை காணவில்லை. எப்போதும் அவர் கையிலேயே இருக்கும் அந்த மோதிரத்தை அவர் கழற்றியது ஏன்? என்ற கேள்வி சமூக ஊடகங்களில் வைரலானது. இதனால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும், இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் பேசப்பட்டு வந்த நிலையில், ரகசியமாக விவாகரத்தே முடிந்துவிட்டது என்று செய்திகள் பரவின. இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஸ்வேதாவின் மகன் அகஸ்திய நந்தா ஹீரோவாக அறிமுகமாகும் ‘தி ஆர்ச்சீஸ்’ திரைப்பட பிரீமியர் ஷோவிற்கு கணவன் அபிஷேக் மற்றும் மகள் ஆராத்யாவுடன் ப்ளாக் அண்ட் ப்ளாக்கில் வந்து அசத்தினார் ஐஸ்வர்யா. இதனாலேயே கடந்த சில நாட்களாக ஓடிக்கொண்டிருந்த ஹாட் டாக்கிற்கு ஒருவழியாக ப்ரேக் கொடுத்திருக்கிறார். இருப்பினும், இன்ஸ்டாகிராமில், அமிதாப் பச்சன் ஐஸ்வர்யாவை அன் - ஃபாலோ செய்திருப்பது குடும்பத்துக்குள் ஏதோ குழப்பம் இருப்பதை காட்டுவதாக பேசுகிறார்கள் நெட்டிசன்கள். இருவரும் பிரியக்கூடாது; சேர்ந்துதான் இருக்கவேண்டும் என அன்பு கட்டளையிடுகின்றனர் சில ரசிகர்கள். இந்நிலையில் விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளிப்படையாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On 19 Dec 2023 12:16 AM IST
ராணி

ராணி

Next Story