இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(12.10.1980 மற்றும் 19.10.1980 ஆகிய தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

"காற்றில் விதைச்சவன்” படத்தை தயாரித்து டைரக்டு செய்தவர், பாதிரியார் சுவிசேஷ முத்து. இந்தப்படத்தில் நடிக்க முதலில் என்னை (பிரேமா) அழைத்தார்கள். டைரக்டர் சுவிசேஷ முத்துவை சந்திக்க, நான் எல்டாம்ஸ் சாலையில் உள்ள "கிறிஸ்டியன் ஆர்ட்ஸ்"-க்குச் சென்றேன். அப்போது என்னோடு ஷோபாவும் வந்தாள். சுவிசேஷ முத்து என்னோடு பேசிக்கொண்டு இருந்தாலும், அவர் பார்வை ஷோபா மீதே இருந்தது. பேசிக்கொண்டு இருந்தவர், "ஷோபாவையும் என் படத்தில் நடிக்க வைக்க விரும்புகிறேன். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?" என்று கேட்டார். "ஷோபா! நீ நடிக்கிறாயா?" என்று ஷோபாவிடமும் வினவினார்.

"நடிக்கிறேன், அங்கிள்” என்றாள், ஷோபா. நான் சொல்லிக்கொடுப்பது போல நடிப்பாயா? என்று அவளிடம் அவர் கேட்டார். செட்டில் பாருங்களேன், எனது நடிப்பை என்று உற்சாகமாகச் சொன்னாள், ஷோபா. "ஸ்மார்ட் கேர்ள்" என்று ஷோபாவை தட்டிக் கொடுத்தார், சுவிசேஷ முத்து. எனக்கும் ஷோபாவுக்கும் சின்ன பாத்திரம்தான். விஜய நிர்மலா கதாநாயகி.

ஆச்சர்யம்

"படத்தில் நடிக்க எவ்வளவு பணம் எதிர்பார்க்கிறீர்கள்?" என்று எங்களிடம் கேட்காமலேயே "உங்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும் ஷோபாவுக்கு 2 ஆயிரம் ரூபாயும் தருகிறேன். பணத்தை இப்போதே மொத்தமாக வாங்கிக் கொள்கிறீர்களா? அல்லது ஒரு பகுதியை இப்பொழுது வாங்கிக்கொண்டு மீதியை பிறகு வாங்கிக்கொள்கிறீர்களா?” என்று கேட்டார். அவர் கேட்டது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. காரணம், “பணத்தை மொத்தமாக வாங்கிக் கொள்கிறீர்களா?” என்று கேட்ட ஒரு தயாரிப்பாளரை, அதுவரை நான் சந்தித்தது இல்லை. நான் வியப்போடு சுவிசேஷ முத்துவைப் பார்த்தேன். ஷோபா என்னை ஒரு மாதிரியாக நோக்கினாள். அவளது பார்வையின் அர்த்தம் எனக்கு தெரியாதா, என்ன?


சிறுவயதிலேயே மிகவும் பொறுப்புடன் யோசித்து செயல்பட்ட ஷோபா

“சார்! இப்பொழுது "அட்வான்ஸ்" மட்டும் கொடுங்கள். மீதிப்பணத்தை பின்னால் வாங்கிக்கொள்கிறேன்" என்றேன். “தேவைப்படும்போது வந்து வாங்கிக்கொள்ளுங்கள்” என்று கூறி, எங்களுக்கு முன் பணம் கொடுத்து, அவரது காரிலேயே வீட்டுக்கு அனுப்பி வைத்தார். காரில் ஏறியதும், “மம்மி! எங்கே, நீங்கள் எல்லாப் பணத்தையும் கேட்டு விடுகிறீர்களோ என்று நான் பயந்து போனேன். நல்லவேளை, நீங்கள் கேட்கவில்லை. முழுப் பணத்தையும் உடனே கேட்டு இருந்தால், நாம் பணத்துக்குப் பறப்பதாகத்தானே அந்த அங்கிள் நினைப்பார்" என்றாள், ஷோபா. “உன் மனம் எனக்குத் தெரியாதா? நான் நினைத்ததையே நீயும் நினைத்து இருக்கிறாய். உன் மனதுக்கு விரோதமாக நான் எதுவும் செய்யமாட்டேன்" என்று நான் ஷோபாவை அணைத்துக்கொண்டேன்.

டிரைவர் வியப்பு

எங்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு இருந்த கார் டிரைவர், "பிரேமா அம்மா! நீங்கள் ரொம்ப கொடுத்து வச்சவங்க. சின்னக் குழந்தையாக இருந்தும், உங்கள் மகள் எவ்வளவு தூரம் சிந்தித்து இருக்கிறது! ஆனால், உங்களுக்கு முன்னதாக வந்தவங்க எல்லோருமே முழுப் பணத்தையும் வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள்" என்று ஷோபாவை பாராட்டினார். அதைக் கேட்க எனக்கு இன்னும் பெருமையாக இருந்தது. படப்பிடிப்புக்கு இன்னும் இரண்டு மாதம் இருந்தது. இதற்கு இடையில் வீட்டில் பண நெருக்கடி ஏற்பட்டது. "கிறிஸ்டியன் ஆர்ட்ஸ்” சில் போய்க் கேட்கலாமா?" என்று ஷோபாவிடம் கேட்டேன். “அது கவுரவ குறைச்சல். படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் மீதிப்பணத்தை வாங்க வேண்டும்" என்று கூறினாள், ஷோபா. ஆனால், அவசரமாகப் பணம் தேவை.

ஐ.வி. சசி

என்ன செய்வது என்று சோர்ந்துபோய் வீட்டில் உட்கார்ந்து இருந்தேன். அப்போது, ஐ.வி. சசி (டைரக்டர் சசி) வந்தான். என்ன அக்கா! ஒரு மாதிரி இருக்கிறீங்க? என்று கேட்டான். சசியிடம் விஷயத்தைச் சொன்னேன். கிறிஸ்டியன் ஆர்ட்சில் போய் கேட்பது தானே! என்றான், சசி. (சசி அப்போது கிறிஸ்டியன் ஆர்ட்சில் ஆர்ட் டைரக்டராக இருந்தான்.) “சுவிசேஷ முத்துவிடம் கேட்க எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது. நீயே கேட்டு வாங்கிக்கொடேன்" என்று நான் சொன்னேன். "சரி, அக்கா!" என்று சசி போனான். நான் செய்தியை ஷோபாவின் அப்பாவிடம் கூறினேன். அது எப்படியோ ஷோபாவின் காதில் விழுந்துவிட்டது. "நான்தான் வேண்டாம் என்றேனே! பிறகு ஏன் சசி அங்கிளை அனுப்பினீர்கள்? அவர் முகத்தில் எப்படி விழிப்பது?" என்று கோபம் கொண்டாள், ஷோபா. "இது பெரியவங்க விஷயம். தலையிடாதே! " என்று நானும் கோபத்தில் கத்தினேன். உம் என்று போய் உட்கார்ந்து விட்டாள் ஷோபா.


சிறிய வயதிலேயே பெரிய நடிகை என்று பெயரெடுத்த ஷோபா

“லக்கி மம்மி"

இரண்டு மாதத்திற்குப் பிறகு "காற்றில் விதைச்சவன்” படப்பிடிப்பு தொடங்கியது. ஷோபா நடிக்கும் ஒவ்வொரு காட்சி முடிவிலும் அவளைக் கட்டிப்பிடித்துக் கொள்வார், சுவிசேஷ முத்து. "ஷோபா! நீ இங்கே இருக்க வேண்டியவள் அல்ல. பெரிய நடிகை" என்று பாராட்டுவார். நீங்கள் "லக்கி மம்மி" என்று என்னையும் புகழுவார்.

நடனப் பயிற்சி

சுவிசேஷ முத்துக்கு ஷோபாவை நிரம்பப் பிடித்துவிட்டது. “நான், விரைவில் அமெரிக்காவுக்குப் போய் கலை நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டு இருக்கிறேன். ஷோபாவையும் அழைத்துப் போகிறேன். அதற்குள் அவள் நடனம் பழகிக் கொள்ளட்டும்” என்று சுவிசேஷ முத்து சொன்னார். எல்டாம்ஸ் சாலையில் உள்ள கிறிஸ்டியன் ஆர்ட்சில் ஏற்கனவே நடனம், பாட்டு சொல்லிக்கொடுத்து வந்தார்கள். அங்கு ஷோபாவை நடனப் பயிற்சிக்கு அனுப்பி வைக்கும்படி சுவிசேஷ முத்து சொன்னார். அதன்படி நடனப் பயிற்சி பெறத் தொடங்கினாள், ஷோபா. தினசரி பஸ்ஸில் பயிற்சிக்குப் போய் வந்தாள்.

ஜெயசித்ரா

இந்த நேரத்தில், நாங்கள் வீடு மாறினோம். நுங்கம்பாக்கம் சாரதி தெருவில் இருந்து, மகாலிங்கபுரத்துக்குக் குடி போனோம். மகாலிங்கபுரத்தில் எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் நடிகை ஜெயசித்ரா இருந்தார். இன்னும் சிறிது தூரத்தில் சுமதி வீடு இருந்தது. சுமதி வீட்டில் “வாண்டுகள்” அதிகம். ஷோபாவும், சுமதியும் எப்போதும் கேலி செய்து விளையாடுவார்கள். சுமதியை, ஷோபா சுண்டெலி என்று கேலி செய்வாள். சுமதி பதிலுக்கு, ஷோபாவை பெருச்சாளி என்று கூறுவாள். ஷோபாவும் ஜெயசித்ராவின் தம்பி சீனிவாச குமாரும் எப்பொழுதும் சேர்ந்தே விளையாடுவார்கள். ஷோபாவுக்கு அப்போது, ஜெயசித்ராவைப் பார்க்க வேண்டும்; அவரோடு பேச வேண்டும் என்று நிரம்ப ஆசை! ஜெயசித்ராவின் கார் படப்பிடிப்பு முடிந்து, வீட்டு முன் வந்து நிற்கும் சத்தம் கேட்டதும் ஷோபா விழுந்தடித்துக் கொண்டு வெளியே ஓடுவாள்.


நடிகை ஜெயசித்ராவை பார்த்து பேச ஆசைப்பட்ட ஷோபா

கார் கண்ணாடியை மூடிக்கொண்டு ஜெயசித்ரா உள்ளேயே உட்கார்ந்து இருப்பார். அதனால், அவரை சரியாகப் பார்க்க முடியாது. காரில் இருந்து "மேக்கப்" சாமான், துணிப் பெட்டிகளை இறக்கியதும் ஜெயசித்ரா “பட்” என்று கதவைத் திறந்து, "விருட்” என்று, வீட்டுக்குள் சென்று விடுவார். ஷோபா ஏமாற்றத்துடன் திரும்புவாள். ஜெயசித்ரா அக்கா ஏன் என்னோடு நின்று பேச மாட்டேன் என்கிறார்கள். நான், அவருடைய தம்பியுடைய தோழிதானே! என்று என்னிடம் கேட்பாள். ஜெயசித்ராவைப் பார்க்கவும், அவரோடு பேசவும் நிரம்ப ஆசைப்பட்டாள் ஷோபா!

அது முடிந்ததா?

மகாலிங்கபுரத்தில் நாங்கள் அதிக நாள் குடியிருக்கவில்லை. சூழ்நிலை சரியில்லாததால், அங்கிருந்து அசோக் நகருக்கு வீடு மாற்றினோம். அதனால், ஷோபாவுக்கு, ஜெயசித்ராவோடு நெருங்கிப் பழக முடியாமலேயே போய்விட்டது. அசோக் நகருக்குச் சென்றதும், "மம்மி! பஸ்சில் கிறிஸ்டியன் ஆர்ட்சுக்கு நடனப் பயிற்சிக்கு சென்று வர சிரமமாக இருக்கிறது" என்று ஷோபா சொன்னாள். “உனக்கு கஷ்டமாக இருந்தால் வேண்டாம்" என்று நான் கூறினேன். அதோடு அவள் நடனப் பயிற்சிக்குச் செல்வதை நிறுத்தினாள்.

டாக்சியில்

அடுத்த சிலநாளில், சுவிசேஷ முத்து தயாரிக்க இருந்த 2-வது படத்துக்காக, நான் (பிரேமா) அவரை சந்தித்தபோது, "ஷோபாவை ஏன் நடனப் பயிற்சிக்கு அனுப்புவது இல்லை?" என்று அவர் என்னிடம் கேட்டார். "அசோக் நகரில் இருந்து பஸ்சில் வருவதற்கு கஷ்டமாக இருக்கிறது என்கிறாள்" என்று நான் ஷோபா சொன்னதைச் சொன்னேன். "ஷோபா ஒரு மாணவி மட்டும் அல்ல, என் மருமகள். அவளை கவுரவப்படுத்த வேண்டியது எனது பொறுப்பு, இனி, அவள் டாக்சியில் வரட்டும். நான் பணம் கொடுத்து விடுகிறேன்" என்று மகிழ்ச்சியோடு கூறினார், சுவிசேஷ முத்து. ஷோபா மீது அவர் பொழிந்த பாசத்தை நினைக்கும்பொழுது எனக்குப் பெருமையாக இருந்தது. அடுத்த நாளில் இருந்து ஷோபா டாக்சியில் பயிற்சிக்குச் செல்லத் தொடங்கினாள்.

தனி மரியாதையா?


ஷோபாவின் முக பாவனைகள்

ஷோபா டாக்சியில் வந்து இறங்கியது மற்ற மாணவிகளுக்கு பொறாமை எண்ணத்தை ஏற்படுத்தியது. "ஷோபாவுக்கு மட்டும் என்ன தனி மரியாதை?" என்று அவர்கள் கேட்டார்கள். "அவள் மாணவி மட்டும் அல்ல. சிறந்த நடிகை. அவளது அந்தஸ்தை காப்பாற்ற வேண்டாமா?" என்று, கேள்வி கேட்ட மாணவிகளின் வாயை அடைத்தார், சுவிசேஷ முத்து.

குமாரி ஆனாள்

ஷோபா 14 வயதில் (1976-ல்) "வயதுக்கு” வந்நாள். ஆனாலும், அவளிடம் குழந்தைத்தனம் மாறவில்லை. என்னோடு சேர்ந்துதான் படுக்க வேண்டும் என்பாள். என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டுதான் தூங்குவாள். நான் இல்லாவிட்டால், அப்பாவை கட்டிப்பிடித்துக் கொள்வாள்! வீட்டில் மட்டும் அல்ல. வெளிப்புறப் படப்பிடிப்புக்குச் செல்லும் இடத்திலும் இதே நிலைதான். தனியாகப் படுத்துப்பழகு என்று சொன்னால் கேட்க மாட்டாள். குழந்தை போல அழுவாள். இந்த நிலையில் ஷோபாவுக்கு கதாநாயகி வாய்ப்பு தேடிவந்தது! வயதுக்கு வந்தும், சிறுமி ஆகவே இருந்த ஷோபாவை, கதாநாயகியாக தயார் படுத்த நாங்கள் பட்டபாடு மிகவும் வேடிக்கையானது.!

ஒருநாள், எங்கள் குடும்ப நண்பரான ரவிமேனன் ஃபோன் செய்தார். பணிக்கர் என்பவர் "ஏகாகிணி" (தனிப்பட்டவள்) என்ற படத்தை தயாரித்து, அவரே டைரக்ட் செய்யப் போகிறார். அந்தப் படத்தில் ஷோபாவை கதாநாயகியாக நடிக்க வைக்க விரும்புகிறார். இன்னும் ஒரு மணி நேரத்தில் பணிக்கரை வீட்டுக்கு அழைத்து வருகிறேன். ஷோபாவை நேரில் பார்க்க வேண்டும் என்கிறார். நாங்கள் வரும்பொழுது ஷோபா கண்டிப்பாக சேலை உடுத்தியிருக்க வேண்டும். சேலை கட்டினால்தான் அவளுக்கு பெரிய பெண்ணுக்குரிய இமேஜ் வரும். முதல் வாய்ப்பை கெடுத்து விடாதீர்கள் என்று சொன்னார். அப்போது ஷோபா வீட்டில் இல்லை. கிறிஸ்டியன் ஆர்ட்சுக்கு நடனப் பயிற்சிக்குச் சென்று இருந்தாள். நான் உடனே ஷோபாவை அழைத்துவர ஆள் அனுப்பிவிட்டு, எனது சேலைகளில் ஒன்றை அவளுக்கு தயார்படுத்தினேன்.


குமரி ஆனவுடனேயே கதாநாகியாக நடிக்க தேர்வான ஷோபா

புறவாசல் வழியாக

ஆனால், ஷோபா வீட்டுக்கு வருவதற்குள் பணிக்கரும், ரவிமேனனும் வந்து விட்டார்கள். ஷோபா பாவாடை சட்டையோடு நடனப் பயிற்சிக்குச் சென்று இருந்தாள். அவளை அதே உடையில் பார்த்தால், சின்னப் பெண் என்று, "வேண்டாம்" என கூறிவிடுவார்களோ என்ற பயம் எனக்கு.! எனவே ஷோபா டாக்சியில் வந்து இறங்கியதும், பணிக்கர் கண்ணில் படாமல் பின் வாசல் வழியே வீட்டுக்குள் அழைத்து வந்தேன்.

சேலை பொம்மை

கவுனும், பாவாடை சட்டையுமாக இருந்து பழகிவிட்ட ஷோபாவுக்கு சேலை கட்டுவது மிகவும் சிரமமாகவே இருந்தது! அவள் இடுப்பில் சேலை நிற்கவில்லை. மார்புச் சேலை நழுவி நழுவி விழுந்தது. எப்படியோ அவள் உடம்பில் சேலையைச் சுற்றினோம்! அப்போது பார்ப்பதற்கு அவள் துணி சுற்றிய பொம்மை போல இருந்தாள்.! ஏற்கனவே வாங்கி வைத்திருந்த குதிகால் உயர்ந்த செருப்பை அணியச் சொல்லி, பணிக்கர் முன்னால் கொண்டுபோய் நிறுத்தினோம். ஷோபா நாணிக் கோணி நின்றாள்! அவளை ஏற இறங்கப் பார்த்தார், பணிக்கர். அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று நான் பயந்து கொண்டு இருந்தேன்!

இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்…

Updated On 2 Dec 2024 6:15 PM IST
ராணி

ராணி

Next Story