இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(28.09.1980 மற்றும் 05.10.1980 ஆகிய தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

ஷோபாவுக்கு தொடர்ந்து படங்கள் வரவும், அவளால் ஒழுங்காக பள்ளிக்கூடத்துக்குச் செல்ல முடியவில்லை. பள்ளிக்கூடத்துக்கு அடிக்கடி "லீவு" போட வேண்டியதாகிவிட்டது. கண்டிப்புக்கும் கட்டுப்பாட்டுக்கும் பேர் போனது, அவள் படித்த குட்ஷெப்பர்டு கான்வென்ட்! எனவே, ஒருநாள் ஷோபாவை பள்ளிக்கூடத்தில் இருந்து நீக்கிவிட்டதாக கடிதம் வந்துவிட்டது! எனக்கு ஒன்றும் ஓடவில்லை. 'ஷோபா அப்பா, மகள் நடிப்பதோடு, படிக்கவும் வேண்டும் என்று விரும்பினார்!' மறுநாள், அவர் முதல் வேலையாக ஷோபாவின் பள்ளிக்கூடத்துக்கு ஓடினார்.

வகுப்பு ஆசிரியையை சந்தித்தார். அவர்கள், "என்னால் ஒன்றும் செய்ய முடியாது. "மதர் சுப்பீரியர்" அவர்களைப் பாருங்கள்" என்று கூறிவிட்டார்கள். எனவே, "மதர் சுப்பீரியர்" அவர்களை சந்தித்துப் பேசினார். இந்த ஒருமுறையும் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டார் ஷோபா அப்பா. ஷோபா மீது வேறு எந்தக் குறையும் இல்லாததாலும், ஷோபா அப்பா கெஞ்சிக் கேட்டதாலும், ஷோபாவை மீண்டும் பள்ளியில் சேர்த்துக் கொண்டார்கள்.

படிப்புக்கு டாட்டா


படிப்புக்கு டாட்டா சொன்ன ஷோபா

அதில், அவருக்கு பெரும் மகிழ்ச்சி. "குழந்தைக்கு படிப்புதான் முக்கியம். இனிமேல் தவறாமல் ஷோபாவை பள்ளிக்கு அனுப்பிவிட வேண்டும்” என்று கண்டிப்பும் செய்தார். ஆனால், குட்ஷெப்பர்டு கான்வென்ட் பள்ளியின் தலைமை நிர்வாகியான ''மதர் சுப்பீரிய”ருக்கு நாங்கள் கொடுத்த உறுதிமொழியை எங்களால் தொடர்ந்து காப்பாற்ற முடியவில்லை. அடுத்தடுத்து புதுப் படங்களில் நடிக்க அழைப்பு வந்ததால், ஷோபா மீண்டும் "லீவு" போட வேண்டியதாகிவிட்டது. அதைத்தொடர்ந்து மீண்டும் ஷோபாவை பள்ளியிலிருந்து விலக்கிக் கடிதம் வந்தது. அவர் மீண்டும் பள்ளிக்கூடத்துக்கு ஓடினார். மகளின் படிப்பு நின்று விடக்கூடாது என்ற வேகம் அவருக்கு! மதர் சுப்பீரியரிடம் மீண்டும் ஒரு தடவை மன்னிப்புக் கேட்டுக்கொண்டு. ஷோபாவை சேர்த்துவிட்டு வந்தார்.

இந்த இரண்டாவது உறுதிமொழியையும் எங்களால் காப்பாற்ற முடியவில்லை. ஷோபா, "ஜலத்த சுந்தரி” (பக்கத்து வீட்டு அழகி) என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும்பொழுது, ஷோபாவை பள்ளியில் இருந்து நீக்கிவிட்டதாக மூன்றாவது முறையாகக் கடிதம் வந்தது. "இனிமேல் என்னால் மதர் சுப்பீரியர் முன்னால் போய் நிற்கமுடியாது” என்று உட்கார்ந்துவிட்டார் ஷோபா அப்பா. ஷோபாவிடம் "நீ படிக்கிறாயா, நடிக்கிறாயா?" என்று நான் கேட்டேன். "படம்தான் நிறைய வருகிறதே. ஒரேயடியாக நடிப்பில் கவனம் செலுத்தினால் என்ன?'' என்றாள் ஷோபா. அன்றோடு ஷோபா பள்ளிக்கூடத்துக்குப் போவதை நிறுத்தினாள். அப்போது அவள் 5-ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தாள்.

டியூஷன்


புன்னகையுடன் இரு மாறுபட்ட தோற்றங்களில் நடிகை ஷோபா

ஷோபா பள்ளிக்கூடத்துக்குப் போவதைத்தான் நிறுத்தினாளே அன்றி படிப்பை நிறுத்தவில்லை. ஷோபாவுக்கு தொடர்ந்து வீட்டில் "டியூஷன்” எடுக்க ஏற்பாடு செய்தோம். முதலில், ''பள்ளிப் பாடத்திட்டப்படி” அந்தப் பாடங்களை டியூஷனில் கற்றுக்கொடுத்தார்கள்.

பிறகு, ஷோபாவுக்கு சரளமாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் தெரிந்தால் போதும் என்று, ஆங்கிலம் மட்டும் சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்தோம். ஷோபா மூன்றாம் வகுப்புப் படிக்கும் பொழுதே, சாதாரணமாக ஆங்கிலத்தில் பேசுவாள். "குட்ஷெப்பர்டு" போன்ற கான்வென்ட் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆங்கிலத்தில் பேச நாம் சொல்லிக் கொடுக்க வேண்டியது இல்லை. அதற்கான பயிற்சி பள்ளியிலேயே அளிக்கப்படும். அப்படித்தான் ஷோபாவும் ஆங்கிலம் பேசினாள். ஆனால் இடையில் எங்கள் குடும்பத்தில் புகுந்து எங்கள் குடியை கெடுத்தவர்கள், "ஷோபாவுக்கு நான் ஆங்கிலத்தில் பேச சொல்லிக் கொடுத்தேன்" என்று அபத்தமாக சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.

விமானப் பயணம்

ஷோபாவுக்கு சின்ன வயதில், தனியாக விமானப் பயணம் செய்யும் வாய்ப்பு ஒருமுறை ஏற்பட்டது. நான் (பிரேமா) "பாவங்கள் பெண்ணுங்கள்" என்ற படத்தில் நடிக்க வேண்டியிருந்தது. கேரளாவில் உள்ள உதயா படப்பிடிப்பு நிலையத்தில் படப்பிடிப்பு! என் கொழுந்தன் (என் கணவரின் தம்பி) கே. பி. ஆர். மேனன் அப்போது ரிசர்வ் வங்கியில் இருந்தார். அவரது வீடு ரிசர்வ் வங்கி குவாட்டர்சில் இருந்தது. அவர்கள் வீட்டில் ஷோபாவை விட்டுவிட்டு, நானும் அவரும் (ஷோபாவின் அப்பா) படப்பிடிப்புக்குச் சென்று இருந்தோம். படப்பிடிப்பின்போது, "தொடர்ந்து படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்றால், ஒரு சிறுமி தேவை. ஷோபாவை உடனே அழைக்க முடியுமா?” என்று டைரக்டரும் தயாரிப்பாளருமான குஞ்சாக்கோ கேட்டார்.


விழிகளில் பேசும் ஷோபாவின் நடிப்பு

"உறவினர்கள் யாராவது இருந்தால், அவர்களோடு போனில் பேசி, ஷோபாவை விமானத்தில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுங்கள்” என்று அவர் எங்களுக்கு ஆலோசனையும் சொன்னார். ஷோபா அப்பா, உடனே அவருடைய தம்பிக்கு போன் செய்தார். “நீ தனியாக விமானத்தில் செல்வாயா!" என்று கொழுந்தன் ஷோபாவிடம் கேட்டு இருக்கிறார். ஷோபா உற்சாகமாக, “ஓ...... போகிறேனே!" என்று சொல்லியிருக்கிறாள். உடனே அவர், அடுத்த விமானத்தில் டிக்கெட்டு எடுத்து, ஷோபாவை அனுப்பி வைத்தார். எங்களுக்கும் தகவல் கொடுத்தார். மகளை அழைத்துவர, ஷோபா அப்பா காரை எடுத்துக்கொண்டு விமான நிலையத்துக்குப் போனார்.

குட்டி நட்சத்திரம்

எனக்கு ஷோபா தனியாக எப்படி வருகிறாளோ என்று மனது “திக் திக்” என்று அடித்துக்கொண்டது. விமானம் வந்து நின்றதும், யார் யாரோ இறங்கினார்கள். ஷோபாவின் தலை தெரியவில்லை. முன்னால் வந்த ஒருவரிடம், "ஷோபா என்று ஒரு சின்னப் பெண் விமானத்தில் வந்தாளா?” என்று அவர் கேட்டார். “அந்தக் குட்டி நட்சத்திரமா? பின்னால் வருகிறார்கள் என்று சொன்னார், அவர். அப்போது, ஒரு விமானப் பணிப்பெண்ணுடன் ஷோபா விமானத்தில் இருந்து இறங்கினாள். கூலிங்கிளாசும், கையில் சூட்கேசுமாக ஆளே அடையாளம் தெரியவில்லை. அவள் காரில் வந்து ஸ்டூடியோவில் இறங்கும்போது ஒரு குட்டி நட்சத்திரம் போலவே இறங்கினாள். ஷோபாவுக்கு சின்ன வயதில் நாங்கள் தனியாக நடனப் பயிற்சி அளிக்க வில்லை. ஆனால், பாட்டுக்கு ஏற்ப அவளாக ஆடுவாள்!. அதுவே பார்க்கும்படி இருக்கும். ஷோபாவுக்கு எட்டு வயது நடக்கும்பொழுது (1969-ல்) நாங்கள் சிங்கப்பூருக்கு சென்று இருந்தோம்.

நடனம் ஆடினாள்

நாங்கள் அங்கு இருக்கும் பொழுது ஓணம் பண்டிகை வந்தது! சிங்கப்பூரில் உள்ள "ஸ்ரீநாராயணா மிஷன்" சார்பில் ஓணம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சிங்கப்பூரில் உள்ள பெரிய தியேட்டர் ஆன நேஷனல் தியேட்டரில் விழா நடந்தது. அந்த விழாவில் ஷோபா நடனம் ஆட வேண்டும் என்று, எல்லோரும் வற்புறுத்தினார்கள். எனவே, விழாவுக்கு முன்னதாக, இரண்டு மலையாளப் பாடலை போட்டு, அதற்கு ஏற்ப எப்படி ஆட வேண்டும் என்று நான் எனக்குத் தெரிந்ததை ஷோபாவுக்கு சொல்லிக் கொடுத்தேன்.

விழா மேடையில் அதே பாட்டுக்கு ஷோபா ஆடினாள். இரண்டாவது பாட்டுக்கு ஆடியபோது, ஷோபா திடீர் என்று, கால் இடறி மேடையில் விழுந்து விட்டாள்! அய்யோ! குழந்தை விழுந்து விட்டதே என்று, நான் பதறினேன்! ஆனால், என் மகள் ஷோபா, கால் இடறி விழுந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. அப்படி விழுந்ததையும் ஒரு நடனம் ஆக்கி விட்டாள்! அவள் விழுந்துகிடந்த படியே, பாட்டுக்கு ஏற்ப, காலை மெதுவாக அசைத்து அசைத்து எழுந்தாள்!. அதை உண்மையான நடனம் என்றே நினைத்த ரசிகர்கள், கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். அன்றைய நிகழ்ச்சியில், ஷோபாவின் நடனம் மிகவும் அருமையாக அமைந்துவிட்டது. ஷோபாவின் நடனத்தைப் பாராட்டி பரிசு வழங்கினார்கள். ஷோபா பெற்ற முதல் பரிசு இதுதான். அந்த பரிசு கோப்பை இன்னும் வீட்டில் பத்திரமாக உள்ளது.


விழுந்ததையும் நடனம் ஆக்கிய ஷோபா

நடன அமைப்பு

ஆனால், நடனப் பயிற்சியே பெறாத ஷோபா பின்னால் ஒரு படத்துக்கு நடனம் அமைத்தாள். அது ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி! ஷோபா நடித்த "ஜலத்த சுந்தரி” என்ற படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் நடந்தது. நாங்கள் பெங்களூரில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, சென்னைக்கு புறப்படத் தயார் ஆனபோது, மைசூரில் இருந்து நடிகர் மது ஃபோன் செய்தார். எனது “காமம் குரோதம் மோகம்" என்ற படத்தில் ஷோபாவுக்கு ஒரு பாத்திரம் இருக்கிறது. நீங்கள் பெங்களூரில் இருந்து அப்படியே மைசூருக்கு வரமுடியுமா? என்று மது கேட்டார். இரண்டு நாள் கழித்து தான் படப்பிடிப்பு தொடங்க வேண்டும் என்றும் சொன்னார். என்ன செய்யலாம் என்று நான் ஷோபாவிடம் கேட்டேன். ஒரேயடியாக மைசூர் படப்பிடிப்பையும் முடித்துவிட்டு சென்னைக்குப் போகலாம் என்றாள் ஷோபா.

உற்சாகம்

நாங்கள் மைசூருக்கு புறப்பட்டுப் போனோம். படப்பிடிப்பு அன்று, ஷோபாவும் இன்னொரு பெண்ணும் ஆடவேண்டிய நடனத்துக்கு டான்ஸ் கம்போஸ் செய்ய வேண்டும். டான்ஸ் மாஸ்டர் வருவதற்கு இரண்டு நாள் ஆகுமாம் என்றார், மது. பிறகு அவரே, "ஷோபா! நீயே டான்ஸ் கம்போஸ்' செய்து கொள்ள முடியுமா?" என்று கேட்டார். எனக்கு ஒண்ணும் தெரியாது என்று ஷோபா வெட்கப்பட்டுக் கொண்டு ஓடினாள். "மது சார்! நீங்கள் மற்ற வேலைகளைக் கவனியுங்கள். என் மகள், டான்ஸ் கம்போஸ் செய்துவிட்டு, இன்னும் ஒரு மணி நேரத்தில் உங்களை சந்திப்பாள்" என்று ஷோபா அப்பா மதுவை உற்சாகமூட்டி னார். (படத் தயாரிப்பாளர், டைரக்டர் எல்லாம் மதுதான்) பிறகு ஷோபாவிடம். "ஷோபா! இதற்கெல்லாம் பின்வாங்கக்கூடாது. உனக்கு தெரிந்த மாதிரி ஆடு. அதுதான் டான்ஸ்” என்று கூறினார்.

டான்ஸ் தயார்!

ஷோபா அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டாள். ஒரு தனி அறைக்குள் சென்று “ராஜாதி ராஜன் வளர்த்த பட்சி என்ற அந்தப் பாட்டுக்கு ஏற்ப ஆடிப் பார்த்தாள். எனக்குத் தெரிந்ததை நான் சொல்லிக் கொடுத்தேன். ஒரு மணி நேரத்தில் “டான்ஸ்" தயார் ஆனது. ஷோபா உற்சாகமாக அறையைவிட்டு வெளியே வரவும் ஷோபா அப்பா மதுவிடம் சென்று “மது சார் டான்ஸ் தயார்” என்றார். ஷோபா! கொஞ்சம் காட்டேன்" என்றார், மது. இப்பொழுது ஷோபாவிடம் பயமோ, அச்சமோ இல்லை. அவள் கம்போஸ் செய்ததை மதுவிடம் ஆடிக்காட்டினாள். "நடன ஆசிரியரை வைத்து கம்போஸ் செய்து இருந்தால் நடனம் செயற்கை ஆகியிருக்கும். உனது நடனம் இயற்கையாக இருக்கிறது” என்று பாராட்டினார் மது. ஷோபா கம்போஸ் செய்த அந்த நடனம், அப்படியே படத்தில் இடம்பெற்றது.

மயிலாடும் குன்று

ஷோபா சின்ன வயதில் நடித்த படங்களில், “மயிலாடும் குன்று” என்ற படத்தில் நடித்த காதல் காட்சி வேடிக்கையானது. அந்தப் படத்தில் மாஸ்டர் சேகரும் ஷோபாவும் சேர்ந்து நடித்தார்கள். சிறுவர் காதல்!. இருவருக்கும் காதல் காட்சி ஒன்று வைத்திருந்தார்கள். "மணிச்சி - காற்றே” என்ற பாட்டுக்கு ஷோபாவும் சேகரும் ஆடினார்கள். ஷோபாவுக்கு டிரஸ் “மினி கவுன்” தான்! ஒரு மணல் காட்டில் படப்பிடிப்பு நடந்தது. ஷோபா மணலில் படுத்து, மெதுவாக காலை உயர்த்துவாள். அப்போது, அவள் உள்ளே போட்டிருக்கிற ஜட்டி தெரியும். உடனே எல்லோரும் “கதாநாயகியின் ஜட்டி தெரிகிறது... ஜட்டி தெரிகிறது..." என்று சிரிப்பார்கள். ஷோபா பட் என்று எழுந்து கொள்ளுவாள். நன்றாக கவுனை இழுத்து விட்டுக்கொண்டு, மீண்டும் படுப்பாள். மீண்டும் சிரிப்பு ஒலி எழும்! இப்படியாக, அந்த காதல் காட்சியை எடுத்து முடித்தார்கள். இதை அடுத்து, ஷோபா நடித்த படங்களில் முக்கியமான படம், “காற்றில் விதைச்சவன்.” இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு, தற்செயலாகத்தான் ஷோபாவுக்கு கிட்டியது. ஆனால், அந்தப் படமே அவளுக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அது எப்படி?

இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்….

Updated On 18 Nov 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story