இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

‘தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே’ என ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டவர் நடிகை சுனைனா. தமிழில் ஒருசில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். இந்தியை தாய்மொழியாகக் கொண்ட இவர், தொடர்ந்து தென்னிந்திய படங்களில் நடித்து, தெலுங்கு, தமிழ் மொழிகளில் நன்றாக பேசக்கூடியவரும்கூட. எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் சளைக்காமல் ஏற்றுநடித்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் மட்டுமே திரைப்படங்களில் ஜொலித்த சுனைனாவால் தொடர்ந்து சோபிக்க முடியவில்லை. அதனால் சற்று திரையுலகிலிருந்து விலகியிருந்தாலும் அவ்வப்போது சில படங்களில் தலைகாட்டி வந்தார். வெப் சீரிஸ்களிலும் நடித்துவந்தார். இந்நிலையில் சமீபத்தில் இவருடைய திருமணம் குறித்த சர்ச்சை செய்திகள் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகின்றன. சுனைனாவின் திரைவாழ்க்கை மற்றும் திருமண சர்ச்சை குறித்து சற்று பார்க்கலாம்.

நார்த் டூ சவுத் - சுனைனாவின் திரை அறிமுகம்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பிறந்து வளர்ந்தவர் சுனைனா யெல்லா. முதலில் மாடலிங்கில் இறங்கிய இவர் தொடர்ந்து மேடை நாடகங்களில் நடித்து வந்துள்ளார். அதன்பிறகு 2005ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு படமான ‘குமாரி Vs குமாரி’ என்ற திரைப்படத்தின்மூலம் சினிமா அறிமுகம் கிடைத்தது.


‘காதலில் விழுந்தேன்’ திரைப்படத்தில் நகுலுடன் சுனைனா

அடுத்தடுத்த ஆண்டுகளில் ‘10th க்ளாஸ்’, ‘கங்கே பாரே துங்கே’ என மலையாளம், கன்னட திரையுலகில் அறிமுகமானார். அடுத்து 2008ஆம் ஆண்டு ‘காதலில் விழுந்தேன்’ திரைப்படம்மூலம் தமிழிலும் அறிமுகமானார். தமிழில் முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றது. குறிப்பாக, அந்த படத்தில் இடம்பெற்ற ‘நாக்க மூக்க’, ‘தோழியா என் காதலியா’, ‘உன் தலைமுடி உதிர்வதைக்கூட’ போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட்டடித்தன. இதனால் ‘மாசிலாமணி’, ‘திருத்தணி’, ‘வம்சம்’, ‘நீர்ப்பறவை’, ‘சமர்’ என அடுத்தடுத்த தமிழ் வாய்ப்புகள் சுனைனாவிற்கு கிடைத்தன. ஆனால் திரைவாய்ப்பு வந்தபோது அதுகுறித்து மகிழ்ச்சியடையாமல் மிகவும் பயந்ததாக ஒரு நேர்க்காணலில் பகிர்ந்திருக்கிறார் சுனைனா. அவர் பேசியபோது, “சிறுவயதிலிருந்தே நாடகம், பரதநாட்டியம் என இருந்திருந்தாலும் முதன்முதலாக பட வாய்ப்பு வந்தபோது நான் மிகவும் பயந்துபோய் அழுதேன். ஏனென்றால் எனக்கு நடிகையாகும் எண்ணம் கொஞ்சம்கூட இல்லை. மேலும் பதற்ற உணர்வு எப்போதுமே இருக்கும். கேமரா முன்பு நிற்கவேண்டுமா? என்ற கேள்வி எனக்கு வந்தபோது பெற்றோர்தான் என்னை சமாதானப்படுத்தினார்கள். ஒரு படம் நடித்து அந்த பயம் போனபிறகு இப்போது எனக்கு தன்னம்பிக்கை வந்துவிட்டது. அதனால் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறேன்” என்று கூறியிருந்தார்.


‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ வெப் தொடரில் போலீஸ் கதாபாத்திரத்தில் சுனைனா

ஒவ்வொரு படத்திலுமே வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று சிறப்பாக நடித்த சுனைனாவிற்கு ஏனோ ஓரிரு ஆண்டுகளில் படவாய்ப்புகள் வருவது கணிசமாக குறையத் தொடங்கியது. திடீரென உடல் எடை கூடிய நிலையில் ‘தெறி’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பிறகு ஓரளவு எடையைக் குறைத்து ‘நம்பியார்’, ‘தொண்டன்’, ‘காளி’, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ போன்ற படங்களில் தோன்றினார். இருப்பினும் இந்த படங்கள் எதுவும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. அதன்பிறகு வெளியான ‘சில்லு கருப்பட்டி’ திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டாலும் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெறவில்லை. தொடர்ந்து ‘ஹை ப்ரீஸ்ட்ஸ்’, ‘ஃபிங்கர்டிப்’, ‘சதுரங்கம்’ போன்ற வெப் சீரிஸ்கள் மற்றும் அவ்வப்போது படங்கள் என நடித்துவந்தார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘ரெஜினா’ திரைப்படம் ஓரளவு பாராட்டை பெற்றாலும், அந்த படமும் கைகொடுக்கவில்லை. இதனால் சுனைனா திரையுலகிலிருந்து விலகுவதாக பேசப்பட்டது. இறுதியாக இந்த ஆண்டு அமேசான் ப்ரைமில் வெளியான ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ என்ற வெப் தொடருக்குப் பிறகு, இவருடைய அடுத்த படங்கள் குறித்த எந்த அப்டேட்ஸ்களும் வெளியாகவில்லை.


பிரபல யூடியூபர் காலித் அல் அமெரி மற்றும் நடிகை சுனைனா

சுனைனா திருமண சர்ச்சை

இப்படி சிலகாலம் காணாமல்போன சுனைனா கடந்த சில வாரங்களாக அதிகம் பேசப்படும் ஹீரோயின்களில் ஒருவராக மாறியிருக்கிறார். அதற்கு காரணம், அவருடைய காதல் திருமணம் குறித்த சர்ச்சைகள்தான். ஏனெனில் சமீபத்தில்தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஆணுடன் கைகோர்த்தபடி புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார் சுனைனா.

இதனால் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று திரை வட்டாரத்தில் பேசப்பட்ட நிலையில், அவர் யாரை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற அப்டேட்டுக்காக காத்திருந்தனர் நெட்டிசன்கள். இந்நிலையில் சுனைனா போஸ்ட் போட்ட ஒரே வாரத்தில் துபாயைச் சேர்ந்த பிரபல யூடியூபரான காலித் அல் அமெரி என்பவரும் மோதிரம் அணிந்த கைகளை காட்டியபடி தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை உறுதிசெய்யும்விதமாக புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

இந்த புகைப்படங்கள்தான் தற்போது சுனைனா குறித்த பல்வேறு வதந்திகளுக்கு காரணமாகியிருக்கின்றன.


துபாய் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த யூடியூபர் காலித் அல் அமெரி

யார் இந்த காலித்?

காலித் அல் அமெரி என்பவர் துபாயில் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர். மிகப்பெரிய செல்வந்தரான இவர், அமெரிக்காவில் படித்தவர். சிறுவயதிலிருந்தே சாகசங்களில் அதிக ஆர்வம்கொண்ட காலித், Food Vlog யூடியூப் சேனல் தொடங்குவதற்கு முன்பே நிறைய சாகசங்களை செய்து வீடியோக்களை தனது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து வந்துள்ளார். உலகம் முழுவதும் பயணித்து ஃபுட் ரிவ்யூ செய்துவந்த காலித் அடிக்கடி இந்தியாவிற்கு வந்து சென்றுள்ளார். அதிலும் குறிப்பாக, சமீபத்தில் நடிகர் மம்மூட்டியை இவர் நேர்க்காணல் செய்து பதிவிட்ட வீடியோ மிகவும் ட்ரெண்டானது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆப்ரிக்க வம்சாவளியைச் சேர்ந்த யூடியூபரான சலாமா என்பவருக்கும் காலித்துக்கும் இடையே தொடங்கிய நட்பு காதலாகி பின்னர் திருமணமும் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் இப்போது இருக்கின்றனர். கணவன் - மனைவியாக இணைந்து வீடியோக்களை பதிவிட்டு வந்த நிலையில், திடீரென இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சலாமாவை விவாகரத்து செய்தார் காலித். இந்த விவாகரத்துக்குப் பிறகு இருவரும் மாறி மாறி தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், திடீரென காலித் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக புகைப்படம் ஒன்றை பகிர்ந்தார். அந்த புகைப்படத்தில் உள்ள பெண் தனது கையில் அணிந்திருக்கும் மோதிரம் போன்றே நடிகை சுனைனாவும் மோதிரம் அணிந்தபடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காபி கப்பை பிடித்து போட்டோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். மேலும் அந்த புகைப்படத்திற்கு கீழ் இருவரும் மாறி மாறி கமெண்ட் செய்திருப்பதால் நெட்டிசன்கள் சுனைனாவும், காலித்தும்தான் திருமணம் செய்துகொள்ளப்போகின்றனர் என்பதை உறுதி செய்தேவிட்டனர். இருப்பினும் அவர்கள் தரப்பிலிருந்து இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் காலித்தின் முதல் மனைவி இதுகுறித்து பேசியிருக்கிறார்.


முன்னாள் மனைவி சலாமாவுடன் காலித்

சலாமா கருத்து

காலித்தும் சலாமாவும் யூடியூபர்களாக இருந்தாலும், காலித் எப்போதும் பயணங்களிலேயேதான் இருந்துள்ளார். குறிப்பாக, இந்தியாவிற்கு வந்தால் கேரளாவில்தான் அதிகம் தங்குவாராம். இப்படி அடிக்கடி இந்தியா வந்தபோது சினிமாவில் மார்க்கெட்டை இழந்து திருமணத்திற்கு தயாராகிவந்த சுனைனாவுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அதனால்தான் சலாமாவை காலித் விவாகரத்து செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சலாமா தனது விவாகரத்து குறித்து மனம் திறந்துள்ளார். தற்போதுதான் சுதந்திரமாக இருப்பதாக கூறியிருக்கிறார். இதுகுறித்த அவருடைய பதிவில், “முன்பு எனது பெற்றோருக்கு கட்டுப்பட்டு இருந்தேன். அதன்பின்பு கணவருக்கு கட்டுப்பட்டு இருந்தேன். கடந்த சில மாதங்களாக சுதந்திரமாக இருக்கிறேன். ஆனால் சிலரை சும்மாவிட மாட்டேன். எனக்கு துரோகம் செய்பவர்கள் நன்றாகவே இருக்கமாட்டார்கள்” எனவும் கூறியிருக்கிறார். இதனால் சுனைனாவை திருமணம் செய்துகொள்ளத்தான் சலாமாவை விவாகரத்து செய்திருக்கிறார் காலித் என்று பேசப்படுகிறது. இருப்பினும் இந்த கருத்துகள் குறித்தும், தங்களுடைய காதல் குறித்தும், திருமணம் குறித்தும் இருவரும் இன்றுவரை வாய் திறக்கவில்லை. இப்போது கேரளாவில் இருக்கும் காலித், விரைவில் சுனைனாவுடனான தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலித்தை திருமணம் செய்வதற்கு சுனைனா மதம் மாறுவாரா? என்ற கேள்விகளும் எழுந்தவண்ணம் உள்ளன.

Updated On 16 July 2024 10:20 AM IST
ராணி

ராணி

Next Story